மே 12 2005
தராசு
வ..வ..வம்பு
மனம் போன போக்கில் மனிதன் போகலாமா?
உள்ளங்கையில் உலகம்
முத்தொள்ளாயிரம்
டெலிவுட்
கவிதை
மஜுலா சிங்கப்புரா
துணுக்கு
கடி கடி கடி
நையாண்டி
நெட்டன் பக்கம்
தொடர்கள்
 
  முதல் பக்கம்
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
மஜுலா சிங்கப்புரா : நலிவுமில்லை சாவுமில்லை கேளீர் கேளீர்!
- எம்.கே.குமார்
| Printable version |

'தாய்க்கு மட்டுமே உடல்வலி கொடுத்து பிறப்பெடுக்கும் ஒருவன், தனது இறப்பில் எத்தனை பேரை வருத்தமடைய வைக்கிறான்' என்பதையே அவன் வாழ்ந்த வாழ்க்கையின் அடையாளமாகக் கொள்வர் சிலர். கடந்த மே 2 அன்று, சிங்கப்பூரின் ஒட்டுமொத்த மக்களும் சோகத்தில் மூழ்கிப்போயினர். 'மக்களின் நண்பரா'யிருந்த சிங்கப்பூரின் நான்காவது அதிபர் '89' வயது திரு. வீ கிம் வீ அவர்கள் புற்றுநோயின் காரணமாக அன்று அதிகாலை காலமானார். ஐந்து நாட்கள் துக்கம் அனுசரிக்கப்பட்டு, அவரது உடல், 'மண்டாய்' பொது எரியூட்டு மைதானத்தில் எரியூட்டப்பட்டபோது சோகத்தில் பங்குகொண்ட மக்களின் அழுகை, அவர் வாழ்ந்ததின் அடையாளங்களைச் சொல்லிவிட்டுச்சென்றது

1915, நவம்பர் 4ஆம் தேதி சிங்கப்பூரில் பிறந்தவர் திரு. வீ கிம் வீ. சீனாவிலிருந்து வந்து குடியேறிய குடும்பங்களில் ஒன்று இவருடையது. தொடக்கக் கல்வியை 'பெர்ல்ஸ் ஹில்' பள்ளியிலும் பிறகு 'ரா·பிள்ஸ்' கல்லூரியிலும் பயின்ற இவர், ரா·பிள்ஸில் சேர்ந்த இரு வருடங்களில் அதனைத் தொடராது விட்டுவிட்டு, 1930 ஜனவரியில் தனது பதினைந்தாவது வயதில் "ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ்" நாளிதழில் வினியோகப் பிரிவில் ஒரு எழுத்தராக வேலைக்குச்சேர்ந்தார். பிறகு விளம்பரப் பிரிவுக்கும் செய்திப்பிரிவுக்கும் படிப்படியாக முன்னேறினார்.

1941 ல் போர் வந்தபொழுது, அதனிலிருந்து விலகிய இவர், அமெரிக்க செய்தி நிறுவனமான 'யுனைட்டேட் பிரஸ் அசோஸியேஷன்(யு.பி.ஏ)', சிங்கப்பூரில் அமைக்கவிருந்த அதன் புதிய அலுவலகத்தில் சேர்ந்தார். மலாயா மற்றும் சிங்கப்பூரில் தாக்குதல் நடைபெற்றுக்கொண்டிருந்த பொழுது விமான தாக்குதல் எச்சரிக்கையாளராகப் பணியாற்றினார். பிறகு ஜப்பானியர்களின் ஆக்ரமிப்பில், ஒரு எழுத்தராக அவர்களிடமும் வேலை பார்க்க நேரிட்டது. ஜப்பானியர்களின் போர் முடிவுக்கு வந்த போது, ஜப்பானிய கப்பல்களுக்கு உணவு தயார் செய்யும் பணியில் உயர்ந்த பதவியில் இருந்தார்.

சிங்கப்பூரில் போர் முடிவுற்று 1945ல், சிங்கப்பூர் மீண்டும் ஆங்கிலேயர் வசம் வந்தபொழுது, திரு. வீ கிம் வீ மீண்டும் 'யு பி ஏ'வில் சேர்ந்தார். சில ஆண்டுகள் அதில் பணியாற்றிய அவர், 1959ல் மறுபடியும் 'ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸில்' உதவி ஆசிரியராகப் பணியேற்றார். ஆசிரியப்பொறுப்பில் இருந்த மற்றவர்கள் கோலாலம்பூருக்கு இடம்பெயர்ந்த நிலையில், சிங்கப்பூரின் மொத்த செய்திப்பிரிவுக்கும் ஆசிரியராக அவர் செயல்பட்டார். சிங்கப்பூரின் அப்போதைய பிரதமர் திரு. லீ குவான் யூ அவர்கள் செல்லும் ஐரோப்பிய பயணங்களுக்கும் இந்தோனேசிய பயணங்களுக்கும் திரு. வீ கிம் வீ செய்தியாசிரியராக உடன் சென்றார்.

மலாயாவின் மாநிலங்களனைத்தும் ஒன்றிணைந்து 'மலேசியா' என்ற நாடு உருவாவதில், இந்தோனேசியாவுக்கு இருந்த கருத்து வேறுபாடு பற்றி ஏற்கனவே நாம் சொல்லியிருந்தோம். மலேசியாவைக் கைப்பற்றத் துடித்த கம்யூனிஸ்ட்டுகளும் இந்தோனேசியாவை ஆட்சி செய்ய ஆசைப்பட்ட இந்தோனேசிய கம்யூனிஸ்ட் கட்சியினரும் இணைந்து, மலேசியாவிற்கு எதிராகக் களத்தில் குதித்திருக்க, அவர்களுக்கு மறைமுக ஆதரவு கொடுத்து இந்தோனேசிய அரசு உதவி வந்ததை நாம் அறிந்திருக்கிறோம்.

இந்தோனேசியாவின் இத்தகைய நிலைப்பாடு, 'கான்·பிரொண்டாசி (CONFRONTATION)' என்று அழைக்கப்பட்டு மிகவும் பிரசித்தமாயிருந்த காலம் அது. இந்தோனேசியாவில் மிகப்பெரிய படுகொலைகள் நடைபெற்று புதிய ஜனாதிபதியாக ஜெனரல் சுகார்த்தோ பதவியேற்றிருந்தார். இன்னும் அவர் மலேசிய எதிர்ப்பு நிலையில் தான் இருக்கிறாரா இல்லை மற்ற இவ்வட்டார நாடுகளுடன் இணக்கமாக இருக்க விரும்புகிறாரா என்றும் இந்தோனேசியாவின் நிலை (ஆட்சிமாற்றத்திற்குப்பிறகு) என்ன என்பது பற்றியும் குழப்பமான சூழ்நிலை நிலவி வந்தது.

'ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ்' நாளிதழின் ஆசிரியராக இருந்த திரு. வீ கிம் வீ அவர்களுக்கு எப்படித்தோன்றியதோ தெரியவில்லை. சிங்கப்பூரிலிருந்தும் மலேசியாவிலிருந்தும் யாரும் இந்தோனேசியாவிற்கு பயணம் செய்ய அவ்வரசு அப்போது அனுமதி அளிக்காதிருந்தது. லண்டனிலிருந்து பேங்காக் வழியாக சிங்கப்பூருக்கு அவர் திரும்பிக்கொண்டிருந்தார். பேங்காக்கின் ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த அவருக்கு, சிங்கப்பூருக்கான இந்தோனேசியாவின் முன்னாள் தூதுவரைச் சந்திக்க வாய்ப்புக் கிடைத்திருக்கிறது. அவரிடம், தான் இந்தோனேசியா செல்வதற்கு அனுமதி வாங்கித்தரமுடியுமா என்று கேட்டிருக்கிறார் திரு. கிம் வீ.

ஆச்சரியமானதும் நம்பமுடியாததுமான பதில் அவருக்குக் கிடைத்தது. 'அனுமதி அளிக்கப்படும். அவரது விருப்பப்படி இந்தோனேசியாவின் வெளியுறவு அமைச்சரை அவர் சந்திக்கலாம்; பேட்டி காணலாம். ஆனால் அவர் சிங்கப்பூரிலிருந்து வரக்கூடாது. பேங்காக்கிலிருந்து நேரிடையாக இந்தோனேசியாவிற்கு வரவேண்டும்!' இது அவருக்கு அளிக்கப்பட்ட பதில்! அனுமதி கிடைத்ததே பெரிய விஷயம் என்று இந்தோனேஷியாவிற்குச் சென்ற அவருக்கு இன்னொரு ஆச்சரியம் அங்கு காத்திருந்தது. இந்தோனேசியாவின் வெளியுறவு அமைச்சர் திரு. ஆடம் மாலிக், அந்த விஷயத்தை அவரிடம் சொன்னார். "இந்தோனேசியா இப்பிரச்சனைகளிலிருந்து வெளிவர விரும்புகிறது. இவ்வட்டாரத்தில் அமைதியான சூழ்நிலை நிலவ வேண்டியதன் அவசியத்தை உணர்கிறது."

சமரசத்திற்காய் சென்றவனுக்கு அந்த வீட்டு பெண்ணும் சொத்தும் மொத்தமாய் கிடைத்தது போல திரு. வீ கிம் வீ அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கிடைத்தது அங்கே! இதே பதிலையே பிறகு, அதிபர் சுகார்த்தோவைச் சந்தித்தபோதும் அவர் கேட்க நேர்ந்தது.

'எவ்வளவு சீக்கிரம் இவ்வட்டாரத்தில அமைதி நிலவ வேண்டுமோ அவ்வளவு சீக்கிரம் அது அமைவது நல்லது' என்றார் அவர். கருத்து வேறுபாடுகள் முடிவுக்கு வரவேண்டும் என்றும் சிங்கப்பூரை முழுமையாகத் தான் அங்கீகரிப்பதாகவும் ஆங்கிலேயப்படைகள் சிங்கப்பூரில் இன்னும் பத்து வருடங்கள் இருக்கவேண்டும் என்று திரு. லீ குவான் யூ அவர்கள் லண்டனில் பேசியதைத் தான் ஆதரிப்பதாகவும் ஆனால் இந்தோனேசியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அது அமையக்கூடாது எனவும் இந்தோனேசியாவின் உள்நாட்டு பாதுகாப்புக்கு பங்கம் விளைவிக்காதவரை மலேசியா, சிங்கப்பூர் மற்றும் எந்தவித கம்யூனிச அரசுகளோடும் வாணிபத்தொடர்புகளோ வியாபார உறவோ வைத்துக்கொள்வதில் இந்தோனேசியாவிற்கு பிரச்சனை இல்லை எனவும் விளக்கமாக அறிவித்தார். அடுத்த நாள் 'ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ்' நாளிதழின் தலைப்புச்செய்தி இப்படி அமைந்தது. "அமைதி-மிக விரைவு மிக நன்று! இந்தோனேசிய அதிபர் பேட்டி!"

அன்று பிறந்தது சிங்கப்பூருக்கு இன்னொரு விடுதலை. வயிற்றில் பூனையை கட்டிக்கொண்டு சகுனம் பார்த்த கதை போல, அண்டைய பெரிய நாடான இந்தோனேசியாவைப் பகைத்துக்கொண்டு தொழில் வளர்ச்சி பெறுவது எப்படி என்று யோசித்துக்கொண்டிருந்த சிங்கப்பூருக்கு அச்செய்தி, பால் மட்டுமல்ல; பாக்கெட்டில் 'டாலரும்' வார்த்தது. அந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க செய்தியைக் கொண்டு வந்தவர் இந்தோனேசியாவிற்குச் சென்ற முதல் சிங்கப்பூர் பத்திரிகையாளர் திரு. வீ கிம் வீ.

திரு. வீ கிம் வீ, 'ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ்' நாளிதழில் மீண்டும் உதவி ஆசிரியராகச் சேர்ந்த நேரத்தில் தான், திரு. லீ குவான் யூ அவர்களுடைய 'மக்கள் செயல் கட்சி' தோற்றம் கண்டிருந்தது. அரசியலில் மிகுந்த பரபரப்பான சூழ்நிலை நிலவிய அக்காலத்தில் அரசியல் கட்சிகள் சிலவற்றின் செயல்பாடுகளுக்கும் இப்பத்திரிகைக்கும் சரிவர பொருந்தவில்லை. அரசியல் மற்றும் நாட்டு நடப்புச்செய்திகளின் ஆசிரியராக அவர் பணியாற்றிய அக்காலத்தில் திரு. வீ அடிக்கடி இப்படிச் சொல்வாராம்.

"என்னிடம் ஒரு சிறு பை இருக்கிறது. அதில் ஒரு துண்டு, பேஸ்ட் மற்றும் பிரஷ், குளியல் சோப் ஆகியன இருக்கின்றன. எனவே எப்போது என்னை அங்கு அனுப்பினாலும் அதைப்பற்றி எனக்குக் கவலையில்லை. எல்லாவற்றிற்கும் நான் தயாராக இருக்கிறேன், நீங்கள் தொடர்ந்து எழுதுங்கள்" என்று தனக்குக் கீழிருந்த துணை ஆசிரியர்களிடம் இயல்பாகச்சொல்லும் திரு. வீ கிம் வீ அவர்களுக்கு 'ஜெயில் எடிட்டர்' என்ற பெயரும் செல்லமாக இருந்திருக்கிறது.

அப்பத்திரிகையின் 'எடிட்டர்' பொறுப்பிலிருந்து ஓய்வு பெறுவதற்கு முன், 1973ல் சிங்கப்பூர் அரசு அவரை, சிங்கப்பூருக்கான தூதுவராக மலேசியாவிற்கு அனுப்பியது. அப்பதவியின் காலங்கள் மூன்று வருடமேயானாலும் தொடர்ந்து ஏழு வருடங்கள் அப்பதவியில் இருந்து நல்லுறவை வளர்த்தார் திரு. வீ கிம் வீ. அதிலும் கடைசி இரு வருடங்கள் ஒட்டுமொத்த சிங்கப்பூர் பொறுப்புகளுக்கும் தலைமையானவராய் மலேசியாவிலிருந்து சிறப்பித்தார். சிங்கப்பூரிலிருந்து ஐ.நா சபையின் பொது அவைக்கான உறுப்பினராகவும் அவர் 1977ல் பணியாற்றினார்.

அதன்பின் 1980ல் சிங்கப்பூரின் தூதுவராக 'ஜப்பான்' நாட்டிலும் அதனைத்தொடர்ந்து 1981ல் 'கொரியா'விலும் தூதராகப் பணியாற்றினார். 1984ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் சிங்கப்பூருக்குத் திரும்பிய அவர், 'சிங்கப்பூர் பிராட்கேஸ்டிங் கார்ப்பொரேஷனின்' தலைவராக தலைமையேற்றார். பின்னர் ஒரு வருடம் கழித்து 1985 ஆண்டு ஆகஸ்டு '30-ல்' சிங்கப்பூரின் அதிபராகப் பதவியேற்றார்.

விளையாட்டுத்துறையில் மிகுந்த நாட்டம் கொண்டிருந்த திரு. வீ, சிங்கப்பூர் பேட்மிண்டன் சங்கத்திற்குத் தலைவராக இருந்தார். சமூகச்சேவைகளிலும் அதிக ஈடுபாடு காட்டிய அவர், சிங்கப்பூர் அரசின் முக்கியக் குழுக்கள் சிலவற்றிற்கு தலைவராயும் இருந்தார். சிங்கப்பூர் திரைப்பட மறுபரிசீலனைக்குழு, சிங்கப்பூர் குடியமர்வு நிர்ணயக் குழு, சிங்கப்பூர் நில மீட்புக்குழு, சிங்கப்பூர் தேசிய தியேட்டர்கள் மேலாண்மைக்குழு மற்றும் சிங்கப்பூர் புற்று நோய் எதிர்ப்புக்கழகம் ஆகியவற்றிலும் தலைவராயிருந்து சாதித்தார்.

"இந்த உலகத்தில் வாழ்கின்ற காலத்தில் ஐந்து அல்லது பத்து சக மானிடர்கள் மகிழ்ச்சியோடு வாழ நான் முயன்றிருந்தால் அதுவே நான் பிறவி எடுத்ததன் பயனாகும்" என்று கூறிய அந்த மாமனிதரின் இறப்புச் சோகத்தில் அத்தனையாயிரம் மனிதர்கள் பங்குகொண்டதில் ஆச்சர்யம் என்ன இருக்கமுடியும்?\


சிங்கப்பூர் டைம்ஸ் 2015 இதழில் இருந்து.

எழுத்தாளர்கள் சந்திப்பில் எழுந்த சிக்கல்!

சென்னை. மே 25. தமிழ்நாட்டின் சென்னை மாநகரில் 'அனைத்து தமிழக எழுத்தாளர்களின்' மாநாடு நேற்று நடைபெற்றது. கன்னியாகுமரியிலிருந்து கோட்டை வரை அனைத்து மாவட்ட எழுத்தாளர்களும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் பேசிய இதன் தலைவர் தமிழ் வளவன், நடுவண் அரசு தமிழ் வளர்ப்பதில் காலம்காலமாக பாரபட்சம் காட்டுவதாகவும் தமிழ் மொழியை அன்னிய மொழி போலவே நடத்துவதாகவும் கூறினார். கூட்டத்தில் பேசிய அதன் உப தலைவர் மாரிக்கண்ணு, சாகித்ய அகாடமி, ஞானபீடம் உட்பட எந்த விருதுகளையும் தமிழ் எழுத்தாளர்களுக்கு வழங்க நடுவண் அரசு விரும்புவதில்லை எனவும் நடுவண் அரசைக் கண்டித்து விரைவில் தனிப் போராட்டமும் தமிழ் எழுத்தாளர்களுக்கென தமிழ் நாட்டில் வழங்குமாறு 'தமிழ் ஞானபீட விருது' என்ற அமைப்பையும் அமைக்கப்போவதாகச் சொன்னார்.

விழாவில் பேசிய 'சிறுபத்திரிகை எழுத்தாளர் சங்கத்தலைவர்', 'கிஸ்கி லகலகல கீனா' தனது படைப்புகளை நடுவண் அரசு கண்டுகொண்டாலும் ஜனரஞ்சகப் பத்திரிகைகள் கண்டுகொள்ளவில்லை என்றும் அவைகளின் ஓரவஞ்சகத்தைக் கண்டித்து மாபெரும் போராட்டம் நடத்தப்போவதாகவும் அதற்கு ஜனரஞ்சகப்பத்திரிகை எழுத்தாளர்கள் முழு ஆதரவு தரும்படியும் சொன்னார்.

இதற்கிடையே 'இணையத்தில் இலக்கியம் இல்லை' என்று ஒருவர் சொன்னதைக்கேட்டு கூடியிருந்த மக்களிடையே சலசலப்பு உண்டாக, மற்றொருவர், 'பத்தாண்டுகளுக்கு முன் ஞானபீடம் வழங்கியதில் அசிங்கமே மிஞ்சுகிறது என்றும் அவருக்குக் கொடுத்தது தார்மீக அடிப்படையில் தவறு' என்றும் சொல்ல, இன்னொருவர் 'அது சரிதான்' என்று சொல்ல, சிறிது சலசலப்புக்குப்பின் கைகலப்பு நடந்தது. கைகலப்பில் பலருக்கு உள்காயமும் சிலருக்கு வெளிக்காயமும் ஏற்படும் அளவுக்கு அடிதடி ரகளை நடந்ததாக போலீஸ் தரப்பில் சொல்லப்பட்டது.

PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2005 Tamiloviam.com - Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |