மே 04 06
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
திரைவிமர்சனம் : திருப்பதி
- மீனா [feedback@tamiloviam.com]
Bookmark in Del.icio.us | | Printable version | URL |

Ajith, Sadhaநாட்டில் இலவசமாக எத்தனையோ இருக்க எல்லா மருத்துவமனைகளிலும் பிரசவத்திற்கு இலவசம் என்ற புது சட்டம் வருவதுதான் திருப்பதி படத்தின் ஒன்லைன் கதை.

திருப்பதி சவுண்ட் சர்வீஸ் வைத்து நடத்திவருபவர் அஜித். மருத்துவம் படிக்கும் அவரது தம்பி ஹரிஷ் ராகவேந்திரா ஒரு உல்லாசப் பிரியர். தன்னுடைய சுயநலத்திற்காக எதையும் செய்யத்தயங்காதவர். அஜித்தின் நண்பர் மந்திரி பிரமிட் நடராஜனின் மகன் ரியாஸ்கான். தன் நண்பனுக்காக எதையுமே செய்யத்தங்காதவர் அஜித். இதற்கிடையே பியூட்டி பார்லர் நடத்திவரும் சதா மீது அஜித் காதல் கொள்கிறார்.

பிரசவத்திற்காக வீட்டிற்கு வரும் அஜித்தின் தங்கை தீபு தன்னுடைய குடும்பத்தாருக்கு தன்னால் தொந்தரவு வரக்கூடாது என்று நினைப்பவர். பிரசவ வலியால் தீபு துடிக்கும் போது அவருக்கு பிரசவம் பார்க்க வரும் டாக்டர் தன்னுடைய அலட்சியத்தாலும் பணத்தாசையாலும் சுகப்பிரசவமாக வேண்டியதை சிசேரியன் செய்ய வைக்கிறார். இதில் தீபு இறந்துவிடுகிறார். டாக்டரின் அலட்சியம் + பணத்தாசையைப் பற்றி அங்கே வேலை செய்யும் நர்ச் மல்லிகா மூலமாக அறிந்து கொள்ளும் அஜித் டாக்டரை கொல்ல முயற்சி செய்யும் போது டாக்டரை காப்பாற்ற முயல்கிறார் ரியாஸ்கான். அப்போதுதான் ரியாஸ்கானும் டாக்டரும் அண்ணன் தம்பி என்பது அஜித்திற்கு தெரியவருகிறது. மேலும் ரியாஸ்கான் தன்னை நண்பனாக நினைக்கவில்லை - ஒரு அடியாளாகத்தான் பார்த்தார் என்பதும் அஜித்திற்கு தெரியவருகிறது.

நண்பனின் சுயரூபத்தைத் தெரிந்து கொள்ளும் அஜித், டாக்டரை ரியாஸ்கானே கொல்லும் ஒரு நிலையைத் தான் ஏற்படுத்துவதாகவும், ரியாஸ்கானை தானே கொல்வதாகவும் சபதம் போடுகிறார். தன்னுடைய சபதத்தில் ஒரு பாதியான டாக்டரை கொல்வதில் வெற்றி பெறும் அஜித் ரியாஸ்கானை கொன்றாரா இல்லையா என்பதே மீதிக்கதை.

ஒல்லியாக இருந்தாலும் தன்னுடைய புதிய கெட்டப்பினால் ஓக்கேவாக இருக்கிறார் அஜித். ஆக்ஷன் காட்சிகளில் வழக்கம் போல கலக்கியிருக்கும் அஜித் சதாவுடனான காதல் காட்சிகளில் மட்டும் கொஞ்சம் ஓவராக தோன்றுகிறார். அஜித்திற்கு காமெடி சரியாக வராது என்பதை இந்தப்படத்திலும் நிரூபிக்கும் விதமாக அமைந்துள்ளது சதா மற்றும் கஞ்சா கருப்பு , சத்யன் போன்றவர்களுடன் அவர் செய்யும் நகைச்சுவை காட்சிகள். ஆனாலும் வழக்கமான அஜித் படங்கள் போலில்லாமல் இந்தப் படத்தில் அவருக்கான பஞ்ச் டயலாக்குகள் ரொம்பவுமே கம்மி.

சதா இனியும் இழுத்து போர்த்திக்கொண்டிருந்தால் தான் சினிமாவில் நிலைக்க முடியாது என்று நினைத்தாரோ என்னவோ.. ரொம்பவே தாராளமாக வருகிறார் திருப்பதியில். மற்றபடி நடிப்பில் சதா ஏதும் சாதித்ததாகத் தெரியவில்லை. அஜித்தின் தம்பியாக வரும் ஹரிஷ் ராகவேந்தர் கிட்டத்தட்ட வில்லனாகவே வருகிறார். தன்னுடைய சுயநலனிற்காக அண்ணனையே எதிரிகளிடம் காட்டிக்கொடுக்கும் டைப்பான ஆசாமி. இன்னும் சற்று முயற்சித்தால் தமிழ்சினிமாவில் ஒரு இடத்தைப் பிடிக்கலாம். தங்கையாக வரும் தீபு இரண்டே காட்சிகளில் வந்தாலும் அடக்கமான நடிப்பால் கவர்கிறார்.

வில்லன் ரியாஸ்கானிற்கு பெரிய அளவில் வேலை ஒன்றுமே இல்லை. நட்புக்குத் துரோகம் செய்கிறார். கடைசியில் அந்த நண்பனாலேயே காப்பாற்றப்படுகிறார். அவ்வளவே.. படத்தில் பிரமிட் நடராஜன், சுந்தர்ராஜன் மற்றும் பாத்திமா போன்றவர்களும் இருக்கிறார்கள்.

இயக்குனர் பேரரசு இயக்குனராக மட்டும் இருந்திருக்கலாம். நடிப்பு ஆசை அவரையும் விட்டுவைக்கவில்லை.. சரி ஏதோ இரண்டு காட்சியில் வந்து தலையைக் காட்டிவிட்டுப் போவார் என்று நினைத்தால் ஹீரோவைப் போல பாய்ந்து பாய்ந்து சண்டை எல்லாம் போடுகிறார். இந்த ஆர்வக் கோளாறு எங்கே போய் முடியப்போகிறதோ ??

பரத்வாஜின் இசையில் பாடல்கள் எல்லாம் சுமார் ரகம்தான். பிரசவத்தை தற்போது வியாபாரமாக்க எல்லா மருத்துவமனைகளும் நினைக்கின்றன - அதை மாற்றவேண்டும்.. அதற்கு பிரசவத்திற்கு இலவசமாக வைத்தியம் பார்க்கவேண்டும் என்று இயக்குனர் கூறுவது சரிதான்.. என்றாலும் இலவச மருத்துவ சிகிச்சை அளிக்கிறோம் என்பதால் மிகவும் தேவையான நேரத்தில் கூட அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் முன்வராமல் போகக்கூடிய சாத்தியம் இருப்பதை இயக்குனர் மறந்துவிட்டாரா? மொத்தத்தில் திருப்பதி - பேரரசுவின் மற்றொரு மசாலாக் கலவைதான்.

 

 

| |
oooOooo
மீனா அவர்களின் இதர படைப்புகள்.   திரைவிமர்சனம் பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2006 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |