Tamiloviam
ஏப்ரல் 26 2007
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
தராசு : தொடரும் இடஒதுக்கீடு பிரச்சனை
- மீனா [feedback@tamiloviam.com]
| | Printable version | URL |

கடந்தவாரம் மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் இதர பிற்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்க சுப்ரீம் கோர்ட் தடை விதித்தது மக்கள் மத்தியிலும் அரசியல்வாதிகள் மத்தியிலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. நீதிபதிகள் அர்ஜித் பாசாயத், எல்.எஸ்.பாண்டா ஆகியோர் அடங்கிய சுப்ரீம் கோர்ட் பெஞ்ச் இதர பிற்பட்ட வகுப்பினர் எந்த அடிப்படையில் நிர்ணயிக்கப் படுகின்றனர் - இட ஒதுக்கீட்டில் இருந்து முன்னேறிய பிரிவினரை (கிரீமி லேயர்) நீக்குவது எப்படி? கேள்வி எழுப்பியது. இதற்கு மத்திய அரசால் சரியான விளக்கம் அளிக்க இயலாத நிலையில் தான் இச்சட்டத்திற்கு கோர்ட் தடை உத்திரவு பிறப்பித்தது.

1931 ஆம் ஆண்டு நடந்த கணக்கெடுப்பின் அடிப்படையில் இன்றும் இடஒதுக்கீடு வழங்குவது என்பது அபத்தமானது. தற்போதைய நிலையில் 75 ஆண்டு பழமையான கணக்கெடுப்பை உறுதியானதாகக் கருத முடியாது. இட ஒதுக்கீடு என்பது நிரந்தரமாகவும், பின்தங்கிய நிலைமையை நீண்ட காலத்திற்கு தொடரச் செய்வதாகவும் இருக்கக் கூடாது. சமூகம் மற்றும் பொருளாதார ரீதியாக யார் யார் பின் தங்கி உள்ளனர் என்பதை மத்திய அரசால் உறுதி செய்ய முடியாதவரை இந்த சட்டத்தை அமல் படுத்த முடியாது என்பது நியாயமான வாதம். தடை ஏற்படுத்திய சுப்ரீம் கோர்ட்டே எஸ்.சி. எஸ்.டி. வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டை நிறுத்த உத்திரவிடவில்லை. அவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன.

இடஒதுக்கீடு பிரச்சனையை அரசியலாக்கி மக்கள் மத்தியில் தங்கள் கட்சிதான் பிற்படுத்தப்பட்டோருக்காக பாடுபடும் கட்சி என்பது போன்ற ஒரு மாயத்தோற்றத்தை ஏற்படுத்தவே அனைத்து அரசியல் கட்சிகளும் பாடுபடுகின்றனவே தவிர உண்மையாக இப்பிரச்சனையைத் தீர்க்க ஒரு தலைவரும் முன்வரவில்லை. இது வடஇந்திய - தென் இந்திய தலைவர்கள் அனைவருக்கும் பொருந்தும். ஏதோ தாங்கள் தான் பிற்படுத்தப்பட்ட மக்களின் பிரதிநிதிகள் போலவும் - சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் அனைவரும் இவர்களது எதிரிகளைப் போலவும் ஒரு தோற்றத்தை ஏற்படுத்துவதில்தான் அரசியல்வாதிகள் அனைவரும் முனைப்பாக உள்ளார்கள். கோடிக்கணக்கில் பணநஷ்டம் ஏற்படுத்தும் வகையில் - மக்களுக்கு இடைஞ்சலைத் தவிர வேறு ஒன்றுமே தராத பந்த் நடந்தது இதற்காகத்தான்.

பிற்படுத்தப்பட்ட - மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் ஏராளமானோர் இப்போது ஐ.ஏ. எஸ்., ஐ.பி.எஸ், டாக்டர்கள், இன்ஜினியர்கள் ஆகியுள்ளனர். இவர்கள் அனைவரும் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் கல்வி நிறுவனங்களில் சேர்ந்து அரசு வேலைவாய்ப்பு பெற்றவர்கள். சாதாரணமானவர்களாக இருந்து பெரும் அரசியல்வாதிகளாக மாறி கோடிக்கணக்கில் சொத்துக்களை குவித்தவர்களும் பல கல்லுரிகளை நடத்துபவர்களும் இவர்களில் அடக்கம். இவர்களது வாரிசுகளுக்கும் இட ஒதுக்கீடு வேண்டுமா அல்லது இவர்கள் சார்ந்துள்ள ஜாதியைச் சேர்ந்த கிராமங்களில் உள்ள மிகவும் ஏழைகளாக இருப்பர்களுக்கு மட்டும் இடஒதுக்கீடு வழங்க வேண்டுமா என்பது தான் சுப்ரீம் கோர்ட்டின் கேள்வி. தமிழகத்தில் மட்டுமல்லாது அகில இந்திய அளவில் இடஒதுக்கீட்டை ஆதரிக்கும் பல அரசியல் கட்சி தலைவர்கள் இட ஒதுக்கீட்டில் "கிரீமி லேயர்' என்ற வார்த்தையையே சேர்க்கக் கூடாது என வாதிடுகின்றனர். அதாவது கிராமங்களில் வசிக்கும் அப்பாவி ஏழைகள் தொடர்ந்து ஏழைகளாகவே இருக்க வேண்டும், நகரங்களில் நட்சத்திர பள்ளிகளில் படிக்கும் செல்வாக்கு மிகுந்தவர்களின் குழந்தைகள் மட்டுமே இடஒதுக்கீடு பயனை அனுபவிக்க வேண்டும் என்கின்றனர்.

இடஒதுக்கீட்டால் நிஜத்தில் யாருக்கு நன்மை என்ற கேள்விக்கு அரசியல்வாதிகளிடம் நாம் விடை காண முடியாது.  "ஆதிதிராவிடர், பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த அதிகாரிகளின் பிள்ளைகளை வசதியின் காரணமாக மிகப் பெரிய பள்ளியில் தானே சேர்க்கின்றனர். அவர்களுக்கு எதற்கு இடஒதுக்கீடு? உண்மையிலேயே மக்கள் மேல் அக்கறை இருந்தால், வசதியில்லாதவர்களுக்கு மட்டும் ஒதுக்கீடு கிடைக்கும் வகையில் உள்ள "கிரிமிலேயர்' முறையை ஏன் எதிர்க்க வேண்டும்??" இதுபோன்ற கேள்விகளை நாட்டு மக்கள் ஏற்கனவே கேட்க ஆரம்பித்துவிட்டார்கள்..

மொத்தத்தில் சுப்ரீம் கோர்ட் தடை காரணமாக பிற்படுத்தப்பட்ட மக்கள் பாதிக்கப்படுவர் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. 27 சதவீத ஒதுக்கீட்டில் பெரும்பாலும் அந்தப் பிரிவில் உள்ள முன்னேறிய மக்களே அதிகம் பயனடைகின்றனர். கீழ்தட்டு மக்கள் இடஒதுக்கீட்டில் அதிக பலன் பெறவில்லை என்பது கண்கூடாகப் பார்க்கும் உண்மை.  பிற்படுத்தப்பட்டவர்களுக்கு ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., பணியிடங்கள் மற்றும் உயர் கல்வி நிறுவனங்களில் சேருவதற்கான தேர்வுகளில் உரிய பயிற்சிகள் அளித்தால் போதுமானது. அப்படியும் இடஒதுக்கீடு வழங்கியே ஆகவேண்டும் என்றால் கோர்ட் கேட்கும் விவரங்களை சரியாக அளிக்க வேண்டியது மத்திய - மாநில அரசுகளின் கடமை. இதை விட்டுவிட்டு மக்களை பாதிக்கும் வகையில் பந்த் நடத்துவதும்  நீதிபதிகளை எதிர்த்து காட்டுக்கூச்சல் போடுவதும் அநாகரீகமாக வார்த்தைகளைப் பிரயோகிப்பதும் தேவையற்றவை.

| | |
oooOooo
                         
 
மீனா அவர்களின் இதர படைப்புகள்.   தராசு பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2007 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |