ஏப்ரல் 28 2005
தராசு
வ..வ..வம்பு
மனம் போன போக்கில் மனிதன் போகலாமா?
மஜுலா சிங்கப்புரா
உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால்
முத்தொள்ளாயிரம்
கட்டுரை
உள்ளங்கையில் உலகம்
கவிதை
திரைவிமர்சனம்
ஆன்மீகக் கதைகள்
துணுக்கு
அறிவிப்பு
 
  முதல் பக்கம்
தொடர்கள்
இலக்கியவாதி  புதிது
- சத்யராஜ்குமார்
ஹர்ஷத் மேத்தா
- சசிகுமார்
- சத்யராஜ்குமார்
கோடிட்ட இடங்கள்
- சித்ரன்
சுய சாசனம்
- பாஸ்டன் பாலாஜி
என்னை எழுதியவர்கள்
- சத்யராஜ்குமார்
களம்
- நாகூர் ரூமி
கங்கை இல்லாத காசி
- பாஸ்டன் பாலாஜி
வார்த்தையல்ல, வாக்கியம்
- என். சொக்கன்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
 
உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால் : மெய்ப்பாடு படுத்தும் பாடு
- எஸ்.கே
| Printable version |

கேள்வி. 1

நான் எல்லோருடன் நட்புடனும் அன்போடும்தான் பழக விரும்புகிறேன். அடிப்படையில் நான் வெளிப்படையானவள். எளிதில் சிரித்து விடுவேன். “உர்"ரென்றிருப்பதில்லை. ஆனால் என்னை எல்லோரும் தவறாகவே புரிந்து கொள்கிறார்களே, அது ஏன்? கொஞ்சம் "முசுடு", “கர்வி" என்பது போன்ற புரிதலே முதலில் பிறருக்குத் தோன்றுகிறது. நாளடைவில் என்னோடு நெருங்கிப் பழகிய நண்பர்களிடமிருந்து இதனை அறிந்தேன். இத்தகைய உண்மை நிலைக்குப் புறம்பான தோற்றம் என்னைப் பற்றி பிறருக்கு ஏன் அமைகிறது? என் அணுகுமுறையில் தவறா? அல்லது என் புறத்தோற்றம் என் எண்ண ஓட்டங்களுக்கு மாறான புரிதலை பிறருக்கு அளிக்கிறதா? நான் இந்த நிலையை மாற்ற என்ன செய்ய வேண்டும்?

பதில்:

ஏதோ தவறிருக்கிறது, அதுவும் உங்களிடமே இருக்கிறது என்று ஒப்புக் கொண்டிருக்கிறீர்களே, அதுவே இந்த முயற்சி வெற்றி பெற வாய்ப்பளிக்கும் முதல்படி. சாதாரணமாக மனிதர்கள் பலர் தான் செய்வது எல்லாமே சரி, தவறு பிறரிடம்தான் என்று நிலைநிறுத்த தீவிரமாக முயற்சிப்பார்கள். இத்தகைய உந்துதலைத் தோற்றுவிக்கும் , “ஈகோ", “எட்" போன்ற அடிப்படை மனித  இயல்புகளைப் பற்றி இக்கட்டுரைத் தொகுப்பின் முந்தைய இதழ்களில் வாசித்திருப்பீர்கள்.

 நாம் வாழ்நாள் முழுதும் வெளி உலகத்துடன் தொடர்ந்து கருத்துப் பரிமாற்றம் செய்துகொண்டிருக்கிறோம். நம் செயல்பாட்டில் நிகழும் தொடர்புகள் தவிர, தானாக, தன்னிச்சையாக நம் உடல்மூலம் நிகழும் உரையாடல்தான் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்துகிறது. நாம் அன்றாடம் சாதாரணமாகச் செய்யும் நடத்தல், அமர்தல், உணவருந்துதல், இருமுதல், செருமுதல், சொரிதல், கொட்டாவி விடுதல் மற்றும் பல தன்னிச்சையாக நிகழும் செயல்கள்கூட, பிறருக்கு நம்மைப் பற்றி வெவ்வேறுவிதமான கண்ணோட்டத்தை உண்டாக்குகின்றன. “இவர் இப்படித்தான்" என்று தங்கள் மனத்திரையில் ஒரு உருவத்தை தீட்டிவிட்டு அந்த உருவகத்தின் அடிப்படையில்தான் உங்கள் ஒவ்வொரு அசைவுக்கும் பொருள் கொள்வார்கள். இத்தகைய தவறான கண்ணோட்டம் ஏன் அமைகிறது, அது பகுத்தறிவுக்குப் பொருத்தமானதாக இல்லையே என்ற கேள்வி உங்கள் மனத்தில் எழுவது நியாயம். ஆனால் அதுதான் இயற்கை. மனித மனத்தின் செயல்பாடு உணர்வுகளின் உந்துததால் நிகழ்வது, "லாஜிக்"-களால் அல்ல. இந்த அடிப்படையை ஐயத்துக்கு இடமின்றி புரிந்து கொண்டால் நம்மை பற்றிய பிறரின் புரிதல்களை எளிதில் மாற்றியமைக்கலாம். நாம் விரும்பும் தோற்றத்தை மக்கள் மனத்தில் பதியவைக்கலாம்.

இந்த அடிப்படையில் பார்த்தோமானால், உங்களைப் பற்றிய தோற்றம் நீங்கள் விரும்பிய வண்ணம் அமையாததற்குக் காரணம், உங்கள் வெளித் தோற்றம் பற்றி நீங்கள் கவனம் எடுத்துக் கொள்ளவில்லை என்பதுதான் என்று தோன்றுகிறது. நம் அங்க அசைவுகள், தோற்றக் குறிகள் மற்றும் தன்னிச்சை இயக்கங்கள் தோற்றுவிக்கும் மெய்ப்பாடு (body language) மிகவும் தாக்கம் கொண்டது. நீங்கள் பேசாதபோதெல்லாம் உங்கள் மெய் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறது. அந்த "மெய்" பேசுவதெல்லாம் "மெய்"தான் என்று நம்பும் வண்ணம் அது பிறரிடம் ஒரு அவதானிப்பை ஏற்படுத்துகிறது.  இது போன்ற "பேசா மொழி"கள் தான் 93 விழுக்காடு செய்திகளைக் கொண்டு செல்கின்றன. உங்கள் எண்ணங்கள், சொற்கள் இவைகளுக்கு ஒப்ப உங்கள் மெய்ப்பாடு அமையப்பெறவில்லையானால் உங்களைப் பற்றிய புரிதல் எதிர்மறையாகத்தான் அமையும். "ஆமாம்" என்று சொல்கிறது வாய். ஆனால் உங்கள் தலை பக்கவாட்டில் அசைகிறது. அப்படிப்பட்ட நேரத்தில் அந்த "ஆமாம்" பிறரிடம் போய்ச்சேராது. “இல்லை" என்றுதான் உங்கள் பதிலாக அறியப்படும். அதுமட்டுமல்ல. இந்த நபர் நம்பத் தகுந்தவரல்ல என்பது போன்ற முடிவும் அடுத்தவர் மனத்தில் எழும். பிறர் கண்களை நேர்கொள்ளாமல் இருத்தல் (not making eye contact) ஒரு பெரிய தவறு. பலர் பிறரிடம் உரையாடும்போது மோட்டுவளையைப் பார்த்துப் பேசிக்கொண்டிருப்பார்கள். இத்தகைய நடவடிக்கையால் பிறருக்கு நம்மிடம் நம்பிக்கை தோன்றாது. இருக்கின்ற நல்மதிப்பையும் இழக்க நேரிடும்.

தொல்காப்பியத்தில் இந்த "மெய்ப்பாட்டியல்" பற்றி மேலதிக விளக்கம் பெறலாம் என்பதை, அனுமனை மிக்க "வனப்புடன்" வார்த்தளித்திருக்கும் "வெண்பாச் சித்தர்"  ஹரி கிருஷ்ணன் மூலம் அறிந்தேன். ஆங்கே மெய்ப்பாட்டின் வெளிப்பாடுகள் எண்வகைப்படும் என்று குறிப்பிட்டிருக்கிறது. நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை என்ற இந்த எட்டே மெய்ப்பாடு என்ப. சரி, இந்த மெய்ப்பாட்டின் செயல்பாடும் ஆக்கமும் என்ன? அதனையும் விளக்குகிறது தொல்காப்பியம் இவ்வரிகளால்:-

“பெருமையும் சிறுமையும் மெய்ப்பாடு எட்டன்
 வழி மருங்கு அறியத் தோன்றும் என்ப"

ஒருவருடைய பெருமையும் சிறுமையும், அவர்தம் மெய்ப்பாட்டின் எண்வகை  புறத்தோற்றங்கள் எவ்வாறு பிறரால் அறியப்படுகிறதோ அதனளவே ஆகும் என்பதைக் காண்கிறோம்.

நம்முடைய மெய்ப்பாட்டை செம்மைப் படுத்தி பிறர்மனத்தின்பால் நம்மைப் பற்றிய அவதானிப்பை சீரியதாக்குவதற்கான சில வழிமுறைகளை ஆராய்வோம்.

முதலில் உங்களுடைய அங்கங்கள் பற்பல சூழ்நிலைகளில் எவ்வாறு செயல்படுகின்றன, எவ்வகை அசைவுகளை வெளிப்படுத்துகின்றன, அவை அனைத்தும் உங்களுடைய முழு உணர்வுடன் ஆக்கப்படுகின்றனவா என்பவற்றை ஆராய வேண்டும். அதற்கான வழி, உங்களை நீங்கள் ஒரு மூன்றாம் மனிதரின் பார்வையில் அணுக வேண்டும். அது எவ்வகையில் சாத்தியம்?

நீங்கள் பங்கெடுத்துக் கொண்ட விழாக்கள் - காது குத்துதல் (இது புறக்காது - உள்ளே தோன்றும் குத்தல் வலி அல்ல), பூப்புநீராட்டு விழா, மண ஒப்பந்தம், திருமணம், (மொய்) வரவேற்பு, புத்தக வெளியீட்டு விழா, பிரிவுபசார விழா - இது போன்ற நிகழ்ச்சிகள் எல்லாவற்றிலுமே வீடியோ படம் எடுக்கிறார்கள். அவற்றை வாங்கி, நீங்கள் தோன்றியுள்ள பகுதிகளை மீண்டும் மீண்டும் போட்டுப் பாருங்கள். அப்போதுதான் தெரியும் நீங்கள் எத்தகைய அங்க சேஷ்டைகளை புரிந்து கொண்டிருக்கிறீர்கள் என்று! சில நேரங்களில் நமக்கே வெறுப்பாயிருக்கும் அளவிற்கு நாம் நடந்து கொண்டிருப்பதைக் காணலாம். முக்கை நோண்டுதல், தலை மற்றும் தொடை சொறிதல், கையை "சொஸ்திக்" போல் வைத்துக் கொள்ளல், உதடுகளைச் சுழித்தல், முகத்தை அஷ்டக் கோணலாக்கிக் கொள்ளல், பின்னல் திருகுதல், வித விதமான தலையாட்டல், எதையாவது சுரண்டிக் கொண்டிருத்தல், காலாட்டுதல், பொருத்தமில்லாத கைபிசைதல் போன்ற பலவித சேட்டைகளை நாம் செய்திருப்பதைக் காண முடியும். அவை யாவும் நம் கட்டுப்பாடில்லாமல் நிகழ்வது. சில சமயம் நம் சொல், அங்க அசைவு முதலியன நாம் அத்தருணத்தில் வெளிப்படுத்த எண்ணிய கருத்துக்கு எதிர்மறையாக அமைந்துள்ளதை நீங்களே உணரலாம். “Hindsight is always twenty-twenty”அதாவது முந்தைய நிகழ்வுகளைப் பின்னோக்கிப் பார்க்குங்கால் நம் பார்வை முழு உணர்வுகளுடனும், கூர்மையாகவும் அமையும். அத்தகைய அணுகலுடன் சீர்தூக்கிப் பார்க்கையில், முன்னால் புலப்படாத பல நுட்பமான விஷயங்கள் கண்ணெதிரே தோன்றும். பின்னர் அவற்றை செம்மைப் படுத்தி, எவற்றை எவ்வகையில் மாற்றியமைக்க வேண்டும் என்பதைத் தேர்வு செய்து, பெரிய கண்ணாடி முன் நின்று (நீங்கள் மணிக்கணக்காக  அதன்முன் நின்று அழகு பார்க்கிறீர்களே, அதுதான்!) பலவகை செயல்பாடுகளைப் பரிசீலித்து, எது சரி என்பதை முடிவெடுத்து, அவற்றை அடுத்தமுறை உங்கள் சுயக் கட்டுப்பாட்டுடன் வெளிப்படுத்த முயல வேண்டும். இதுபோல் செம்மைப் படுத்தப்பட்ட மெய்ப்பாட்டினால் பிறர் போற்றும்படியான ஆளுமையைக் கொணர்வது சாத்தியமாகும்.

“கண்ணோடு கண்ணோக்குதல்" பற்றி பலமுறை அடிக்கோடிட்டுக் கூறியிருக்கிறேன். என் இள வயதில் என் காதலியிடமிருந்து வெகுநாட்கள் பிரிய நேரிட்ட நேரத்தில் வேறு எங்கோ பார்த்துக் கொண்டு "சென்று வருகிறேன்" என்று சொல்லிவிட்டுச் சென்றேன் என்பதால் சினமுற்று பலநாட்கள் தொடர்பு கொள்ளாமலிருந்தாள். Eye contact என்பது அவ்வளவு முக்கியம்!

பிறர் சொல்வதை ஆர்வத்துடன் செவிமடுக்கிறோம் என்பதை உணர்த்த, அவர்கள்பால் சற்றே தலையைச் சாய்த்து, “உம்" கொட்டிக் கொண்டு, அவ்வப்போது அவர்கள் சொல்லிய கடைசி சொற்களைத் திருப்பிச் சொல்லி, உக்குவிப்பதுபோல் "நன்றாகச் சொன்னீர்கள்" என்று ஒரு "ஷொட்டு" கொடுத்து முழு ஈடுபாட்டுடன் கேட்கவேண்டும். மேலும் கண்களை அகல விரித்து "நான் உன் பேச்சுக்கு மிகுந்த மரியாதை கொடுக்கிறேன்" என்று வெளிப்படையாகக் காண்பிக்க வேண்டும். இதனை Active listening அல்லது Power listening என்பார்கள். “கேள்வி" என்பது ஒரு கலை.

அதுபோல் நீங்கள் பேசும்போதும் பிறருக்கும் சிறிது பங்களிப்பு கொடுங்கள். உடனிருப்பவர்களின் பெயரைக் குறிப்பிட்டு "இன்னார் கூறியது போல" என்று பிறர் கூற்றுக்கும் முக்கியத்துவம் கொடுங்கள்.எல்லா கிரெடிட்டுகளையும் நீங்களே அள்ளிக்கொள்ளாமல்  இருந்தால் தன்னையறியாமல் அவர்களுக்கு உங்கள் மேலுள்ள மதிப்பை அதிகரிக்கும்.

பிறர் கருத்துக்களை வெட்டிப் பேச நேர்ந்தால், அவர்கள் மனம் புண்படாமல், அவர்களின் கூற்றிலும் சிறப்புகள் இருக்கின்றன, ஆனால் என் எண்ணம் சற்றே மாறுபட்டிருக்கிறது என்று நாசூக்காக எடுத்துரைத்தால், அவர்களுடைய ஈகோ சேதமடையாமலிருக்கும். ஏனென்றால் சொல்பவரும் சொல்லப்பட்ட கருத்தும் ஒன்றோடு ஒன்றாக உருவகப் படுத்தப்பட்டுவிடும். கருத்தை எதிர்த்தலும் ஆளை எதிர்ப்பது போல்தான். இது மனித இயற்கை. இதனை எபோதும் நினைவில் கொண்டு நுட்பமாகக் கையாள வேண்டும்.

நீங்கள் நன்கறிந்துள்ள ஒரு விஷயம் பற்றி பிறருடன் பேசும்போது சில சமயம் உங்களையறியாமல் நீங்கள் ஒரு பள்ளி ஆசிரியர் தோரணையில் பாடம் நடத்த ஆரம்பித்து விடுவீர்கள். அது பிறருடைய ஈகோவை மிகவும் பாதிக்கும். இத்தகைய நிகழ்வுகளை நான் பலமுறை கண்டிருக்கிறேன். என்னுடன் பணியாற்றிய ஒருவர் மிகச் சிறந்த அறிவாளி. தொழில்நுட்பத்தில் கைதேர்ந்தவர். ஆனால் அவரை மேலதிகாரிகள் யாருக்கும் அறவே பிடிக்காது. பலமுறை பதவியேற்றம் அவருக்குத் தவறியிருக்கிறது. இத்தனைக்கும் மிகப் பணிவானவர். கடுஞ்சொல் அறியாதவர். நான் பலமுறை அவருக்காக வாதாடியிருக்கிறேன். ஆனால் இன்னதென்று கூறமுடியாத வகையில் அவர் மேலதிகாரிகளின் மனத்தில் ஒரு வெறுப்பை ஏற்படுத்தியிருந்தார். ஆழ்ந்த கண்காணிப்பிற்குப்பின் அத்தகைய நிகழ்தலின் காரணம், அவருடைய பொருள் விளக்கமளிக்கும் முறைதான் என்பது புலப்பட்டது. இதற்கு நேர்மாறாக, பல மருந்து விற்பனைப் பிரதிநிதிகள் தாங்கள் சந்திக்கும் மருத்துவர்களிடம், "நீங்கள் முன்னமையே அறிந்துள்ளபடி" (as you know, Doctor) என்று தொடங்கித்தான் தன் மருந்துகளின் சிறப்புகளையும் செயல்பாடுகளையும் விளக்குவார்கள். மனிதருடைய ஈகோ எளிதில் நொறுங்கக் கூடிய வஸ்து. மிக ஜாக்கிறதையாகக் கையாள வேண்டும் (Fragile. Handle with care!).

எப்போதும், பிறர் நம்மைக் குறைத்து மதிப்பிட்டுவிடுவார்களோ என்கிற complex-ஐக் கொண்டிருக்காதீர்கள். அது உங்கள் தன்னம்பிக்கையின்மையை வெளிப்படுத்தும். அது உங்கள் மனத்திண்மையையும் பாதிக்கும். எவ்விதத் தாழ்வு மனப்பான்மைக்கும் இடம் கொடுக்காமல், "என் குறை நிறைகளை நான் நன்கறிவேன். அவற்றால் எந்தவித பாதிப்புமில்லை" என்று உறுதிப்படுத்திக் கொண்டு, பிறரை அணுகுங்கள்.

எல்லாவற்றையும்விட, உங்கள் அருகாமையே பிறருக்கு ஆறுதலளிக்கும்படியாக, இதமளிக்கும்படியாக, துன்ப உணர்ச்சிகள் நீங்கி மகிழ்ச்சியளிக்கும்படியாக அமைய வேண்டும். அத்தகைய உணர்வுகளைத் தோற்றுவிக்குமுகமாக உங்கள் பேச்சு சுவையுடனும், இதமாகவும், மென்மையாகவும், அகம்பாவம் இல்லாமலும், அனைவரையும் அணைத்துக் கொண்டு செல்லும் இயல்புடனும் அமையப் பெற்றால், ஒரு முறை உங்கள் சந்திப்பினைப் பெற்ற அனைவரும், பின்னொரு முறை என்றைக்கு அந்தப் பேறு கிட்டும் என்று எதிர்நோக்கிய வண்ணம் இருப்பர் என்பது திண்ணம்!

PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2005 Tamiloviam.com - Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
  | Privacy |