ஜூன் 08 06
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
பேட்டி : மார்ச்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் என் வரதராஜன் பேட்டி
- திருமலை கோளுந்து [golundhu1979@yahoo.com]
Bookmark in Del.icio.us | | Printable version | URL |
"நான்கு ஆண்டுகளாக அராஜக ஆட்சி நடத்தி விட்டு பின் ஒரு ஆண்டாக நல்லாட்சி என்று சொன்னால் அதனை யாருமே ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்."

மார்ச்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் என் வரதராஜன் பேட்டி

மார்ச்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் என். வரதராஜன் தென் மாவட்டங்களுக்கு வருகை புரிந்தார். நெல்லை மாவட்டம் கோவில்பட்டியில் கூட்டத்தில் கலந்து கொள்ள வந்தவரிடம் பேச வாய்ப்பு கிடைத்தது. கம்யூனிஸக் கொள்கையில் ஆழ்ந்த சித்தாந்தம் கொண்ட இவரிடம் தமிழோவியத்திற்கு  எடுக்கப்பட்ட பேட்டி:


தமிழோவியம் : தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வேண்டும் என்று உரக்க குரல் கொடுத்தவர்களில் உங்களது குரலும் முக்கியமானது. தற்பொழுது ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? தற்போதைய முதல்வர் கருணாநிதியின் செயல்பாடுகள் மார்ச்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு திருப்தியளிப்பதாக இருக்கிறதா?

பதில் : தமிழகத்தில் ஜனநாயகத்தை மதிக்காமல் செயல்பட்ட அ.தி.மு.க. ஆட்சியை அகற்ற வேண்டும் என்ற தி.மு.க. தலைமையிலான ஜனநாயக முற்போக்கு கூட்டணி முழு வீச்சோடு போராடி வெற்றி கண்டுள்ளது. இதனை மக்கள் எடுத்த தெளிவான முடிவாகவே கருதுகிறேன். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் முந்தைய செயல்பாடுகள் திருப்தியளிப்பதாக இல்லை. அனைத்துத் துறையிலும் அந்த அரசு தோல்வி கண்டு இருந்தது. தற்பொழுது அமைந்துள்ள புதிய அரசு மக்களுக்கு எதிராக செயல்படாது என்று நினைக்கிறேன். ஆட்சியின் தொடக்கம் நல்ல விதத்தில் தான் இருக்கிறது

தமிழோவியம் :- தற்பொழுது அமைந்துள்ள தி.மு.க. அரசு பெரும்பான்மை இல்லாத அரசு. இந்த அரசு அதிக நாள் நீடிக்காது என்று தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சொல்லி இருக்கிறாரே?

பதில் : தி.மு.க.விற்கு அருதிப் பெரும்பான்மை கிடைக்காவிட்டாலும் அதன் தோழமைக்கட்சிகளின் ஆதரவோடு இந்த அரசு தனது முழு பதவிக் காலத்தை பூர்த்தி செய்யும்.

Varatharajanதமிழோவியம் : தி.மு.க.விற்கு ஆதரவு கொடுக்கும் பிரதான கட்சியான காங்கிரஸ் கட்சியினர் ஆட்சியில் பங்கு வேண்டும் என்ற கோரிக்கை நியாயமானதா? ஆட்சியில் பங்கு கொடுக்க வேண்டுமா?

பதில் : தி.மு.க. காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசில் பங்கு வகிக்கிறது. அதே போல் தமிழகத்தில் பங்கு வேண்டும் என்று கேட்பது அவர்களது உரிமை. ஆனால் ஆட்சியில் பங்கு பெற மாட்டோம் என காங்கிரஸ் தலைவர்கள் சொல்லி இருக்கிறார்கள். பத்திரிக்கைகள் தான் ஆட்சியில் பங்கு என்பதை பற்றி பெரிது படுத்துகின்றன. முதல்வர் கலைஞர் அனைத்து பிரச்சினைகளையும் தீர்வு காண்பார்.

தமிழோவியம் : தமிழக சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க.வெற்றி பெற்றதற்கு முக்கிய காரணம் அதன் தேர்தல் அறிக்கை தான் என்று சொல்லப்படுகிறது. இலவச அறிவிப்புகள் மூலம் பெற்ற வெற்றி ஒரு வெற்றியாக எப்படி எடுத்துக் கொள்ள முடியும்?

பதில் : இலவச அறிவிப்புகள் மட்டுமே தி.மு.க. கூட்டணிக்கு வெற்றியை தரவில்லை. அ.தி.மு.க. அரசின் தவறான கொள்கைகள், நடவடிக்கைகள், கூட்டணி கட்சிகளின் கடுமையான பிரச்சாரங்கள் எல்லாம் சேர்த்து தான் அ.தி.மு.க. கூட்டணியை தோல்வியடையச் செய்து இருக்கிறது. இலவச அறிவிப்புகள் இன்று அல்ல ஆரம்ப காலக்கட்டத்தில் இருந்தே இருந்து வந்து இருக்கின்றன.

தமிழோவியம் : முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சியில் மக்களுக்கு நன்மை எதுவுமே செய்யவில்லை என்கிறீர்களா?

பதில் : மக்களுக்கு பல நன்மைதரும் திட்டங்களை ஜெயலலிதா அரசு செயல்படுத்தி வருகிறது என்பதில் எங்களுக்கு உடன்பாடு தான். ஆனால் இவர்களின் சில செயல்பாடுகள் எங்களுக்கு ஏமாற்றத்தை அளிக்கிறது. சென்னை வெள்ள நிவாரணத்தில் பலி, அரசு ஊழியர்களை கொடுமைப்படுத்தியது. முந்தைய அரசால் பணி நீக்கம் செய்யப்பட்ட 10,000 சாலைப்பாணியாளர்களை பழைய சம்பளத்தினை அளிப்பதோடு மீண்டும் பணியில் நியமிக்கக் கூறி சென்னை உயர்நீதி மன்றம் சமீபத்தில் தீர்ப்பு கூறியது. தமிழக அரசு அதனைச் சொல்லாமல் அந்த தீர்ப்பினை எதிர்த்து மேல் மறையீடு செய்யப்ப போவதாக அறிவித்து என்று அந்த ஆட்சியின் அவலங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். நான்கு ஆண்டுகளாக அராஜக ஆட்சி நடத்தி விட்டு பின் ஒரு ஆண்டாக நல்லாட்சி என்று சொன்னால் அதனை யாருமே ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

தமிழோவியம் : இந்தத் தேர்தலில் எப்போதும் இல்லாத வகையில் அதிக இடங்களை வென்ற வலுவான எதிர்கட்சியாக அ.தி.மு.க. இருக்கிறது. அதன் செயல்பாடுகள் எப்படி இருக்க வேண்டும் என நினைக்கிறீர்கள்?

பதில் : இந்தத் தேர்தலில் அ.தி.மு.க. தோல்வி கண்டாலும் அதிகமான இடங்களை வென்று இருக்கிறது. குறிப்பாக சென்னை மாகாணத்தில் அதிக தொகுதிகளை வென்று இருப்பது எளிதானதல்ல. ஒரு ஆக்கப்பூர்வமான எதிர்கட்சியாக செயல்பட வேண்டும் என்பது தான் எனது எண்ணம்.

தமிழோவியம் : மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஜனநாயக முற்போக்குக் கூட்டணி இரண்டு ஆண்டுகளை  பூர்த்தி செய்திருக்கிறது. இந்த அரசின் செயல்பாடுகள் திருப்தியளிக்கிறதா?

பதில் : காங்கிரஸ் தலைமையிலான அரசின் இரண்டு ஆண்டுகளின் செயல்பாடு முழுமையான திருப்தியளிப்பதாக இல்லை என்பத தான் எங்களின் நிலைப்பாடு. ஆயுள்காப்பிட்டு துறையில் அன்னிய முதலீட்டை அனுமதியளிப்பது, பொது துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்ப்பது, உட்பட பல கோரிக்கைகளில் மத்திய அரசின் செயல்பாடு எங்களுக்கு திருப்தியிளிக்கவில்லை. அதே போல் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு குறைந்த பட்ச செயல் திட்டத்தின் படி செயல்பட்டு வருகிறது என்பதையும் ஏற்றுக் கொள்கிறோம். சாலை மேம்பாட்டுத் திட்டங்கள், தமிழை செம்மொழியாக்கியது, சேது சமுத்திர திட்டம் நிறைவேற்ற மேற்கொள்ளப்படும் நடவடிக்கை போன்ற நல்ல காரியங்களை தமிழகத்திற்கு செய்து வருகிறது. 

தமிழோவியம் : காவிரிப் பிரச்சனையில் தமிழக அரசின் செயல்பாடுகள் இனி எப்படி இருக்கும் என நினைக்கிறீர்கள்?

பதில் : தற்பொழுது மெட்டூர் அணை நிரம்பி உள்ளது. ஜீன் 12ம் தேதி அணை திறக்கப்படும் என அரசும் அறிவித்துள்ளது. இந்த அரசு அதனை முறையாக கையாளும் என நம்புகிறோம். காவிரியில் சரியான நேரத்திற்கு தண்ணிர் வராத காரணத்தால் தான் பல லட்சம் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டதோடு, விவசாயிகளும் கண்ணீர் வடிக்கும் நிலை ஏற்பட்டது என்பதை யாரும் இங்கு மறுக்க முடியாது. அதே போல் கர்நாடக அனைகளில் தண்ணீர் அதிகமாகி விட்டால் தமிழக அனைகளை ஒரு வடிகால் என்ற நிலையை கர்நாடக அரசு ஆரம்பகாலத்தில் இருந்தே கடைபிடித்து வருகிறது. இதற்கு எல்லாம் புதிய அரசு தீர்வு காண வேண்டும்.

தமிழோவியம் : சிவகாசி, கோவில்பட்டி பகுதிகளில் தீப்பெட்டித் தொழில் துறையில் இயந்திரங்கள் அறிமுகப்படுத்தும் முறையில் கம்யூனிஸ்ட் கட்சிகள் தொழிலாளர்களை ஏமாற்றி வருவதாக சொல்லப்படுகிறதே?

இயந்திர தீப்பெட்டித் தொழிலை  ஆரம்பத்தில் இருந்தே எதிர்ப்பது கம்யூனிஸ்ட் கட்சிகள் தான் என்பதை மறந்து விடக் கூடாது. இப்பிரச்சினை தீர்க்க ஆளும் அரசியல் கட்சிகள் தான் நடவடிக்கை எடுக்கும்.

| | |
oooOooo
திருமலை கோளுந்து அவர்களின் இதர படைப்புகள்.   பேட்டி பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2006 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |