மே 18 06
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
கட்டுரை : நல்லதோர் வீணை செய்து
- லாவண்யா [lavanya.sundararajan@gmail.com]
Bookmark in Del.icio.us | | Printable version | URL |

நல்லதோர் வீணை செய்தே அதை
  நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ
சொல்லடி சிவசக்தி என்னை சுடர்
  மிகும்  அறிவுடன் படைத்துவிட்டாய்

Bharathiyarஇப்பாடலை அறியாத தமிழ் உள்ளம் இருக்க முடியாது. எதை நினைத்து பாரதி இந்த பாடலை பாடி இருப்பான்? தன் வறுமையையா? செல்லம்மா தனக்கு கவிதைகள் மீதுள்ள காதலை புரிந்து கொள்ளாமல் கோபிக்கிறாளே என்றெண்ணியா? இவ்வளவு ஆற்றல் மிக்க அனல் பறக்கும் கவிதைகளுக்கு அவர் நினைத்த அளவு ஆக்கபூர்வமான பின் விளைவுகள் இல்லை என்ற வேதனையா? எப்படி வேண்டுமானாலும் நினைத்துக்கொள்ளலாம். இயக்குனர் கே.பாலசந்தர் "வறுமையின் நிறம் சிவப்பு" என்ற தன் படத்தில் இந்தப் பாடலை மிக அழகாக பயன்படுத்தி இருந்தார். நன்கு படித்த இளைஞன் அவன் படிப்பிற்கு தக்க வேலை கிடைக்காமல் அவதியுறுவதை இப்பாடல் அழகாக வெளிப்படுத்தும்.


இந்தப் பாடலுடன் ஒப்பிட்டுத் தக்க ஒரு சில சிந்தனைகள் இதோ.


அவள் ஒரு அழகோவியம். காண்போர் யாவரையும் ஒரு கணமேனும் திரும்பிப் பார்க்கச் செய்யும் அழகுத் தேவதை. யாருடனும் சட்டென பழகி விடுவாள். எவரையும் தன் பேச்சால் கவர்ந்திழுப்பாள், மகிழ்ச்சி அடைய செய்வாள். அவளிருக்கும் இடம் எப்பொழுதும் கலகலப்பாக இருக்கும். எல்லோருக்கும் உதவுவாள். மிக அன்பானவள். குழந்தை போல் உள்ளம் கொண்டவள்.நன்கு படித்தவள். கற்பூர புத்தி கொண்டவள். கொடுத்த எந்த வேலையையும் இதை விட சிறப்பாக செய்ய யாராலும் இயலாது என்னும் வண்ணம் செய்வாள். அதிலும் எதை செய்தாலும் மிக ரசனையோடு செய்வாள். மார்கழியில் தெருவடைத்து அவள் இடும் கோலம் அதற்கு அவள் தரும் வண்ணம, ஆஹா அற்புதம். எல்லோரும் தான் வண்ணக்கோலங்கள் வரைகிறார்கள். ஆனால் அவள் வரையும் போது மட்டும் ஏன் அது உயிர்பெற்று எழுகிறது என்று தோன்றும். ஒரு நாள் மயில் தோகை விரித்து ஆடும், ஒரு நாள் குயில் கூவும், பிறிதொரு நாள் வண்ண உடைகளில் அழகு பெண்கள் நடனமாடுவர், ஒரு நாள் சிறார்கள் விளையாடுவர். ஒரு நாள் அழகான பூ பூக்கும். அவள் பாடினால் நாள் முழுவதும் கேட்டுக்கொண்டே இருக்கலாம்.. அவள் மலர் தொடுக்கும் அழகிற்கே கண்ணன் கூட அவள்மீது காதல் கொள்வான். அவளது சமையல் எட்டு ஊருக்கும் மணக்கும். அவள் எழுதும் கவிதைகளில் கவிரசம் பொங்கும்.. காவியங்களைப்பற்றி அவள் பேசும்போது அக்காவியமே நம் கண்முன் நடப்பது போல தோன்றும். சுருக்கமாக சொன்னால் அவள் பெண்மையின் இலக்கணம். அந்த நல்லதோர் வீணைக்கு கிடைத்தது ஒரு புழுதி போன்ற கணவன். அவனுக்கு ரசனை என்ற ஒரு வார்த்தை தமிழில் இருக்கின்றது என்றே தெரியாது. அவனுக்கு அவன் அலுவலகம், பின் வீடு, சாப்பாடு, தூக்கம்.  எல்லாமே ஒரு இயந்திரம் போல, மென்பொருள் இட்ட கணிபொறி போல. இத்துணை குணவதி அவளை பற்றி யாவரும் பெருமை பேசி என்ன பயன்? இதை பார்த்து தான் பாடி இருப்பானோ பாரதி?

அவன் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் பணி புரிபவன். அவனுடன் பணி புரியும் அனைவருமே மிக பெரிய பெயர் போன கல்லூரிகளில் படித்தவர்கள். ஆனால் அவர்களின் அறிவிற்கு ஒரு படி மேலானதே அவன் அறிவாகும். ஆனால் அவன் படித்தது அவ்வளவு புகழ் பெற்றதல்ல. அவன் அந்த குழுவில் இருக்கும் அனைவரின் மொத்த திறமையையும் கொண்டவன் எனக்கொள்ளலாம். திட்டமிடுதல், கட்டமைத்தல், மென்பொருள் எழுதுதல், அதை திருத்தி தரமிடல் இப்படி மென்பொருள் வாழ்வு சுழற்சியின் எந்த பகுதியிலும் அவன் செயல் தரமாக இருக்கும்.  எவருமே குறை சொல்ல முடியாது. குழுவில் உள்ள மற்ற சக பணியாளர்கள் இவன் திறன் கண்டு மிரண்டு போவார்கள். ஆனாலும் அவன் படித்தது அவ்வளவு உயர்ந்த கல்லூரி அல்லாததால் அதை வைத்து அரசியல் நடத்துவர் குழு மேலாளரும் சக பணியாளர்களும். அவனிடம் நல்ல திறன் காட்ட கூடிய பணியே தரபடாது. வேறு ஒருவருக்கு அது தரப்படும். ஆயினும் வேலை இவனிடம் வாங்கபடும். அதில் வரும் பயன் வேறு ஒருவனுக்கு போய் சேரும். அவ்வளவு நல்லறிவு இருந்தும் என்ன பயன் அது ஒடுக்க படுகின்றதே இங்கே. ஒருவேளை இது போன்ற ஒரு சுழலை தான் பாரதி பாடி இருப்பானோ?

"என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்?" வற்றாத ஜீவ நதிகள், காடுகள். மலைகள், விளைநிலங்கள். பூமி நிறைய கனிமங்கள். தாது பொருட்கள். உப்பு, தங்கம், வைரம் , நிலகரி, கச்சா எண்ணைய் படிமங்கள் இன்னும் எத்தனை எத்தனையோ அதிசயங்கள் இந்த மண்ணில். எத்தனையோ போரட்ட வீரர்கள் இத்தனையும் இந்த மண்ணில். இருந்தும் இந்திய தாய் அடிமைப் பட்டு கிடக்கிறாள். அதை புரிந்து கொள்ளும் அளவிற்கு சுடர் மிக்க அறிவோடு என்னை படைத்துவிட்டாய். ஆயினும் என் செய்ய அடிமைதளை உடைக்க முடியவில்லையே இப்படி தான் பாரதி யோசித்து இந்த பாடலை பாடி இருக்க வேண்டும்.

இன்று நாமும் நினைப்போம்  இவ்வளவு வளங்கள் இருந்தாலும், எத்தனையோ அறி்வாளிகள் விஞ்ஞானிகள் இருந்தாலும், இந்திய மூளையை நம்பி பல பன்னாட்டு நிறுவனங்கள். இருந்தாலும் இந்திய தாய் அவள் சுயநலம் மிக்க ஆட்சியாளர்களாலும், பொறுப்பற்ற குடிமக்களின் கைகளிலும் மாட்டிக்கொண்டிருக்கிறாளே என்று.


  "நல்லதோர் வீணை செய்தே அதை
  நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ"

|
oooOooo
லாவண்யா அவர்களின் இதர படைப்புகள்.   கட்டுரை பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2006 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |