மே 26 2005
தராசு
வ..வ..வம்பு
மஜுலா சிங்கப்புரா
மனம் போன போக்கில் மனிதன் போகலாமா?
புதிய தொடர்
துணுக்கு
உள்ளங்கையில் உலகம்
டெலிவுட்
சிறுகதை
திரையோவியம்
அமெரிக்க மேட்டர்ஸ்
திரைவிமர்சனம்
கார் ஓட்டலாம் வாங்க
அடடே !!
கவிதை
தொடர்கள்
 
  முதல் பக்கம்
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
உள்ளங்கையில் உலகம் : அழைப்பு ஏற்படுத்தல்
- எழில்
| Printable version |

 
முடக்க நிலையிலிருந்து (Idle mode) இயக்க நிலைக்கு ( Active mode) , செல்பேசி எப்போது மாறுகின்றது? எவரையேனும் அழைக்க எண்ணி அவரது தொலைபேசி அல்லது செல்பேசி எண்ணை அழுத்தி , அழைக்க (Call) என்னும் பட்டியை (menu) நீங்கள் தேர்ந்தெடுத்தவுடன் செல்பேசி இயக்க நிலைக்கு மாறுகின்றது. நீங்கள் அழைத்த எதிர்முனையில் மணியடித்து, அவர் "ஹலோ" சொல்வதற்கு முன் என்னென்ன தகவல்கள் செல்பேசிக்கும் தள நிலையத்திற்குமிடையே பரிமாறப் படுகின்றன என்று இந்தப் பதிவில் பார்ப்போம்.

வழக்கம் போல, "தகவல் அனுப்ப எனக்கு ஒரு நேரத்துண்டு அல்லது ஒரு தடம் வேண்டும் " என்று செல்பேசி ஆரம்பிக்கும். தள நிலையமும் வழக்கம் போல ஒரு நேரத்தைச் செல்பேசிக்கு வழங்கி அந்த நேரத்துண்டைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறது . பின்னர் தனக்கு ஒதுக்கப் பட்ட நேரத்தைப் பயன்படுத்தி, செல்பேசி தகவல்களைப் பரிமாறிக்கொள்ளத் துவங்குகிறது . முதலில், எதற்காக இந்த நேரத்துண்டைக் கேட்டுப் பெற்றோம் என்று தள நிலையத்துக்குத் தெரிவிக்கவேண்டுமல்லவா ? அதனால் அச்செய்தியைத் தள நிலையத்துக்குச் சொல்கிறது "நான் ஒரு அழைப்பு ஏற்படுத்த வேண்டும் " என்று அந்தத் தகவல் இருக்கும். இத்தகவலுக்கு "சேவை கேட்கும் தகவல்" (Service Request) என்று பெயர். அழைப்பு ஏற்படுத்த வேண்டுமெனில் செல்பேசி தனது அடையாளத்தைத் தள நிலையத்துக்கு மீண்டும் தெளிவு படுத்த வேண்டும். முன்பு செல்பேசி தன் இருப்பிடத்தைப் பதிவு செய்தபோது தன்னை உறுதிப்படுத்திக்கொண்டது (Authenticate) நினைவிருக்கிறதா?அதேபோல் மீண்டும் ஒருமுறை இந்த உறுதிப்படுத்தும் நிகழ்வு செல்பேசிக்கும் தள நிலையத்திற்குமிடையே நடத்தப்படுகிறது . இந்த நிகழ்வின் முடிவில் செல்பேசியின் நம்பகத்தன்மை மீண்டும் உறுதி செய்யப்படுகிறது.

அடுத்ததாக, இருப்பிடப் பதிவின் போது நிகழ்த்திய "மறையீட்டுத் தகவல் " (Ciphering Request)செயல்கள் மீண்டும் நிகழ்கின்றன . ஒவ்வொரு முறை செல்பேசிக்கும் தள நிலையத்திற்கும் தகவல் பரிமாற்றம் நிகழ்கையில் இந்த இரு செயல்களும் (Authentication and Ciphering) நிகழ்த்தப்படுதல் மிக அவசியமாகும். செல்பேசி, தள நிலையம் அனுப்பிய மறையீட்டுத்தகவலுக்கு மறுமொழி அளிக்கின்றது , அதற்கு "மறையீட்டுப் பதில்தகவல் " (Ciphering Response) என்று பெயர்.

பின்னர் செல்பேசி தள நிலையத்துக்கு அனுப்பும் தகவல், "அழைப்பு அமைப்புத் தகவல் " (Call Setup Message) எனப்படுகிறது. இந்தத் தகவலில்தான் நீங்கள் எந்த எண்ணை அழைத்தீர்களோ அந்த எண் தள நிலையத்துக்கு அனுப்பப் படுகிறது.தள நிலையம் அந்த எண்ணைத் தளக் கட்டுப்பாட்டு நிலையத்துக்கு அனுப்புகிறது . பின்னர் முதன்மை இருப்பிடப் பதிவேட்டில் உங்களுடைய பயனாளர் சேவைகள்(Subscription details) சரிபார்க்கப் படும் (அதாவது அழைத்த எண் வெளியூர் எண் எனில் அந்த வசதி(STD) உண்டா என்றெல்லாம் சரிபார்த்து). உங்களுக்கு அவ்வசதி இல்லையேல் "இந்த வசதி உங்கள் செல்பேசியில் இல்லை" என்ற பதிவு செய்த தகவல் தரப்பட்டு உங்கள் அழைப்புத் துண்டிக்கப்படும் .

சரி, உங்களுக்கு அந்த வசதி உண்டு எனில் மேற்கொண்டு என்னவாகும்? நீங்கள் அழைத்த எண்ணைத் தொடர்பு கொள்ள செல்பேசி வலையமைப்பின் இறுதி அங்கமான இணைப்பகம் (Mobile Switching Center) முயற்சிகள் மேற்கொள்ளும். நீங்கள் அழைத்த எண் மற்றொரு செல்பேசியா அல்லது தொலைபேசியா என்றெல்லாம் சோதித்து, சரியான இடத்துக்கு அழைப்பு ஏற்படுத்த முயற்சி செய்வது இணைப்பகத்தின் வேலை . இதற்கிடையே செல்பேசிக்கு, தள நிலையத்திலிருந்து "அழைப்பு ஏற்படுத்த முயற்சிகள் நடக்கிறது " எனும் தகவலும் (Call Proceeding message) அனுப்பப்படும். சில சமயங்களில் நீங்கள் அழைப்பு ஏற்படுத்துகையில், அழைப்பொலி (Ring tone)கேட்பதற்கு முன் உங்களுக்கு "பிப் பிப் " என்ற சப்தம் கேட்கலாம். மேற்சொன்ன தகவல்தான் அந்த ஒலிக்குக் காரணம் .

அடுத்ததாகத் தள நிலையம் செல்பேசிக்கு அனுப்பும் தகவல் "போக்குவரவுத் தட வழங்கல்" (Traffic Channel Assignment) எனப்படும் தகவலாகும். இதுவரை அனுப்பிய தகவல்கள் எல்லாம் குறிப்புத் தகவல்கள் தான் (Singalling message). இனிமேல் , அழைப்பு ஏற்பட்டவுடன் அத்தடத்தில் பேச்சு (voice) பரிமாறிக்கொள்ளப்படும். அதாவது செல்பேசிக்கு தள நிலையம் வழங்கிய நேரத்துண்டில் இதுவரை அழைப்பு ஏற்படுத்த வேண்டி தகவல்கள் பரிமாறிக்கொள்ளப் பட்டன . அழைப்பு ஏற்படுத்திய பின் நாம் பேசும் பேச்சு அதே நேரத்துண்டில் பரிமாறிக்கொள்ளப் படவேண்டும் என்று தள நிலையம் செல்பேசிக்குத் தெரியப்படுத்தும் தகவல் இதுவாகும். இத்தகவல் கிடைத்தவுடன் செல்பேசியும் "சரி, இனிமேல் வரும் தகவல்கள் பேச்சுத் தடம் என அறிகிறேன் " என்று தள நிலையத்துக்குப் பதில் தகவல் அனுப்பும் (Assignement complete).

இப்போது நாம் அழைத்த எண் என்ன செய்கிறதென்று பார்ப்போம். அழைத்த எண் வேறொரு சம்பாஷணையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தால் உங்களுக்கு " நீங்கள் அழைத்த எண் உபயோகத்திலுள்ளது , சிறிது நேரம் கழித்து மீண்டும் தொடர்பு கொள்ளவும் "என்று ஒரு பெண்குரல் பாட்டுப் பாடும். அழைக்கப்பட்ட அந்த எண் வேறேதும் அழைப்பில் ஈடுபடாமல் ஓய்வாக இருந்தால் அந்த எண்ணுக்கு அழைப்பொலி அனுப்பப் பட்டிருக்கும் . நீங்கள் அழைத்த எண்ணில் அழைப்பொலி கேட்டவுடன், உங்களுக்கும் அது தெரியப்படுத்தப்படும் . தள நிலையம் அனுப்பும் இத்தகவலுக்கு அழைப்பு அறிவித்தல் (Call Alerting) எனப்பெயர் . இத்தகவல் உங்களுக்கு வந்தவுடன் தான் எதிர்முனையில் மணியடிக்கும் "கிர்ரிங் கிர்ரிங் " சத்தம் உங்கள் செல்பேசியின் ஒலி பெருக்கியில் ஒலிக்கப்படுகிறது.

நாம் அழைத்தவர் தொலைபேசியை எடுத்து விட்டார், அப்பாடா ஒரு வழியாய்த் தொடர்பு ஏற்படுத்தப்பட்டு விட்டது. "இணைப்பு ஏற்படுத்தப்பட்டு விட்டது" (Connect ) என்றொரு தகவலைத் தள நிலையம் அனுப்பும், அத்தகவல் கிடைத்தவுடன் செல்பேசியும் அதைப் பெற்றுக்கொண்டு " சரி, நான் பேச்சைத்தொடங்குகிறேன்" என்று கூறி மறுமொழி (Connect Acknowledge) எனுப்பும். அவ்வளவு தான் "ஹலோ, நான் ....... பேசுறேன்" என்று கூறி நீங்கள் பேச்சை ஆரம்பிக்க வேண்டியது தான்.

ஆக ஒரு அழைப்பு ஏற்படுத்து முன் பதினான்கு வகையான குறிப்புத்தகவல்கள் செல்பேசிக்கும், தள நிலையத்துக்குமிடையே அனுப்பப் படுகின்றன. பேசி முடித்து அழைப்பைத் துண்டிக்கிறீர்கள். அப்போதும் சில குறிப்புத்தகவல்கள் செல்பேசிக்கும் தள நிலையத்துக்குமிடையே அனுப்பப் பெறும். அழைப்பு முடித்து நீங்கள் இணைப்பைத் துண்டித்தவுடன் " இணைப்பைத் துண்டித்துவிடவும்" (Disconnect) எனும் தகவல் செல்பேசியிலிருந்து தள நிலையத்துக்கு அனுப்பப்படும். அத்தகவல் பெற்ற தள நிலையம் "சரி, உனக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் நேரத்துண்டை விட்டுவிடு " ( Release) என்று சொல்லி மற்றொரு தகவல் அனுப்பும். இறுதியாக, செல்பேசியும் தள நிலையத்துக்கு " நேரத்துண்டை விடுவிக்கிறேன், அவ்வளவுதான்" என்று சொல்லி மற்றொரு தகவல் ( Release Complete) அனுப்பும். அதன்பின் செல்பேசி இயக்க நிலையிலிருந்து மீண்டு , முடக்க நிலைக்குத் திரும்புகிறது.
செல்பேசிக்கு வரும் அழைப்பு (Incoming calls)  பற்றி அடுத்த வாரம் காண்போம்.

PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2005 Tamiloviam.com - Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |