Tamiloviam
மே 31 2007
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
பேட்டி : எழுத்தாளர் ஜெயமோகனுடன் ஒரு மின்காணல்
- திருமலை கோளுந்து [golundhu1979@yahoo.com]
| | Printable version | URL |

எங்குமே பெண்களுக்கு என்று தனி வரலாறு இல்லைதான். ஏனெனில் எங்கும் பெண்கள் ஆளவில்லை. இனிமேல் எழுத வேண்டியதுதான்.

அபாரமான மனத்திறமை கொண்டவர்களுக்கு அதை முழுக்கப் பயன்படுத்தும்படி ஊடகம் ஒன்று அமைந்தாக வேண்டும். இல்லாவிட்டால் அன்றாடவாழ்க்கை மீது கொள்ளும் அலுப்பே அவர்களை அபாயகரமானவர்களாக மாற்றி விடும். மனித மனங்களை ஒரு இலக்கியவாதி, படைப்பாளி, விமர்சகர், ஆய்வாளர் எப்படி எதிர்கொள்கிறார் என்பதற்கு மேற்சொன்ன கருத்தை சொல்லலாம். அக்கருத்துக்குச் சொந்தக்காரர் இலக்கியவாதியான ஜெயமோகன்.

மனித வாழ்க்கையின் அடிப்படைகளை நோக்கிய, அந்தரங்கமான, உணர்ச்சிபூர்வமான தேடலைக் கொண்ட சிறுகதைகளை படைப்பவர் என்றும், வேகமான கதையோட்டத்துடன், நாவலுக்குரிய விரிவான சித்தரிப்பும் கொண்ட குறுநாவல்களை படைப்பவர் என்றும் பாராட்டப்படுபவர். நாவல், குறுநாவல், சிறுகதை எழுத்தாளர், விமர்சனம், சிறந்த கட்டுரையாளர் என்று அனைவராலும் பாராட்டப்படும் ஜெயமோகன் அவர்களை இ- நேர்காணலுக்கு அனுகிய பொழுது தனது பல பணி சுமைகளுக்கு மத்தியில் மகிழ்ச்சியோடு சம்மதம் அளித்தார். தமிழ் இலக்கிய உலகம் தவிர கேரள இலக்கிய உலகிலும் பெரிதும் மதிக்கப்படும் இந்தப் படைப்பாளி நாகர்கோவில் இருந்து இயங்குகிறார். திருமணமாகி அன்புக்கு ஒன்று, ஆசைக்கு ஒன்று என்று இரண்டு (ஆண், பெண்) குழந்தைகளுக்கு தந்தை. ஒரு தாய்க்கு குழந்தையுடன் உள்ள உறவு உயிரியல் சார்ந்தது. ஆதாரமானது. அவள் உடலின் ஒரு பகுதி அக்குழந்தை. ஆனால் தந்தை அத்தொடர்பை தானே உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்ற கருத்தை ஆழமாக கொண்டிருப்பவர். இனி............


தமிழோவியம் :- உங்களுடைய வாழ்க்கை எப்படிப் பட்ட வாழ்க்கை. தேர்ந்தேடுக்கப்பட்ட வாழ்க்கையா? நிர்ணயிக்கப்பட்ட வாழ்க்கையா? இரண்டிற்கும் இடைப்பட்டதா?

யாருடைய வாழ்க்கையும் தேர்ந்தெடுக்கப்பட்டது அல்ல. தேர்வுக்கான வாய்ப்புகள் மனிதர்களுக்கு குறைவே. அதேசமயம் முற்றிலும் நிர்ணயிக்கப்பட்ட வாழ்க்கை என்றும் ஒன்று இல்லை. நிர்ணயிக்கப்பட்ட ஒரு தளத்துக்குள் தன் தேர்வுகள் மூலம் வாழ்க்கையை நாமும்சேர்ந்தே தீர்மானிக்கிறோம்

என் இளவயதிலேயே நான் எழுத்தாளன் ஆகவேண்டியவன் என்ற எண்ணம் எனக்குள் உருவாகி விட்டது-- எழுத்தாளன் என்றால் என்ன என்று தெரிவதற்குள்ளாகவே. என் அம்மா அதை எனக்குள் உருவாக்கினாள். அது அவள் கனவு. அக்கனவின் நனவாக்கமே நான். என் வாழ்க்கையில் நான் அடைந்த அடிகள் -- அம்மாவின் தற்கொலையும் அதில் ஒன்று -- என்னை வடிவமைத்தன. தேடல் நிறைந்த மனத்துடன் அரசியல் சமூக சேவை துறவு என பல தளங்களில் அலைந்திருக்கிறேன். பின்னர் ஓர் உச்ச கணத்தில் தற்கொலையின் முனையில் நான் கண்டுகொண்டேன் என் பணி எழுதுவதே என.

Jayamohanஇப்போது அது எனக்குள் உறுதியாகிவிட்டிருக்கிறது. எழுதுவதே எனக்கு மிக எளிமையான விஷயம். நான் சிறப்பாகச் செய்யக்கூடிய ஒரே விஷயம். எழுத்தாளன் என்பதனால் மட்டுமே நான் வாழ்க்கையை  வாழத் தகுதிப்படுத்திக் கொள்கிறேன். எழுதுவதே என் தவம்

ஆகவே இன்றைய என் வாழ்க்கை நானே தீர்மானித்துக் கொண்டதுதான். இத்தீர்மானத்திற்கு வந்த பின் எனக்கு தனிமையும் தத்தளிப்பும் இல்லை -- ஆகவே துயரங்களும் இல்லை

தமிழோவியம் :- ஒரு எழுத்தாளனின் சமூகப் பணியாக நீங்கள் எதனை கருதுகிறீர்கள்? எழுத்தாளர்களுக்கு சமூகப் பணிகள் இருப்பதாக நீங்கள் நினைத்தால், "அதனை எழுத்தாள சமூகம் முழு ஆளுமையோடு செய்கிறதா?

எழுத்தாளனுக்கு எழுத்தாளனாக உள்ள சமூகக் கடமை உண்மையுடன் எழுதுவது என்பதே. தன் அக ஆழம் நம்புவதை மட்டுமே எழுதுவதும் அதில் சமரசம் செய்துகொள்ளாமல் இருப்பதும் மட்டுமே அவனிடம் இருந்து ஒரு சமூகம் எதிர்பார்ப்பது. அவ்வுண்மையை ஒருவேளை அச்சமூகச் சூழல் ஏற்றுக்கொள்ளாமல் போகலாம். அவ்வெழுத்தாளனின் வாழ்நாளுக்குள் அவ்வெழுத்துக்கு பயன் ஏதும் விளையாமல் போகலாம். ஒவ்வொருவருக்குள்ளு அவர்களுடன் அந்தரங்கமாக தீவிரமாக உரையாடியபடி இருக்கும் ஒரு குரல் உள்ளது. அதேபோல சமூகத்தில் செயல்படும் அந்தரங்கக் குரலே இலக்கியம்.

தனிமனிதனாக எழுத்தாளனுக்கு எத்தனையோ சமூகக் கடமைகள் இருக்கலாம். நல்ல குடிமகனாக, நல்ல குடும்பத்தலைவனாக பல தளங்களில் அவன் வாழ்கிறானே. அதில் எழுத்தாளனுக்கும் பிறருக்கும் வேறுபாடு இல்லை

தமிழோவியம் :- உங்களிடம் அன்று முதல் இன்று வரை விடாப்பிடியாக ஒட்டிக் கொண்டிருக்கும் கொள்கை வெற்றி அடைந்து வருகிறதா?

அன்றுமுதல் இன்றுவரை விடாப்பிடியாகத் தொடரும் கொள்கை என்னவென்றால் உண்மையாக எழுதுவது என்பதே. அது வெற்றி பெறுவது என் கையில்தான் உள்ளது. நான் உண்மையிலேயே நம்பாத , என் மனம் ஈடுபடாத எதையும் இதுவரை எழுதியதில்லை.

தமிழோவியம் :- 2002ம் ஆண்டு தீராநதியில், நீங்கள் எழுதிய '' வாழ்விலே ஒரு முறை '' கட்டுரை பகுதி விரும்பி படிக்கப்பட்ட தொடர். அத்தொடரில் இடம் பெற்ற, உங்கள் வீட்டு குட்டப்பன் இப்பொழுது எப்படி இருக்கிறது?

குட்டப்பன் இப்போது இல்லை. இரண்டு வருடங்களாக இரு நாய்கள் உள்ளன. ஹீரோ லாப்ரடார் ரெட்ரீ£வர் இனத்தைச் சேர்ந்தவர். மனிதக் கண்கள். கறுப்புப் பட்டுச் சருமம். குண்டான உடல். உருண்ட நீள வால். தொங்கும் உதடுகள். வாழ்க்கையைப்பற்றிய ஓர் மிதப்பான மதிப்பிடும் சகல உயிர்களிடமும் சமமான கருணையும் கொண்டவர். எழுபதுகிலோ வரை எடை இருந்தாலும் தன்னை ஒரு நாய்க்குட்டியாகவே எண்ணியிருப்பதை உடலசைவுகளில் காணலாம். எல்லாவற்றையும் ஒருமுறை மோந்துபாத்துவிடவேண்டும் என்பதில் ஆர்வம். உடலை கூடுமானவரை அசைக்கக்கூடாது என்பது வாழ்க்கைமுறையில் உள்ள சிறப்பம்சம்.

இன்னொருவர் டெட்டி. டாபர்மான் பின்சர் வகையைச் சேர்ந்தவர். முந்தையவருக்கு நேர் மாறு. எப்போதும் பரபரப்பு, நிலை கொள்ளாமை. உலகைப்பற்றிய நிரந்தரமான ஐயம். ஒல்லியான உடலும் ஆப்பு போன்ற முகமும் மான் போல கால்களும் கொண்டவர். எதையும் எவரையும் அருகே விடுவதில்லை. தினமும் ஓணான் பல்லி எலி வகையில் ஒன்றை கொன்று தன் எஜமான் புசிப்பதற்காக வீட்டு வாசலில் கொண்டுவந்து காணிக்கையாகப் படைப்பதில் அர்பப்ணிப்பு உண்டு. சூரிய உதயத்தை மொட்டை மாடிச்சுவரில் கைவைத்து ஆளுயரத்துக்கு எழுந்து நின்று பார்த்து ரசிப்பார்.

தமிழோவியம் :-  இந்திய பத்திரிக்கைத் துறை முன் எப்பொழுதும் இல்லாத அளவு தரம் தாழ்ந்து போய் விட்டது என்று வாஸந்தி அடிக்கடி குற்றம் சாட்டி வருகிறார். உங்கள் பார்வையில் அது சரியாக படுகிறதா?

பொதுவாழ்க்கையின் தரம் பற்றிய இம்மாதிரி குத்துமதிப்பான பேச்சுகளுக்கு பொதுவாக என்ன மதிப்பு என்று எனக்குப் புரிவதில்லை. நான் கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக என் நாவல் அசோகவனத்துக்காக நம் பண்டைய பதினேழாம் நூற்றாண்டு முதல் உள்ள ஆவணங்களை ஆராய்ந்து வருகிறேன். ஊழல், பாரபட்சம், சிபாரிசு போன்றவை சென்றகாலங்களில் இருந்ததன் பத்தில் ஒருபங்குகூட இன்று இல்லை என்பதையே நம் ஆவணங்கள் காட்டுகின்றன. குறிப்பாக பிரிட்டிஷ் ஆட்சி என்பது அதன் பிற்காலங்களில் முற்றிலும் ஊழலால் ஆன ஒன்றாக இருந்தது.ஒரு சராசரி பிரிட்டிஷ் அதிகாரி ஊழலால் லட்சக்கணக்காக சம்பாதிப்பதன் பொருட்டுதான் இந்தியாவுக்கே வருவது வழக்கம்.

இன்றும் தொடரும் நம் ஊழல் அமைப்பின் விதை பிரிட்டிஷ் இரயத்துவாரி நிலக்கணக்கெடுப்பின்போதுதான் ஊன்றப்பட்டது. அக்காலங்களில் அரசுகளில் வேலைபார்த்த இந்தியர்களே இன்றைய முதலாளிகளும் பணக்காரர்களுமாவர். உண்மையில் இந்தியாவில் பிராமணார்கள் முக்கியமான பொருளியல் சக்தியாக வந்ததும் இதன் மூலம்தான். அதற்குமுன் அவர்கள் சத்ரியர்களை அண்டி தானம் வாங்கிப்பிழைக்கும் வர்க்கமாகவே இருந்தார்கள்.

ஊழலும் பாரபட்சமும் சிபாரிசும் தவறு என்ற கண்ணோட்டமே இந்திய தேசிய மறுமலர்ச்சி உருவாக்கிய இலட்சியவேகத்தின் ஒரு பக்கவிளைவாக நம்மிடம் உருவான மதிப்பீடுகள். ஒரு மன்னன் அவன் வைப்பாட்டியின் தம்பியை அமைச்சனாகவும் மனைவியின் மைத்துனனை தளபதியாகவும் நியமிப்பது தவறு என்ற எண்ணமே நம்மிடம் இருந்தது இல்லை. வணிகர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு அதிகாரங்களையும் வணிக உரிமைகளையும் பட்டங்களையும் கொடுக்கும் முறை நம் மன்னர் காலம் முதல் பிரிட்டிஷ் காலம் வரை நீடித்த ஒன்று. இன்று நாம் லஞ்ச லாவண்யம் என்பது இதுதான். மக்கள் அனைவரும் சமம் என்ற எண்ணம் வந்த பிறகே லஞ்ச ஊழல் ஒரு தவறு என்ற எண்ணம் ஏற்படுகிறது. அது ஜனநாயகத்தின் பார்வை.

ஆகவே எதற்கெடுத்தாலும் நேற்று என்னவோ எல்லாம் உச்சநிலையில் இருந்தது, இப்போது வீழ்ச்சி அடைந்துவிட்டது என்று சொல்வது ஒன்று அறியாமை அல்லது  இழந்தவர்களின் அங்கலாய்ப்பு. எல்லா துறைகளையும் ஆக்ரமித்து இருந்தவர்கள் இதைசொல்கிறார்கள், அவர்கள் இருந்த இடங்களுக்கு இந்த தலைமுறையில் முதல்முறையாக வருபவர்கள் அப்படிச் சொல்வார்களா என்ன?

நூறுவருட இதழ்களை நான் கூர்ந்து நோக்கியிருக்கிறேன். இதழ்களில் வந்த முக்கியமான மாற்றம் தூய கருத்தியல் செயல்பாடு என்பதிலிருந்து விலகி அவை இப்போது வணிகமயமாகி தொழில்களாக மாறியுள்ளன என்பதே. தொழில் போட்டி, தொழில்களுக்கான கவற்சி மற்றும் பரபரப்புகள் அவற்றில் குடியேறியுள்ளன. இதை நான் வீழ்ச்சி என்று சொல்ல மாட்டேன், இயல்புமாற்றம் என்றே சொல்வேன்

வணிகம் மூலம் உருவாகும் தொழில்போட்டி மூலமே இன்றைய இதழ்களின் பல இயல்புகள் உருவாகியுள்ளன. நுகர்வோரை திருப்திப்படுத்த வேண்டியிருப்பதனால் இன்றைய இதழ்கள் தங்கள் கருத்தியலை விருப்பபடி வாசகர் மீது திணிக்க முடியாது. எல்லா தரப்பினருக்கும் உரிய விஷயங்கள் இதழ்களில் இருந்தாக வேண்டும். எந்தச் செய்தியையும் இன்று இதழ்களிடமிருந்து மறைக்க இயலாது. இதெல்லாம் மிக முக்கியமான மாற்றங்கள்.

நாற்பது ஐம்பது வருடம் முன்புள்ள விகடன் கலைமகள் இதழ்களைப் பாருங்கள், பிராமணர் அல்லாத சாதி ஒன்று தமிழகத்தில் இருந்தமைக்கான தடையங்களே இருக்காது. அன்றைய ஹிந்துநாளிதழ் எந்த விஷயங்களுக்கு முக்கியம் கொடுத்து எவற்றை மறைத்திருக்கிறது என்று பாருங்கள். இன்று ஜூனியர் விகடன் இதழில் வரும் கிராமத்து சாதியக்கொடுமைகள், மனித உரிமை மீறல்கள், கட்டைப்பஞ்சாயத்து ஊர்விலக்கு சிக்கல்கள், மூட நம்பிக்கைகள் அன்று இதைவிட எத்தனை மடங்கு இருந்திருக்கும்! 'பண்பட்ட' ஹிந்து ஒருவரி அவற்றைப்பற்றி எழுதியிருக்குமா?

ஹிந்து போன்ற 'தரமான' நாளிதழ்கள் மட்டும் இங்கே வந்துகொண்டிருந்தால் நம் வாழ்க்கையைப்பற்றி நாம் என்னென்ன அறிந்திருப்போம்? அதன் தாக்கரே, எமிலி புலாண்டி காலத்து ஆங்கிலநடையைப்படித்து சிலாகித்து, அது காட்டும் பொய்யான மிதப்பான சித்திரத்தை வாழ்க்கை என்று நம்பி 'குவாலிடி' பற்றி பேசுபவர்களுக்கு  தரவீழ்ச்சி கண்ணில் படலாம். எனக்கு வீச்சும் விரிவும் அதிகரித்திருப்பதாகவே படுகிறது. ஆம், குப்பைகள் உள்ளன. எந்த நுகர்வோர் பண்பாட்டிலும் குப்பைகள் வரும்-- என்னெனில் குப்பைகளுக்கும் நுகர்வோர் உண்டு. 

இந்திய இதழியல் ஆரோக்கியமாகவே உள்ளது. அதற்கான முக்கியமான  ஆதாரம் இதுதான், தன் மீதான எந்த அதிகாரக் கட்டுப்பாட்டையும் அது வேகத்துடன் எதிர்கொண்டு உடைத்து வருகிறது. இந்தியாவைச் சுற்றியுள்ள நாடுகளுடன் இந்தியாவை ஒப்பிட்டால் அது புரியும். இன்றைய இந்திய ஜனநாயகத்தில் மிக வலிமையான ஒரு தரப்பாகவே நம் இதழ்துறை உள்ளது.

தமிழோவியம் :-  மொழி, இன, மத பண்பாட்டு அடையாளங்கள் எல்லாம் இன்றைய காலக்கட்டத்தில் அவசியமற்றவை என சொல்பவர்களைப் பற்றி?

மொழி மத இனப் பண்பாட்டு அடையாளங்களை முற்றாகத்துறந்த மனிதர்களையே நாம் நம் மரபின் உச்சத்தில் வைத்து வழிபடுகிறோம். அவர்களை 'பரமஹம்சர்கள்' என்றும் 'சித்தர்கள்' என்றும் சொல்கிறோம்.

லௌகீகத்தில் வாழ்பவர்களுக்கு மொழியும் பண்பாடும் இனமும் தேவையாக உள்ளது. நூற்றாண்டுகளாக மேலான சகவாழ்க்கையை உருவாக்கும் பொருட்டு மூதாதையர் பயின்று பழகி அறிந்து அளித்துள்ள விழுமியங்களும் பழக்க வழக்கங்களும் இவற்றில் உறைந்துள்ளன. அவற்றை கைக்கொள்ளும் பொருட்டே நாம் அவற்றின் நீட்சிகளாக நம்மை உணர்கிறோம். அவை நமக்கு தேவையே. நான் என்னை தமிழன் என உணர்கையில் கணியன் பூங்குன்றனின் வள்ளுவனின் இளங்கோவின் பண்பாட்டின் வாரிசாக உணர்கிறேன். அது ஒருசெல்வம். அதை இழந்தால் வறுமைதான்.

ஆனால் எந்த அடையாளமும் எந்த மனிதனையும் முழுமையாக காட்டிவிடாது என்ற எண்ணமும் நமக்கு தேவை. ஏதாவது ஓர் அடையாளத்தில் முற்றாக தன்னைப் பொருத்திக் கொள்பவர்கள் தன்னை அதுவாக வரையறை செய்து கொள்கிறார்கள். அது அல்லாத பிறவற்றை வெறுக்கிறார்கள். அவ்வெறுப்பு காரணமாகவே தன் அடையாளங்களை மிகைப்படுத்திக் கொள்கிறார்கள். அதன் மூலம் மனதை கசப்பாலும் கோபத்தாலும் நிறைத்துக் கொண்டு வன்முறையை பரப்புகிறார்கள்.

அடையாளங்கள் நாம் வாழ்வதற்கு தேவை. அவற்றை துறப்பதன் மூலமே நம்மை நாம் கண்டடைய முடியும் என்று நம் மரபு நமக்கு கற்றுக்கொடுக்கிறது

தமிழோவியம் :-  நமது மரபு வழி வந்த பண்பாட்டுப் பொருட்களைச் சீரமைப்பது, அதனை பாதுகாப்பது போன்ற பணிகள் இந்தியாவில் மந்த நிலையிலேயே இருக்கிறது. ஆனால் மேலை நாடுகளில் அதனை ஒரு நுணுக்கமான பணியாக செய்து வருகின்றனர் என்ற குற்றச்சாட்டை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

உண்மைதான். கன்யாகுமரியில் கால்வைக்க முடியாமல் மலம் குவிந்து கிடக்கிறது. மலம் கழிப்பவர்கள் அந்தக்கடற்கரையை நம்பியே வாழும் கடைக்காரர்களும் குடும்பமும்தான். நமக்கு இன்னும் சரியான குடிமைப்பயிற்சி இல்லை. நாம் ஒரு நவீன சமூகமாக கூடிவாழ இன்னும் கற்றுக்கொள்ளவில்லை. அதன் விளைவே நம் மரபு குறித்த உதாசீனம்.

ஆனால் கோடிக்கணக்கான குழந்தைகள் பட்டினி கிடக்கும் தேசம் இது. பசித்து உதடு உலர்ந்த ஒரு குழந்தை தன்னைவிட பெரிய பாத்திரத்தை நீட்டி பெரிய கண்களால் பார்த்து யாசிப்பதைப் பார்க்கும் போது தோன்றும் இந்த மாபெரும் கலைப்பொருளை மண்ணில் மட்க விட்ட நாம் என்ன பாரம்பரியத்தை பாதுகாக்கவேண்டும் என்று. தமிழகம் எதைப்பிடித்து எதை முறித்து எப்படியாவது பொருளியல் ரீதியாக முன்னேறும் துடிப்பில் இருக்கிறது. முன்னேறியும் வருகிறது. அதுதான் முக்கியம்.

தமிழோவியம்- ஒரு நூலை விற்கும் தடம் தெரிந்தவர் எதையும் விற்கலாம். விற்க தடம் தெரியாதவர் எதையும் விற்க முடியாது என்று ஒரு முறை நீங்கள் சொல்லி இருக்கிறீர்கள். இந்த நிலைக்கு காரணமான காரணிகளைப் பற்றி சொல்ல முடியமா?

இன்று தமிழகம் பொருளியல் ரீதியான முன்னேற்றத்துக்காக அனைத்து வழிகளையும் பயன்படுத்துவதில் தீவிரமக இருக்கிறது. குழந்தைகள் வெறியுடன் படித்து மின்னணு மற்றும் கணிப்பொறித் துறைகளில் புக முயல்கிறார்கள். இந்த ஓட்டத்தில் சாரமான கலாச்சார தேடலுக்கு இடமில்லை. ஆகவே நல்ல நூல்களை தேடவோ பயிலவோ இங்கு அதிக வாய்ப்பில்லை. ஆகவே எது அதிகமாக முன்வைக்கபப்டுகிறதோ அது விற்கிறது.

பொருளியல் வளர்ச்சியை பண்பாட்டு வளர்ச்சி பிந்தொடரும். அப்போது இந்நிலை மாறக்கூடும்.
 
தமிழோவியம் :- அச்சு ஊடகத்திலும், இணைய தள ஊடகத்திலும் தீவிரமாக இயங்குபவர் நீங்கள்.  இந்த இரு பிரிவு வாசகர்களுக்கும் ஏதேனும் ஒற்றுமை, வேறுபாடுகள் உள்ளதா?

அச்சு ஊடகம் தமிழில் உள்ள சராசரி வாசகர்களை முன்னால் கண்டு வெளியிடப்படுகிறது. ஆகவே அங்கே தீவிரமான, ஆழமான விஷயங்களுக்கு இடமில்லை. மாற்று அச்சு ஊடகமான சிற்றிதழ்களில்தான் அவை இயங்கவேண்டியுள்ளது. அங்கு வரும் வாசகர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. ஆனால் அவர்கள் தீவிரமானவர்கள். நம் சமூகத்தின் சிந்திக்கும் சிறுபான்மையினர் இவர்களே.

இணைய ஊடகம் இன்னும் தன்னை உருவாக்கிக் கொண்டு நெறிகளை அடையவில்லை. ஆகவே கட்டற்று உள்ளது. தமிழில் உள்ள இணைய இதழ்கள் வலைப்பூக்கள் ஆகியவற்றை தொடர்ந்து படிப்பவன் நான். அவற்றில் மிகச்சிலவே பொருட்படுத்த தக்கவை. இணைய ஊடகங்களில் பொய்முகங்களே அதிகமும் தெரிகின்றன. இணையம் மூலம் நல்ல நூல்களுக்கு வரும் வாசகர்கள் மிகவும் குறைவு என்றுதான் பதிப்பாளர்கள் சொல்கிறார்கள். இலங்கை வாசகர்களை தவிர்த்தால் வெளிநாட்டு தமிழ் வாசகர்கள் விரல்விட்டு எண்ணக் கூடியவர்கள்தான். தமிழ்ச்சங்க ஆண்டு விழாவுக்கு குஷ்புவை தலைமைதாங்க கூப்பிடும் புத்திசாலிகளே இணையத்திலும் அதிகமாக இருக்கிறார்கள்.வணிக, தொழில் துறைகளில் போட்டிபோட்டு வேகமாக இயங்குபவர்கள் பொழுதுபோக்கவும் மன அரிப்புகளை தீர்க்கவும் உதவக்கூடிய ஒன்றாகவே இன்று இணைய ஊடகம் உள்ளது

தமிழோவியம் :- தஞ்சை பிரகாஷ் எழுதிய மீனின் சிறகுகள் நாவலை சில இலக்கியவாதிகள் தூக்கிப் பிடிக்கிறார்கள். அந்த நாவலை பற்றி உங்களின் கருத்து என்ன? பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட பெண்களை மையமாக கொண்டு அந்த நாவல் வந்திருந்தால் பிரகாஷ் பல பிரச்சினைகளை, எதிர்ப்புகளை சந்தித்து இருப்பார் இல்லையா?

தமிழில் பிராமணர்கள், தலித்துக்கள் மட்டுமே சுயவிமரிசனத்துடன் இலக்கிய ஆக்கங்களை உருவாக்கியுள்ளனர். முஸ்லீம்களில் தோப்பில் முகமது மீரான் விதிவிலக்காக ஆழமான சுயவிமரிசனத்துடன் எழுதியிருக்கிறார். ஆகவே அவர்களைப்பற்றி பிறர் எழுதினாலும் அதை ஏற்றுக் கொள்வார்கள். பிற்படுத்தப்பட்ட பிரிவினர் தங்கள் அடையாளங்களை வலுப்படுத்துவதிலும் அரசியல் அதிகாரங்களை உறுதிசெய்வதிலும் ஈடுபட்டிருக்கிறார்கள். ஆகவே அவர்கள் எழுத்தில் சுயவிமரிசனக் குரலே இல்லை. விமரிசனங்களைத் தாங்கும் பொறுமையும் இல்லை

மீனின் சிறகுகள் திறனில்லாமல் எழுதப்பட்ட ஒரு பாலெழுச்சியியல் [போர்னோகிரா·பி] நாவல். பாலெழுச்சியியலுக்கு நான் ஆதரவானவன். அது மனிதனின் அடிப்படையான மனநிலைகள் வெளிப்படும் ஒரு தளத்தில் ஆழமான விசாரணையை மேற்கொள்ளும் புனைவுமுறை. ஆல்பர்ட்டோ மொராவியோ முதல் ஹென்றி மில்லர் வரை நான் ரசித்துப் படித்த பாலெழுச்சியியல் படைப்புகள் பல உண்டு. பிரகாஷ் எழுதியதில் கலையம்சமோ நுண்ணிய நோக்கோ இல்லை. அது சாரு நிவேதிதா எழுதுவதைப்போல அபத்தமான பகற்கனவுகளை எழுதிவைக்கும் முதிரா முயற்சி மட்டுமே  

தமிழோவியம் :- பெண்களுக்குக்கென்று தனி வரலாறு இங்கு இல்லை என்று சொல்பவர்களை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

எங்குமே பெண்களுக்கு என்று தனி வரலாறு இல்லைதான். ஏனெனில் எங்கும் பெண்கள் ஆளவில்லை. இனிமேல் எழுத வேண்டியதுதான்.

தமிழோவியம் :- சிலர் தங்களை எழுத்தாளர்கள் என்று சொல்வதில் பெருமையடைகிறார்கள். சிலர் தங்களை இலக்கியவாதிகள் என்று சொல்வதில் பெருமையடைகிறார்கள். இரண்டிற்கும் உள்ள வேறுபாடுகள் பற்றி சொல்லுங்களேன்?

எழுத்தாளர்கள் எழுதுகிறார்கள். இலக்கியவாதிகள் இலக்கியம் படைக்கிறார்கள்.

தமிழோவியம் :- பிற்போக்காளர்களும், முற்போக்காளர்களும் அடிக்கடி மோதிக் கொள்கிறார்கள். இந்த மோதலினால் ஏதாவது நன்மை உண்டாகி இருக்கிறதா?

தெரியவில்லை. யார் பிற்போக்காளர் யார் முற்போக்காளர் என்று தீர்மானிப்பதில்தானே மோதலே நடக்கிறது இல்லையா?

தமிழோவியம் :- உடல் தேவையை ஆண் எழுதுகிறானே, வர்ணிக்கிறானே, நான் ஏன் எழுதக் கூடாது என்று கேள்வியை வைப்பது தனி மனிதத்துவம் சார்ந்த தீமையாக மாறிக் கொண்டே இருக்கிறது. அதனை உரிமை, சுதந்திரம் என்று சொல்லாதீர்கள் என்று கவிஞர் திலகபாமா தனது நேர்காணலில் சொல்லி இருக்கிறார். இந்த கருத்தில் தங்களுக்கு உடன்பாடு உண்டா?

எழுதுவதில் ஆண் பெண் என்ற பாகுபாடு இல்லை. எதையாவது எழுதக்கூடாது என்று சொல்வதிலும் எனக்கு உடன்பாடு இல்லை. நான் மலம் கழிப்பதைப் பற்றிக்கூட எழுதியிருக்கிறேன். நல்ல எழுத்து மனித மனமும் வரலாறும் செயல்படும் விதம் பற்றிய நுண்ணிய பதிவாக இருக்கும். அது ஒரு சமூகத்தின் ஆழ்மன வாக்குமூலம். அது தன்னைத்தானே கண்டடைவதற்கு உதவுவது.

உண்மையில் சமூகத்தீமை என்றால் ஆழ்ந்த வாசிப்போ கலை சார்ந்த கவனமோ இல்லாமல் வசவசவென்று திலகபாமா போன்றவர்கள் எழுதும் வெற்று வரிகள்தான். அதைவிட தீமை இலக்கியம் சார்ந்த எந்தவிதமான பரிசீலனைகளும் இல்லாமல் 'கவிஞர்' என்றெல்லாம் நீங்கள் சொல்வது.

தமிழோவியம் :- தீவிர எழுத்தை மட்டுமே நம்பி வாழ முடியவில்லை என்று பிரபஞ்சன் பல நேர்காணல்களில் சொல்லி இருக்கிறார். எழுத்தை நம்பியே நீங்கள், ஜெயகாந்தன் வாழ்ந்து வருகிறீர்கள். எழுத்தை நம்ப்¢ சிலர் வாழ்வதற்கும், சிலரால் வாழ முடியாததற்கும் எதாவது காரண, காரணிகள் இருக்கிறதா?

நான் எழுத்தை நம்பி வாழவில்லை. எனக்கு எழுத்தில் இருந்து கிடைக்கும் பணம் எழுதுவதற்கு தாள்,பேனா வாங்குவதற்கு கூட போதாது. நான் பி.எஸ்.என்.எல் நிறுவன ஊழியன்.ஜெயகாந்தனுக்கு சோறு போட்டது காங்கிரஸ் மேடைப்பேச்சும் சினிமாவும். நல்ல எழுத்தை நம்பி இங்கே வாழமுடியாது, காரணம் ஒரு நூல் ஒருவருடத்தில் ஆயிரம் பிரதிகள் இயல்பாக வாங்கப்படும் நிலை இங்கே இல்லை. அதற்குக் காரணம் இங்கே இலக்கியத்திற்கோ இலக்கியவாதிகளுக்கோ மதிப்பு இல்லை. ஏற்கனவே சொன்னதுபோல நம் நாட்டில் மெத்தப்படித்தவர்களுக்குக் கூட குஷ்புவும் ரசிகாவும்தான் தமிழ் பண்பாட்டிந் பிரதிநிதிகளாக தெரிகின்றது.  

தமிழோவியம் :- தமிழ் எழுத்தாளர்களுக்கு தேசிய, மாநில அளவில் விருது கிடைத்தால் அதனை பாராட்டும் பண்பு எழுத்தாளர்களிடையே இல்லை. மாறாக எரிச்சல், மவுனம் மட்டுமே எதிர்வினையாக வெளிப்படுகிறது என்று குற்றம் சாட்டப்படுவது பற்றி?

பாராட்டுவது, மனமார வாழ்த்துவது, சாப்பிட்டுவிட்டு மொய் எழுதிவிட்டு வருவது இதையெல்லாம் நாம் கல்யாணம் காதுகுத்துவிழாக்களின் போது செய்யலாமே. இலக்கிய விருது என்பது ஒரு இலக்கிய மதிப்பீட்டை பிரகடனம் செய்வதாகும். இந்தக் காலகட்டத்து படைப்புகளில், படைப்பாளிகளில் இதுவே முக்கியமானது என்று அறிவிக்கப்படுகிறது. அந்த மதிப்பீட்டை ஏற்கிறோமா மறுக்கிறோமா என்பதே முக்கியம். மறுத்தால் அதை அறிவிப்பதே நேர்மையான செயலாகும். இல்லையேல் பேசாமல் இருந்துவிடலாம். போலியாக வாழ்த்துவது இலக்கியவாதி செய்யும் வேலை அல்ல. ஜவ்வாதுபொட்டு வைத்துக்கொண்டு இளிக்கும் தரகர்கள் மாமாக்கள் செய்யும் வேலை.

ஒருபரிசு வழங்கபப்டும் நிகழ்வில் பொதுமக்கள் இலக்கியவாதியை கவனிக்கிறார்கள். படைப்பை விமரிசிக்கவும் மதிப்பிடுகளை முன்வைக்கவும் உதவக்கூடிய முக்கியமான தருணம் அது. அதைப் பயன்படுத்திக் கொண்டு இலக்கியவாதிகள் தன் இலக்கியமதிப்பீடுகளை மக்களிடம் கொண்டு செல்வதுதான் உலகமெங்கும் உள்ள இலக்கிய வழக்கமாகும்.

தமிழோவியம் :- முன்பு ஒரு முறை திரு. மு.கருணாநிதியை, அவர் ஒரு  இலக்கியவாதியே அல்ல என்று ஆனந்த விகடனில் சொல்லி இருந்தீர்கள். அது பெரிய சர்ச்சைகளை கிளப்பியது.  அந்தக் கருத்தில் தற்பொழுதும் உறுதியாக இருக்கிறீர்களா?

என் விமரிசனக் கருத்துக்கள் முழுமையான வாசிப்பு மற்றும் ஆய்வின் விளைவாக முன்வைக்கப்படுபவை.

தமிழோவியம் :- இலக்கிய ரீதியாக பார்த்தால் கவிதை என்பதை ஒட்டிய பின்னர் தான் வசன நடை வந்து இருக்கிறது. இந்தச் சூழலில் வசன நடை இன்று கவிதையை பின்னுக்குத் தள்ளி விட்டதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

கவிதை [பொயம்] என்று நீங்கள் செய்யுளைச் [வெர்ஸ்] சொல்கிறீர்கள் என்று நினைக்கிறேன். இரண்டும் வேறுவேறு. கவிதை உரைநடையிலும் அமைய இயலும். சங்க காலக் கவிதைகள் நெகிழ்வான செய்யுள் வடிவில் உரைநடைபோலத்தான் உள்ளன. சிலப்பதிகாரம் 'பாட்டு இடையிட்ட உரையுடைச் செய்யுள்' தான். பழங்காலத்தில் இசையுடன் பாடவும் தாளத்துடன் சொல்லி நினைவில் நிறுத்தவும் செய்யுள் வடிவம் தேவைபப்ட்டது. அன்றைய கவிதைகள் செவிநுகர்கனிகள் எனப்பட்டன. இன்றைய கவிதைகள் கண்ணால் வாசித்து கருத்தால் நுகரபப்டுபவை. ஆகவே வசனமே போதும்

தமிழோவியம் :- சமயமும், இலக்கியமும் மனதிற்கு ஆறுதல்  அளிப்பவைகள் என்று சிலர் சொல்கிறார்கள்.ஆனால் நமது இலக்கியவாதிகள் சமயத்தை தன்னோடு சேர்த்துக் கொள்வதை ஒரு பாவம் போல் போலி வேஷம் போடுகிறார்கள். இந்த வேஷங்கள் பற்றி?

நேர்மையான ஆத்திகமும் நேர்மையான நாத்திகமும் மகத்தானவை. நான் மதிக்கும் மனிதர்களில் இருசாராருமே உள்ளனர். ஆத்திகமோ நாத்திகமோ போலித்தனமே அசிங்கமானது.

தமிழோவியம் :- இயக்குனர் பாலாவின் நான் கடவுள் படத்திற்கு வசனம் எழுதிய அனுபவம் பற்றி? அப்படத்தை பற்றி விசேஷமான தகவல்களை சொல்லுங்களேன்?

arya 'நான் கடவுள்' பற்றி அது வெளிவந்த பிறகுதான் ஏதாவது சொல்லவேண்டும் என்பது திரையுலக நெறி. நான் கடவுள் ஒரு மூர்க்கமான பிரம்மாண்டமான படம், பாலாவின் பிற படங்களைப்போல.  என்னைப்பொறுத்தவரை ஒரு சினிமா பல காட்சித்துணுக்குகள் ஒன்றாகச்சேர்ந்து துளித்துளியாக உருவாவதை அருகே நின்று கவனிப்பது மிகுந்த வியப்பூட்டும் விஷயமாகவே உள்ளது. காசியில் ஐம்பதுநாள் படப்பிடிப்பு முடிந்தது. எடுத்த பகுதிகள் மிகத் தீவிரமாக வந்துள்ளன.

திரையுலகில் நான் அடைந்த நட்புகள் என் இலக்கிய உலக  நட்புகள் அளவுக்கே ஆழமானவையும் ஆத்மார்த்தமானவையும் ஆகும். உதவி இயக்குநரும் நண்பருமான சுரேஷ் கண்ணன்,  பாலா, ஒளிப்பதிவாளர் ஆர்தர் வில்சன், ஆரியா ஆகியோருடனான நட்பு படத்துக்கு வெளியேயும் நீள்கிறது. ஒருவேளை படம் இத்தனை தாமதமாக அமைவதுகூட அதற்குக் காரணமாக இருக்கலாம். ஜூன் முதல்நாள் மீண்டும் அடுத்தகட்ட படப்பிடிப்பு துவங்குகிறது.

| |
oooOooo
                         
 
திருமலை கோளுந்து அவர்களின் இதர படைப்புகள்.   பேட்டி பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2007 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |