Tamiloviam
மே 31 2007
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
திரைவிமர்சனம் : நான் அவன் இல்லை
- மீனா [feedback@tamiloviam.com]
| | Printable version | URL |

பிற மொழிப்படங்களை ரீமேக் செய்யும் இக்காலத்தில் பழைய தமிழ் படமான நான் அவன் இல்லை படத்தை மீண்டும் தமிழிலேயே ரீமேக் செய்துள்ளார்கள். கதை என்னவோ பல வருடங்களுக்கு முன்பு வந்த அதே கதைதான். ஆனால் காட்சி அமைப்புகளில் காலத்திற்கு ஏற்ப மாற்றங்களைச் செய்துள்ளார் இயக்குனர் செல்வா..

Jeevan, Namithaபல பெண்களை ஏமாற்றி திருமணம் செய்துகொண்டு அவர்களிடமிருந்து பணத்தையும் சுருட்டிய மோசடிப் பேர்வழியான ஜீவன் ஒரு விபத்தில் படுகாயமடைய - அவரைத் தேடிக்கொண்டிருக்கும் போலீஸ் மருத்துவமனையில் அவரைப் பார்த்ததும் உடனே கைது செய்து குற்றவாளிக் கூண்டில் ஏற்ற -  ஜீவன் தன் பெயர் அண்ணாமலை என்றும் நான் அவன் இல்லை என்றும் திரும்பத் திரும்பச் சொல்கிறார்.

தொழிலதிபர் விக்னேஷ் என்கிற பெயரில் என்னை ஏமாற்றி என்னைத் திருமணம் செய்து கொண்டார் - மேலும் என் அண்ணனிடமிருந்து கல்யாணத்தின்போது லட்சக்கணக்கில் பணம் பெற்றுக்கொண்டார் என்று மாளவிகா ஜீவன் மீது குற்றம் சாட்ட - நான் அவன் இல்லை என்று மறுக்கிறார் ஜீவன். அதைத் தொடர்ந்து மாதவ மேனனாக நடித்து என்னை ஏமாற்றித் திருமணம் செய்து கொண்டு என் நகைகளை எடுத்துக்கொண்டு ஓடிவிட்டார் என்று ஜோதிர்மயி புகார் சொல்ல - அதற்கும் நான் அவன் இல்லை என்று மறுக்கிறார் ஜீவன். இவர்களைத் தொடர்ந்து கிருஷ்ணரின் அவதாரமாக நடித்து என்னை ஏமாற்றி கல்யாணம் செய்து கொண்டதோடு மட்டுமல்லாமல் லட்சக்கணக்கில் நகைகளையும் சுருட்டி விட்டார் என்று கீர்த்தி சாவ்லா கூற - அதையும் நான் அவன் இல்லை என்று மறுக்கிறார் ஜீவன். முடிவாக ஷாம் பிரசாத் என்ற பெயரில் நடித்து என்னையும் ஏமாற்றினார் ஜீவன் - ஆனால் நான் அவரை உண்மையாகக் காதலிக்கிறேன் அவரை மணந்து கொள்ளத் தயாராக இருக்கிறேன் என்று புதுக்குண்டைத் தூக்கிப்போடுகிறார் பெரிய தொழிலதிபரான நமிதா. இதற்கும் பதிலாக தன் வழக்கமான பல்லவியான நான் அவன் இல்லை என்பதையே திரும்பப் பாடுகிறார் ஜீவன்.

இந்த நால்வரின் கதை இப்படி என்றால் வழக்கை விசாரிக்கும் நீதிபதி லட்சுமியின் மகள் ஸ்நேகாவும் ஜீவனிடம் ஏமாந்த ஆசாமிதான். மற்றவர்களைப் போல காதலில் விழாமல் ஒரு பெரிய ஓவியராக ஜீவனை நினைத்து ஓவியம் வாங்கி பணத்தை மட்டும் ஜீவனிடம் தொலைத்தவர் ஸ்நேகா. மற்ற பெண்களைப் போல உணர்சிவசப்படாத - ஒரு வழக்கறிஞரான தன்னையே ஏமாற்றிய ஜித்தன் என்ற ஆர்வத்திலேயே இந்த வழக்கின் போக்கை உன்னிப்பாக கவனிக்க ஆரம்பிக்கிறார் ஸ்நேகா.

ஒவ்வொரு முறையும் நான் அவன் இல்லை என்று மறுக்கும் ஜீவன் தன் பெயர் அண்ணாமலை என்றும் தான் ஓர் அப்பாவி - இந்தப் பெண்கள் ஏமாந்தது அவரவர் பேராசையால் தான் தவிர அதற்கும் தனக்கும் சம்பந்தமில்லை என்கிறார். இருக்கும் குழப்பம் போதாதென்று ஜீவனின் அண்ணன் தான் என்று கூறிக்கொண்டு வந்து சேர்கிறார் லிவிங்ஸ்டன். ஜீவன் தன் சொந்த தம்பி என்று அவர் சொல்வதை நம்பவும் முடியாமல் - நம்பாமல் இருக்கவும் முடியாமல் தவிக்கிறது காவல் துறை. லிவிங்ஸ்டன் கேட்டுக்கொண்டதற்காக டி.என்.ஏ டெஸ்ட் எடுக்க - இருவரும் அண்ணன் தம்பி இல்லை என்று முடிவு ஜீவனுக்கு சாதகமாக வருகிறது.

சந்தேகத்தின் பலனை ஜீவனுக்கு வழங்கி அவரை விடுதலை செய்கிறா நீதிபதி லட்சுமி. உண்மையில் ஜீவன் யார்? அவர் பெண்களை ஏமாற்றியது உண்மையா அல்லது பொய்யா?  என்பது தான் கிளைமாக்ஸ்.

ரொம்பவும் அலட்டிக்கொள்ளாத நடிப்பு ஜீவனுக்கு. வில்லத்தனம் நிறைந்த நாயகனாக நடிக்க ரொம்பவும் பொருத்தமான முகம்.  ஒவ்வொருவராக வந்து குற்றம் சொல்லும் போது நான் அவன் இல்லை என்று சொல்லி கடைசிவரை சாதிப்பது சூப்பர். சண்டை மற்றும் பாடல்காட்சிகளில் ஓக்கே..

ஏமாறும் நாயகிகள் வரிசையில் முதலிடம் மாளவிகாவிற்கு.. லண்டன் வாழ் இந்தியர் என்றதும் என்ன ஏது என்று கொஞ்சம் கூட விசாரிக்காமல் கழுத்தை நீட்டுகிறார். அடுத்ததாக ஜோதிர்மயி.. முதல்வர் தங்கை மகன் என்ற பொய்யை நம்பி ஜீவனுடன் ஓடி வந்து வாழ்க்கையைத் தொலைக்கிறார். சற்று லூசுத்தனமான கதாபாத்திரம் கீர்த்திக்கு. ஜீவனை பகவான் கிருஷ்ணரின் அவதாரம் என்று எண்ணி ஏமாறுகிறார். ஏற்கனவே விவாகரத்தான பெண்ணாக - ஒரு மிகப்பெரிய கம்பெனியின் முதலாளியாக நமிதா. ஜீவனிடம் வகயாக ஏமாந்தும் தொடர்ந்து அவர் மீது அன்பு செலுத்தும் ஒரே கதாபாத்திரம் நமிதா தான்.  மாளவிகா, ஜோதிர்மயி, கீர்த்தி ஆகியோர் எல்லாவற்றையும் பறிகொடுத்துவிட்டு கோர்ட்டில் ஆவேசமாக கத்தும்போது பரிதாபம் வரவில்லை அவர்கள் மீது. மாறாக ஜீவன் கூறுவதைப் போல இப்பெண்கள் அனைவரும் தமது பேராசையால்தான் ஏமாந்தார்கள் என்ற எண்ணமே மேலோங்குகிறது. கவர்ச்சி புயல்களுக்கு நடுவே பூவாய் ஸ்நேகா. சட்டக்கல்லூரி மாணவியான தன்னை ஓவியத்திற்கு பதிலாக வெற்று பிரேமை கொடுத்து ஏமாற்றிய ஜீவனின் சாதுர்யத்தை ரசிக்கும் நபராக வலம் வருகிறார்.

இந்த வழக்கை விசாரிக்கும் போலீஸ் அதிகாரியாக ராஜ்கபூர். ஜீவன் வகையாக மாட்டினார் என்று நினைக்கும் போது அவர் சாதுர்யமாக தப்பிக்க நொந்து போகிறார் ராஜ்கபூர். விடாமல் ஜீவனின் கடந்தகால வாழ்க்கையைப் பற்றி துப்புத்துலக்கி அவர் யார் என்பதை வெளிச்சத்திற்கு கொண்டுவரும் காட்சி அருமை. நீதிபதியாக லட்சுமி. பெரிதாக சொல்ல ஒன்றும் இல்லை. லிவிங்ஸ்டன், மயில்சாமி ஆகியோரும் படத்தில் உள்ளார்கள்.

இன்றைய காவல் துறையில் முன்னேறிவிட்ட தொழில்நுட்பங்கள் போன்ற வசதிகள் இருந்தும் இவ்வளவு பெரிய மோசடி செய்யும் ஒருவனை போலீஸால் கண்டுபிடிக்க முடியவில்லை என்பதை நம்ப முடியவில்லை. ஆனாலும் போலீஸின் விஞ்ஞான முறைகளையெல்லாம் ஊதி தள்ளுகிற ஜீவன் அதற்காக செய்யும் வேலைகளை இன்னொரு காட்சியில் ஓரளவிற்கு காட்டி லாஜிக்கை கொஞ்சம் காப்பாற்றுகிறார் இயக்குனர்.

யு.கே செந்தில்குமாருடைய ஒளிப்பதிவும், விஜய் ஆன்டனியின் இசையும் படத்திற்கு பலம். மொத்தத்தில் பழைய படத்தை புது மெருகுடன் தர செல்வா செய்த முயற்சிகள் ஓரளவிற்கு வெற்றி பெற்றுள்ளது. இனி இந்த மாதிரி நிறைய தமிழ் டூ தமிழ் ரீமேக் படங்களை நாம் பார்க்கலாம்.

| | | | |
oooOooo
                         
 
மீனா அவர்களின் இதர படைப்புகள்.   திரைவிமர்சனம் பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2007 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |