Tamiloviam
மே 01 2008
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
சிறுகதை : வெற்றியும் தோல்வியும்
- வேந்தன் சரவணன் [saraimpex@bsnl.in]
  Printable version | URL |
        
 
 
யார் 'கண்' பட்டதோ தெரியவில்லை. என்னுடைய 'கண்கள்' இரவு முழுவதும் தூங்கவே இல்லை. புரண்டு புரண்டு படுத்தேன். அடிக்கடி விட்டத்தையே வெறித்துப் பார்த்தேன். மனசெல்லாம் நாளை நடக்க இருக்கும் கவிதைப் போட்டியைப் பற்றிய எண்ணமே இருந்தது. 
 
பக்கத்தில் படுத்திருந்த மனைவியைத் திரும்பிப் பார்த்தேன். மிக அமைதியாகக் கவலையின்றித் தூங்கிக் கொண்டிருந்தாள். வெற்றி-தோல்வியைப் பற்றி இரண்டு கவிதைகள் சொல்லவேண்டும் என்பதே போட்டி. நானும் பேராசியர் ரவிச்சந்திரனும் மட்டுமே போட்டியில் பங்கேற்கிறோம். போட்டியில் என்ன சொல்வதென்று இதுவரை விளங்கவில்லை. யோசித்து யோசித்து ஒன்றும் பிடிபடவில்லை.
 
திடீரென்று யாரோ பேசினார்கள்- 'வெற்றியும் தோல்வியும் வாழ்க்கையில் சகஜமப்பா'.
 
திரும்பிப் பார்த்தால், என் மனைவி தான் தூக்கத்தில் உளறிக்கொண்டு இருந்தாள். எனக்கு சிரிப்பு வந்தது. 'தூக்கத்தில் கூட இவளுக்கு எப்படித்தான் தத்துவம் வருகிறதோ தெரியவில்லை. நாளைய போட்டியைப் பற்றித் தான் இவளும் கனவு காண்கிறாளோ?. பேசாமல் இவள் சொன்னதையே கவிதையாகச் சொல்லிவிட்டால் என்ன?'. - மனம் நப்பாசையில் கெக்கலித்தது. அப்படிச் சொன்னால் அடுத்து என்ன நடக்கும் என்பது கற்பனையில் வர அந்த எண்ணத்துக்கு அப்போதே முற்றுப்புள்ளி வைத்தேன்.
 
பசி வயிற்றைக் கிள்ளவே மேற்கொண்டு தூங்கவும் முடியாமல் சிந்திக்கவும் (?) முடியாமல் படுக்கையை விட்டு எழுந்தேன். குளிர்சாதனப் பெட்டியில் இருக்கும் ஆப்பிளைச் சுவைக்கலாம் என்று நினைத்து பெட்டியைத் திறந்தேன். அது மூடி இருந்தது. இரவு படுக்கும் முன்னர் பெட்டியைப் பூட்டி சாவியை சட்டைப் பையில் வைத்தது அப்போது தான் நினைவுக்கு வர பைக்குள் கையை விட்டேன். சற்று மெதுவாக விட்டிருக்கலாம். எதற்கெடுத்தாலும் கோபித்துக் கொள்ளும் என் மனைவியைப் போல ஹேங்கரில் இருந்த சட்டை தொப்பென்று விழுந்து அதில் இருந்த சில்லறைக் காசுகள் எல்லாம் சிதறி ஓடின. மின்விளக்கைப் போட்டு காசுகளைத் தேடி எடுத்தேன். ஒரு எட்டணாவும் ஒரு ரூபாய் நாணயமும் மட்டுமே கிடைத்தன. அந்த ஒரு ரூபாய் நாணயத்தைத் திருப்பிப் பார்த்தேன். பழைய நாணயம் போல இருந்தது. திருப்பித் திருப்பிப் பார்த்தேன். திடீரென்று மூளைக்குள் மின்னல் வெட்டியது.
 
'ஆஹா! முதல் கவிதை கிடைத்து விட்டது'- சந்தோசத்தில் மனம் துள்ளியது.
 
இன்னொரு கவிதையை அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் என்று பழத்தைச் சாப்பிட்டுவிட்டுத் தூங்க முயற்சித்தேன். ஆனால் தூக்கம் வரவே இல்லை.
 
அன்று (அன்று மட்டும் தான்!) அதிகாலையிலேயே எழுந்து காலைக் கடன்களை முடித்துக் கொண்டு மனைவியிடம் விடைபெற்றுக்கொண்டு 9.30 மணிக்குக் கிளம்பி விட்டேன். சரியாக 10.00 மணிக்குப் போட்டி துவங்கும். இரண்டாவது கவிதையைப் பற்றி யோசித்துக் கொண்டே செல்லும்போது நண்பர் சகாதேவன் எதிர்ப்பட்டார்.
 
'குட்மார்னிங் சார்!. போட்டிக்குத் தயார் ஆகிவிட்டீர்களா?. ஆல் தி பெஸ்ட்!' - நண்பர் உற்சாகத்துடன் சொன்னதும் மகிழ்ந்தேன். அப்போது தான் அவரது கைவிரல்களைக் கவனித்தேன். இரண்டு கட்டை விரல்களையும் உயர்த்திக் காட்டினார். அவரது சின்முத்திரை எனக்குள் எதுவோ பண்ணியது. மூளை பரபரவென யோசித்ததில் ஒரு 'பளிச்' உதயமாகியது.
 
'ஆஹா!. இரண்டாவது கவிதையும் கிடைத்து விட்டது' - மனதுக்குள் கூவிக்கொண்டே போட்டித்திடலை அடைந்தேன். சரியாகப் பத்து மணிக்கு போட்டி துவங்கிவிட்டது. முதலில் ரவிச்சந்திரன் கவிதை சொன்னார். சொல்லி முடித்ததும் எல்லோரும் கை தட்டினார்கள். எனக்குள் இப்போது பயம் வந்து உட்கார்ந்து கொண்டது -'எனது கவிதை வெல்லுமா?'.
 
இப்போது என்னை அழைத்தார்கள். நடுக்கத்துடன் மேடை ஏறி 'மைக்கை' (கெட்டியாகப்) பிடித்துக் கொண்டு நிதானமாகக் கவிதைகளைச் சொல்ல ஆரம்பித்தேன்.
 
'வெற்றியும் தோல்வியும்
ஒரு நாணயத்தின் இரு முகங்களைப் போல
ஒன்றைப் பார்க்கும்போது
மற்றொன்றைப் பார்க்க முடியாது'.
 
முதல் கவிதையைச் சொல்லி முடித்ததும் ஆச்சர்யப்பட்டேன். யாரும் கைதட்டவில்லை. கீழே குனிந்து எதையாவது எடுக்கிறார்களா என்று பயந்தேன். துணிச்சலை வரவழைத்துக் கொண்டு இரண்டாவது கவிதையைச் சொல்லத் துவங்கினேன்.
 
'வெற்றியும் தோல்வியும் நம் கைகளில் தான் இருக்கிறது.
வலதுகைக் கட்டை விரலை ஒருவர் உயர்த்திக் காட்டினால்
'வெற்றிபெற்று விட்டேன்' என்று அவர் கூறுவதாய் அர்த்தம்.
அதேவிரலை கீழ்நோக்கிக் காட்டினால் 'தோற்றுவிட்டேன்' என்று அர்த்தம்
இரண்டு கட்டைவிரல்களையும் ஒருவர் உயர்த்திக் காட்டினால்
'வெற்றியோடு வா' என்று அவர் நண்பரை வாழ்த்துவதாய் அர்த்தம்
அதேவிரல்களைக் கீழ்நோக்கிக் காட்டினால் 'தோற்றுப்போ' என்று சபிப்பதாய் அர்த்தம்.
ஆம் - நம்முடைய வெற்றிதோல்விக்கு மட்டுமல்ல
பிறருடைய வெற்றிதோல்விக்கும் விரும்பினால் நாம்-
காரணமாய் இருக்க முடியும்
வெல்வோம்! வெற்றிபெறச் செய்வோம்!'
 
-சொல்லி முடித்ததும் பலத்த கைதட்டல். அடங்குவதற்குள் வெகுநேரமாகி விட்டது. போட்டியில் நானே வெற்றி பெற்றதாக அறிவித்தனர். பரிசைப் பெற்றுக் கொண்டு மேடையை விட்டுக் கீழே இறங்கி நடந்தேன். ரவிச்சந்திரன் எதிர்ப்பட்டார்.
 
'போட்டியில் தோற்றுப் போய்விட்டதாகக் கவலைப்படாதீங்க சார்!. வெற்றியும் தோல்வியும் வாழ்க்கையில் சகஜம் தானே' - இது நான்.
 
'சார்!. எனக்கு எந்தக் கவலையும் இல்லை. ஏன்னா உங்க வெற்றிக்கு நானும் ஒருவிதத்தில் காரணம் தானே' - எனது கவிதையைக் கொண்டே என்னை வென்று விட்ட மகிழ்ச்சியில் தனது தோல்வியையும் மறந்து பெருமையோடு போய்க்கொண்டிருந்தார் அவர்.
oooOooo
                         
 
வேந்தன் சரவணன் அவர்களின் இதர படைப்புகள்.   சிறுகதை பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2008 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |