Tamiloviam
மே 31 2007
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
கட்டுரை : புளியங்கொட்டை வாழ்க்கை
- திருமலை கோளுந்து [golundhu1979@yahoo.com]
| | Printable version | URL |

வாழ்க்கை என்பதற்கான வரையறைகளை வகுப்பது அவ்வளவு சுலபமானது அல்ல. அது ஒரு காட்டாறு போல. சில சமயங்களில் அதன் பாதை நீண்டு கொண்டே போகிறது. சில சமயம் அற்ப ஆயுளில் முடிந்து விடுகிறது என்று தத்துவஞானி ஓஷோ சொல்லி இருக்கிறார். மனித வாழ்க்கை என்பதே முன்னேற்றம், மிக முன்னேற்றம், மிகவும் முன்னேற்றம் என்ற தத்துவத்தை உலகம் தூக்கிப் பிடிக்கிறது. எல்லாருடைய வாழ்க்கையும் அப்படி அமைகிறதா? குழந்தைப் பருவம் முதல் முதிய பருவம் வரை வறுமையை மட்டுமே பார்த்துக் கொண்டிருப்பவர்களின் வாழ்க்கை எப்படி இருக்கிறது. அந்த வாழ்க்கையை அவர்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதை பார்ப்பதே ஒரு தீவிர ரணம். வாழ்ப்பவர்கள் அந்த ரணத்தை எப்படி எதிர்கொள்கிறார்கள்?

Puliyankottai Muniyammalபுளியங்கொட்டை இருக்கா...... புளியங்கொட்டை...... என்று உரத்த குரலில் சத்தமிட்டுக் கொண்டே கிராமத்துத் தெருக்களில் வருகிறார் முனியம்மாள். பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த, 65 வயதான இவருக்கு நான்கு மகன்கள், இரண்டு மகள்கள். தாலிகட்டிய கணவன் உயிரோடு இல்லை. பெற்ற பெண் மக்கள் கணவர்களோடு போய் விட்டனர். மகன்கள் மனைவிகளோடு தனிக் குடித்தனம். குடியிருக்க ஒரு சிறு கூரை வீடு. சொத்துக்கள் என்று எதுவுமில்லை. சாப்பாட்டுக்கு என்ன செய்வது? வாழ்வதற்கு என்ன ஆதாரம்? 

கிராமங்களில் தமிழ் மாதமான பங்குனி மாதம் முதல் புளியம் பழம் வரத் துவங்கும். அதாவது கிராம மக்கள் புளியை கடைகளில் வாங்குவது கிடையாது. கிராமத்து மக்கள் புளியம்பழத்தை மொத்தமாக, குறைந்த விலைக்கு வாங்கி அதனை வெயிலில் காயப்போட்டு, அதனை தட்டி புளியம்பழத்தை தனியாக பிரித்து அதில் இருக்கும் கொட்டைகளையும் தனியாக எடுத்து விடுவார்கள். அப்படி தனியாக எடுக்கப்பட்ட புளியங் கொட்டைகளை தெருத் தெருவாக சென்று சேகரித்து, அதனை மொத்தமாக கொண்டு போய் ஒரு வியாபாரியிடம் போட்டு அதில் கிடைக்கும் பணத்தில் தான் எனது வாழ்க்கை போய்க் கொண்டிருக்கிறது. 

Puliyankottai Naali தன்னிடம் இருக்கும் நாலியைக் (கிராமத்தில் பொருட்களை அளக்கப் பயன்படும் பொருள்) கொண்டு அளந்து புளியங் கொட்டையை வாங்கிக் கொள்கிறார். ஒரு படி (ஒரு நாலி அளவு ஒரு படி) புளியங்கொட்டை இரண்டு ருபாய். இப்படி சிறுக சிறுக பல தெருக்களில் அழைந்து சேகரித்துக் கொண்டு அதனைக் கொண்டு போய் மொத்த வியாபாரிகளிடம் ஒரு படி புளியங் கொட்டையை மூன்று ரூபாய்க்கு கொடுக்கிறார். இதில் என்ன சிரமம் என்றால் புளியங்கொட்டைகள் அதிகம் சேர சேர அதனை எடுத்துச் செல்வது கடினம். மணலை மூட்டையாக கட்டித் தூக்கிச் செல்வது போல இதுவும். ஆனால் இவருக்கு இவை கடினமாக தெரியவில்லை என்கிறார்.

நாங்க சின்னப்பிள்ளையா இருக்கும் பொழுது இப்ப மாதிரி எல்லாம் படிப்பு, ஆடம்பரம் இல்லை. ஒரு வேலை சாப்பாட்டுக்கு மாடு மாதிரி உழைக்கணும். வாழ்க்கையில உழைச்சு வாழணும். அடுத்தவங்கட்ட கையேந்தியோ, அடுத்தவன் கைய எதிர்பார்த்தோ வாழக் கூடாதுனு என்னை பெத்தவங்க சொல்லுவாங்க. அது படித்தான் வாழ்ந்துக் கிட்டு இருக்கேன். தாலிகட்டுன புருஷன் நோகமா, மாமியார் நோகாமா அந்தக் காலத்துல நாங்க வேலை பார்ப்போம். அந்த முறை இப்ப இல்ல. ஏன் பார்க்கணும், எதுக்கு பார்க்கணும் என்ற கேள்விகள் எங்க காலத்தில கேட்கவில்லை. கேட்கவும் முடியாது. ஆனால் அந்த வாழ்க்கை கத்துக் கொடுத்தது என்னவென்றால் உழைப்பு, உழைப்பு, உழைப்பு. இந்த தள்ளாத வயதிலும் என்னை அந்த உழைப்பு தான் காப்பாற்றி வருகிறது. கட்டிய கணவன் இல்லை, பெத்த பிள்ளைங்க பாசமில்லை. ஒரு ஆட்டுக் குட்டி எப்படி தன்னுடைய குட்டிக்கு கண்ணும் கருத்துமா பால் கொடுத்து வளர்த்து விடுதோ அது மாதிரி 6 புள்ளைகளுக்கும் என்னுடைய மடுப்பால் கொடுத்து வளர்த்தேன். இன்னைக்கு அந்தப் புள்ளைங்க என்னை கை விட்டுடுச்சுங்க. ஆனால் இந்த உழைப்பு என்னை கைவிடல. ஆண்டவன்ட நான் கேட்பது எல்லாம். நோய் இல்லாத உடலைக் கொடு. உழைக்கிறதுக்கு தெம்பைக் கொடு என்பது தான். அது இருந்தாலே போதும் நாம விரும்புற வாழ்க்கை வாழலாம்.

என்னுடைய இந்த புளியங்கொட்டை வியாபாரம் முடிந்ததும் வேறு கூலி வேலைக்கு போவேன். ரேஷன் கடையில் கொடுக்கும் இரண்டு ரூபாய் அரிசியில் தான் சமையல். வாரத்துக்கு ஒரு நாள் சாம்பார். மற்ற நாட்களில் ரசம், துவையல் தான். இப்படி கஷ்டப்பட்டு, இந்த வயதிலும் எதற்காக நான் உழைக்கணும் என்றால் நாளை நான் செத்த பிறகு என்னை தூக்கிப் போட நாலு பேரு வரணும். அதற்கு செலவுக்கு பணம் தேவை. அந்தச் செலவும் என்னுடைய உழைப்புல வந்ததா இருக்கணும். அதுக்கும் சேர்த்து வைத்துக் கொண்டு வருகிறேன் என்று தீர்க்கமாக சொல்பவரின் கண்களில் சிறு கலக்கம்.

புளியங்கொட்டை இருக்கா.......... புளியங்கொட்டை என்று உரத்த குரலில் சொல்லிக் கொண்டே நகர்கிறார். அவர் மறைவதற்கு முன் அக்குரல் காற்றில் கலந்து கரைகிறது. இப்படியும் ஒரு வாழ்க்கை.

oooOooo
                         
 
திருமலை கோளுந்து அவர்களின் இதர படைப்புகள்.   கட்டுரை பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2007 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |