Tamiloviam
மே 21 2009
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
கட்டுரை : இனி இலங்கைத் தமிழர்கள் ?
- மீனா [feedback@tamiloviam.com]
  Printable version | URL |

விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் இலங்கை ராணுவத்தினரால் கொல்லப்பட்டார்.  அவரது மகன் சார்லசும் பிற புலிதளபதிகளும் கொல்லப்பட்டுள்ளார்கள். இலங்கையில் விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்டு விட்டதாகவும், போர் முடிந்ததாகவும் அதிபர் ராஜபஷே அறிவித்துள்ளார். மேலும் போர்பகுதியில் சிக்கியிருந்த மக்கள் எந்த காயமும் இன்றி பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் பாதுகாப்பான இடங்களில் தற்காலிக குடியிருப்பு அமைக்கப்பட்டு தங்க வைக்கப்பட்டுள்ளார்கள் என்றும் இலங்கை அதிபர் தெரிவித்துள்ளார்.

இதன்மூலம் 1983ம் ஆண்டு முதல் இடைவிடாது நடந்துவந்த இலங்கைத் தமிழ் மக்களின் ஆயுதமேந்திய விடுதலைப் போராட்டம் இறுதியாக முறியடிக்கப்பட்டிருக்கிறது. ஒரு இனத்தின் இருபத்தைந்தாண்டுகளுக்கும் மேலான போராட்டம் மகத்தான தோல்வியில் முடிவது பற்றிய வேதனை மனதை அழுத்துகிறது. அதைவிட அழுத்தும் சோகம் - இனி ஈழத்தமிழர்களின் கதி ?

1975 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இவ்வமைப்பானது இலங்கை அரசுகளின் தமிழர் தொடர்பான கொள்கைகளால் விரக்தியுற்ற பல இளைஞர்களை கவர்ந்து வந்தது. தொடக்கத்தில் இலங்கை காவல் துறையினர், மற்றும் உள்ளூர் அரசியல்வாதிகள் போன்ற இலங்கை அரசின் இலக்குகள் மீது சிறிய அளவிளான தாக்குதல்களை நடத்தி வந்தனர். 1975 ஆம் ஆண்டு யாழ் நகர முதல்வர் ஆல்பிரட் துரையப்பா சுட்டுக்கொலைச் செய்யப்பட்டது புலிகளால் செய்யப்பட்ட முக்கிய தாக்குதலாக கொள்ளப்படுகிறது. முதலில் பிற தமிழீழ இயக்கங்களுடன் இணைந்திருந்த புலிகள் 1986 ஆம் ஆண்டு முதல் தனித்து செயல்பட ஆரம்பித்தது.

முதலில் இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கமாக உருவாகிய விடுதலைப்புலிகள் அமைப்பு பின்னர் பயங்கரவாத அமைப்பாக மாறியது. உல்ளூரில் ஏகப்பட்ட கொலைகளைச் செய்திருந்தாலும் இந்தியாவுடன் நட்புறவையே தொடர்ந்திருந்தனர் புலிகள். ஆனால் 1991ல் தமிழகத்தில் ராஜீவைக் கொன்றதன் மூலம் இந்தியாவின் விரோதியாகவே மாறினர் புலிகள். உலக நாடுகள் பலவற்றிலும் தடை செய்யப்பட்ட புலிகள் அமைப்பு தொடர்ந்து செய்துவந்த அரசியல் கொலைகள் அவர்களை இனப்போரளிகள் என்பதிலிருந்து தீவிரவாதிகள் என்று மாற்றியது.

வேறு எந்த ஆட்சியிலும் இல்லாத உக்கிரத்துடன் ராஜபக்சே தலைமையிலான அரசு அமைந்தபோது புலி எதிர்ப்பு போர் துவங்கியது. கடந்த 3 மாதமாக புலிகளுக்கு இறங்கு முகமாகவே இருந்துவந்தது.  இதன் உச்சகட்டம்தான் இன்று புலித்தலைவர், தளபதிகள் என அனைவரும் கொல்லப்பட்டனர் என்று வெளிவரும் செய்தியும் அவர்கள் வசம் இருந்த பகுதிகளை இலங்கை ராணுவம் கைபற்றியுள்ளதும்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மூன்றிலொரு இலங்கை நிலப்பரப்பினை ஆண்ட புலிகள் ஏன் இன்று எலியானார்கள் ? உலக அளவில் ஏன் அவர்களது கூக்குரல் எடுபடவில்லை ? புலிகளை எதிர்க்க உலக அளவில் நாடுகள் ராணுவ ஆயுத உதவிகளை ஏன் இலங்கை அரசுக்கு வழங்கினார்கள் ? யார் செய்தது சரி - யார் செய்தது தவறு ? இதையெல்லாம் ஆராய இது நேரமில்லை.

பிரபாகரன் தான் புலித்தலைவர் - அவர் தான் ராஜீவைக் கொன்றார் - புலிகளை எங்களுக்குப் பிடிக்காது - அதனால் தான் இலங்கைத் தமிழர் விவகாரத்தில் வாயை மூடிக்கொண்டிருக்கிறோம் என்றெல்லாம் சொல்லாமல் சொல்லும் இந்தியத் தலைவர்களே!! இனியாவது மனம் இரங்குங்கள்.. புலிகளைப் பிடிக்கிறோம் என்ற போர்வையில் லட்சக்கணக்கான மக்களைச் சந்தடியில்லாமல் கொன்று குவித்துக்கொண்டிருக்கிறது இலங்கை ராணுவம்.. போதிய மருத்துவ வசதி இல்லாமல், உண்ண உணவில்லாமல் அப்பாவி மக்கள் கொத்து கொத்தாக மடிந்து கொண்டிருக்கிறார்கள் அங்கே.. இனியும் இந்தியா அப்பாவி மக்களுக்கு ஆதரவாக  குரல் கொடுக்காமல் - வேண்டிய உதவிகளை மனதார செய்யாமலிருந்தால் காலம் நம்மை மன்னிக்காது.

தனி ஈழம் அமைத்துதராவிட்டாலும் பரவாயில்லை - அவர்களது வாழ்வாதார உரிமைகளை மீட்டுக்கொடுக்க தேவையான முயற்சிகளை இந்திய அரசு செய்யத்தான் வேண்டும். நினைத்ததை சாதித்து விட்ட மகிழ்சியில் திளைக்கும் ராஜபக்சேவும், அவருடன் சேர்ந்து கொக்கரித்துக்கொண்டிருக்கும் சிங்களவர்கள் நம்மவர்களுக்கு எந்தவித உதவியையும் செய்யமாட்டார்கள் - நாம் தான் செய்யவேண்டும்.

தமிழக அரசியல்வாதிகளே - உங்கள் சுயநலனைக் கொஞ்சம் தள்ளிவைத்துவிட்டு அழிந்து கொண்டிருக்கும் ஒரு இனத்திற்காக ஒருமனதாக குரல் கொடுங்கள்.. வேண்டிய உதவிகளைச் செய்யத் தூண்டுங்கள்.. உண்டியல் வைத்து நிதி சேர்த்தால் மட்டும் போதாது - சேர்த்த பணம் சரியாகச் செலவழிக்கப்படுகிறதா என்று பாருங்கள்.. முடிந்தால் உங்கள் சார்பில் நல்லவர்கள் யாரையாவது இலங்கைக்கு அனுப்பி நிவாரணப்பணிகளை மேற்கொள்ளுங்கள்.

இலங்கை மக்களை பகடைக்காய்களாக வைத்து அரசியில் செய்ய முயன்ற நம்மூர் அரசியல்வாதிகளுக்கு உரிய பாடம் புகட்டியவர்கள் நம் மக்கள்.. இந்திய அரசு தற்போது இலங்கைத் தமிழர்களுக்கு உதவி செய்யாவிட்டால் இந்த அரசுக்கு எப்படி பாடம் சொல்லிக்கொடுக்க வேண்டும் என்பதை நன்கறிவார்கள் நம் மக்கள்.

oooOooo
                         
 
மீனா அவர்களின் இதர படைப்புகள்.   கட்டுரை பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2008 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |