மே 18 06
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
திரைவிமர்சனம் : திருட்டு பயலே
- மீனா [feedback@tamiloviam.com]
Bookmark in Del.icio.us | | Printable version | URL |

தவறு செய்யும் தந்தையைப் பார்த்து குறுக்கு வழியில் போக ஆசைப்பட்டு முடிவில் தன் வாழ்க்கை தொலைக்கும் ஒரு இளைஞனைப் பற்றிய கதை தான் திருட்டு பயலே.

Jeevan,Sonia Agarwalகிராமத்தில் தனக்கு தோசை தராமல் தன் தம்பிக்கு அம்மா கொடுத்தார் என்பதற்காக தம்பி மண்டையை உடைத்துவிட்டு சென்னையில் வசிக்கும் தன் மாமா வீட்டிற்கு வருகிறார் ஜீவன். போலீஸ் அதிகாரியாக உள்ள மாமாவின் வீட்டிற்கு அருகில் உள்ள கோல்ப் மைதானத்தில் மனோஜ் கே ஜெயனின் மனைவி மாளவிகா அவரது நண்பரான அப்பாஸ¤டன் தவறான உறவில் ஈடுபடுவதை ஜீவன் பார்த்துவிடுகிறார். பார்த்ததை வீடியோவும் எடுத்துவிடுகிறார். மனோஜ் கே ஜெயன் ஒரு பெரிய பணக்காரர் என்பதை தெரிந்துகொள்ளும் ஜீவன் மாளவிகாவை மிரட்டி சுகபோக வாழ்க்கை வாழ ஆசைப்படுகிறார்.

ஜீவனிடமிருந்து வீடியோ டேப்பை கைப்பற்ற மாளவிகா செய்யும் முயற்சியால் ஆத்திரமடையும் ஜீவன் மாளவிகாவை மிரட்டி தன் நண்பர்களுடன் ஆஸ்திரேலியாவிற்கு செல்கிறார். அங்கே சோனியா அகர்வாலை சந்திக்கும் ஜீவன் அவர் மீது காதல் கொள்கிறார். ஜீவனிடமிருந்து அந்த வீடியோ டேப்பை பறிக்க தான் அனுப்பிய ஆள் என்று கூறும் மாளவிகா டேப்பை தன்னிடம் கொடுத்தால் சோனியாவை தான் தருவதாக கூறி ஜீவனை மிரட்டுகிறார்.

ஜீவனுக்கும் மாளவிகாவிற்கும் என்ன உறவு என்று புரியாமல் தவிக்கும் சோனியா ஜீவனிடமே நேரடியாக இதைக் கேட்டுவிடுகிறார். காதலியிடம் உண்மையை மறைக்க முடியாமல் அனைத்தையும் ஜீவன் சொல்ல, இப்படி ஒரு பிழைப்பு பிழைப்பதற்கு பதிலாக நேர்மையான வழியில் ஏதாவது ஒரு வேலையை ஜீவன் தேடிக்கொண்டால் தான் அவருடன் வரத்தயார் என்று சோனியா கூறுகிறார்.

இதற்கிடையே மாளவிகா ஜீவனிடம் கெஞ்சி மன்றாடிக் கொண்டிருப்பதைப் பார்க்கும் மனோஜ் கே ஜெயன், மாளவிகாவைப் பற்றி துப்பறியுமாறு தன் நண்பனிடம் கூறுகிறார். நண்பன் மூலமாக அப்பாஸ் மாளவிகாவின் கள்ளத்தொடர்பையும் ஜீவன் மாளவிகாவை மிரட்டி பணம் பறிப்பதையும் தெரிந்து கொள்ளும் மனோஜ் கே ஜெயன் அதிரடியாக சில முடிவுகளை எடுக்கிறார். அப்பாஸ் மாளவிகா கள்ளத் தொடர்பு என்ன ஆனது? சோனியா - ஜீவன் காதல் திருமணத்தில் முடிந்ததா இல்லையா? இந்தக் கேள்விகளுக்கான விடைகளே படத்தின் கிளைமாக்ஸ்.

காக்க காக்கவிற்கு பிறகு ஜீவன் தனது வில்லத்தனமான நடிப்பை வெளிப்படுத்த அவருக்கு கிடைத்த வாய்ப்பை அருமையாகப் பயன்படுத்திக் கொண்டுள்ளார். பார்க்க அமைதியாகவும் மனதில் குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற எண்ணம் கொண்டவராகவும் அவர் நடித்திருக்கும் விதம் அற்புதம். அதிலும் மாளவிகா அவரிடமிருந்து வீடியோ டேப்பை கைப்பற்ற செய்யும் முயற்சிகளை முறியடித்துவிட்டு வில்லத்தனமாக பேசுவது சூப்பர். இவ்வளவு வில்லத்தனம் கொண்டவர் சோனியா மீது கொண்ட காதலால் ஓவர் நைட்டில் திருந்துவது கொஞ்சம் நெருடலாக இருக்கிறது என்றாலும் காதலில் இதெல்லாம் சகஜம் என்று நம்மை நாமே சமாதானப்படுத்திக்கொள்ளலாம். ஜீவன் தனது நடிப்பில் இன்னும் சற்று மெருகூட்டினால் நிச்சயமாக தமிழ் சினிமா உலகில் ஒரு ரவுண்ட் வரலாம்.

Malavikaமாளவிகாவா இப்படி நடித்திருப்பது என்று நம்மை வியக்கவைக்கிறார். ஜீவனைக் கவிழ்க அவர் செய்யும் முயற்சிகளும் ஒவ்வொரு முறை அவரிடம் தோற்றுவிட்டு டேப்பிற்காக கதறுவதும் அருமை. நண்பனின் மனைவியுடனேயே கள்ளத்தொடர்பு வைத்திருக்கும் நம்பிக்கை துரோகியாக அப்பாஸ். முதலில் மாளவிகாவுடன் டேப்பைக் கைப்பற்ற முயல்வதும் ஒரு கட்டத்தில் மாளவிகாவையே மிரட்டுவதுமாக அப்பாஸ் வித்தியாசமாக வில்லத்தனம் காட்ட முயன்றிருக்கிறார். நேர்மையான கணவனாக மனோஜ் கே ஜெயன். மனைவியின் நடத்தையில் சந்தேகப்படுவதும், உண்மையெல்லாம் தெரிந்த பிறகு அவர் தன்னை ஏமாற்றியவர்களைப் பழிவாங்கும் விதம் ரொம்பவும் சினிமாத்தனம்.

பெரிய பணக்கார வீட்டுப் பெண்ணாக அறிமுகமாகும் சோனியா இந்தப்படத்தில் கொஞ்சம் வித்தியாசமாக நடிக்க முயற்சி செய்திருக்கிறார் போலிருக்கிறது. ஜீவனிடம் இது எல்லாத்தையும் விட்டுட்டு ஒரு நேர்மையான மனுஷனா வா. நான் உன்னைக் கல்யாணம் பண்ணிக்கறேன்.. என்று சொல்லும் காட்சியில் சபாஷ் சொல்ல வைக்கிறார்.

இலங்கைத் தமிழ் பேசிக்கொண்டு அறிமுகமாகும் விவேக் காமெடியில் கலக்கபோகிறார் என்று நினைத்தால் சப்பென்று போகிறது அவர் செய்யும் பிளாக்மெயில் காமெடி. ஹ¥ம்..

பரத்வாஜின் இசையில் பாடல்கள் ஓக்கே ரகம் என்றாலும் பிண்ணனியில் பின்னியிருக்கிறார். வைரமுத்துவின் பாடல் வரிகளில் திருட்டுப்பயலே பாடல் அருமை. சண்டைக்காட்சிகளை வித்தியாசமாக வடிவமைத்திருக்கும் ஸ்டண்ட் மாஸ்டர் சக்திக்கு ஸ்பெஷல் பாராட்டுகள்.

பெற்றவர்கள் செய்யும் தவறுகளால் பிள்ளைகள் எந்த அளவிற்கு பாதிக்கப்படுகிறார்கள் - எத்தகைய கேவலமான வக்கிரமான எண்ணங்கள் அந்த பிஞ்சு மனதில் பதிகிறது - அதனால் ஏற்படும் விளைவுகள் என்ன ? தமிழ் சினிமாவில் இதுவரை வராத ஒரு புது கதை. அருமையாக கதை, திரைக்கதை வசனம் எழுதி இயக்கியுள்ளார் சுசி.கணேசன். ஆனாலும் அந்த கிளைமாக்ஸ் தான் கொஞ்சம் இடிக்கிறது... மொத்தத்தில் திருட்டு பயலே விற்கு போடலாம் ஒரு சபாஷ்.

| | |
oooOooo
மீனா அவர்களின் இதர படைப்புகள்.   திரைவிமர்சனம் பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2006 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |