மே 05 2005
தராசு
வ..வ..வம்பு
உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால்
மஜுலா சிங்கப்புரா
முத்தொள்ளாயிரம்
ஆன்மீகக் கதைகள்
உள்ளங்கையில் உலகம்
மனம் போன போக்கில் மனிதன் போகலாமா?
திரைவிமர்சனம்
புதிய தொடர்
 
  முதல் பக்கம்
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
உள்ளங்கையில் உலகம் : இருப்பிடப் பதிவு - 1
- எழில்
| Printable version |

உறங்கு நிலையிலிருக்கும் ஒரு செல்பேசியை இயக்கியவுடன் (Power On) ஒரு செல்பேசி என்னென்ன செய்யும்? செல்பேசியைப் பயன்படுத்தும் பயனாளர் (Subscriber), செல்பேசித் திரையில் காணும் காட்சிகள் மட்டும் செல்பேசியின் வேலை என்று எண்ணலாம். ஆனால் பின்புலத்தில் செல்பேசி நிகழ்த்தும் வேலைகள் பிரமிக்க வைக்கும்.

முதலில் செல்பேசியானது ஸிம் அட்டையுடன் தொடர்பு கொண்டு ஸிம் அட்டையில் சேகரிக்கப்பட்டுள்ள பல தகவல்களை கேட்டுப் பெறுகிறது

 அந்த ஸிம் அட்டை எந்தச் சேவை வழங்குனருக்குச் சொந்தமானது என்ற தகவல் முக்கியமானது , ஸிம் அட்டையில் அந்தச் செல்பேசி வழங்குனரின் நெட்வொர்க் எண் குறிக்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு ஸிம் அட்டைக்கும் ஒரு அடையாள எண் (IMSI , International Mobile Subscriber Identity) இருக்கும் என்று முந்தைய பதிவில் பார்த்தோமல்லவா? அதை நினைவுக்குக் கொண்டு வாருங்கள் . இந்த அடையாள எண் பதினைந்து இலக்கங்களைக் கொண்டிருக்கும். முதல் ஐந்து இலக்கங்கள் ஒரு குறிப்பிட்ட நெட்வொர்க்கினை அடையாளங்காட்ட உதவுபவை. முதல் மூன்று இலக்கங்கள் ஒரு குறிப்பிட்ட நாட்டினையும் அடுத்த இரண்டு இலக்கங்கள் சேவை வழங்குனரையும் குறிக்கின்றன . உதாரணத்திற்கு தமிழகத்தில் செயல்படும் பிபிஎல் நிறுவனத்தின் அனைத்து ஸிம்களின் பதினைந்து இலக்க அடையாள எண்கள் 404 43 என்ற எண்ணில் ஆரம்பிக்கின்றன (404 என்பது இந்தியாவிற்கான குறியீடு. 43 எனும் எண் தமிழகத்தில் பிபிஎல் வலையமைப்பைக் குறிப்பது ).

செல்பேசி இயக்கப்பட்டவுடன் அந்த இடத்தைச் சுற்றியுள்ள அனைத்துத் தள நிலையங்களின் அதிர்வெண்ணையும் பெற்று அந்தத் தள நிலையங்கள் ஒலிபரப்பும் தகவல்களை ஆராய்கிறது . எல்லாத் தள நிலையங்களின் தகவல்களும் என்றால்,அந்த இடத்தில் இருக்கும் அனைத்து நெட்வொர்க்குகளின் தகவல்களையும்தான் . தன்னுடைய நெட்வொர்க் எது என்று செல்பேசிக்குத் தெரியாதல்லவா , அதற்காகத்தான் இந்தத் தேடல் . இம்மாதிரித் தேடும் செல்பேசிகளுக்கு உதவவே தள நிலையங்கள் தங்களைப் பற்றிய விவரங்களைத் தொடர்ந்து ஒலிபரப்பிக்கொண்டே இருக்கின்றன, இவ்வாறு அனைத்து நெட்வொர்க்குகளின் தகவல்களையும் ஆராயும் செல்பேசி தனக்குரிய நெட்வொர்க்கினைத் தேர்ந்தெடுக்கிறது . எப்படி? தள நிலையம் அனுப்பும் தகவல்களுள் வலையமைப்பு எண்( Network Number) பற்றிய தகவலும் அடங்கியிருக்கிறது. ஸிம் அட்டையில் அந்தக் குறிப்பிட்ட வலையமைப்பு எண் சேமித்து வைக்கப்பட்டிருக்குமல்லாவா ? செல்பேசி எல்லாத் தள நிலையங்களும் அலைபரப்பும் தகவல்களையும் அலசி ஆராய்ந்து தனக்குரிய நெட்வொர்க்கின் தள நிலையத்தைச் சரியாகத் தேர்ந்தெடுக்கிறது . கவனிக்கவும், தள நிலையங்கள் அனுப்பும் இந்த அலைபரப்புத்தகவல்கள் குறிப்பிட்ட செல்பேசிகளுக்கு மட்டும் சொந்தமல்ல , எல்லாச் செல்பேசிகளும் அதனைப் பெற்று பயன்படுத்திக் கொள்ளலாம்.
 

இவ்வாறு வலையமைப்புக் கண்டுபிடிப்பு நிகழ்த்துகையில் செல்பேசியானது எல்லாத் தள நிலையங்களையும் அலசுகிறது என்று பார்த்தோம். . அதாவது ஏர்டெல் , பிபிஎல், ஏர்செல் என ( அவ்விடத்தில் உள்ள அனைத்து ) நெட்வொர்க்குகளின் தள நிலையங்களையும் அலசுகின்றது. இறுதியில் தனது வலையமைப்பைக் கண்டுபிடிக்கிறது . இந்தச் செய்கைக்கு வலையமைப்புத் தேர்தல் (Network Selection) என்று பெயர். வழக்கமாய் இந்த நிகழ்வானது செல்பேசி இயக்கிய சில நொடிகளுள் நிகழ்ந்து விடும்.


தனக்குரிய வலையமைப்பைத் தேர்ந்தெடுத்த பின், செல்பேசியானது அந்தக் குறிப்பிட்ட வலையமைப்பைச் சேர்ந்த தள நிலையங்களின் சமிக்ஞைகளைப் பெற்று அவற்றை ஆராய்கிறது .. ஒரே நெட்வொர்க்கைச் சேர்ந்த ஆறு தள நிலையங்களிடமிருந்து செய்திகள் பெறப்படுகின்றன. எதற்கு ஆறு தள நிலையங்கள் ? ஒன்று போதாதா? ஒரு தள நிலையம் போதும். ஆனால் எந்தத் தள நிலையத்திற்கு அருகில் செல்பேசி இருக்கிறது என்று செல்பேசி கண்டுபிடிக்க வேண்டுமல்லவா? அதற்குத்தான் இந்த " ஆறு" ஆராய்ச்சி. ஆறு தள நிலையங்களிலிருந்தும் பெறப்படும் அலைகளின் திறனை வைத்து (Power) எந்தத் தள நிலையத்திலிருந்து வரும் தகவல்கள் சக்தி வாய்ந்த அலைகளாக இருக்கின்றனவோ அத்தள நிலையத்திற்கருகே தான் இருப்பதை உணருகின்றது . பின்னர் அந்தத் தள நிலையத்தையே தனக்குரிய தள நிலையமாய்த் தேர்ந்தெடுக்கிறது. இந்தச் செயலுக்கு செல் தேர்வு (Cell Selection) என்று பெயர்.

நினைவில் கொள்க, இவ்வாறு தேர்ந்தெடுக்கும் உரிமை செல்பேசிக்கு மட்டுமே உண்டு. தள நிலையம் எந்தத் தகவலையும் "தனியாக" ஒரு குறிப்பிட்ட செல்பேசிக்கு அனுப்புவதில்லை. தள நிலையம் பொதுவாக அனுப்பும் தகவல்களைச் செல்பேசி பயன்படுத்திக் கொள்கிறது. அவ்வளவே!

ஆக, நெட்வொர்க்கினைத் தேர்ந்தாயிற்று, தள நிலையத்தையும் தேர்ந்தெடுத்தாயிற்று . அடுத்து என்ன? தேர்ந்தெடுத்த தள நிலையத்துடன் தனது செயல்பாடுகளை ஒத்தியைவு ( Synchronization) செய்து கொள்ள வேண்டியது செல்பேசியின் அடுத்த வேலையாம். இரண்டு வழிகளில் ஒத்தியைவு செய்தல் அவசியம் : அதிர்வெண் திருத்தம் (Frequency Correction ) மற்றும் நேர ஒத்தியைவு (Time Synchronization).

அதிர்வெண் திருத்தம் : ஒரு செல்பேசியானது தான் பயன்படுத்த வேண்டிய நெட்வொர்கையும், தள நிலையத்தையும் தேர்ந்தெடுத்த பின் அந்தத் தள நிலையம் பயன்படுத்தும் அதிர்வெண்ணுக்குத் தன் செலுத்தி /வாங்கி (Transmitter/Receiver) யைத் திருத்துவது அவசியமாகிறது. முன்பே நாம் பார்த்தபடி, ஒரு தள நிலையம் 930 மெகா ஹெர்ட்ஸில் இயங்குகிறது எனில் அதே அதிர்வெண்ணில் செல்பேசியின் வாங்கி (Receiver) செயல்பட வேண்டும். செல்பேசியின் செலுத்தி (Transmitter ) 930 - 45 = 885 மெகா ஹெர்ட்ஸில் தகவல் அனுப்ப வேண்டும். தள நிலையத்திலிருந்து அலைபரப்புத் தகவல்கள் ( Broadcast messages) அனுப்பப் படுகையில் அதிர்வெண் திருத்தத் தடம் (Frequency Correction Channel ) எனும் ஒரு தடத்தில் அதிர்வெண் திருத்தம் தொடர்பான தகவல்கள் அனுப்பப் படுகின்றன. அவற்றைக் கொண்டே ஒரு செல்பேசியானது தான் இயங்க வேண்டிய அதிர்வெண்ணை உறுதி செய்து பின்னர் இறுதி செய்கிறது .

நேர ஒத்தியைவு: ஒரு செல்பேசி வலையமைப்பில் ( Cellphone network) அனைத்துத் தகவல் பரிமாற்றங்களும் நேரத்துண்டுகளில் ( Cellphone network) நிகழ்கிறது என்று பார்த்தோம் . எட்டு நேரத்துண்டுகள் சேர்ந்து ஒரு நேர வரையறை (Time period) என்றும் கண்டோம் . எனவே, ஒரு செல்பேசி ஒரு தள நிலையத்தினைத் தேர்ந்தவுடன் அத்தள நிலையம் எந்த நேரத்துண்டில் , நேர வரையறையில் இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்வது மிக அவசியம். அப்போதுதான் தகவல் பரிமாற்றம் நிகழ ஏதுவான நேரத்தைச் செல்பேசி தேர்ந்து தள நிலையத்தைத் தொடர்பு கொள்ள முடியும். தள நிலையம் அலை பரப்பும் தடங்களுள் நேர ஒத்தியைவுத் தடமும் ( Synchronization Channel) ஒன்று. இத்தடத்தில் வரும் தகவல்களைக் கொண்டு செல்பேசியானது தள நிலையத்துடன் நேர ஒத்தியைவு செய்து கொள்கிறது.

ஆக, மேற்சொன்ன தகவல்களையெல்லாம் முறைப்படுத்தி சுருங்கக் கூறின், "செல்பேசி இயக்கப்பட்டவுடன் அது நிகழ்த்தும் பணிகளாவன : வலையமைப்புத் தேர்தல் , செல் தேர்வு, அதிர்வெண் திருத்தம் மற்றும் நேர ஒத்தியைவு"

சரி இவ்வளவு தானா? இல்லை. இன்னும் நிறைய உள்ளது. மேலேயுள்ள செயல்களில் எங்கேயாவது செல்பேசியும் தள நிலையமும் தகவல் பரிமாற்றம் செய்தனவா? இல்லையே. தள நிலையம் அனுப்பும் அலைபரப்புத்தகவல்களைக் கொண்டே மேற்சொன்ன செயல்களைச் செல்பேசி நிகழ்த்துகிறது. இதன் பிறகு செய்ய வேண்டிய நிகழ்வு - அந்த வலையமைப்பில் செல்பேசி தன்னைப் பதிவு செய்து கொள்ள வேண்டும். அதாவது ஒவ்வொரு முறை உங்கள்து செல்பேசியின் இயக்கம் நிறுத்தப்படும் போதும் ( Powered Off) அது வலையமைப்பில் இருந்து பதிவு நீக்கம் (De-Registered) செய்யப்படுகிறது. அவ்வாறு செய்வதனால் தான் வேறு யாராவது ஒருவர் உங்களுக்குத் தொடர்பு கொள்ள முயன்றால் "இந்தச் செல்பேசி தற்போது இயக்கத்தில் இல்லை" என்ற தகவல் உங்களை அழைத்தவருக்கு அனுப்பப் படுகிறது. பின்னர் மீண்டும் உங்கள் செல்பேசியை இயக்கினீர்களேயானால் மேற்சொன்ன செயல்களையெல்லாம் செய்து முடித்து இறுதியாய் நெட்வொர்க்கினுள் உங்கள் செல்பேசி இருப்பிடப் பதிவு செய்து கொள்ள வேண்டும். அப்போதுதான் பிறர் உங்கள் எண்ணைத் தொடர்பு கொண்டால் நெட்வொர்க் அந்த அழைப்பினை (உங்கள் இருப்பிடம் தெரிந்து) உங்களுக்குத் தெரிவிக்க முடியும்.


செல்பேசி நெட்வொர்க்கினுள் தன்னைப் பதிவு செய்யும் போது நிகழும் பரிவர்த்தனைகளை அடுத்த வாரம் காண்போம்.

PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2005 Tamiloviam.com - Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |