Tamiloviam
ஜூன் 05 2008
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
அமெரிக்க மேட்டர்ஸ் : ஒபாமா வென்றார் !!!
- சிறில் அலெக்ஸ்
  Printable version | URL |

 

Obamaவரலாற்று சிறப்புமிக்க தருணமொன்றில் பராக் ஹுசைன் ஒபாமா அமெரிக்கத் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிடும் அதிபர் வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கருப்பினத்தவர்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டு 40 ஆண்டுகளே ஆகின்றன என்கிறதை கருத்தில் கொண்டால் இந்த சாதனையின் மகத்துவம் புரியும். இதுபோன்றதொரு சாதனை அமெரிக்காவில் மட்டுமே சாத்தியம் எனும் பண்டிதர்களின் கூற்று ஓரளவுக்கு உண்மையானதே. இருப்பினும் அமெரிக்கா இந்தச் சிறிய தணலில் குளிர்காய முடியாது.

'ஒரு வரலாற்று சிறப்புமிக்க பயணத்தின் முடிவை இன்னொரு (வரலாற்று சிறப்புமிக்க) பயணத்தை துவக்கி வைத்து குறிப்பிடுகிறோம். (Tonight we mark the end of one historic journey with the beginning of another) என்றார் ஒபாமா. முதல் கறுப்பின அதிபரைத் தேர்ந்தெடுக்கும் அந்த இரண்டாம் பயணம் அமெரிக்கர்களின் சுயசோதனைக்களமாக அமையப்போகிறது என்பது நிச்சயம். வெறும் இனத்தைத் தாண்டிச் செல்வது மட்டுமல்ல இந்த சோதனை, ஒபாமா முன்வைக்கும் புதிய அரசியலைத் தழுவிக்கொள்வதும், எட்டு இருண்ட வருடங்களின் தடங்களை அழித்துச் செல்வதும், தன்னையே புதுப்பித்துக் கொள்வதற்குமான சோதனைக் களம் இது.

ஒபாமாவின் இரண்டாவது பயணம் எளிதாக அமையப்போவதில்லை. முதுகில் கிடக்கும் ஹில்லரிச் சுமையை அவர் இறக்கி வைத்தாக வேண்டும். ஹில்லரி அரசியல் விளையாட்டின் இறுதி கட்டத்தில் பெரிதாய் பதவி பெறும் முனைப்பில் நிற்கிறார். தன் ஆதரவாளர்களைக் காட்டி ஆதாயம் தேடுகிறார். ஒபாமாவைப் பொருத்தமட்டில் ஹில்லரியின் ஆதரவு மிக முக்கியமானது அதே வேளையில் ஹில்லரியை தோளில் சுமப்பதுவும் கடினமானது. ஹில்லரிக்குத் துணை அதிபர் பதவி வழங்கப்படுமா? அல்லது சுமூகமான வேறு முடிவுகளை இரு தரப்பினரும் எட்டுவார்களா என்பதுவே அமெரிக்கத் தேர்தலின் அடுத்தக் காட்சி.

ஜான் மெக்கெய்ன் நேற்றுத் தன் பாடலை மாற்றிப் பாட ஆரம்பித்துள்ளார். ஜான் மெக்கெய்னின் தனிப்பெரும் குணாதிசயமாக அவரின் கட்சி தாண்டிய அரசியலைச் சொல்லலாம். தன் கட்சியின் நிலைப்பாடுகளை எதிர்த்து பல அரசியல் முடிவுகளையும் அவர் முன்பு எடுத்துள்ளார். ஆனால் உட்கட்சி தேர்தல்களின்போது அவரிடம் இந்தக் குணாதிசயம் துளிகூட வெளிப்படவில்லை. நேற்று உட்கட்சித் தேர்தல்கள் முடிந்தபோது கட்சிசாராத மக்களைக் கவரும்படி தன் பிரச்சாரத்தை மாற்றிக் கொண்டுள்ளார். ஆனால் ஒபாமாவின் பிரச்சார யுக்திகளைக் கடன் வாங்கி The Change we can trust in என்பதைத் The leader we can trust in என மாற்றிக் கொண்டும், ஒபாமாவின் Change பிரச்சாரத்தை 'நல்ல மாற்றம்’ 'கெட்ட மாற்றம்’ என இனம்பிரித்துக் காட்டி தனித்தன்மையில்லாத ஒரு பிரச்சாரத்தை துவக்கிவைத்துள்ளார் மெக்கெய்ன்.

ஒபாமாவும் அமெரிக்காவும் நேற்று வரலாறு படைத்தன என்பதில் சந்தேகமேயில்லை. ஆயினும் இந்த சாதனை இன்னும் முழுமையடையவில்லை என்பதே உண்மை. ஒபாமாவும் அமெரிக்காவும் கடக்கவேண்டிய தூரம் அதிகமில்லையென்றாலும் சில நூற்றாண்டு வரலாற்றைக் கடந்து அடுத்த கட்டத்தைத் தொடுவதென்பது குழந்தை பிறப்பைப் போல. வடுக்களையும் அதீத வலிகளையும் தாண்டி அந்த இன்பம் பிறக்குமா?

oooOooo
                         
 
சிறில் அலெக்ஸ் அவர்களின் இதர படைப்புகள்.   அமெரிக்க மேட்டர்ஸ் பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2008 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |