ஜூன் 3 2004
தராசு
காந்தீய விழுமியங்கள்
திரையோவியம்
உங்களுக்குள்ளே சில புதிர்கள்
சுய சாசனம்
கண்டுக்கொண்டேன் கண்டுக்கொண்டேன்
வானவில்
மேட்ச் பிக்சிங்
பெண்ணோவியம்
முத்தொள்ளாயிரம்
என்னை எழுதியவர்கள்
பருந்துப் பார்வை
கோடிட்ட இடங்கள்
களம்
 
  முதல் பக்கம்
தொடர்கள்
- சத்யராஜ்குமார்
 • கங்கை இல்லாத காசி
 • - பாஸ்டன் பாலாஜி
 • வார்த்தையல்ல, வாக்கியம்
 • - என். சொக்கன்
 • என்னை எழுதியவர்கள்
 • - சத்யராஜ்குமார்
 • சுய சாசனம்
 • - பாஸ்டன் பாலாஜி
 • கோடிட்ட இடங்கள்
 • - சித்ரன்
 • களம்
 • - நாகூர் ரூமி
  யுனிகோடில் தேடல்
  சென்ற இதழ்கள்
  பருந்துப் பார்வை : அப்புறம்தான் தெரியும்...
  - மதுரபாரதி
  | Printable version |

  ஆசியாமைனர் பகுதியில் உள்ள லிடியா என்ற நாட்டை கிரீசஸ் (Croesus) என்ற மன்னன் (கி.மு. 560-546) ஆண்டுவந்தான். தற்போதைய துருக்கி நாட்டில் ஆசியக்கண்டத்துக்குள் வரும் பகுதி ஆசியாமைனர் என்று அழைக்கப்பட்டது. (இது வடக்கே கருங்கடலில் தொடங்கி தெற்கே மத்தியதரைக் கடல் வரையில் இருக்கும் தீபகற்பப் பகுதி). இப்போது பில் கேட்ஸ் மாதிரி அவனுடைய காலத்தில் அவன்தான் உலகின் பெரும்பணக்காரனாக இருந்தான். யாராவது ரொம்பப் பணம் வைத்திருந்தால் 'கிரீசஸ் மாதிரிப் பணக்காரன்' என்று சொல்வது அக்காலத்தில் வழக்கம். தான்தான் உலகிலேயே சந்தோஷமான மனிதன் என்று அவன் நினைத்துக்கொண்டான்.

  ஒருநாள் அவனுடைய அரசவைக்கு ஏதன்சு நகரத்தின் சட்டம் செய்பவனும், பேரறிவாளியுமான சோலன் (Solon) என்பவன் வந்தான். நெடுங்காலம் வரையிலும் "அவன் சோலனைப் போல அறிவாளி" என்று ஒருவரைச் சொல்வது பெரும் பாராட்டாகக் கருதப்பட்டது.

  உலகின் மகா அறிவாளி தனது அரண்மனைக்கு வந்ததில் கிரீசஸ் பெரும் மகிழ்ச்சியும் பெருமையும் கொண்டான். சோலனைத் தனது அரண்மனைக்குள் ஒரு இன்பச்சுற்றுலா அழைத்துச் சென்று தனது கம்பீரமான அறைகள், புத்தக அடுக்குகள், அன்னத் தூவியடைத்த இருக்கைகள், ஓவியங்கள், இரத்தினக் கம்பளங்கள் இவற்றைக் காட்டினான். மலர்த்தோட்டங்கள், பழத்தோட்டங்கள், குதிரை லாயம் தவிர உலக முழுதிலிருந்தும் தான் தருவித்த அரிய பொருட்கள் இவற்றையும் காண்பித்தான்.

  மிகச் செல்வந்தனும் மிக அறிவாளியும் அன்று இரவு ஒன்றாக விருந்துண்ணும்போது கிரீசஸ் சோலனிடம் "ஓ சோலன்! சொல்லுங்கள். உலகிலேயே மிக மகிழ்ச்சியானவன் யார்?" என்று கேட்டான். 'கிரீசஸ்தான்' என்று பதில் வரும் என்று எதிர்பார்த்தான்.

  ஒரு நிமிடம் மவுனமாக இருந்த சோலன் கூறினான் "ஏதன்சு நகரத்தில் வாழ்ந்த டெல்லஸ் என்பவன்தான் என் நினைவுக்கு வருகிறான். எனக்குச் சந்தேகமில்லை, அவன்தான் எல்லா மனிதரிலும் மிக மகிழ்ச்சியானவன்" என்றான் சோலன்.

  இந்தப் பதிலால் அதிருப்தியடைந்த மன்னன் "ஏன் அப்படி?" என்றான்.

  "டெல்லஸ் நேர்மையானவன். தன் மக்களுக்காகக் கடுமையாக உழைத்தான். அவர்களை நன்கு படிக்கவைத்தான். குழந்தைகள் வளர்ந்து தம்மைத்தாமே கவனித்துக் கொள்ளத் தொடங்கியதும் டெல்லஸ் இராணுவத்தில் சேர்ந்து, போரிலே நாட்டுக்காக தீரத்தோடு உயிர்நீத்தான். நீங்கள் சொல்லுங்கள், வேறு யாராவது இதைவிட மகிழ்ச்சிக்குரியவர்களாகத் தோன்றுகிறார்களா?" என்றான் சோலன்.

  "இல்லாமலிருக்கலாம்", கிரீசஸ் தன் ஏமாற்றத்தை மறைத்துக்கொண்டு மீண்டும் கேட்டான் "டெல்லஸுக்கு அடுத்தபடியாக வேறு யாரைச் சொல்வீர்கள்?" என்று கேட்டான். இந்தமுறை 'கிரீசஸ்' என்றுதான் விடைவரும் என்று நம்பினான்.

  "கிரேக்க நாட்டில் பார்த்த இரண்டு இளைஞர்கள் என் நினைவுக்கு வருகிறார்கள். அவர்கள் குழந்தைகளாக இருந்தபோதே தந்தை இறந்துவிட்டார். மிகவும் ஏழைகள். ஆனாலும், பெரியமனிதர்போல உழைத்துத் தன் நோய்ப்பட்ட தாயையும் குடும்பத்தையும் அவர்கள் காப்பாற்றினர். பல ஆண்டுகள் தம் தாயின் நலமே கருத்தாக உழைத்தனர். அவள் இறந்தபின் தமது அன்பை ஏதன்சு நகரம் முழுமைக்கும் அவர்கள் உரியதாக்கினர். தம் உயிருள்ளவரை அந்நகரத்தின் நலனுக்கு உழைத்தனர்" என்றான் சோலன்.

  மன்னனுக்குக் கோபம் வந்துவிட்டது. "அதெப்படி என்னை ஒரு பொருட்டாக நீங்கள் மதிக்கவில்லை? என் செல்வமும் செல்வாக்கும் ஒன்றுமில்லையா? கேவலம் சாதாரணக் குடிமக்களை உலகத்தின் மிகப்பெரும் செல்வந்தனான அரசனைவிட உயர்த்திக் கூறுகிறீரே!" என்றான் கிரீசஸ்.

  "ஓ வேந்தனே! இறக்கும்வரை நீ மகிழ்ச்சியான வாழ்க்கை நடத்தினாயா என்பதை யாராலும் சொல்லமுடியாது. என்னவகைப் புயல் இந்த மாளிகையில் வீசும், உன்னை எந்தத் துயரம் அலைக்கழிக்கும் என்பதை யாரே சொல்லமுடியும்!" என்றான் சோலன்.

  ooOoo

  பல ஆண்டுகள் கழிந்தன. ஆசியாவில் சைரஸ் என்ற ஒரு பேரரசன் தோன்றினான். ஒரு பெரும்படையை நடத்திச் சென்று ஏராளமான அரசுகளை வென்று தன் பாபிலோனியப் பேரரசுடன் இணைத்தான். கிரீசஸ் தன்னாலான அளவு போரை நீட்டித்தான். முடியவில்லை. மாளிகையை நெருப்பு விழுங்கியது. தோட்டங்கள் மரக்குவியல்களாயின. களஞ்சியம் பாபிலோனுக்குப் போனது. கிரீசஸ் சிறைப்பட்டான்.

  "இந்தப் பிடிவாதக்காரன் கிரீசஸால் எனக்கு ஏராளமான நஷ்டம். நல்ல போர்வீரர்களை இழந்தேன். நம் வழியில் குறுக்கிடுபவர்களுக்கு என்ன ஆகும் என்பது மற்றச் சிற்றரசர்களுத் தெரியும்படி இவனுக்கு ஒரு பாடம் புகட்டுங்கள்" என்றான் சைரஸ்.

  முரட்டுத்தனமாகக் கிரீசஸை நகரின் மையப் பகுதிக்கு இழுத்துச் சென்றனர் சைரஸின் வீரர்கள். கிரீசஸின் தரைமட்டமாக்கப்பட்ட தோப்பிலிருந்து மரக்கட்டைகளைக் கொண்டுவந்து அடுக்கினர். அதன் நடுவே கிரீசஸ் கிடத்தப்பட்டான். அவனை இறுகக் கட்டிப் போட்டனர். ஒருவன் சொன்னான் "வாருங்கள், அற்புதமாகத் தீ எரிப்போம்" என்று. இன்னொருவன் "இவனுடைய செல்வம் இவனை இப்போது காப்பாற்றுமா?" என்று கேட்டான்.

  புண்பட்டு இரத்தம் வடிந்தபடி, பரிவுகாட்ட யாரும் இல்லாமல் சிதையில் கிடந்த கிரீசஸுக்கு சோலன் பல ஆண்டுகளுக்கு முன் "நீ இறந்தால் அன்றி நீ மகிழ்ச்சியானவனா என்று யாரும் சொல்லமுடியாது" என்று கூறியது நினைவுக்கு வந்தது. "ஓ! சோலன், சோலன், சோலன்!" என்று முனகினான்.

  அந்தச் சமயத்தில் குதிரையின் மேலேறி சைரஸ் அங்கு வந்தான். "இவன் என்ன சொல்கிறான்?" என்று கேட்டான் சைரஸ்.

  "அவன் 'சோலன், சோலன், சோலன்!' என்கிறான்" என்று ஒருவன் பதிலளித்தான்.

  சைரஸ் "நீ ஏன் இந்தச் சமயத்தில் சோலன் பெயரைச் சொல்கிறாய்?" என்று கிரீசஸிடம் கேட்டான்.

  கிரீசஸ் மவுனமாக இருந்தான். சைரஸ் மறுபடி அதே கேள்வியைக் கேட்டான். பல ஆண்டுகளுக்கு முன் சோலன் தன் அரண்மனைக்கு வந்தபோது நடந்த அந்தச் சம்பவத்தை இப்போது சைரஸுக்குச் சொன்னான் கிரீசஸ்.

  இதைக் கேட்ட சைரஸுக்கு மனம் நெகிழ்ந்தது. "என்னவகைப் புயல் இந்த மாளிகையில் வீசும், உன்னை எந்தத் துயரம் அலைக்கழிக்கும் என்பதை யாரே சொல்லமுடியும்!" என்ற வார்த்தைகளை அவன் சிந்தித்துப் பார்த்தான். பின்னொரு காலத்தில் தானும் எல்லாச் செல்வாக்கையும் இழந்து எதிரிகளின் கையில் துன்புறுவோமோ என்ற சந்தேகம் வந்தது.

  "மனிதன் மற்றொரு மனிதனுக்குக் கருணை காட்டவேண்டாமா? என்னை என் எதிரிகள் எப்படி நடத்தவேண்டும் என்று நினைக்கிறேனோ, அப்படி நான் கிரீசஸை நடத்துவேன்" என்று தீர்மானித்து கிரீசஸை விடுவித்தான் சைரஸ். அதன்பின்னர் அவனைத் தன் நெருங்கிய நண்பனாகவே நடத்தினான்.

  இந்தக் கதையை கிரேக்க வரலாற்று அறிஞர் ஹெரடோ ட்டஸ் எழுதியிருக்கிறார்.

  வாழும்போதே தனது வாழ்க்கையை மதிப்பிட முயலுவது மிகச் சரியானதாக இருக்காது என்று வள்ளுவரும் சொல்லவில்லையோ!

  தக்கார் தகவிலர் என்பது அவரவர்
  எச்சத்தாற் காணப் படும்

  (திருக்குறள்: நடுவு நிலைமை: 114)

  எச்சம் என்பது நாம் எதை விட்டுச் செல்கிறோமோ அது. செல்வத்தை விட்டுச் செல்பவர்கள், தம் சந்ததியினரிடையே பெரும்பகைமையையும், சோம்பேறித்தனத்தையும், கர்வத்தையும், தீய சகவாசத்தையும் விட்டுச் செல்வதைப் பல சந்தர்ப்பங்களில் பார்க்கிறோம். அந்தச் செல்வத்தால் குடும்பத்துக்கு ஏற்படும் நன்மையைவிடத் தீமை அதிகமாக இருக்கிறது. நல்ல கல்வி, ஒழுக்கம், நேர்மை, கருணை முதலிய பண்புகளையும் சேர்த்துத் தம் சந்ததிகளுக்கு விட்டுச் செல்பவர்கள் அதிகம் மதிக்கப் படுகிறார்கள்.

  மாணிக்கம் முத்து வயிரப் பணி பூண்டு
  ஆணிப்பொன் சிங்காதனத்தில் இருந்தாலும்
  காணித்து உடலை நமன் கட்டியே கைப்பிடித்தால்
  காணிப்பொன் கூடவரக் காண்கிலமே நெஞ்சமே!

  என்று பட்டினத்தார் சொன்னதும் இதைத்தானே. இது வெறும் மாயா வாதமல்ல. நேற்றுவரை எல்லாத் தொலைக்காட்சிக் கால்வாய்களும் ராப்பகலாய்க் காட்டிக்கொண்டிருந்த முகம் இன்று காலையில் பார்த்தால் காணவில்லை. நாளைக்கு அவர்கள் சிறைக்கம்பி எண்ணவும் கூடும். இப்படிச் செல்வமும் செல்வாக்குமான சக்கரம் 'மேலது கீழாய், கீழது மேலாய்' சுற்றிக்கொண்டே தானே இருக்கிறது.

  அதற்குத்தான் பெரியவர்கள் சொன்னார்கள் "சம்பாதிக்கும்போது இன்னும் நூறு ஆண்டுகள் வாழ்வோம் என்று நினைத்துச் சம்பாதியுங்கள். தர்மம் செய்யும்போது நாளைக்கே இறந்துவிடுவோம் என்று நினைத்துச் செய்யுங்கள்" என்று.

  நாமும் நமது எச்சங்களாகப் புகழையும், நற்செயல்களையும், நல்ல சந்ததியையும் விட்டுச் செல்வோம். அதற்கு ஒரே வழி, "இன்னும் வயதிருக்கிறது. பின்னால் நல்ல காரியம் செய்வோம்" என்று காத்திருக்காமல், இன்றே இப்போதே நமது சக்திக்கேற்ப நற்பணி செய்வதே. மனம் வையுங்கள், வழி தெரியும்.

  PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
  உங்கள் கருத்து  
  (You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
  Copyright © 2004 Tamiloviam - Authors
  Best viewed with IE 4.x and above, Netscape 7.x , Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
  | Privacy |