ஏப்ரல் 28 2005
தராசு
வ..வ..வம்பு
மனம் போன போக்கில் மனிதன் போகலாமா?
மஜுலா சிங்கப்புரா
உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால்
முத்தொள்ளாயிரம்
கட்டுரை
உள்ளங்கையில் உலகம்
கவிதை
திரைவிமர்சனம்
ஆன்மீகக் கதைகள்
துணுக்கு
அறிவிப்பு
 
  முதல் பக்கம்
தொடர்கள்
இலக்கியவாதி  புதிது
- சத்யராஜ்குமார்
ஹர்ஷத் மேத்தா
- சசிகுமார்
- சத்யராஜ்குமார்
கோடிட்ட இடங்கள்
- சித்ரன்
சுய சாசனம்
- பாஸ்டன் பாலாஜி
என்னை எழுதியவர்கள்
- சத்யராஜ்குமார்
களம்
- நாகூர் ரூமி
கங்கை இல்லாத காசி
- பாஸ்டன் பாலாஜி
வார்த்தையல்ல, வாக்கியம்
- என். சொக்கன்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
 
கட்டுரை : கணிப்பும் காழ்ப்பும்
-
| Printable version |

"எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு" என்ற குறளைத் தமிழ் மறையாகக் கொண்ட தமிழ்கூறும் நல்லுலகம்தான் இன்று எதிர்க் கருத்துகளுக்கெல்லாம் எதிராகப் போர் தொடுக்கிறது. கருத்துகளுக்கு எதிராக போர் தொடுத்தால் பரவாயில்லை; கருத்துகளை விட்டுவிட்டு சொன்னவருக்கு எதிராகத் திசை திருப்புகிறது இந்தச் சூறாவளி.

சில ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு மரியாதைக்குரிய எழுத்தாளர் சங்கத் தமிழ்ப் பாடல்களை எளிமைப்படுத்தி ஒரு இலக்கியப் பத்திரிகையில் எழுதிக் கொண்டிருந்தார். ஒரு முறை அவர் எளிமைப்படுத்தியதில் ஒரு தவறு நேர்ந்து விட்டது. அதை அவரும் ஏற்றுக் கொண்டு வருத்தம் தெரிவித்தார். ஆனால் அவருக்கு எதிராக எழுந்த குரல்கள், "நீ ஒரு பார்ப்பான், எங்கள் சொத்தில் கை வைக்க உனக்கென்ன உரிமை உள்ளது ?" என்ற ரீதியில் கேல்வியெழுப்பின.

சங்கத் தமிழில் எந்த ஜாதிக்கு உரிமை உள்ளது என்று வரையறுத்துக் கூறிவிட முடியுமானால் மற்றவர்கள் ஒதுங்கிக் கொள்ளலாம். உ.வே.சா. படாத பாடுபட்டு சேர்த்திருக்காவிடில் திராவிடப் புகழ் பாடும் இந்தச் செல்வங்கள் எப்போதோ செல்லரித்திருக்கும். அவர் பார்ப்பனர் என்பதால் தமிழ் இலக்கியங்களைக் கடலில் கொண்டு விட்டுவிடலாமா? அல்லது சங்கப் புலவர்களில் யார் இன்ன ஜாதி என்று தெளிவாக வரையறுக்கத்தான் முடியுமா?

மலையாளக் கவிஞர் சச்சிதானந்தனின் ஒரு கவிதையில், 'சங்கத் தமிழிலிருந்து துவங்குகிறது எங்கள் இலக்கியம்' என்கிறார். அவர்களுக்கு பாத்யதை உண்டு என்பதை மறுக்க முடியுமா? ஆனால் இங்கு தீவிர நவீன தமிழ்ப் படைப்பாளியான ஜெயமோகனை 'மலையாளி' என்று சொல்லிக் கொச்சைப்படுத்துபவர்கள் இருக்கிறார்கள். ஜெயமோகனின் தமிழ் அறிவையும் அக்கறையையும் ஆற்றலையும் விமர்சிக்கும் தகுதி இருப்பவர்கள் அதை விமர்சிக்கலாம். அவரது தாய் மொழியைப் பற்றிய கேள்விகள் அவசியமற்றவை.

இந்த உலகத்தில் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டதென எதுவும் இருந்ததில்லை. அது மொழியாக, மதமாக, தத்துவமாக, எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். காலத்தின் கட்டாயத்திற்கேற்ப அரசியல் சித்தாந்தங்கள், அரசு சட்டங்கள், மதக் கோட்பாடுகள் எல்லாம் நெகிழ்ந்து கொடுத்து மாறிக் கொண்டுதான் இருக்கின்றன. அப்படி மாறாது இறுகிப் போன எல்லாம் மக்களால் தூக்கியெறியப்பட்டிருக்கின்றன.

ஒரு விமர்சகனின் விமர்சனங்களை எதிர்கொள்ளாமல் அவனை நோக்கித் தனிப்பட்ட தாக்குதல்களைத் தொடுப்பதும், தொழில், குடும்பம், பிறப்பு, பின்புலம் ஆகியவற்றை விமர்சிப்பதும் கருத்துக்களை எதிர்கொள்ளத் திராணியற்ற செயல்.

உலகின் தலைசிறந்த திரைப்படங்களாகக் கருதப்படும் படங்களைப் பற்றி வெவ்வேறு அபிப்பிராயங்கள் உள்ளன. புத்தகங்கள், கலைகள் எல்லாம் தனிமனித ரசனைக்குட்பட்டவையே. ஆனால், 'தரம் ஏது?' என்பதை எல்லா மொழிகளிலும் ஒரு குறுகிய வட்டமே தீர்மானிக்கிறது.

ஒருவரின் வாசிப்பு உலகம், ஆய்வு, அறிவு சார்ந்த விஷயங்களும் உலகமும் விரியத் தொடங்கும்போது அவரது ரசனைகளும் விரியத் தொடங்குகின்றன. உலகின் தலைசிறந்த கவிஞன் பாரதி என்று சொல்லும்போது நமக்கு மெய்சிலிர்க்கும். இதைத் தமிழ்ப் பண்டிதர்கள் நாற்பது பேர் திரும்பத் திரும்ப மேடைகளில் சொல்லிக்கொண்டிருப்பதில் ஏதேனும் அர்த்தமிருக்கிறதா? குறைந்தபட்சம் வேறு சில மொழிகளின் இலக்கிய பரிச்சயமும் அறிவும் உள்ள ஒருவர் அதை ஏற்று அங்கீகரித்தால்தான் அதில் ஒரு அர்த்தமிருக்க முடியும்.

'யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்' என்று சொன்ன பாரதிக்குப் பல மொழிகள் தெரியும். அதிலும் அடக்கமாக 'யாம் அறிந்த' என்றுதான் கூறுகிறான் அவன்.

விமர்சனம், தர நிர்ணயம் என்பது ஒரு துறையில் புலமையும் அறிவும் உள்ள யாரும் செய்யத் தகுதியான வேலை. இதற்கு அவர்களின் பின்புலம், ஜாதிச் சான்றிதழ், மாத வருவாய், தொழில் போன்றவை அவசியமற்றவை.

கலையும் இலக்கியமும் கருத்தும் ரசிகனின், வாசகனின் வீட்டுக் கதவுகளைத் திறந்துவிடுபவையாக இருக்க வேண்டும். சிந்தனையத் தூண்டி விடுவதாக இருக்கவெண்டும். அதை விட்டுவிட்டுப் படிப்பவர்களைக் கைப்பிடித்து அழைத்துச் சென்று இதுதான் முடிவு என்று கொட்டடியில் அடைக்கப்படுவது ஒரு பாதுகாப்பான உணர்வைத் தரலாம். ஆனால் யாரோ ஒருவர் தேடிய பாதையும் முடிவுகளும் எல்லோருக்கும் பொதுவான பதிலாக முடியாது.

வாசகனின், பார்வையாளனின் சிந்தனையைத் தூண்டுவதுதான் உண்மையான இலக்கியம். கலையும் இலக்கியமும் கேளிக்கையாக மட்டுமே பாவிக்கப்படுபவது தமிழர்களுக்கு நேர்ந்துவிட்ட சாபக்கேடு. அதைவிடவும் அது சிலருக்கே உரித்தானதைப் போலவும் அதன் காவல்காரர்களாக அவர்கள் தங்களை நினைத்துக் கொண்டு யாரும் அதை நெருங்கிவிடக் கூடாது, விமர்சித்து விடக்கூடாது என்று ஆயுதங்களோடு அலைவதுதான் அறிவுலகச் செயல்பாடா?

நமது மதிற்ப்பிற்குரிய எல்லா பிம்பங்களும் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவையாகிவிடுகின்றன. நாம் மதிக்கும் படைப்பாளிகள், தலைவர்கள், நடிகர்கள் எல்லோரும் நினைவுச் சின்னங்களாகிப் போகிறார்கள். அவர்களைப் பற்றிய மாற்றுக் கருத்துகளுக்கு இடமில்லை. அந்தப் பிம்பங்களைத் தொழுவதற்கு மட்டுமே வசதி செய்து தரப்படுமெனில் அவை மக்களிடமிருந்து அந்நியப்பட்டு நாளடைவில் புதையுண்டு போகும்.

எதுவும் உயிர்ப்போடிருக்க அது பல்வேறு நிலைகளில் பேசப்படவேண்டும். அது முற்றிலும் எதிரான நிலையாக இருந்தாலும் கூட.

(ஜனவரி 16, 2002)

நன்றி : கறுக்கும் மருதாணி : கனிமொழி

காலச்சுவடு பதிப்பகம்
விலை :  ரூ. 40

PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2005 Tamiloviam.com - Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
  | Privacy |