ஏப்ரல் 28 2005
தராசு
வ..வ..வம்பு
மனம் போன போக்கில் மனிதன் போகலாமா?
மஜுலா சிங்கப்புரா
உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால்
முத்தொள்ளாயிரம்
கட்டுரை
உள்ளங்கையில் உலகம்
கவிதை
திரைவிமர்சனம்
ஆன்மீகக் கதைகள்
துணுக்கு
அறிவிப்பு
 
  முதல் பக்கம்
தொடர்கள்
இலக்கியவாதி  புதிது
- சத்யராஜ்குமார்
ஹர்ஷத் மேத்தா
- சசிகுமார்
- சத்யராஜ்குமார்
கோடிட்ட இடங்கள்
- சித்ரன்
சுய சாசனம்
- பாஸ்டன் பாலாஜி
என்னை எழுதியவர்கள்
- சத்யராஜ்குமார்
களம்
- நாகூர் ரூமி
கங்கை இல்லாத காசி
- பாஸ்டன் பாலாஜி
வார்த்தையல்ல, வாக்கியம்
- என். சொக்கன்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
 
மஜுலா சிங்கப்புரா : பாரீர் நீர் கேளீரோ படைத்தோன் காப்பான்!
- எம்.கே.குமார்
| Printable version |

எப்பிறப்பாயினும் அதன் இருத்தல் மற்றும் வாழ்தலின் சிறப்பானது அது முடிவுறும் நேரத்தில் உணரப்பட்டுவிடும். வாழ்தலின்போது உரைக்காமல் உறைந்து கிடந்த அனுமானங்கள், முடிவுறுதலின் போது உண்மைகளையும் நுட்பங்களையும் தெளிவாகக் காட்டிவிட்டுச் செல்லும். கலைந்து கிடந்த அப்பிம்பம் எங்கேனும் ஓரிடத்திலாவது தெளிவானதொரு வானவில்லாகக் காட்சி தரக்கூடும். பிணமெரிக்கப் பயன்படும் விறகிலிருந்து பிணமாகும் மனிதர்கள் வரை எல்லாம் அப்படித்தான். எந்த நிறுத்தத்தில் நாம் இறங்கிக்கொண்டாலும் சரி; எத்தனை முறை மீண்டும் ஏறினாலும் சரி.

சிங்கப்பூரின் வளர்ச்சிக்கும் பொருளாதார முதன்மைக்கும் முன்னோடிகளாய் நின்ற இந்தியர்களில் இன்னொரு முக்கியமானவர் திரு. சி.வி தேவன் நாயர். 1914 ஆம் வருடம் கேரளாவிலிருந்து பிழைப்பதற்காக மலாயாவிற்கு வந்தார் அவரது அப்பா. தனியாரின் ரப்பர் தோட்டம் ஒன்றில் கிளார்க்காக பணிபுரியும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. அத்தோட்டத்திலேயே செல்வாக்கோடு வாழ்ந்த அவருக்கு மூன்று ஆண்குழந்தைகளும் ஆறு பெண்குழந்தைகளும் பிறந்தன. மூன்று ஆண்மகவுகளில் மூன்றாவதாய் 1923 ஆம் ஆண்டு 'மலாக்கா' நகருக்கு அருகில் உள்ள 'ஜசின்' என்ற ஊரில் இருந்த ரப்பர் தோட்டத்தில் 'செங்கரா வெட்டில் தேவன் நாயர்' பிறந்தார்.

ஜப்பானியர்கள் இரண்டாம் உலகப்போரின் போது மலாயாவையும் கைப்பற்ற, மலாயாவின், ரப்பர் மற்றும் பனைத்தோட்டங்களில் பணிபுரிந்த தொழிலாளர்களும் அடிமைகளும் அவர்களின் தேவைகளுக்கு அவசியமாயினர். ரயில்பாதை போடும் பொருட்டும் இன்னபிற ஏவல்களுக்கும் தோட்ட அடிமைகளை, ஒவ்வொரு தோட்டத்திற்கும் வந்து மொத்தம் மொத்தமாக அள்ளிச்சென்றனர். அள்ளிச்செல்லப்பட்டவர்களில் பலர் வீடு திரும்பியது தெய்வாதீனமாக எப்போதாவது ஒன்றோ இரண்டோ நடந்து வந்தது. மீண்டு வந்தவர்கள் இன்னொரு பிறவி எடுத்தவர்களானார்கள்.

இந்நிலையில் திரு. தேவன் நாயரின் அப்பா கணக்கராய் இருந்த அத்தோட்டத்திலும் பலர் அவ்வாறு மறுநாள் இழுத்துச்செல்லப்படுவதாய் ஜப்பானியர்கள் அறிவித்திருக்க, 'அவர்களை அனுப்பி வைத்தால் தீராத பாவத்திற்குத் தான் ஆளாக நேரிடுமே என்றும் 'அனுப்பாவிட்டால் தன் தலை உருளுமே' என்றும் தவித்துக்கொண்டிருந்தார் அவர். சிறுவனாய் இருந்த தேவன் நாயருக்கு பிரச்சனை புரிந்தது. அதிலிருந்து தன் தந்தை மீண்டு வர, அன்று அவர் ஒரு திட்டம் தீட்டினார். அதன்படி எல்லாம் தொழிலாளர்களும் அன்று பாதுகாப்பாக உயிர்தப்பினர்.

திரு. தேவன் நாயர் முதன் முதலாய் போராட்டவாதியானதும், ஜப்பானியர்களின் மேல் வெறுப்பு கொண்டு, மலாயாவில் ஜப்பானியர்களை எதிர்த்து காட்டுக்குள் திரிந்துகொண்டிருந்த கொரில்லாப் படையினரான 'ஜப்பானிய எதிர்ப்பு மலாய மக்கள் ராணுவத்தில் (Malayan People's Anti-Japanese Army, MPAJA)' சேர உறுதுணையாய் இருந்ததும், கம்யூனிசக் கட்சிகளின் மீது ஆர்வம் ஏற்படக் காரணமானதும் என அவரின் எல்லா அரசியல் போராட்ட வாழ்வுக்கும் அந்த நிகழ்வே அடித்தளமாய் அமைந்தது.

தமது பத்தாம் வயதில் சிங்கப்பூருக்கு குடும்பத்தோடு குடிபெயர்ந்த அவர், தொடக்கக்கல்வியும் உயர்கல்வியும் சிங்கப்பூரில் பயின்றார். ஆசிரியராகப் பணிபுரியத்தொடங்கிய இவர் பிறகு ஆங்கிலேயர்களிடமிருந்து மலாயாவின் சுதந்திரத்திற்குப் பாடுபட்டுக்கொண்டிருந்த மலாயன் கம்யூனிசக் கட்சியில் சேர்ந்தார். கம்யூனிசக் கொள்கைகளில் தீவிரமும் செயலார்வத்தோடு துடிப்பாகவும் இருந்த அவருக்கு விரைவில் சிங்கப்பூரில் நிலவி வந்த பல்வேறு தொழிற்சங்கங்களிடையே செல்வாக்குப் பெருக, சிங்கப்பூரின் கம்யூனிசக் கட்சியில் குறிப்பிட்டுப் பெயர் சொல்லும் அளவுக்கு, 'முக்கிய ஐந்து நபர்களில்' ஒருவராய் வந்தார்.

சிங்கப்பூரில் அப்போது ஆட்சி செய்துகொண்டிருந்த ஆங்கிலேயர்களால், அவர்களது ஆட்சிக்கு எதிராகக் கிளர்ச்சி செய்த கம்யூனிசத் தலைவர்கள் சிலர் சிறையில் அடைக்கப்பட்டனர். அதன்படி 1951 ஆம் ஆண்டு முதல் 1953 ஆண்டுவரை ஜெயிலில் இருந்தார் திரு. தேவன் நாயர். திரு. லீ குவான் யூ அவர்கள் லண்டனில் படித்து விட்டுத் திரும்பி வந்து, சிங்கப்பூரில் சட்ட ஆலோசகராகப் பணிபுரிந்த பொழுது, ஆசிரியர் சங்கத்தில் உறுப்பினராயும் தீவிர கம்யூனிச சங்கங்களின் ஒருங்கிணைந்த சக்தியாகவும் விளங்கிய தேவன் நாயருடன் அவருக்குப் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது மிக நெருக்கமான நட்பாக வளர்ந்தது.

பிறகு திரு. லீ குவான் யூ அவர்களும் அவரது கல்லூரித் தோழர்களுமாய், ஆங்கிலேயர்களிடமிருந்து சுதந்திரம் பெறுவதற்காக உருவாக்கிய 'மக்கள் செயல் கட்சியில்' (1955) சேர்ந்தார். பொதுவுடைமை சித்தாந்தங்களும் குடியாட்சித் தத்துவங்களுமாய் இணைந்திருந்த அக்கட்சியில் தேவன் நாயரோடு மற்ற கம்யூனிசத்தலைவர்களும் முக்கியப் பொறுப்பில் அமர்த்தப்பட்டனர். மக்கள் செயல் கட்சியின் 'மத்திய நிர்வாக செயல் குழு' உறுப்பினராக இவர் இருந்தார்.

1955 ஆம் அண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் மக்கள் செயல் கட்சி 4 வேட்பாளர்களை நிறுத்த, அவற்றில் ஒருவராய் '·பேரர் பார்க்' தொகுதியில் நின்ற திரு. தேவன் நாயர், மற்ற மூவரும் வெற்றி பெற, 400 ஓட்டு வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார். ஆனாலும் தொடர்ந்து தொழிற்சங்கங்களில் மிகுந்த ஈடுபாட்டோடு பங்கெடுத்துக்கொண்டு வந்தார். சிங்கப்பூர் தொழிற்சாலை, கடைத்தொழிலாளர்கள் சங்கத்திலும் சிங்கப்பூர் டிரக்ஷன் கம்பெனி சங்கத்திலும் முக்கியப்பொறுப்புகளில் இருந்து வந்தார்.

சிங்கப்பூரில் அப்போது தொடர்ந்து நடந்து வந்த சீன- மலாய் இனப்பிரச்சனைகளில் கம்யூனிச சக்திகளும் முக்கிய பங்கேற்றிருப்பதாகச் சந்தேகப்பட்ட அப்போதைய அரசு, மக்கள் செயல் கட்சியிலும் இருந்த பல கம்யூனிசத் தலைவர்களை சிறையில் அடைத்தது. அப்படி சிறையிலடைக்கப்பட்ட எட்டுப்பேரில் திரு. தேவன் நாயரும் ஒருவர்.

1959 ஆம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் 'மக்கள் செயல் கட்சி' அமோக வெற்றிபெற்று ஆட்சியைப்பிடிக்க, 'சிறையிலிருக்கும் எட்டுப்பேரையும் விடுதலை செய்தால்தான், தான் ஆட்சி அமைக்கப்போவதாக,' திரு. லீ குவான் யூ அவர்கள் சொல்ல, அவரின் பிடிவாதத்திற்கு இணங்கி அப்போதைய அரசு அவர்கள் எட்டுப்பேரையும் விடுவித்தது. எட்டுப்பேரும் பிறகு வெவ்வேறு சூழ்நிலையில் திரு. லீ குவான் யூ அவர்களுக்கு எதிராக ஆட்சிக்களத்தில் குதிக்க, அன்றுமுதல் கடைசி வரை திரு. லீ குவான் யூ அவர்களுக்கு மிகவும் விசுவாசமாக இருந்தவர் திரு. தேவன் நாயர் மட்டுமே!

கம்யூனிசக் கட்சியைச் சேர்ந்த எல்லா பிரமுகர்களும் வெவ்வேறு சந்தர்ப்பத்தில் வேறு கட்சிகளில் சேர்ந்தும் புதுக்கட்சி ஆரம்பித்தும் பிரிந்துவிட, திரு. தேவன் நாயர் மட்டுமே கடைசி வரை 'மக்கள் செயல் கட்சியில்' இருந்தார். 1964 ஆம் ஆண்டு பிரிக்கப்படாத சிங்கப்பூரிலிருந்து மலேசிய நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு, மக்கள் செயல்கட்சியின் முதல் வெற்றியாளராக பாராளுமன்றத்துக்குச் சென்றார்.

மலேசியா சிங்கப்பூரிலிருந்து விலகிய பின், மலேசியாவிற்குத் திரும்பிய அவர், மலேசியாவில் தங்கி, ஜனநாயக செயல் கட்சியை (Democratic Action Party) உருவாக்கி அதன் முதல் பொதுச்செயலாளராக இருந்தார். பிறகு சிங்கப்பூரில் நிலவி வந்த தொழிலாளர்களின் பெரும் பிரச்சனைகளைச் சமாளிக்க திரு. லீ குவான் யூ அவர்களால் மீண்டும் சிங்கப்பூருக்கு அழைக்கப்பட்டார்.

அன்று சிங்கப்பூருக்கு வந்தவர், திரு. லீ குவான் யூ அவர்களுக்குப் பல்வேறு பிரச்சனைகளிலும் தோள் கொடுத்து உதவினார். எல்லா உழைப்புக்கும் பலனாக, 1981 ஆம் ஆண்டு, திரு. லீ குவான் யூ அவர்களால், சிங்கப்பூரின் 'மூன்றாவது அதிபராக' சிறப்புடன் பதவியில் அமர்த்தப்பட்டார் திரு. தேவன் நாயர்!

பதவியேற்றுச் சில வருடங்கள் கழித்து, இத்தகைய சிறப்புகளைக்கொண்ட திரு. தேவன் நாயர் மீது என்ன குற்றச்சாட்டு எழுப்பட்டு பதவியிறக்கம் செய்யப்படப்பட்டார் தெரியுமா? 'பெண்பித்தர் மற்றும் குடிகாரர்' என்று!

எப்படி நடந்தது இது? உண்மையில் குடிகாரரா அவர்? ஏன் இதை லீ குவான் யூ அவர்களுக்குத் தெரியாமல் மறைத்தார்கள்? அவர் மனைவி இவைகளைப்பற்றி என்ன சொன்னார்?

(தொடரும்...)


சிங்கப்பூர் டைம்ஸ் 2015 இதழில் இருந்து.

சென்னை. மே 10. சென்னையின் முக்கியச் சாலையில் நடைபெற்ற போராட்டம் ஒன்றில் நேற்று, 'முதலமைச்சரும் மந்திரிகளும்' கலந்துகொண்டனர். பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலையை மத்திய அரசு குறைக்கவேண்டும் என்று அவர்கள் இப்போராட்டம் நடத்தினர்.

இந்தியாவில் பெட்ரோலியப்பொருட்களின் விலை ராக்கெட் வேகத்தில் சமீப காலமாய் எகிறி வந்துகொண்டிருந்தது நாம் அறிந்ததே! உலக கச்சா எண்ணெய் உற்பத்தியாளர்கள், கச்சா எண்ணையின் விலையை ஏற்றியதை ஒட்டி இந்தியாவிலும் பெட்ரோலியப்பொருட்களின் விலையை மறுபரிசீலனை செய்வது குறித்து இரண்டு நாட்களுக்கு முந்தைய அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

இதனால், அரசாங்கம் பெட்ரோலியப்பொருட்களுக்குத் தந்த மானியத்தை முழுமையாக நிறுத்தியபிறகும், தொடரும் கச்சா எண்ணெய் விலையேற்றம் அரசுக்கு பெரும் சவாலாக இருப்பதாகவும் அதனால் பெட்ரோல் விலையை உயர்த்துவதைத் தவிர அரசுக்கு வேறு வழியில்லை எனவும் முடிவு செய்யப்பட்டதாக அறிக்கையில் சொல்லப்பட்டது.

இதன்படி பெட்ரோல் விலையில், லிட்டர் ஒன்றுக்கு 5.80 (ஐந்து ரூபாய் எண்பது காசுகள்) ஏற்றப்படுவதாகவும் இனி பெட்ரோலின் விலை 'தொள்ளாயிரத்து தொண்ணூற்று ஒன்பது ரூபாய் எண்பது காசுக்கு (ரூபாய் 999.80)' விற்கப்படும் என்றும், டீசல் விலை பத்து ரூபாய்(ரூபாய் 10.00) ஏற்றப்பட்டு, 'எழுநூற்று எண்பது ரூபாய் முப்பதுகாசுக்கு (ரூபாய் 780.30)' விற்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2005 Tamiloviam.com - Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
  | Privacy |