இந்த வார இதழில்
தராசு
வ..வ..வம்பு
உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால்
டெலிவுட்
நூல் அறிமுகம்
மஜுலா சிங்கப்புரா
ஆன்மீகக் கதைகள்
மனம் போன போக்கில் மனிதன் போகலாமா?
நையாண்டி
உள்ளங்கையில் உலகம்
கவிதை
திரைவிமர்சனம்
தொடர்கள்
 
  முதல் பக்கம்
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
நூல் அறிமுகம் : கலை உலகில் ஒரு சஞ்சாரம் - வெங்கட் சாமிநாதனுடன்
- நேச குமார்
| Printable version |

 வெங்கட் சாமிநாதனின் கட்டுரைகளின் தொகுப்பாக சமீபத்தில் சந்தியா பதிப்பகத்தார் வெளியிட்டிருக்கும் நூல் - கலை உலகில் ஒரு சஞ்சாரம். உலகத் தமிழ்.காம் இல் வெளிவந்த வெங்கட் சாமிநாதனின் நாற்பத்தோரு கட்டுரைகளின் தொகுப்பு இது.  இசை, இலக்கியம், நடனம், சிற்பம்,நாடகம், ஓவியம், சினிமா என பலதளங்களில் விரியும் வெங்கட் சாமிநாதனின் சிந்தனா வெளியே இத்தொகுப்பாய் ஒரு திருவிழாக் கோலம் பூண்டிருக்கிறது.

280 பக்கங்களில், ஆங்காங்கே ஒவியங்கள் , சிற்பங்கள், புகைப்படங்கள், சினிமா ஸ்டில்கள் என ரசித்து படிக்கும் படியாக அழகுற வெளியிட்டிருக்கும் சந்தியா பதிப்பகத்தாரை பாராட்டிதான் ஆகவேண்டும். ட்ராட்ஸ்கி மருதுவின் ஓவியம் முகப்பிலேயே நம்மை ஒரு மாலைநேர திருவிழா வெளிக்குள் இழுத்துச் செல்லும் கனவு வெளியின் நுழைவாயிலைப் போன்ற தோற்றத்தைக் கொணர்கின்றது. படிக்கப் படிக்க, பாட்டனாருடன் சவேரியார் கோவில் திருவிழா காண்பது போன்ற உணர்வு விரிகிறது. இங்கே, அங்கே என நம்மை ஒரு அறியாச் சிறுவனைப் போல் காட்டிக் காட்டி கரம் பிடித்து அழைத்துச் செல்கிறார் வெங்கட் சாமிநாதன். கலையரங்குகளில், திருவிழா மயக்கங்களில் லயித்திருக்கும் போதெல்லாம் சுளீர் சுளீரென அவர் சுட்டிக் காட்டும் நிதர்சனங்கள் நம்மை கனவுலகத்திலிருந்து இழுத்து வந்து நிகழ்வாழ்வின் அவலங்களை, நமது அலட்சியங்களை, பொறுப்புணர்சியின்மையின் விளைவுகளை புரிய வைக்கின்றன.

புத்தகத்தில் வெளிப்பட்டிருப்பது, அகன்று, ஆழ்ந்து விளங்கும் வெங்கட் சாமிநாதனின் நீண்ட அனுபவம். தமிழகத்திலிருந்து ஒதுங்கியிருந்ததாலோ என்னவோ, வெங்கட் சாமிநாதனால் தமிழிலக்கிய வெளியின், வெளியின் மெல்பரப்பில் விரைந்து திரியும் நீரோட்டத்துடன் நீந்த முடியவில்லை. இதுவே அவரது பலமும், பலவீனமும். பலம் - அவரை தமிழிலக்கிய உலகுக்கு அடையாளம் காட்டியது, அக்காலத்தில் ஜாம்பவானென கருதப் பட்டவர்களையெல்லாம் தங்கு தடையில்லாமல் தாக்கிய பாணி ( இலக்கிய முகமூடிகள் - Thought மார்ச்-ஏப்ரல், 1969) இலக்கிய ஆர்வலர்களை நிமிர்ந்து உட்கார்ந்து கவனிக்க வைத்தது. பலவீனம் - அவரை விமர்சகராக, தம்மிலிருந்து அந்நியப்பட்ட ஒரு ஜந்துவாக  ஏனைய தமிழிலக்கிய வாதிகளால் எளிதில் ஜாதிப்ரஷ்டம் செய்யவைத்தது.

இந்த ஜாதிப்ரஷ்டமும் அவருக்கு துணையே புரிந்துள்ளது என்பதையே இந்த அவரது தொகுப்பு   காட்டுகிறது. எத்தனை தமிழ் எழுத்தாளர்களுக்கு பாலன் நம்பியாரின் நாக மண்டல பூஜையின் அமானுட தூண்டுதல்கள், முத்துக் கோயாவின் ஓவியங்களில் தென்படும் மரணச் சுவை, குடவாசல் மாடக்கோவில்களின் அழகு, எம்.எ·ப்.உசேனின் டாபா தேநீர், ஞானசேகரனின் தளரல்கள், ரங்கசாமி சாரங்கனின் கலைமனது, ஸ்ரீநிவாஸனின் டிஜிட்டல் ஓவியங்கள், நம்மூர் மார்கழிக் கோலங்கள், இப்ராகிம் அல்காஷியின் நாடகம் என பலதரப்பட்ட தளங்களில் விழித்திருக்கும் கலை மனங்களுடனான நேரடி அனுபவம் ஏற்பட்டிருக்கும் என்று கேள்வியெழுப்பினால் இல்லையென்றே பதிலளிக்கத் தோன்றும். வெங்கட் சாமிநாதனின் தனிப்பட்ட அனுபவங்கள், அவரது சஞ்சாரங்களின் வெளிப்பாடுகள். இந்த சஞ்சாரங்கள் வெறும் புறசஞ்சாரங்களாக நின்று விடவில்லை, புற சஞ்சாரங்களின் தூண்டுதல்களில், அகவழிப் பயணம் மேற்கொண்டிருக்கிறார் - பல திசைகளில், பல தளங்களில் - தமது சிந்தனையென்னும் வானூர்தியில். கலைகளைப் பற்றிய அவரது எழுத்துக்கள் நம்மையும் இத்திசைகளிலெல்லாம் பயணிக்க வைக்கின்றன.

புத்தகத்தை துவக்கியபோது அசுவாரசியமாகத்தான் பிரவேசித்தேன் - கலைகளுக்கும் எனக்கும் ஏகதூரம் என்பதால். சவேரியார் கோவில் திருவிழா காணப்போய், சுசீந்திரம் கோவிலுக்குள் நுழைந்ததைப் போல். ஆனால், உள்ளே நுழைந்தவுடன் ஆர அமர நம்மை கூட்டிச் சென்று கல் கல்லாகக் கலைப் படிமங்களைக் காட்டுகிறார் வெ.சா. இங்கே பாருங்கள் நமது பண்டைய கலைச் செல்வங்களை, நாம் உதாசீனப் படுத்தும் நமது பாரம்பர்ய சொத்துக்களை. ஆஸ்திகமும், நாஸ்திகமும் இருவேறு கோணங்களில் சீரழிக்கும் நமது புராதானப் பொக்கிஷங்களைச் சுட்டிக் காட்டுகிறார், " கோவில் என்பது சாமி கும்பிடப் போகும் இடம் ஒரு சாரார்க்கு. தேங்காய், பழம், புஷ்பங்களோடு நேரே கர்ப்பக்கிரஹத்துக்கு போவதும், அர்ச்சகர்கள் மந்திரம் சொல்லி தீபாராதனைக்குப் பிறகு அரை மூடி தேங்காயும் புஷ்பமுமாக நேரே வந்த வழியே அதே நேர்க்கோட்டிலேயே திரும்புதலும்தான் ஒரு சாரார் அறிந்தது. மற்றொரு சாரார் பகுத்தறிவுக்காரர்கள். கோவில் நிலத்தைக் குத்தகைக்கு எடுத்து கபளீகரம் செய்வதற்குத்தான் அவர்களுக்கு கோவில் வேண்டும். இக்கோவில்கள் ஒவ்வொன்றும் சுமார் முந்நூறு ஆண்டுகளிலிருந்து, ஆயிரத்து ஐந்நூறு ஆண்டுகள் வரையிலான சரித்திரத்தை தன்னுள் கொண்ட ஒரு கலைப்பொருள் என்பதை இவ்விரு சாராரும் அறிந்ததாகத் தெரியவில்லை" என்று தமது ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார். "நமது நாஸ்திக சமுதாயப் புரட்சியும், ஆஸ்திக ஆன்மீகப் புரட்சியும் ஒரே குணத்தவை" என்று அவர் இவை இரண்டையும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்களாக எடுத்துக் காட்டுவது மிகச் சரியே எனத் தோண்றுகிறது.

புத்தகம் முழுவதும் இப்படியான வருத்தங்களைப் பகிர்ந்து கொள்கிறார். " நாம் ஏன் நமது கலைகளை அழித்துக் கொண்டிருக்கிறோம்? நாம் ஏன் நமது சரித்திரத்தின் பெருமை தெரியாதவர்களாக இருக்கிறோம்" (நேற்றைய பெருமையும் இன்றைய வறுமையும் - 2002) என்ற கேள்வி அவரால் தொடர்ந்து தொடக்கத்திலிருந்து முடிவு வரை எழுப்பப் படுகிறது. இதை தமிழ்ச்சூழலில் மட்டும் அவர் முன்வைக்கவில்லை, மிர்ஸா காலிப்பின் இருப்பிடம் கழிப்பறைகளாக பயன்படுத்தப் படுவது குறித்து, பாமியான் புத்தசிலைகளை உடைக்கும் இஸ்லாமிய மதவெறி குறித்து, நாயகம் பிறக்குமுன்னர் உலகமே இருண்ட கண்டமாயிருந்தது என்று பிரச்சாரம் செய்யும் பாகிஸ்தான் டிவி குறித்து, ஈராக்கிய கலைப்பொருட்களை சின்னாபின்னமாக்கிய அமெரிக்க ஆணவ-அலட்சியம் குறித்து என்று விரிந்து கொண்டே போகின்றன அவரது கேள்விகள். இக்கேள்விகளை தமிழ்ச்சூழலை மையப் படுத்தி கேட்பதுதான் அவரோடு நம்மை அதீதமாய் ஒன்றுபடுத்துகிறது, நம்மையும் அதே கேள்வியை கேட்க வைக்கிறது.

வெ.சா பிறரைக் கேட்பது போலவே தம்மையும் அடிக்கடி கேள்வி கேட்டுக் கொள்வதுண்டு. பாலசந்திரன் சுள்ளிக்காடு சிவாஜி கணேசனை வியத்தலை, அந்த நாடகபாணி நடையை கண்டு புரியாமல் கேரள கவித்துவத்தில் இப்படியும் ஒரு அம்சம் உண்டோ என கேட்டுக் கொள்வது, கஜல் பாடகர் ஜகஜீத் சிங் விளம்பரப் படங்களுக்கு பெறும் லகரங்கள், நித்யஸ்ரீ பாப் இசையை விரும்புவது, மைக்கேல் ஜாக்சன் உட்கார்ந்து விட்டுப் போன கழிப்பறையை பெருமையுடன் காண்பிக்கும் பால்தாக்கரே(காட்டெருமையின் குளம்புகளுக்கிடையே சிக்கிய குழந்தை -2003) என்று அவர் புரியாமல் நம்மை நோக்கி வினவும் கேள்விகளும் ஏராளம்.

அவருடன் சேர்ந்து பிரயாணிக்கும் நாமும் இத்தகைய கேள்விகளை மெதுவாக கேட்க ஆரம்பிக்கின்றோம். விட்டல் ராவுடன் சேர்ந்து மகாபலிபுரத்தில் வயல் வெளிகளில் இறைந்து கிடக்கும், சாதாரண டூரிஸ்டுகள் அறியாத சிற்பங்களை, அவை சொல்லும் சரித்திரக் கதைகளை, கலைகளின் உன்னதத்தை எட்டிய நம் முன்னோர்களின் சாதனைகளை நாம் அலட்சியக் காலால் எட்டி உதைப்பதை அவர் கண்டு நம் முன் வைப்பதும் இதே கேள்விதான் - ஏனிந்த அலட்சியம். இக்கேள்வியை அவர் முன்வைக்கும்போது, நம்முள் தன்னிச்சையாகவே எழும் கேள்வி - ஒரு புறம் நமது பாரம்பர்யம் கவனிப்பாரின்றி அழிந்து கொண்டிருக்கும்போது, பிரும்மாண்ட திருவள்ளுவர் சிலையை நிறுவித்தானா நமது தமிழ்ப்பண்பாட்டை உயர்த்திக் காட்ட வேண்டும்?

தமிழர்களாகிய நாம், கடந்த சில நூற்றாண்டுகளாகவே கேள்வி கேட்பதை அஞ்சத்தகுந்த ஒரு தொற்று நோயின் அறிகுறியாக, ஒரு மனச்சிதைவின் வெளிப்பாடாகவே கண்டு வந்திருக்கிறோம். இந்நிலையில் வெ.சா தமிழ் அறிவுஜீவிகளால் தீண்டத்தகாதவராக ஒதுக்கி வைக்கப் பட்டதில் ஆச்சர்யப் படுவதற்கு ஏதுமில்லை. மடாதிபதி மனப்பான்மைதான் தமிழிலக்கிய உலகில் பிரபலமான தொற்று நோய். மடாதிபதியாகாமல் இருப்போர் குறைந்த பட்சம் வேறொரு மடாதிபதியின் வழிபாட்டாளர்களாக இருப்பர். சுதந்திரமாக இருப்போர் குறைவுதான். அப்படி இருப்பின் அது 'சரக்கின்மையாக' கருதப் படும் சூழல் இங்கு. அந்தக் காலத்தில் மூவேந்தர்களிக் வெண்கொற்றக் கொடையின் கீழிருந்த நாம், இன்று கட்சிக் கொடிகளின் கீழ், சித்தாந்த கோட்டைகளுக்குள் வசிப்பவர்களாக இருந்து வருகிறோம். நீ என்னுடன் இல்லாவிட்டால் எனது எதிரி என்கிற நிலைப்பாடுதான் இன்றைய தமிழ் இலக்கிய உலகின் பல்வேறு தீவுகளுள் நிலவும் நிலவரம்.

தலைவனுக்காக போர் புரிவது, உயிரிழப்பது புறநானூற்று வீரமாக கண்ட நம்மவர்கள் இன்று இருகூறாகப் பிரிந்து நிற்கிறோம். ஒரு கூறு தொண்டர் படை - தலைவனுக்காக தீக்குளிப்பது, ரசிகர் மன்றம் வைத்து முதற்காட்சிக்கு சூடம் காண்பிப்பது, நடிகைகளுக்கு கோவில் வைப்பது அவர்கள் கடித்துப் போட்ட ஆப்பிள்களுக்கு அலைவது என்றிருப்பது இந்த  பிரிவு. இன்னொன்றோ - அறிவு ஜீவிப் படை. இப்படை சூசகமாய் தமது வேலையைச் செய்யும். தலைவனின் கண்ணசைவில் கவிதை எழுதித் தள்ளும், ஆணித்தரமாக தொலைக்காட்சியில் வாதம் செய்யும், எதிரித் தலைவனை வசைபாடும், இலக்கியத்தை துணைக்கழைத்து எதிராளியைத் துவம்சம் செய்யும். முதற்பிரிவு அருகுவதற்கு வாய்ப்பிருக்கிறது - கல்வியும், வேலைவாய்ப்பும் பெருகுவதால். இரண்டாவது பிரிவோ தொடர்ந்து எண்ணிக்கையில் முன்னேறிக் கொண்டே இருக்கிறது. ஏறுமுகமே இதற்கு என்பதையே வெ.சாவின் இத்தனை ஆண்டுகால அனுபவம் காட்டுகிறது.

வசைகள் வெ.சாவுக்கு புதிதில்லை "இவன் யாருய்யா, இந்திரா பார்த்த சாரதியின் அடியாளா? வாலா? இல்லை முன்குடுமியா?" என்று (கொஞ்சம் மாறுதல்களுடன்) வினவிய ஜெயகாந்தனிலிருந்து (நீரளவே ஆகுமாம் நீராம்பல் -கசடதபற, 1971), சிஐஏ ஏஜண்டு என்ற குற்றச் சாட்டுகளிலிருந்து, இன்றைய அல்ட்ரா லேட்டஸ்ட் அச்சுறுத்தலான வக்கீல் நோட்டீஸ் வரை, இந்த அனுபவம் வெ.சாவுக்கு நிறையவே உண்டு.  அனுபவம் நிறைய என்பதால் வெ.சாவுக்கு உறைப்பதில்லை என்பதில்லை. ஒவ்வொரு தடையையும், மிரட்டலையும், சாவகாசமாக தன் பாணியில் எதிர்கொண்டு தொடர்ந்து தம் பணியை செய்து வருகின்றார். அதை நிரூபிப்பவை அவரது இந்த கட்டுரைகள். இவை யாவும் கடந்த இரண்டு வருட காலத்தில் வெ.சா நம்மிடையே பகிர்ந்து கொண்டவை. இவற்றில் அவர்  மனம் கசந்தவை, மகிழ்ந்தவை, வியந்தவை, ஏங்கியவை என பல வண்ணங்களில் வியாபித்து நிற்கின்றன அவரது சிந்தனைகளின் வெளித்தோற்றங்கள். புத்தகத்தைப் படித்து முடித்தவுடன் மெல்லிய குற்றவுணர்வும் நம்மையறியாமலேயே நம்முள் எழுகின்றது. வெ.சா சுட்டிக்காட்டுபவை வெறும் கலை சார்ந்த விஷயங்கள் மட்டுமல்ல, நமது மனோபாவம் பற்றியவை. நம்முன் அழிந்து கொண்டிருக்கும் நமது பாரம்பர்யக் கலைகளை, குப்பை மேடாகிக் கொண்டிருக்கும் நமது வாழ்வெளியை நாம் கண்டும் காணாததுமாய் இருக்க வேண்டுமா என்ற கேள்வி உள்ளே உறுத்துகிறது. இதுவே புத்தகத்தின், வெ.சாவின் வெற்றி. 
 
கலை உலகில் ஒரு சஞ்சாரம் - வெங்கட் சாமிநாதன்.

சந்தியா பதிப்பகம்,
77, 53வது தெரு,
அசோக் நகர்,
சென்னை - 600 083

விலை : ரூ. 100 /-

PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2005 Tamiloviam.com - Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |