மே 19 2005
தராசு
வ..வ..வம்பு
உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால்
டெலிவுட்
நூல் அறிமுகம்
மஜுலா சிங்கப்புரா
ஆன்மீகக் கதைகள்
மனம் போன போக்கில் மனிதன் போகலாமா?
நையாண்டி
உள்ளங்கையில் உலகம்
கவிதை
திரைவிமர்சனம்
தொடர்கள்
 
  முதல் பக்கம்
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
உள்ளங்கையில் உலகம் : இருப்பிடப் புதுப்பித்தல்
- எழில்
| Printable version |

இருப்பிட எண் : நாம் எப்படி ஒவ்வொரு இடத்துக்கும் ஒரு பெயர் கொடுத்து அவ்விடத்தை அப்பெயரால் அழைக்கிறோமோ அது போல, ஒரு ஊரில் , ஒரு வலையமைப்பின் அனைத்துத் தள நிலையங்களும் அமைந்திருக்கும் இடத்துக்கு ஒரு எண் கொடுக்கப்பட்டு அந்த எண்ணாலேயே அவ்விடம் ( தள நிலையம் ) அடையாளங்காணப் படுகிறது.
 
இருப்பிடம் பதிவு செய்த செல்பேசி அதே இடத்தில் இருக்குமா என்ன? நீங்கள் போகுமிடமெல்லாம் கூடவே வரும் பொருளல்லவா செல்பேசி! அப்படியானால் செல்பேசி செல்லுமிடமெல்லாம் தன்னுடைய இருப்பிடம் குறித்து வலையமைப்பிற்குத் தெரிவித்துக் கொண்டே இருக்குமா? உதாரணமாய் நீங்கள் உங்களது செல்பேசியினை சைதாப்பேட்டையில் இயக்குகிறீர்கள் எனலாம் . கடந்த இருவாரங்களிலும் நாம் பார்த்ததுபோல் தனது இருப்பிடத்தைச் செல்பேசி பதிவு செய்யும். நீங்கள் அன்றைய பொழுது முழுதும் சைதாப்பேட்டையைலே இருந்தாலும் , சைதாப்பேட்டையிலிருந்து புறப்பட்டு திருவல்லிக்கேணிக்குச் சென்றாலும் செல்பேசி அடிக்கடி வலையமைப்பினைத் தொடர்பு கொண்டு தனது இருப்பிடத்தைப் புதுப்பித்துக்கொண்டே இருக்கும் .ஒரு குறித்த கால இடைவெளியில் செல்பேசி தனது இருப்பிடத்தைப் புதுப்பித்துக் கொண்டே இருப்பதை காலவட்ட இருப்பிடப் புதுப்பித்தல் ( Periodic Location Update) என்று அழைக்கலாம்.

முடக்க நிலையில் இருந்தாலும் (Idle mode, அதாவது செல்பேசி அழைப்புகள் ஏற்படுத்தாமல் அமைதி காக்கும் நிலை ), செல்பேசி வலையமைப்பு அனுப்பும் ஒலிபரப்புத் தகவல்களைக் கவனித்துக்கொண்டே இருக்கும். அவ்வாறு வரும் தகவல்களுள் அத்தள நிலையம் எந்த இடத்தில் இருக்கிறது என்பதைக் குறிக்கும் இருப்பிட எண் (Location Area Identity)- ணும் அனுப்பப் படும் . செல்பேசி இருப்பிடப் பதிவு செய்யும் போது தள நிலையம் இரண்டு தகவல்களை அனுப்பும் என்று சென்ற பதிவில் பார்த்தோமல்லாவா- அவை ,தற்காலிக அடையாள எண் (Temporary Mobile Subscriber Identity, TMSI ) மற்றும் இருப்பிட எண். சரி, ஒரு குறிப்பிட்ட நேர இடைவெளியில் தொடர்ந்து இருப்பிடப் புதுப்பித்தல் எவ்வாறு நடைபெறுகிறது ?

தள நிலையம் தொடர்ந்து அலைபரப்பும் இருப்பிட எண்ணையும், இருப்பிடப் பதிவின் போது (Location Registration) தள நிலையம் அனுப்பிய இருப்பிட எண்ணையும் செல்பேசி ஒப்பிட்டுக் கொண்டே இருக்கும். செல்பேசி அதே இடத்திலோ அல்லது , எந்த தள நிலையத்தில் பதிவு செய்யப்பட்டதோ அத்தள நிலையத்தின் சுற்றளவிலேயே இருந்தால் இருப்பிடத்தில் எந்தவொரு மாறுதலுமில்லை. எனவே இருப்பிடம் புதுப்பிக்க மீண்டும் அவசியமில்லை . மாறாக, நீங்கள் வேறு பகுதிக்கு ( திருவல்லிக்கேணி ) சென்றுவிட்டீர்கள் எனலாம். அங்கிருக்கும் தள நிலையம் ஒலிபரப்பும் இருப்பிட எண் வேறாக இருக்கும் . செல்பேசி தன்னிடம் உள்ள எண்ணையும், திருவல்லிக்கேணியின் தள நிலையம் அலைபரப்பும் எண்ணையும் ஒப்பிட்டு , இரண்டும் வேறு வேறு என்று முடிவு செய்து , தான் வேறு இடத்துக்கு வந்து விட்டைதை உணர்கின்றது . பின்னர் மீண்டும் தள நிலையத்தைத் தொடர்பு கொண்டு தனது புதிய இடத்தைக் குறித்துக் கொள்ளும்படி கேட்கிறது. இந்தத் தகவல்கள் அனைத்தும் சென்ற பதிவிலே நாம் கண்ட தகவல் பரிமாற்றம் போல அமையும் .

இவ்வாறு அடிக்கடி இருப்பிடப் புதுப்பித்தல் செய்யும் அவசியமென்ன? அப்போதுதானே உங்கள் செல்பேசிக்கு வரும் அழைப்புக்களைச் சரியான முறையில் சரியான இடத்துக்கு அனுப்ப முடியும் ?

ஒன்றிற்கு மேற்பட்ட தள நிலையங்கள் ஒரே இருப்பிட எண்ணைக் கொண்டிருக்கலாம். அதாவது கிண்டி, சைதாப்பேட்டை பகுதிகளுக்கு ஒரே எண் வழங்கப்பட்டிருக்கலாம், அதே சமயத்தில் கிண்டியிலும் சைதாப்பேட்டையிலும் இரு தள நிலையங்கள் அமைக்கப்பட்டிருக்கும் . உங்களது செல்பேசி சைதாப்பேட்டையிலிருந்து கிண்டிக்கு வந்துவிட்டது என்றால் என்னவாகும்?  சைதாப்பேட்டையை விட்டு கிண்டி நோக்கி நகர ஆரம்பித்தவுடன், தள நிலையம் அனுப்பும் அலைபரப்புப்புத்திறன் (Power) குறைவதை உங்கள் செல்பேசி கவனிக்கும். எல்லாச் சமயங்களிலும் தன்னைச் சுற்றியுள்ள ஆறு தள நிலையங்களின் தகவல் திறனைச் செல்பேசி கணக்கிட்டுக் கொண்டே இருக்கும் என்று ஏற்கனவே பார்த்தோமல்லவா ? தற்போது செல்பேசி கிண்டியை நோக்கி நகர்வதால் , தற்போது தேர்ந்தெடுத்துள்ள சைதாப்பேட்டைத்தள நிலையத்தின் திறன் குறைந்து கிண்டியிலுள்ள தள நிலையத்தின் திறன் அதிகமாவதைச் செல்பேசி உணரும் . தள நிலையத்தின் திறனை வைத்து, தான் வேறு இடத்துக்கு வந்து விட்டதை உறுதி செய்து , புதிதாய்ப் புகுந்த இடத்தின் ( கிண்டி) தள நிலையத் தகவல்களைக் கவனிக்கின்றது. கிண்டியின் தள நிலையம் அலைபரப்பும் இருப்பிட எண்ணைச் செல்பேசி ஆராய்கிறது. சைதாப்பேட்டையிலும் இதே இருப்பிட எண்தான்! எனவே மீண்டும் இருப்பிடப் புதுப்பித்தல் செய்ய அவசியம் இல்லை . பின்னர் கிண்டியின் தள நிலையம் ஒலிபரப்பும் தகவல்களைத் தொடர்ந்து கவனிக்க ஆரம்பிக்கின்றது. இருப்பிட எண்ணைக் கொண்டுதான் செல்பேசி எங்கு உள்ளது என்று வலையமைப்பு முடிவு செய்கிறது .

அலையல் (Roaming) பற்றித் தற்போது பார்ப்போம். அலையல் திட்டங்கள் பலவகைப்படும். தேசிய அலையல் (National Roaming) என்றால் ஒரு நாட்டிற்குள் எங்கு சென்றாலும் உங்களுக்குச் செல்பேசிச் சேவை வழங்க உத்தரவாதம் . சர்வதேச அலையல் (International Roaming) என்றால் ஜி எஸ் எம் சேவை வழக்கத்திலிருக்கும் எந்த நாட்டிற்குச் சென்றாலும் உங்களது ஸிம் அட்டையைப் பயன்படுத்திப் பேசிக்கொள்ளலாம் . உங்களுக்கு எம்மாதிரியான அலையல் வழங்கப்பட்டிருக்கிறது என்ற விவரம் முதன்மை இருப்பிடப் பதிவேட்டில் (Home Location Register, HLR) குறித்து வைக்கப்பட்டிருக்கும். வெவ்வேறு நாடுகளில் இயங்கும் செல்பேசிச் சேவையாளர்கள் தங்களுக்குள் ஒப்பந்தம் செய்து கொள்வர் . அந்த அடிப்படையிலேயே பிற நாட்டைச் சேர்ந்த / பிற வலையமைப்பைச் சேர்ந்த செல்பேசிகள் ( ஸிம் அட்டைகள்) தங்கள் நெட்வொர்க்கிடம் சேவை கேட்கையில் சேவை வழங்கப்படுகிறது அல்லது மறுக்கப் படுகிறது .

சரி நீங்கள் வேறு ஊருக்கு அல்லது வேறு மாநிலத்துக்கு / நாட்டுக்குச் செல்கிறீர்கள் . அங்கு உங்களது சேவை வழங்குனர் இல்லை. உங்களிடம் அலையல் வசதி உண்டு எனில் அந்த இடத்திலிருக்கும் ஏதாவது ஒரு சேவை வழங்குனரிடம் உங்களது சேவையாளர் கட்டாயம் ஒப்பந்தம் செய்திருப்பார் . வேறு ஊருக்குச் சென்றவுடன் உங்கள் செல்பேசி முதலில் தனது நெட்வொர்க்கினைத் (Home network) தேடும். தேடினாலும் கிடைக்காதே! தேடிப் பார்த்து இல்லை என்று தெரிந்தவுடன் அங்கு இருக்கும் மற்ற செல்பேசி வலையமைப்புகள் ஒவ்வொன்றாய்த் தேர்ந்தெடுத்து தன்னைப் பதிவு செய்யும்படி கேட்கும் . இவ்வாறு ஏதாவது ஒரு "அன்னியன்" தன்னிடம் அனுமதி கேட்டவுடன் அந்த நெட்வொர்க் தன்னிடமுள்ள தகவல்களைக் கொண்டு (அதாவது இந்தச் செல்பேசியின் சேவை வழங்குனர் தனது சேவையாளரிடம் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளாரா , அப்படியே ஒப்பந்தம் இருந்தாலும் குறிப்பிட்ட இந்தச் செல்பேசிக்கு அலையல் உரிமம் தரப்பட்டுள்ளதா என்று ) அலையல் உரிமையைச் சரிபார்த்துப் பின் உங்களது செல்பேசிக்கு அனுமதி அளிக்கும். அவ்வாறு ஏதும் அலையல் ஒப்பந்தம் இல்லையேல், சேவை கேட்ட செல்பேசியிடம் "மன்னிச்சுக்கோ நண்பா, அனுமதி இல்லே" என்று நிராகரித்து விடும். அப்படி நிராகரித்து விட்டாலும் "தன் முயற்சியில் மனம் தளராத" விக்கிரமாதித்தன் போல் , அங்கிருக்கும் மற்ற நெட்வொர்க்குகள் அனைத்திலும் அனுமதி கேட்கும். அங்குள்ள எந்த நெட்வொர்க்கிலும் உங்களுக்கு அலையல் வசதி இல்லையேல் " வலையமைப்பு இல்லை" (No Network) என்ற தகவல் உங்கள் செல்பேசியின் திரையில் தெரியும் .
இந்த நிகழ்வுகள் எல்லாம் தானாக

(Automatic) நடந்துவிடும். அப்படியும் உங்களுக்குத் திருப்தி இல்லயா ? செல்பேசியில் "வலையமைப்பைத் தேர்ந்தெடுக்க " (Select Network) என்றிருக்கும் ஒரு பட்டி (menu) -யைத் தேர்ந்தெடுங்கள். குறிப்பிட்ட இடத்தில் இயங்கும் எல்லா வலையமைப்புகளையும் செல்பேசி பட்டியலிடும். நீங்கள் அவற்றுள் ஏதாவது ஒரு நெட்வொர்ர்கைத் தேர்ந்தெடுத்தால், செல்பேசி அந்த வலையமைப்பில் அனுமதி கேட்கும் . அனுமதி வழங்குவதும் மறுப்பதும் நெட்வொர்க்குகள் செய்து கொண்டுள்ள ஒப்பந்தத்தைப் பொறுத்தது.

உங்கள் செல்பேசிக்கு வெளியூர் / வெளிநாட்டு வலையமைப்பு இடம் கொடுத்தவுடன், உங்கள் செல்பேசியின் இருப்பிடம் அந்த வலையமைப்பின் வருகை இருப்பிடப் பதிவேட்டில் (Visiter Location Register , VLR) பதிவு செய்யப்படும் . பதிவு செய்தவுடன் உங்களது சேவை வழங்குனரின் வலையமைப்பைத் (Home network) தொடர்பு கொண்டு " உங்காளு ஒருத்தர் இப்போ எங்க நெட்வொர்க்-ல இருக்கார் , அவருக்கு எதும் அழைப்பு வந்தா இந்தப் பக்கம் திருப்பி விடுங்க" என்று சொல்லி விடும் . இவ்வாறு உங்கள் செல்பேசியின் இருப்பிடம் உங்களது சேவை வழங்குனருக்குத் தெரியப்படுத்தப் படுகிறது. உங்களது இருப்பிடம் பற்றிய தகவல் தெரிந்தால்தானே உங்கட்கு வரும் அழைப்பை நீங்கள் தற்போது பதிவு செய்து கொண்டிருக்கும் வலையமைப்பிற்கு அனுப்ப முடியும்!

உங்களை யார் அழைத்தாலும், உங்களது செல்பேசி எண்ணைக் கொண்டு, அந்த அழைப்பு (நீங்கள் தற்போது வேறு நெட்வொர்க்கில் அலையல் செய்து கொண்டிருந்தாலும்) உங்களது சேவை வழங்குனருக்கே தெரியப்படுத்தப் படுகிறது . பின்னர் உங்களது நெட்வொர்க் அந்த அழைப்பை தற்போது நீங்கள் அலையல் செய்து கொண்டிருக்கும் வலையமைப்பிற்குத் திருப்பி அனுப்புகின்றது. இனி வரும் பதிவுகளில் அழைப்பு ஏற்படுத்தும்போதும் (Outgoing calls) அழைப்பைப் பெறும்போதும் (Incoming calls) பரிமாறிக் கொள்ளப்படும் தகவல்களைத் தெரிந்து கொள்வோம்.

PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2005 Tamiloviam.com - Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |