ஜூன் 02 2005
தராசு
கார்ட்டூன்
மனம் போன போக்கில் மனிதன் போகலாமா?
டெலிவுட்
உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால்
திரைவிமர்சனம்
உள்ளங்கையில் உலகம்
கவிதை
கார் ஓட்டலாம் வாங்க
ஆன்மீகக் கதைகள்
நையாண்டி
தொடர்கள்
 
  முதல் பக்கம்
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
உள்ளங்கையில் உலகம் : அழைப்புப் பெறுதல் - 1
- எழில்
| Printable version | URL |

உங்கள் செல்பேசி எண்ணை எவரேனும் அழைத்தால் அந்த அழைப்பு எவ்வாறு உங்கள் செல்பேசியை வந்தடைகிறது தெரியுமா?

இரண்டு நிலைகளில் இதை நாம் விளக்கலாம்.

ஒன்று: உங்கள் செல்பேசி உள்ளூரிலேயே , அதாவது சொந்த வலையமைப்பில் இருக்கிறது (Home Network) ;

இரண்டாவது :  நீங்கள் வேறு அயல் வலையமைப்பில்/அயல் நாடுகளில் அலையல்(Roaming) செய்துகொண்டிருக்கிறீர்கள் வகை ஒன்று: உள்ளூரில் செல்பேசி.

உங்களது செல்பேசி எண் 9840012345 எனலாம். உங்களது நண்பர் ஒருவர் இந்த எண்ணை அழைக்கிறார் என்போம் . அவர் செல்பேசி மூலம் அழைத்தால் இரண்டு வழிகள்; அவர் உங்களது வலையமைப்பைச் சேர்ந்தவராக இருக்கலாம் அல்லது வேறொரு வலையமைப்பைச் சேர்ந்தவராக இருக்கலாம் . உங்களது வலையமைப்பு எனில் அந்த அழைப்பை எளிதாய் உங்களுக்குத் தெரியப் படுத்தி விடலாம். " இந்த எண் (9840012345) நம்மாளு, உள்ளூர்தான் " என்று முடிவு செய்து, செல்பேசி இணைப்பகம் அந்த அழைப்பை வேறு எங்கும் அனுப்ப முயற்சி செய்யாமல் தனது நெட்வொர்க்கினுள்ளேயே உங்களது எண்ணைத் தேடும் முயற்சியில் இறங்கும் . உங்களை அழைத்தவர் வேறு நெட்வொர்க்கைச் சேர்ந்தவர் என்றால் , அவரது நெட்வொர்க் அழைப்பினைப் பொதுத் தொலைபேசி இணைப்பகத்திற்கு அனுப்பி விடும் . பொதுத் தொலைபேசி நிலையம் பின்னர் அந்த எண்ணை ஆராய்ந்து " இந்த எண் (9840012345) ஏர்டெல் சென்னைக்கு சொந்தமான எண்" எனத் தெளிந்து சென்னை ஏர்டெல் நெட்வொர்ர்க்கின் நுழைவாயில் இணைப்பகத்திற்கு (Gateway Mobile Switching Center) அந்த அழைப்பைத் தெரியப்படுத்துகிறது. உங்கள் எண்ணை அழைத்தவர் தொலைபேசியிலிருந்து (Land Line) உங்களை அழைத்திருந்தாலும் பொதுத் தொலைபேசி இணைப்பகம் வழியாகவே அந்த அழைப்பு குறிப்பிட்ட செல்பேசிச் சேவையாளருக்குத் தெரிவிக்கப்படும் .

ஆக வெளியிலிருந்து வரும் எல்லா அழைப்புகளும் செல்பேசி வலையமைப்பின் நுழைவாயில் இணைப்பகத்திற்கே முதலில் வந்தடையும். இந்த நுழைவாயில் இணைப்பகம் , "வலையமைப்பின் எந்த இடத்தில் செல்பேசி தற்போது பதிவு செய்யப்பட்டுள்ளது?" என்பதைத் தேடும் முயற்சியில் இறங்குகிறது . செல்பேசியின் தற்போதைய இருப்பிட நிலவரம் வருகை இருப்பிடப் பதிவேட்டில் (Visiter Location Register ) குறித்து வைக்கப்பட்டிருக்கும் என்று ஏற்கனவே பார்த்தோமல்லவா? அந்த வருகை இருப்பிடப் பதிவேட்டுடன் (முதன்மை இருப்பிடப் பதிவேட்டின் வழியாக, Via Home Location Register, HLR) தொடர்பு கொள்ளும் நுழைவாயில் இணைப்பகம் , செல்பேசி தற்போது எந்த இடத்தில் இருக்கிறது என்ற தகவலைக் கேட்டுப்பெறுகிறது. நினைவிருக்கிறதா, செல்பேசி வலையப்பிற்குள் ஒரு செல்பேசி அதன் தற்காலிக அடையாள எண்ணைக் கொண்டே (TMSI) குறிப்பிடப் படுமென்று?

வருகை இடப்பதிவேடு "நீங்கள் தேடும் செல்பேசி இந்த இருப்பிடத்தில் இருக்கிறது" என்று சொல்லி அந்த இடத்தின் இருப்பிட எண்ணை (Location Area Identity) நுழைவாயில் இணைப்பகத்துக்குக் கூறும் . நுழைவாயில் இணைப்பகம் , செல்பேசி தற்போது இணைக்கப்பட்டிருக்கும் இடத்திலுள்ள இணைப்பகத்துக்கு (Mobile Switching Center , MSC) அழைப்பைத் தெரிவிக்கிறது . இணைப்பகமும் தளக் கட்டுப்பாட்டு நிலையத்திற்கு( Base Station Controller,BSC) இந்தத் தகவலைத் தெரிவிக்கின்றது . ஒரு தளக்கட்டுபாட்டு நிலையத்தில் நிறைய தள நிலையங்கள் இணைக்கப்பட்டிருக்கும் என்று பார்த்தோம். அந்தக் குறிப்பிட்ட இருப்பிடத்தில் இருக்கும் எல்லாத் தள நிலையங்களூக்கும் தகவல் அனுப்பப் படுகிறது . " இந்த எண்ணுடைய ஒரு செல்பேசி உங்கள் பகுதியில் உள்ளது ! அச்செல்பேசிக்கு இந்த அழைப்பைத் தெரியப்படுத்தவும்!" என்ற கட்டளையைத் தளக்கட்டுப்பாட்டு நிலையம் தன் பகுதியிலுள்ள தள நிலையங்களுக்கெல்லாம் அனுப்புகிறது . இக்கட்டளையைப் பெற்ற தள நிலையங்களும் ஒரு பக்கமாக்குச் செய்தியை (Paging message) அலைபரப்புகின்றன. இவ்வாறு அலைபரப்பப்படும் பக்கமாக்குச் செய்தியை அந்தந்தத் தள நிலையங்களுடன் இணைக்கப்பட்டுள்ள எல்லாச் செல்பேசிகளும் பெற்று அச்செய்தியினை ஆராய்கின்றன . பக்கமாகுச் செய்தியில் , குறிப்பிட்ட செல்பேசியின் (அழைக்கப்பட்ட செல்பேசி ) தற்காலிக அடையாள எண் (TMSI) அனுப்பப் பட்டிருக்கும் . அந்த எண்ணுக்குரிய செல்பேசி மட்டும் அத்தகவல் தனக்குரியது என்று இனங்கண்டு கொள்கிறது. மற்ற செல்பேசிகள் "இந்த அழைப்பு நமக்கல்ல " என்று தெளிந்து வாளாயிருந்துவிடுகின்றன, அப்பாடா, இத்தனை முயற்சிகளுக்குப் பின் செல்பேசிக்கு அழைப்பு பற்றிய தகவல் தெரிவிக்கப்படுகிறது. அவ்வளவுதானா? இல்லை இல்லை! இதுவரை வலையமைப்பின் முயற்சிகளைக் கண்டோம். தனக்கு வந்த அழைப்பைப் பற்றிய தகவல்தான் செல்பேசிக்குத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மேற்கொண்டு என்ன செய்ய வேண்டும்?

வழக்கப் போல் தனக்கு ஒரு நேரத்துண்டு கேட்க ஆரம்பிக்கிறது செல்பேசி. சென்ற பதிவில் " செல்பேசி அழைப்பு ஏற்படுத்த முயற்சிக்கையில்" என்னென்ன தகவல் பரிமாற்றங்கள் நடந்தன என்று பார்த்தோமல்லவா ? அதே போல் தகவல் பரிமாற்றங்கள் தொடர்கின்றன. தொடர்பு ஏற்படுத்த தனக்கு ஒரு நேரத்துண்டு (தடம்) வேண்டுமென்று கேட்க ஆரம்பிக்கிறது செல்பேசி( Channel Request) . தள நிலையமும் ஒரு தடத்தைச் செல்பேசிக்கு வழங்குகிறது(Channel Assignment). அடுத்த தகவல் செல்பேசியிலிருந்து , பக்கமாக்குத் தகவலுக்கு பதில்மொழியாக அமையும் ( Paging Response). "நீ தேடும் ஆள் நான் தான்" என்றந்தத் தகவலிருக்கும். "அப்படியானால் உன்னை நீ சரியான ஆள் தானா என்று நிரூபி" என்று தள நிலையம் கேட்கும். உறுதிப் படுத்தும் நிகழ்வும் மறையீட்டுத் தகவல் நிகழ்வும் மீண்டும் நிகழ்கின்றன ( Authentication and Ciphering). இறுதியாய் , செல்பேசி குறித்த நம்பகத்தன்மை ஏற்பட்டவுடன் தள நிலையம் அனுப்பும் தகவல் "அழைப்பு அமைப்புத் தகவல்" ( Call Setup message). நினைவிருக்கிறதா? செல்பேசி அழைப்பு ஏற்படுத்துகையில் இதே தகவலைத் தள நிலையத்துக்கு அனுப்பியது. இப்போது செல்பேசிக்கு அழைப்பு வருகையில், அழைப்பு அமைப்புத் தகவலைத் தள நிலையம் செல்பேசிக்குத் தெரிவிக்கிறது. இத்தகவலில்தான் உங்களை அழைத்தவரின் தொலைபேசி அல்லது செல்பேசி எண் உங்கள் செல்பேசிக்குத் தெரிவிக்கப்படும். அழைப்பு அமைப்புத் தகவல் பெற்ற செல்பேசி "இந்த அழைப்பை ஏற்றுக் கொள்கிறேன்" எறு சொல்லி ஒரு தகவலைத் (Call Confirmed) தள நிலையத்துக்கு அனுப்பும். அத் தகவல் பெற்ற தள நிலையம் " சரி, உனக்கு வழங்கப்பட்டிருந்த குறிப்புத் தடத்தை ( Signalling Channel) மாற்றி, பேச்சுப் பரிமாறும் வகையில் போக்குவரவுத் தடமாக ( Traffic Channel) மாற்றுகிறேன்" என்று சொல்லும் ஒரு தகவலை (Assignement of Traffic Channel) செல்பேசிக்கு அனுப்புகிறது. இதைப் பெற்றுக் கொண்ட பின்பு "சரி, எதிர்முனையிலுள்ள ஆளுக்கு அழைப்பு பற்றி அறிவித்துவிடு" எனும் தகவலைத் (Alert) தள நிலையத்துக்குத் தெரிவிக்கும். இதன் பின் தான் உங்கள் செல்பேசி சிணுங்க ஆரம்பிக்கும். நீங்களும் " நம்மை யாரோ அழைக்கிறார்கள் " என்று உணர்கிறீர்கள் .

இந்த அழைப்பை ஏற்றுக் கொள்வதும் மறுப்பதும் உங்கள் விருப்பம். அழைப்பை நீங்கள் மறுத்து, "நிறுத்துக" ( End) எனும் பட்டியைச் சுட்டினால் அழைப்பு நிராகரிக்கப்பட்டு அத்தகவல் தள நிலையத்துக்கு அனுப்பப்படும். தள நிலையமும் அத்தகவலை ஏற்று, அழைப்பு நிராகரிக்கப்பட்ட செய்தியை எதிர்முனைக்கு (செல்பேசி இணைப்பகம் வழியாக) அறிவிக்கிறது. அழைப்பை நீங்கள் ஏற்றுக் கொண்டால் , இணைப்பு ஏற்பட்டுவிட்டதாய் (Connect) ஒரு தகவலைச் செல்பேசி அனுப்பும். அது பெற்ற தள நிலையமும் அத்தகவலுக்கு மறுமொழி ( Connect Acknowledge) கூறி இணைப்பை உறுதி செய்கிறது. அவ்வளவுதான், நீங்கள் " ஹலோ" சொல்லிப் பேச ஆரம்பிக்கலாம். அலையல் செய்யும்போது (Roaming) அல்லது வேறு நாடுகளில்/வேறு வலையமைப்பில் உங்கள் செல்பேசி இணைக்கப்பட்டிருக்கும் போது வரும் அழைப்புகள் எவ்வாறு உங்களுக்குத் திருப்பிவிடப்படுகின்றன என்பதை அடுத்த வாரம் காண்போம்.

குறுஞ்செய்தி

மூன்றாவது தலைமுறை செல்பேசித் தொழில் நுட்பம் ( 3G ) எதிர்பார்த்த அளவு , பயனாளர்களிடையே வரவேற்பைப் பெறத் தவறிவிட்டது. இதனால் செல்பேசித் தயாரிப்பாளர்கள் மக்களைக் கவரும் வண்ணம் செல்பேசியில் பிற பயன்பாடுகளைச் சேர்த்து,  போட்டி போட்டுக் கொண்டு சந்தையில்  அறிமுகப் படுத்துகிறார்கள். சென்ற ஆண்டில் செல்பேசியுடன் கேமரா இணைக்கப்பட்டு எவ்வாறு பரபரப்பாய் விற்கப்பட்டதோ அதுபோல் இந்த ஆண்டில் இசைக்கு முக்கியத்துவம் கொடுத்து செல்பேசியிலேயே பாட்டுக் கேட்க வைக்கப் போகிறார்கள். ஏற்கனவே வெளிவந்துவிட்ட ஸோனி எரிக்ஸனின் K750 , இனிமேல் விரைவில் வர இருக்கும் ஸோனி எரிக்ஸனின் W800 ( Walkman phone) , நோக்கியாவின் N90, நோக்கியாவின் N91  இந்த மாதிரியான இசைச் செல்பேசிகளுக்கு உதாரணம்.

PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2005 Tamiloviam.com - Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |