ஜூன் 08 06
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
சிறுகதை : தேர்தல் 2060 - சிறுகதை
- சுரேஷ் பாபு
Bookmark in Del.icio.us | | Printable version | URL |

(வலைப்பதிவு போட்டியில் (மே 2006) முதல் பரிசு பெற்ற சிறுகதை)

வேலை முடிகிற வழியாய்த் தெரியவில்லை.வண்டி டெலிவரி எடுக்க எந்நேரமும் வந்துவிடுவான் - இன்னும் மூன்றாம் கியர் விழுவதில் பிரச்சினை. இரண்டு நாளாய் பிரச்சினையின் மூலாதாரத்தைப் பிடிக்க  முடியவில்லை. 
 
கைப்பேசி சிணுங்கியது. இது வேறயா? கிரீஸும் எண்ணையும் வழிந்த கையுறையைக் கழட்டி போனை எடுத்தேன்.
 
குறுஞ்செய்திதான்.
 
"இன்று வாக்குப்பதிவு, இன்னும் 12 மணிநேரத்துக்குள்ளாக உங்கள் கடவுச்சொல்லைப்பயன்படுத்தி வாக்களியுங்கள்.
 
வாக்களிக்க வேண்டிய சாவடியின் வழியைப்பெற, இங்கே அழுத்துங்கள்" இங்கேவில் ஹைப்பர்லின்க் ஒளிர்ந்தது.
 
பார்த்துக்கொண்டிருக்கும்போதே 12 மணி என்பது 11:59:59 என்று கீழிறங்க ஆரம்பித்தது. இனி ஒவ்வொரு ஐந்து நிமிடத்திற்கும் ஒரு சிணுங்கல் நிச்சயம்.
 
அதை அப்புறம் பார்த்துக்கொள்ளலாம். ஏன் மூன்றாம் கியர் விழவில்லை?
 
மறுபடி கைப்பேசி அதட்டியது.
 
"டேய் போனை எடுறா, நான் வசந்த்"
 
"டேய் போனை எடுறா, நான் வசந்த்"
 
வசந்த் கோபமாகத் தெரிந்தான்.
 
"என்னடா கோபம்" என்றேன்.
 
"ஏமாத்திட்டாங்கடா.. இலவச போனுன்னு சொன்னாங்களேன்னு பழைசை சரண்டர் பண்ணிட்டு புதுசா இதை வாங்கினேன்"
 
"என்ன பிரச்சினை?" கேட்பதற்குள் அவன் உருவம் திரையிலிருந்து அகன்று
 
"இலவச கைப்பேசி வழங்கிய உங்கள் அன்புச்சகோதரனுக்கே உங்கள் வாக்கை அளிப்பீர்" என்றது அ உ க மு க தலைவர் உருவம்.
 
"இதைத்தாண்டா சொல்ல வந்தேன். ஏமாத்திட்டானுங்க. காசு கொடுத்தாலும் இந்த மாதிரி நடுவுலே வந்தெல்லாம் கொல்லாத போன் தான் வேணும்"
 
"இலவச கைப்பேசி வழங்கிய உங்கள் அன்புச்சகோதரனுக்கே உங்கள் வாக்கை அளிப்பீர்"
 
"அட் நீ வேற.. நண்பர்கள் பேசும்போது குறுக்கே பேசாதேடா" என்றேன்.
 
"அய்யோ அப்படியெல்லாம் எதுவும் பேசாதே. வாய்ஸ் ரெகார்ட் பண்ணி வீட்டுக்கு தொண்டர்களை அனுப்பிடுவாங்க"
 
"இலவச கைப்பேசி வழங்கிய உங்கள் அன்புச்சகோதரனுக்கே உங்கள் வாக்கை அளிப்பீர்"
 
"அப்படிக்கூடவா செய்வாங்க?"
 
"அதையும் செய்வாங்க, அதுக்கு மேலேயும் செய்வாங்க! சரி ஓட்டு போட்டுட்டயா?"
 
"இலவச கைப்பேசி வழங்கிய உங்கள் அன்புச்சகோதரனுக்கே உங்கள் வாக்கை அளிப்பீர்"
 
"இது வேற நடுவுலே தொண தொணன்னுகிட்டு - இன்னும் 12 ஹவர் இருக்கே"
 
"சரிதான் - நீ லேட் பண்ணா யாராவது ஹேக்கர் வந்து போட்டுட்டு போயிடுவான்"
 
"இலவச கைப்பேசி வழங்கிய உங்கள் அன்புச்சகோதரனுக்கே உங்கள் வாக்கை அளிப்பீர்"
 
"மொதல்ல போனை மாத்து. ஹேக்கருங்க கூட நுழைய முடியுமா என்ன? பாஸ்வேர்டு இல்லாம முடியுமா?"
 
"அதெல்லாம் செர்வர்லேயே டிரிக் பண்ணிடுவாங்க"
 
"இலவச கைப்பேசி வழங்கிய உங்கள் அன்புச்சகோதரனுக்கே உங்கள் வாக்கை அளிப்பீர்"
 
"நீ யாருக்குப் போட்டே"
 
" வேற யாருக்கு? என் ஜாதிக்காரன் வக்கீல் முன்னேற்றக்கழகத்துக்கு கூட கூட்டணி வச்சிருக்க அ உ க மு கவுக்குதான்"
 
"ஏண்டா இப்பவும் ஜாதி பாத்துப் போடறீங்க"
 
"இலவச கைப்பேசி வழங்கிய உங்கள் அன்புச்சகோதரனுக்கே உங்கள் வாக்கை அளிப்பீர்"
 
"பின்ன வேற யாருப்பா எங்களுக்கு இட ஒதுக்கீடு வாங்கித் தருவாங்க? எல்லா வேலையும்  இந்த சாப்ட்வேர் பசங்களுக்கே போகுது. கேட்டா மெரிட்டுன்றாங்க! - உனக்கும்தான் சொல்றேன் - க மு க காரனுங்க எஞ்சினியர்களையும் நிம்மதியா இருக்க உட மாட்டானுங்க. ."
 
"இலவச கைப்பேசி வழங்கிய உங்கள் அன்புச்சகோதரனுக்கே உங்கள் வாக்கை அளிப்பீர்"
 
எனக்கும் கொஞ்சம் கோபம் வந்தது. "அதுக்காக இப்பவும் நீ ஜாதி பாக்கறதெல்லாம் சரியில்லை"
 
"அத்தை உடுறா. புதுசா நடிகன் காமேஷ் ஆரம்பிச்சிருக்கானே கட்சி - அதுக்கு என்ன சான்ஸு?"
 
"அவனுக்குப் பொழைக்கவே"
 
"இலவச கைப்பேசி வழங்கிய உங்கள் அன்புச்சகோதரனுக்கே உங்கள் வாக்கை அளிப்பீர்"
 
"தெரியலடா. அவன் அவன் பெரிய பெரிய மேட்டர்லாம் இலவசமாத் தரேன்றபோது இவன் லாப்டாப் தரேன்றான். யார் அதுக்குப்போயி ஓட்டுப்போடப்போறாங்க"
 
"சரி, க மு க தலைவருக்கு எக்ஸ்பயரி டேட் வந்தாச்சுல்லே, யாரை அவர் பதவிலே உக்கார வைக்கப்போறாராம்?"
 
"க மு க, அ உ க மு க பத்தி இந்தப்போன்லே பேச வேணாம்.. ரிஸ்க்கு"
 
"இலவச கைப்பேசி வழங்கிய உங்கள் அன்புச்சகோதரனுக்கே உங்கள் வாக்கை அளிப்பீர்"
 
"நான் கால் பண்ணட்டுமா?"
 
"இன்னும் ரெண்டு நிமிஷத்துக்குள்ள பண்ணு"
 
"இலவச கைப்பேசி வழங்கிய உங்கள் அன்புச்சகோதரனுக்கே உங்கள் வாக்கை அளிப்பீர் - இந்த உரையாடலில் ஆட்சேபகரமான எந்தச்சொல்லாடலும் இல்லாததால் எங்கள் தகவல் தொகுப்பிலிருந்து நீக்கப்படுகிறது. மறவாதீர் அ உ க மு க." 
 
இவன் சொல்வதும் சரிதான். தாமதம் செய்யாமல் உடனே ஓட்டுப்போட்டுவிட வேண்டும்.
 
என் வாகனத்தின் எஞ்சினுக்கு உயிர் கொடுத்தேன். ஓட்டுப்போட்டுவிட்டு வந்து வேலையைத் தொடரலாம். கஸ்டமர் திட்டினால் சகித்துக் கொள்ளலாம் - அரசாங்கத்தைப் பகைத்துக்கொள்வது முடியாது.
 
எஞ்சினின் குரல் கேட்டது - "எங்கே செல்ல?"
 
கைப்பேசியிலிருந்து வாக்குச்சாவடியின் GPS மேப்பின் லின்க்கைக் கொடுத்தேன்.
 
யாருக்கு ஓட்டுப்போட? குழப்பம் தலைதூக்கியது.
 
பொ மு க (பொறியாளர் முன்னேற்றக்கழகம்) க மு க (கணிமை முன்னேற்றக்கழகம்) வுடன் கூட்டணி அமைத்திருக்கிறது. க மு க தலைவர் ஏராளமாக இலவசம் அறிவித்திருந்தாலும் எதாலும் எனக்குப் பிரயோஜனம் இல்லை. அதே நிலைதான் அ உ க மு க விலும். (அகில உலக க மு க) எந்த இலவசமும் எனக்கு உதவாது.
 
எஞ்சின் கிளம்பி சீராக ஓடுகிறது. "தமிழ்க்கணிமை அமைக்கப் பாடுபடும் க மு கவுக்கே உங்கள் ஓட்டு என்றார் வாகனத்திரையில் க மு க தலைவர்.
 
தமிழ்க்கணிமையை வைத்தே இன்னும் எத்தனை நாள் ஓட்டு வாங்குவார் இவர்? 40 ஆண்டுகளாக நாட்டை ஏமாற்றியது போதாதா? இதே முழக்கத்தை வார்த்தைகள் மட்டுமே மாற்றி அ உ க மு க தலைவர் சொல்கிறார். இந்த இருவரைத் தவிர வேறு வழி இல்லையா?
 
வசந்துக்கு போன் போட்டேன்.
 
"ஆமாம், 'இருவருக்குமே எனக்கு வாக்களிக்க விருப்பமில்லை'ன்னு ஓட்டு போட முடியுமா?"
 
"அது இந்த எலெக்ஷன்லே முடியாது. அடுத்த எலக்ஷன்லே செய்றதா சொல்லி இருக்காங்க"
 
"எதாவது DMD உபயோகப்படுத்தலாமா?" DMD என்பது Decision Making Device.
 
"பூத்துக்குள்ளே உபயோகப்படுத்த முடியாது. வெளியவே யூஸ் பண்ணிடு"
 
என் கைப்பேசியிலிருந்து DMD நிரலைத் துவங்கினேன்.
 
அது கேள்விகள் கேட்க ஆரம்பித்தது.
 
"உங்கள் வயது என்ன?"
 
"உங்கள் ஜாதி என்ன?"
 
"உங்கள் வருமானம் என்ன"
 
இப்படி 20 கேள்விகள் கேட்ட பின்,
 
"பொதுவாக உங்கள் ஜாதியைச் சேர்ந்த, உங்கள் வயது வருமானத்துடன் ஒத்துப்போகும் பெரும்பான்மையோனாரின் வாக்கு விவரம் இன்னும் சற்று நேரத்தில் இத்திரையில் காட்டப்படும்"
 
0% ல் ஆரம்பித்து பொறுமையாக பச்சை நிறமாகிக்கொண்டிருந்தது.
 
40% ஐத் தாண்டும்முன் வாக்குச்சாவடி வந்துவிட்டது.
 
மெடல் டிடக்டரைத் தாண்டி உள்ளே சென்றபோது காவலர் -"யோவ் - அந்த செல்போனை இங்கே வச்சுட்டுப் போ" என்றான். இவர்களுக்கு மரியாதையே தெரியாதா?
 
DMD முடிவு தெரியாமலே உள்ளே சென்றேன், வாக்களித்தேன்.
 
திரும்பி வருகையில் மீண்டும் வசந்தை அழைத்து விவரம் சொன்னேன்.
 
"அப்போ, DMD சொன்ன மாதிரி ஓட்டுப் போடலையா?"
 
"எங்கே - அதுக்குள்ளேதான் உள்ளே போயிட்டேனே."
 
"அப்புறம் எப்படிதான் முடிவு பண்ணே"
 
"ஒரு பழைய காலத்து DMD யை யூஸ் செஞ்சுதான்.."
 
"அது என்னடா பழைய காலத்து DMD?"
 
"கையிலே ஒரு காயின் இருந்துது.. பூவா தலையா போட்டுப் பாத்தேன்"

| | |
oooOooo
சுரேஷ் பாபு அவர்களின் இதர படைப்புகள்.   சிறுகதை பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2006 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |