ஏப்ரல் 20 2006
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
கட்டுரை : தலாக் போதை
- பாஸ்டன் பாலாஜி
Bookmark in Del.icio.us | | Printable version | URL |

ஈரானுக்கு நீங்கள் தொலைபேசினால் அது அமெரிக்காவால் ஒட்டுக் கேட்கப்படும். தெரியாத்தனமாக 'நான் வெப்பன்ஸ் ஆ·ப் மாஸ் டிஸ்ட்ரக்ஷன் குறித்து வலைப்பதிவு செய்திருக்கிறேன்' என்று நண்பரிடம் அளந்தால், ஐ.நா.விடம் அமெரிக்கா "அமெரிக்காவை அணுகுண்டு கொண்டுத் தாக்க ஈரான் திட்டமிடுகிறது. இதற்கு ஆதாரம் உண்டு" என்று அறிவித்து ஈரான் மீது போர் தொடுக்கலாம்.

ஒட்டுக்கேட்கப்படும் உப்புப்பெறாத... சாரி... அரிசி பெறாத விஷயங்கள், பூதாகாரமாக விசுவரூபம் எடுக்குமா? ஒரிஸ்ஸாவில் எடுத்திருக்கிறது.

Talaqகிட்டத்தட்ட மூன்று வருடங்களுக்கு முன் குடிபோதையில் இருந்த ஷேர் மொஹமத் அலி உளறியதை ஒட்டுக் கேட்டதால், அவரின் குடும்பமே ஊருக்கு பயந்து வாழ்ந்து வருகிறது. பதினொரு வருடமாக குடித்தனம் செய்த மனைவி நஜ்மா பீவியிடம், 2003 ஜூலை ஐந்தாம் தேதி, தண்ணியடித்துவிட்டு 'தலாக்... தலாக்... தலாக்...' சொல்கிறான்.

'டாஸ்மார்க்-காரன் பேச்சு விடிஞ்சாப் போச்சு'; தேர்தல் இலவச வாக்குறுதியை, மந்திரிசபை அமைத்தவுடன் மறந்துவிடும் அரசியல்வாதியாக, அடுத்த நாள் காலையே மறந்தும் விடுகிறான்.

வழக்கமான தன்னுடைய லாரி டிரைவர் பணிக்கு செல்ல ஆரம்பித்து, வாழ்க்கை வழக்கம் போல் நடக்கிறது.

'பகலில் பக்கம் பார்த்து பேசு; இராத்திரியில் அதுவும் பேசாதே' என்னும் ஔவையார் காலத்துப் பழமொழியை மறந்ததால், அண்டை அயலார் ஒட்டுக் கேட்டு, உள்ளூர் மார்க்கப் பெரியோரிடம் வத்தி வைக்கிறார்கள். அவர்களும் தங்கள் பணியை செவ்வனே நிறைவேற்ற, இருவரையும் பிரிந்து வாழுமாறு பணிக்கிறார்கள்.

லாபம் சாரா அமைப்பு (என்.ஜி.ஓ) 'ஆஷியானா'வின் உதவியுடன் தாம்நகரில் இருக்கும் மௌலானா இஸ்லாமுதீனை சந்திக்கிறார்கள். தெளிவற்ற குடியுண்ட நிலையில் சொன்ன 'முத்தலாக்' செல்லாது என்று மார்க்க அறிஞர் மௌலானா மொழிகிறார். பிரிந்தவர் இணைகிறார்கள்.

சன்னி முஸ்லீம்களை தொண்ணூறு சதவீதம் கொண்ட கண்டபானியா (Kantabania)வில் மொத்தமாக ஆயிரம் பேர் இருக்கிறார்கள். இவர்களுக்கான உள்ளூர் ஜமாத் (Choudah Mohalla Muslim Jamat) பிரமுகர் பல்லூ சர்தார், அலி-நஜ்மாவின் வீட்டிற்கு சென்று கைகலப்புக்குப் பிறகு இருவரையும் மீண்டும் பிரித்துவைக்கிறார். ஜமாத்தின் தலைவர் ஷேக் அப்துல் பாரி, தாம்நகருக்கு சென்று வேறொரு மார்க்க அறிஞரான மு·ப்தி ஷேக் க்வாஸிமை அணுகி 'குடிபோதையில் உளறினாலும் முத்தலாக் செல்லுபடியாகும்' என்று தீர்ப்பு வாங்கி வருகிறார்.

தேசிய மகளிர் அமைப்பின் (National Commission for Women - NCW) உதவியை தம்பதியர் நாடுகிறார்கள்.

கட்டாக்கில் இருக்கும் குடும்ப நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்படுகிறது. டிசம்பர் 12, 2003 அன்று கட்டாக் குடும்ப நீதிமன்றம் இவர்கள் இருவரும் சேர்ந்து வாழ்வதற்காகத் தீர்ப்பளித்தது. தீர்ப்பை நடைமுறைப்படுத்த, காவல்துறை உதவ மறுக்கிறது. ஊரை விட்டுத் தள்ளி வைத்தப் பெரியோர்களுக்கு சாதகமாக காவல்துறை செயல்படுகிறது. தம்பதியர்களால் தங்கள் வாழ்வைத் தொடர முடியவில்லை.

உள்ளூர் மார்க்க அறிஞர்களை சமாதானம் செய்ய, மே 21, 2004 அன்று ஐந்து பேர் கொண்ட குழுவை, கண்டபானியா கிராமத்திற்கு NCW அனுப்புகிறது. இந்த செய்கை 'அயலாரின் தலையீட்டை ஒப்புக் கொள்ளமாட்டோம்' என்று ஜமாத்தை கொதித்தெழ செய்கிறது. மௌன ஊர்வலாமாக ஜூன் 3, 2004 அன்று இஸ்லாமிய சட்டத்தை நிலைநிறுத்துவதற்காக பேரணி நடக்கிறது.

சமரசமாக மார்க்க அறிஞர்கள், நஜ்மாவும் அலியும் மீண்டும் குடும்பம் நடத்த 'ஹலாலா'வைப் பரிந்துரைக்கிறார்கள். இதன்படி நஜ்மா வேறொருவனை மணப்பாள். அவன் நஜ்மாவுக்கு முத்தலாக் கொடுப்பான். அதன் பின், மீண்டும் கணவன் அலியுடன் மறுமணம் புரிந்து கொள்ளலாம்.

இதற்கு ஒப்புக்கொள்ளாத நஜ்மாவின் பெற்றோர் குடும்பம் - ஊரை விட்டு ஒதுக்கிவைக்கப்படுகிறது. குடிக்கத் தண்ணீர் கூட கிடைக்காத நிலை. தேசிய மகளிர் அமைப்பின் உதவியுடன் வாசலில் கை-பம்பு அமைத்துத் தரப்படுகிறது.

உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கிறார்கள். உயர்நீதிமன்றம் தலையிட மறுத்து, ஏப்ரல் 18, 2005 வழக்கை தள்ளுபடி செய்கிறது.

அதன் பின், ஒரு வருட உச்சநீதிமன்றப் போராட்டத்திற்குப் பின், "இந்தியா போன்ற மதச்சார்ப்பற்ற ஒரு நாட்டில் தம்பதிகள் ஒன்றாக வாழ்வதை தடுக்க யாருக்குமே உரிமை இல்லை என்று குறிப்பிட்டது. தமது சமூகத்தினரால் தள்ளி வைக்கப்பட்டுள்ள இந்த தம்பதிகளுக்கு விசேட பாதுகாப்பு வழங்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை" என்று தீர்ப்பளித்துள்ளது.

நஜ்மாவின் அத்தை கைரூன் பீவி 'உடனடியாக, இந்த கொடூரமான, நியாயமற்ற முத்தலாக் முறையை தடை செய்ய வேண்டும். மதத்தை ஆயுதமாக வைத்துக் கொண்டு, எங்களை, ஆண்கள் பூஜ்யமாக்கி விட்டார்கள்' என்று உச்சநீதிமன்ற உத்தரவை வரவேற்றிருக்கிறார். நஜ்மாவின் அம்மா நசீமா பீவியும் முத்தலாக் சட்டத்தில் மறுமலர்ச்சிக்கு விண்ணப்பம் வைக்கிறார்.

இருபத்தியாறு வயதான நஜ்மா தன்னுடைய பெற்றோர் வீட்டில் நான்கு குழந்தைகளுடன் வசித்து வருகிறார். சொந்த ஊரில் பிழைப்பு நடத்த முடியாததால் நாற்பது வயதான கணவர் ஷேர் அலியும் 140 கிலோமீட்டர் தாண்டி தனியாக இருக்கிறார்.

சுப்ரீம் கோர்ட் உத்தரவுக்குப் பிறகாவது இருவரும் மீண்டும் சொந்த ஊருக்குத் திரும்ப முடிகிறதா? இருவரும் சேர்ந்து வாழ இயலுமா?


ஓரிஸாவின் ஜமாயத் உலாமா (Jamiat Ulama) தலைவர் மௌலானா சாஜிதீன் க்வாஸ்மி: "அவர்களுக்கு அரசு பாதுகாப்பு கிடைக்கலாம். ஆனால், நாங்கள் அவர்களை இணைந்து வாழ அனுமதிக்க மாட்டோம். மீறினால், இஸ்லாமிய மர்க்கத்தில் இருந்து அவர்களை நீக்குவோம்.

மதம் சம்பந்தமான விஷயங்களில் உச்சநீதிமன்றம் தலையிட முடியாது. மற்ற வழக்குகளில் கவனம் செலுத்துவதோடு அவர்கள் நிறுத்திக் கொண்டிருக்க வேண்டும். தீர்ப்பு கொடுப்பதற்கு முன் மார்க்க அறிஞர்களையும் மத நிறுவனங்களையும் ஆலோசித்திருக்க வேண்டும்".


உள்ளூர் ஜமாத் தலைவர் மொஹமது அப்துல் பாரி: "அவர்கள் சேர்ந்து வாழ்வதை நாங்கள் தவிர்க்கவே இல்லை. அது உள்ளூராரின் விருப்பத்திற்குட்ப்பட்டது".


இஸ்லாமிய சட்ட அமைப்பின் (Muslim Law Board) தலைவர் கமல் ·பரூக்கி: "இது சுதந்திர நாடு என்றும், எவருடன் வாழ விருப்பமோ அவருடன் வாழலாம் என்று உச்சநீதிமன்றம் சொன்னது சரியானதே. ஆனால், சுதந்திர நாட்டில் எல்லோரும் தங்களின் சட்டத்துக்கு உட்பட வேண்டும்;

இந்தச் சம்பவத்தில் இவர்கள் இருவரும் இஸ்லாமிய சட்டத்துக்கு உட்பட்டு வாழ்கிறார்கள். அவர்களின் திருமணம் இஸ்லாமிய சட்டப்படி நடைபெற்றது. விவாகரத்துக்கும் அதுவே பொருந்தும்".


இரு உள்ளங்கள் இணைந்து வாழ விரும்புகின்றன. ஒரு மாமாங்கமாய் மணமுடித்து நான்கு குழந்தைகள் உடைய குடும்பம், கோபத்தில் சிந்திய வார்த்தையை அழிக்க முயற்சிக்கிறது. இவ்வாறு நடப்பது ஒரு தனிப்பட்ட சம்பவம் அல்ல.

மேற்கு வங்காளத்தின் ஜல்பாய்குரியில் (Jalpaiguri) இதே போல் குடித்து விட்டு முத்தலாக் குழறியிருக்கிறான். அங்கும் அவர்களின் குடும்பம் தள்ளிவைக்கப்பட்டிருக்கிறது. லக்னௌவின் ·பிரங்கி மஹல் (Firangi Mahal) மற்றும் அகில இந்திய இஸ்லாமிய சட்ட மன்றம் (AIMPLB) போன்ற பல மார்க்க வழிகாட்டிகள் குடித்துவிட்டு சொல்வது செல்லுபடியாகாது என்றாலும், உள்ளூர் அமைப்புகளில் அவர்களால் தாக்கமோ மாற்றமோ ஏற்படுத்த இயலவில்லை.

பத்ராக் (Bhadrak)-இல் மட்டும் குறைந்தது ஐம்பது சன்னி குடும்பங்களில் இந்த 'குடிபோதை முத்தலாக்' பிரச்சினை நீடித்து வருகிறது. நஜ்மாவின் நிலை மட்டுமே நீதிமன்றப்படிகளைத் தொட்டு அல்லலுக்குள்ளாகி இருக்கிறது. மற்ற மனைவியர் அனைவரும் இந்தத் தீர்ப்பின் சுமுக முடிவை ஆவலுடன் எதிர்நோக்குகிறார்கள். இவர்கள் இருவரும் இணைந்தால், பிரிந்த பல குடும்பங்கள் ஒரிஸாவில் சேர்ந்து வாழ முன்னோடியான தீர்ப்பாக இது இருக்கப் போகிறது.

ஒரு பில்லியனைத் தாண்டிய இந்தியாவின் மக்கள் தொகையில் 13.4% இஸ்லாமிய சமூகத்தைச் சார்ந்தவர்கள். சொத்து விவகாரம், திருமணம், பூர்வீக உரிமை, விவாகரத்து போன்ற தனிநபர் சம்பந்தமான பிரச்சினைகளில் இஸ்லாமிய சட்டத்தை அனுசரிக்கிறார்கள்.

தூக்கத்தில் உளறிய 'முத்தலாக்'கால் விவாகரத்து; பங்காளி சண்டையில் கொண்ட பிணக்கினால், அண்ணனுக்கு வாக்களித்த கோபத்தில் முத்தலாக் என்று விவாகரத்து குழப்பமாக நொடிநேர விளையாட்டாகக் கையாளப்பட்டு வருகிறது.

சென்ற வருடம் AIMPLB வெளியிட்ட 'திருமண ஒப்பந்தத்திற்கான மாதிரி வழிமுறைகள்' இப்பொழுது முக்கியத்துவம் பெறுகிறது.
* வாய்மொழியப்படும் 'தலாக்;  தலாக்; தலாக்...' செல்லுபடியாகாது
* அனைத்து விவாகரத்துகளும் காஜியார்களிடம் இருந்து ஒப்புதல் பெற வேண்டும்

இந்தியாவின் உச்சநீதிமன்றம் கரிசனத்தோடு இந்த வழக்கை அணுகி தீர்ப்பு வழங்கியுள்ளது. தனி மனித சுதந்திரத்திற்கு ஊறு விளைவிப்பதாக இஸ்லாமிய சட்டங்கள் இயங்கக் கூடாது. தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள மார்க்க அறிஞரின் அறிவுரையை எதிர்பார்த்திருக்காமல், பக்கத்துவீட்டுக்காரர்களின் ஒப்புதலை நோக்காமல் சுதந்திரமாக வாழ இஸ்லாம் அனுமதிக்க வேண்டும்.


தகவல்/செய்தி:

http://www.telegraphindia.com/1060424/asp/nation/story_6137221.asp

http://www.newkerala.com/news2.php?action=fullnews&id=47878

| |
oooOooo
பாஸ்டன் பாலாஜி அவர்களின் இதர படைப்புகள்.   கட்டுரை பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2006 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |