ஏப்ரல் 20 2006
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
கட்டுரை : முளைப்பாரி திருவிழா
- திருமலை கோளுந்து [golundhu1979@yahoo.com]
Bookmark in Del.icio.us | | Printable version | URL |

தமிழ் மாதமான பங்குனி மாதம் பிறந்து விட்டாலே தமிழக கிராமங்களில் பூக்குழி திருவிழா, முளைப்பாரி திருவிழா என்று விழாக்கள் களைகட்டத் துவங்கி விடுகின்றன. அதிலும் கிராமப்புறங்களில் கொண்டாடப்படுகின்ற திருவிழாக்களில் முளைப்பாரி திருவிழா முக்கியமான ஒன்று. உலகமயமாதல் சூழ்நிலையில் அனைத்துமே மாறி வருகிறது. அப்படி மாறாத தன்மையோடு இருப்பவைகள் கிராமங்களில் கொண்டாடப்படும் திருவிழாக்களைச் சொல்லலாம். வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே கொண்டாடப்படும் இத்திருவிழாக்களின் போது கிராமங்கள் தனி கலையோடு தான் காட்சி அளிக்கிறது.

தமிழர்களின் வாழ்க்கையில் முதன்மையான நிகழ்ச்சிகளில் திருவிழாவும் ஒன்று. பொதுவாக கிராம காவல் தெய்வ வழிபாடுகள் என்பது நாள் வழிபாடு, சிறப்பு வழிபாடு, ஆண்டு வழிபாடு என்ற வகைகளில் தான் கொண்டாடப்படுகிறது. நாள் வழிபாடு என்பது கிராம தெய்வங்கள் இருக்கும் இடத்தை கடக்கும் பொழுதோ, அல்லது கிராம மக்களில் தனிப்பட்டவர்களுக்கு ஒரு சிறு சங்கடங்கள் வரும் பொழுதோ அம்மனை வழிபடுவார்கள். இந்த வழிபாட்டில் கிராம மக்கள் எந்த செலவும் செய்வதில்லை.

சிறப்பு வழிபாடு என்பது வருடத்தில் முக்கிய தினங்கள் என்று சொல்லப்படுகின்ற பொங்கல் விழா, தமிழ் வருடப்பிறப்பு போன்ற நாட்களில் நடத்தப்படுகிறது. ஆண்டு வழிபாடு என்பது தான் கிராமப்புறங்களில் மிகவும் முக்கியமாக, முழு ஈடுபாட்டோடும் கொண்டாடப்படுகின்ற விழா. இந்த விழாக்களின் பொழுது தான் கிராம காவல் தெய்வங்களை நன்கு அலங்கரிக்கப்பட்டு 10 நாள் விழாவாக கொண்டாடப்படுகிறது. இந்த விழா மாரியம்மன், எல்லைக்காத்தம்மன், எக்கலாதேவியம்மன், காளியம்மன், முண்டக்கன்னியம்மன், செங்கோணியம்மன், முத்துமாரியம்மன் போன்ற தெய்வங்களை மகிழ்விக்கும் வகையில் கொண்டாடப்படுகிறது. இந்த பத்து நாள் விழாவில் ஆண்கள் காவல் தெய்வங்களை அலங்கரித்து அதனை கிராமம் முழுவதும், ஊர்வலம் எடுத்து வருதல், விழா ஏற்பாடுகளை செய்தல் போன்ற காரியங்களை கவனிப்பார்கள். ஆனால் பெண்களால் உருவாக்கப்பட்டு, புஜை செய்யப்பட்டு பெண்களால் அழிக்கப்படும் விழா முளைப்பாரி எடுத்தல் விழாவைச் சொல்லலாம்.

Mulaipaariபொதுவாக தெய்வங்களை பெண்களை ஒப்பிட்டுத் தான் சொல்லப்படுகிறது. அதிலும் குறிப்பாக கிராமப்புற வாழ்க்கையில் பெண்களின் பங்கு மகத்தானது மட்டுமல்ல முக்கியமானது. அதனால் தான் பெண்கள் மட்டுமே ஒன்று சேர்ந்து காவல் தெய்வங்களுக்கு திருவிழா ஆரம்பமான முதல் நாள் அன்று ஒரு கூடையில் கரம்பை மண்ணைப் போட்டு அதில் 9 வகையான நவதானியங்களான அனைத்து பயறு வகைகள், கேப்பை, கம்பு, நெல் போன்ற தானியங்களைக் ஒன்றாக்கி அதில் போட்டு தண்ணீர் தெளித்து முளைப்பாரி பயிரை உருவாக்குவார்கள். இதில் என்ன விசேஷம் என்றால்  முளைப்பாரிகள் சூரிய வெயில் படாத ஓர் இருட்டு அறையில் தான் உருவாக்கப்படுகிறது. பொதுவாக தாவரங்கள் சூரிய ஒளி பட்டு தான் பச்சையத்தை பெற்று வளர்ச்சி அடையும். ஆனால் முளைப்பாரிகள்  சூரிய ஒளி படாமல் வளர்வது தான் அதிசயம். இதற்கு காரணம் தெய்வ செயல் என்று கிராமமக்கள் சொன்னாலும் முளைப்பாரிக்கு இடப்படுகின்ற நவதானியங்கள் மற்றும் கரம்பை மண் மற்றும் மாட்டுச் சானம் தான் காரணம் என்றும் வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் சொல்கின்றனர். அதே போல இந்த முளைப்பாரிகள் உருவாக்கப்படும் அறைகளில் காற்று கூட செல்ல முடியாத அளவுக்கு அடர்த்தியாகவும், இருட்டாகவும் இருக்கும்.

இப்படி திருவிழா ஆரம்பித்த முதல் நாளில் இடப்படுகின்ற முளைப்பாரி பயிர் திருவிழாவின் 9ம் நாள் அன்று பெரிய அளவில் வளர்ந்து அற்புதமாக காட்சி அளிக்கும். 9ம் திருவிழாவின் பொழுது, உருவாக்கபபட்ட முளைப்பாரிகளை அதன் உரிமையாளர்களான பெண்கள் தங்களது தலையில் சுமந்து கிராம தெய்வங்களோடு ஊர்வலம் வருவார்கள். பின் அம்மனுக்கு புஜை செய்த பின் முளைப்பாரிகளை ஊரில் இருக்கும் குளத்தில் மொத்தமாக கொண்டு போய் போட்டுவிடுவார்கள். இது தான் முளைப்பாரி திருவிழாக்களின் வரையறை. இந்த வரையறை சில கிராமங்களுக்கு வேண்டுமானால் மாறுபடலாம். ஒரு சில கிராமங்களில் பூக்குளி நடைபெறும் பொழுது எடுத்துச் செல்வார்கள், சில கிராமங்களில் முளைப்பாரிக்கு என்று தனியாக விழா நடத்துவார்கள்.

Mulaipaari Vizhaமற்றபடி விழா கொண்டாடப்படும் முறைகள் எல்லாமே ஒன்றாகத் தான் இருக்கும் என்கிறார் வரலாற்று பேராசிரியரான புகழ் முளைப்பாரி திருவிழா கிராமப் பெண்களை கௌரவிக்கும் விழாவாக பெண்களால் தான் முழுமையாக செயல்படுத்தப்படுகிறது. முளைப்பாரியை பெண்கள் எடுப்பது ஒரு வேண்டுதல் தான். தங்கள் வாழ்வும், தங்கள் விளை நிலங்களில் விளைச்சல் அமோகமாக இருக்க வேண்டும் என்பதற்காக பெண்கள் முளைப்பாரி விழாவில் முளைப்பாரி எடுத்து வேண்டுதலை நிறைவேற்றுகிறார்கள். பொதுவாக இந்த முளைப்பாரிகளை உருவாக்குவதற்கு என்றே கிராமங்களில் சில பெண்கள் இருப்பார்கள். அவர்களிடம் முதலில் பெயர்களையும் அதற்கு தேவையான பொருட்களையும் கொடுத்து விட வேண்டும். பின் அனைத்து வேலைகளையும் அந்தப் பெண் தான் பார்த்துக் கொள்வார். அந்த ஒரு பெண் மட்டும் தான்  முளைப்பாரி வளரும் இருட்டு  அறைக்குள் சென்று காலை மற்றும் மாலை நேரங்களில் தண்ணீர் தெளிப்பது, சாம்பிராணி புகை போடுவது, முளைப்பாரி வளரும் 6ம் நாளில் அதற்கு சிக்கல் எடுப்பது போன்ற வேலைகளை சிரமம் பார்க்காமல் செய்வார். இதற்காக உருவாக்கப்படும் அறை சாமி அறை என்றும், அதில் யாரும் நுழையக் கூடாது என்று எழுதப்படாத சட்டமே இருக்கிறது. இந்த முளைப்பாரி வளர்த்தல் ஒற்றை இலக்கில் தான் வளர்ப்பார்கள். இரட்டை இலக்கில் வளர்க்க மாட்டார்கள். இந்த முளைப்பாரி பயிர்கள் நன்கு வளர வேண்டும் என்பதற்காக கும்மிப்பாட்டுப் பாடும் பழக்கம் இன்றும் அழியாமல் பாடப்பட்டு வருகிறது. மொத்தத்தில் ஆதி காலத்தில் இருந்து இன்று வரை மாற்றம் அடையாத, மாற்றப்படாத விழா எது என்றால் அது முளைப்பாரி திருவிழாவினை சொல்லலாம் என்கிறார் முளைப்பாரி பற்றி நன்கறிந்த முத்துமாரி.

கிராமங்களில் கொண்டாடப்படும் இந்த முளைப்பாரி மற்றும் இதர விழாக்களை நாம் மேலோட்டமான பார்வையில் பார்த்து அதனை புகழ்வதோடு நிறுத்திக் கொள்கிறோம். ஆனால் அதற்குள் இருக்கும் சூட்சுமத்தை நாம் உணர்வதில்லை. குறிப்பாக கிராமங்களில் கொண்டாடப்படும் முளைப்பாரி விழாக்கள் அனைத்து ஜாதியினரால் பொதுவான விழாவாக கொண்டாடப்படுவதில்லை. குறிப்பிட்ட பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட என அனைத்து ஜாதிகளுமே அவரவர் வசதிக்கு ஏற்ப விழாவை கொண்டாடுகிறார்கள். இந்த ஜாதிய முறை வழிபாடு தான் கிராம மக்களை ஜாதிய வட்டத்தை விட்டு வெளியே வர விடாமல் தடுக்கிறது. அதே போல இது போன்ற கிராம விழாக்களில் பெண்களுக்குத் தான் வேலைப்பாடுகள் அதிகரிக்கின்றன. ஆண்கள் திருவிழாவில் நடக்கின்ற நாடகங்கள், மது விருந்து, ஆடல் பாடல்களை பாhத்து ரசிக்க சென்று விடுவார்கள். ஆனால் பெண்களோ திருவிழா என்று சொல்லி சிறப்பு உணவுகள், சிறப்பு உணவுப் பொருட்கள் தயாரிப்புகள் என்று வேலைகளில் முழ்கி கஷ்டப்படுவார்கள். அதனால் இது போன்ற கிராம விழாக்களுக்கு எல்லாம் நாம் முக்கியத்துவம் கொடுப்பது தேவையில்லாதது என்கிறார் திராவிட கொள்கையில் பற்றுள்ள செழியன்.

|
oooOooo
திருமலை கோளுந்து அவர்களின் இதர படைப்புகள்.   கட்டுரை பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2006 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |