ஜூன் 08 06
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
சிறப்பு ஆசிரியர் : அந்தக்காலம்..- கட்டுரை
- சுரேஷ் பாபு
Bookmark in Del.icio.us | | Printable version | URL |
Nostalgia விற்கு நனவிடைத் தோய்தல் என்ற அழகான தமிழ்ப்பெயர் வைத்த புண்ணியவான் எங்கிருந்தாலும் நன்றாக இருக்கட்டும்.
 
நாம் அவ்வப்போது நனவிடைத் தோய்ந்தாலும், மற்றவர்களின் அந்தக்கால நினைவுகளைக் கேட்க நம்மில் பெரும்பாலோருக்கு பொறுமை இல்லை.
 
எனக்கு முதலில் இந்த "அந்தக்காலம்" என்பதை எப்படி வரையறை செய்கிறார்கள் என்பதே புரியவில்லை.
 
Ponniyin Selvanபொன்னியின் செல்வன் படித்திருப்பீர்கள், ஆதித்த கரிகாலனும், பார்த்திபேந்திர பல்லவனும் மாமல்லபுரக் கடற்கரையில் விவாதித்துக்கொண்டிருக்கிறார்கள், தாத்தா மலையமான் கூத்துக்கேட்டுவிட்டு தாமதமாக  வருகிறார். நண்பர்கள் உரையாடல் இப்படிப்போகிறது:
 
"எப்படித்தான் அவருக்கு உடம்பு தாங்குகிறதோ?"
 
"என்ன இருந்தாலும் அந்தக்கால உடம்பல்லவா"
 
இதைப்படித்து எனக்கு சிரிப்பு அடங்க பல நிமிடங்களாயின. ஆதித்த கரிகாலனே ஆயிரம் ஆண்டுக்கும் முன் வாழ்ந்தவன்.. அவனுக்கும் "அந்தக்கால உடம்பு" மேல் பொறாமை இருப்பது, இது நாம், இன்று மட்டும் சந்திக்கும் சூழல் இல்லை என உணர்த்தியது.
 
காலம் மாற மாற, அந்தக்காலமும், அது கொடுத்த நல்ல விஷயங்களும் மட்டுமே ஞாபகம் இருந்து, அந்தக்காலத்தின் தீமைகள் வசதியாக மறந்து போகின்றன. இளமைத் துள்ளலோடு படம் எடுக்கும் 60+ இயக்குநர்களின் படங்களில், நிஜமான இளைஞர்களின் படத்தைக்காட்டிலும் ஆபாசம் அதிகமாக இருப்பதற்கு இதுவும் ஒரு காரணமாய் இருக்கலாம். பஸ்ஸில் ஏறும் பெண்கள் இளைஞர்களை விட முன்னாள் இளைஞர்களுக்கே அதிகம் பயப்ப்டுவார்கள் எனக்கேள்விப்பட்டிருக்கிறேன்.
 
என் "அந்தக்காலம்" என்பது 1950 - 70 எனக்கொண்டால், அதைப்பற்றிய இனிப்பு தடவிய நினைவுகளே எனக்குப் புகட்டப்பட்டிருக்கிறது.
 
துக்ளக்கில் வெளிவரும் துர்வாசரின் புதிய தொடர் "அதனால என்ன பரவாயில்லை" - யாராவது படிக்கிறீர்களா?.
 
ரைட் ஹானரபிள் வாத்தியார்களும், பிரசவத்துக்குப் பத்தியம் பார்த்த மாமியார்களும், கண்டிப்பான  மேலதிகாரிகளும் உலாவரும் தொடரில் அந்தக்காலத்தில் இருந்த  சுத்தபத்தமான வாழ்க்கை முறை,  மனிதநேயம், உயர்வான  விழுமியங்கள் எதுவும் இந்தக்காலத்தில் இல்லாமல் போனது, அவசர உலகத்தின் பணத்துரத்தல்களில் பலியான நுன்னுணர்வுகள் எனப் பலவாறாகவும் கதை அடிக்கிறார்.
 
அன்று அவ்வளவு அருமையாக இருந்த சமூகத்தை இன்று கெடுத்து வைத்திருப்பதில் என் பங்கு குற்ற உணர்ச்சியைத் தூண்டும் விதமாய் இருந்தாலுன்,  அப்படிப்பட்ட நல்ல உலகத்தில் வாழ்ந்த நீங்கள், எங்களுக்கு ஏன் மோசமான உலகத்தை விட்டுச்சென்றீர்கள் என்பது போன்ற  கேள்விகள் எழும், வயதிற்கு  மரியாதையால் தடை செய்யப்பட்டு வெளிவராமல் போகும்.
 
அந்தக்காலத்தில் வாழ்ந்தவர்கள் எல்லாம் ரத்தமும் சதையும் ஆன  மனிதர்கள்தானா? அல்லது  கொள்கைக்காக கோபதாபங்களைத் துறந்து, எந்நேரமும் பெரியவர்கள் பேச்சைக்கேட்டு வாழ்ந்த முனிவர்களா? என்றெல்லாமும் சில நேரங்களில் கேள்வி எழும். எப்படித்தான் வாழ்ந்திருப்பார்கள் இவர்கள் என்று அறிய ஆசைப்பட்டாலும், தெளிவாய் அறிய வழிகள் ஊடகங்கள் குறைவு காரணமாய் மிகக்குறைவே.
 
இயல்பாக அந்தக்கால வாழ்க்கையை, அதன் சுகதுக்கங்களோடு, உயர்வு தாழ்வுகளோடு பதிவு செய்த புத்தகங்களில் நான் படித்தவை மிகக்குறைவே.
 
அந்த வகையில் ஆதவனின் "என் பெயர் ராமசேஷன்"உம், "காகித மலர்கள்"உம் முக்கியமானவையாகத் தோன்றுகிறது.
 
எஞ்சினியரிங் கல்லூரிக்குள் நுழையும் காஸனோவாவை  முக்கியக்கதாபாத்திரமாகக்கொண்ட  "என் பெயர் ராமசேஷன்", தன்னிலை ஒருமையிலேயே நகர்கிறது. மாதம் நூறு ரூபாய் கையில் கிடைக்கும் என்ற ஒரே காரணத்துக்காக எஞ்சினியரிங் படிக்க ஒப்புக்கொண்ட ராமசேஷன், ராவுடன் அறையைப்பகிர்ந்து கொள்கிறான்.  ராவின் குடும்பம் ராமசேஷனின் ஆர்வங்களையும் உணர்ச்சிகளையும் தூண்டும் அளவுக்கு விசித்திரமானது.- "எதைப்பற்றியும் கவலைப்படாத"  தங்கை,  "கலை" ஆர்வம் கொண்ட தாய், பணம் கொட்டும் தந்தை, ஏறத்தாழ அடிமைபோல ஒரு தோழன்.. தன் குடும்பத்தில் உள்ள சம்பிரதாயமான போலித் தனங்களை உணர்ந்திருக்கும் ராமசேஷனுக்கு, இந்த அமைப்பு, புதிய போலித்தனங்களை அறிமுகப்படுத்துகிறது - புதிய அனுபவங்களையும் அவமானங்களையும் அளிக்கிறது. வேறு வேறு  வட்டங்களில்  சுழன்றாலும், கடைசியில்  வரையறுக்கப்பட்ட வாழ்க்கைக்குத் திரும்புகிறான்.
 
"காகித மலர்கள்" இன்னும் அதிகமான கதாபாத்திரங்கள், முரண்பாடுகள் - ஸ்டெனோகிராபராக இருந்து சாம தான பேத தண்டங்களைப் பிரயோகித்து முன்னேறிய உணவுத்துறை செயலாளர், அவருடைய "நவீனயுக" மனைவி, விஸ்கான்சின் பல்கலையில் Ecology ஆராய்ச்சி செய்யும் ஒரு மகன், எல்லாக்கட்டுகளையும் உடைக்கத்துடிக்கும் இன்னொரு மகன்,  தன்னம்பிக்கை குறைவான மூன்றாம் மகன், அவர்கள் காதலிகள், நண்பர்கள் -- எல்லோரின் வாழ்க்கையிலும் சில சம்பவங்களைத் தொட்டுச் செல்கிறது.
 
இரண்டு புத்தகங்களுக்குமே இந்தச் சுருக்கம் அநியாயமானதுதான். ஆனால், முழுக்கப்படித்தால்தான் ரசித்து அனுபவிக்க முடியும் என்பதால், எந்தச் சுருக்கமும் அநியாயமாகத்தான் முடியும்.
 
நான் கொஞ்சம் வேகமாகக் கதை படிப்பவன். உரையாடல்களே மூன்று பக்கத்துக்கு இல்லாமல் கதை நகர்ந்தால், அந்த மூன்று பக்கத்தையும் விட்டுவிட்டு நான்காவது பக்கத்துக்கு நேரடியாகத் திருப்பிவிடுவேன். இந்தக்கதையை அப்படிப்படித்திருந்தால் நான்கைந்து பக்கங்களுக்கு மேல் வாசித்திருக்க முடியாது. என் போன்ற பொறுமையற்ற வாசகனையே  முழுமையாகப்படிக்க வைக்கும் அளவிற்கு இயல்பான எழுத்துநடை ஆதவனுடையது. 
 
ஒவ்வொரு கதாபாத்திரத்தின் அப்போதைய சிந்தனையை முழுமையாகப் பதிவு செய்வதில் வெற்றி அடைந்திருக்கிறார் ஆதவன். . எல்லா கதாபாத்திரங்களின் உண்மை எண்ணங்களையும் போட்டுக்கொள்ளும் முகமூடிகளையும், அணியும் வேஷங்களையும், split-personalityகளையும் அபாரமாக எழுத்தில் வடித்திருக்கிறார். ஒரு தொண்டைக் கனைப்புக்குப் பின்னால் கூட "நான் ஒரு பெரிய விஷயம் சொல்லப்போகிறேன், கேட்கத் தயாராகுங்கள்" என்ற குறியீடு அடங்கியிருப்பதாகச் சொல்லும் அளவிற்கு சில இடங்களில் அதீதமாய்ப் போனாலும், சுவாரஸ்யம் குறைவதில்லை.
 
பெரும்பாலும் ஆதவன் கதைகள் அதிர்ச்சி மதிப்பீட்டுக்காக எழுதப்பட்டவை எனச் சொல்லப்பட்டுக் கேள்விப்பட்டிருக்கிறேன். "அந்தக்காலத்தை" தாண்டி விட்டதாலோ என்னவோ எனக்கு எந்த அதிர்ச்சியையும் இந்தப்பாத்திரங்களும் கதையும் அளித்துவிடவில்லை. வெளிவந்த நேரத்தில் இருந்த சமூகத்துக்கு அதிர்ச்சியாக இருந்திருக்கலாம். தங்கள் குறைகளை வெளிப்படையாக ஒப்புக்கொள்ள மறுக்கும் வாசகர்களும் இந்தக்கதைகளில் தங்களை அடையாளம் கண்டுகொள்வதாலும், அவை வெளிப்படுதல் விரும்பாத காரணத்தாலும் இக்கதைகள் வெகுஜன அங்கீகரத்தை இழந்திருக்கலாம் என்று நினைக்கிறேன். 
 
என்ன சொன்னாலும், நான் படித்த புத்தகங்களில் சிறந்தவையாக இந்த இரண்டையும் வகைப்படுத்துவதிலும், பரிந்துரைப்பதிலும் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை.
| | |
oooOooo
சுரேஷ் பாபு அவர்களின் இதர படைப்புகள்.   சிறப்பு ஆசிரியர் பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2006 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |