ஜூன் 09 2005
தராசு
வ..வ..வம்பு
முச்சந்தி
உள்ளங்கையில் உலகம்
டெலிவுட்
மஜுலா சிங்கப்புரா
மனம் போன போக்கில் மனிதன் போகலாமா?
நையாண்டி
கவிதை
ஆன்மீகக் கதைகள்
சிறுகதை
அடடே !!
தொடர்கள்
 
  முதல் பக்கம்
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
முச்சந்தி : நடை
- என். சொக்கன் [nchokkan@infactindia.com]
| Printable version | URL |
"போலீஸ்காரரின்பக்கம் தலையைத் திருப்பாமல், சரசரவென்று சாலையைக் கடந்து நான் நடந்து வந்த பக்கத்துக்கு நேர் எதிர்பக்கத்தை அடைகிறேன்."

இரவு என்முன்னே நீண்ட சாலையாக விரிந்திருக்கிறது. கண்ணுக்கெட்டிய தூரம்வரை இருண்ட பாதை, அதன் இருபுறமும் அங்கங்கே சின்னச்சின்னதாக வெளிச்சப் பொட்டுகள். மரங்கள்கூட அசையாமல் அமைதிகாத்துக்கொண்டிருக்க, காற்றில்லாத குளிர். இரை தேடித் தளர்ந்த பெரிய மிருகம்போல் நகரம் உறங்கப்போயிருக்க, வாகனப் போக்குவரத்தும் குறைந்துபோயிருந்த ரோட்டில் நான்மட்டுமே நடந்துகொண்டிருப்பதாகத் தோன்றியது.

'பேசாம வண்டி எடுத்துட்டு வந்திருக்கலாம்', எரிச்சலோடு சாலையைத் திரும்பிப் பார்க்கிற நான். என் மன உளைச்சலைச் சற்றும் பொருட்படுத்தாத ராத்திரி நகரம் நகராமல் முடங்கிக் கிடந்தது. கடைசி பஸ் போயாகிவிட்டது, பகல் நேரத்தில் குறுக்கும் நெடுக்குமாக சாலைகளை முழம் போட்டுக்கொண்டு சுற்றுகிற ஆட்டோக்களையும் இப்போது காணோம், அதிர்ஷ்டவசமாகக் கண்ணில் படுகிற ஓரிரு ஆட்டோக்காரர்களும், எங்கள் வீடு இருக்கிற புறநகர்ப் பகுதியின் பெயரைக் கேட்டதும் பேயைக் கண்டவர்கள்போல் அலறுகிறார்கள்.

அழுகின காய்கறிகளின் நாற்றம் சுவாசத்தைத் தொந்தரவு செய்தது. அப்போது நான் கடந்துகொண்டிருந்தது ஒரு மார்க்கெட்டாக இருக்கவேண்டும் என்று ஊகித்தேன். வெங்காயத் தோலிகள் சிறுகுன்றுகளாகக் குவித்துவைக்கப்பட்டிருக்க, அங்கங்கே சாக்குப் போர்த்தின காய்கறிப் பாறைகள் செய்து, அவற்றின்மேல் சிலர் கட்டியிருந்த லுங்கியே போர்வையுமாக ஆழ்ந்த உறக்கத்திலிருந்தார்கள். ஓரமாக லாந்தர் பொருத்தின தள்ளு-கடையில் முட்டை தோசை சுறுசுறுப்பாக விற்பனையாகிக்கொண்டிருக்க, ராத்திரி எத்தனை மணிக்கும், அங்கே மலிவு விலையில் பசி தணிகிற ஏழையர்.

இன்னும் சற்று தூரம் நடந்தபின் ஒரு சிறிய தியேட்டர் வந்தது. மங்கலான விளக்கு வெளிச்சத்தில் அதன் போஸ்டரை உன்னித்தபோது, நாகார்ஜுனாவோ, வெங்கடேஷோ மனம் நிறைந்து சிரித்துக்கொண்டிருக்க, ஏதோ தெலுங்குப்படம். உள்ளே சினிமா ஓடிக்கொண்டிருப்பதற்கான அடையாளங்கள் ஏதுமில்லாமல் அந்த தியேட்டர் இருண்டு காணப்பட்டது, அதன் வெளிச்சுவரைக் கடந்து  உள்ளே ஏதும் ஆட்டோக்கள் காத்திருக்கிறதா என்று பார்த்துவந்தேன், இல்லை.

'காபி டே' மூடிக்கிடக்க, அதன் கண்ணாடிக் கதவில் தொங்கிய அட்டையில் கவிழ்த்து வைக்கப்பட்ட கோப்பைகள் தெரிந்தன. அதனருகிலிருந்த பலகையில் ஒரு பெண் தவழ்ந்தகோலத்தில் படுத்திருக்க, 'அடல்ட்ஸ் ஒன்லி' என்று பக்கத்தில் எழுதியிருந்தது பிராந்திக்கடை. கடைக்கு எதிரிலேயே சோம்பலாக மறைந்து நிற்கிற கடலை வண்டியும், தர்பூசணிக் கடையும்.

அந்த நடுராத்திரியிலும், நடைபாதையில் இரண்டு பிளாஸ்டிக் ஸ்டூல்கள் வைத்து யாரோ மல்லிகைப் பூச்சரம் விற்றுக்கொண்டிருந்ததைப் பார்த்ததும், எங்களூரின் ராத்திரிப் பூக்காரன் நினைவுக்கு வந்தான். பிளாஸ்டிக் பையில் மலர்ந்தும் மலராத பாதி மலர்களை அடைக்காமல் அடைத்துக்கொண்டு வருவான். கிணிகிணியென்று ஒன்றரை கிலோமீட்டர் தொலைவிலேயே கேட்கிற அவனுடைய மணிச்சத்தம் எங்கள் ஊர்ப் பிரபலம்.

அம்மா எங்களைத்தான் பூ வாங்க ஏவுவாள். நாங்கள் வாங்கி வந்ததும் அதைச் சேலைத் தலைப்பிலோ, ஒரு தட்டிலோ கொட்டிக்கொண்டு, காசு கொடுத்தனுப்புவாள், பூக்காரன் அந்தக் காசைக்கூட சரியாக கவனிக்காமல் காலியான பிளாஸ்டிக் பைகளைமட்டும் கவனமாகக் கேட்டு வாங்கிக்கொள்வான். மறுநாள் பிழைப்பு அவனுக்கு அதில்தான். இப்போது யோசிக்கிறபோது எல்லாப் பூக்களும் விற்றுத் தீர்ந்தபிறகு அந்த வாசமான பிளாஸ்டிக் பைகளை முகர்ந்து பார்க்கவேண்டும் என்று அவனுக்கு ஒரு ஆசை இருந்திருக்கும் என்று தோன்றுகிறது. மறுநாள், அவனும் அவனுடைய குட்டிப் பெண்ணும் தோட்டத்தில் மலர்ந்த மல்லிகைகளை அள்ளியள்ளி அந்தப் பைகளில் நிரப்புவதாகக் கற்பனை செய்துபார்க்க, நாசிகளில் நிஜமாக மல்லிகைவாசம்.

மெல்ல நடக்கிறேன். தண்ணீர் நிறைய தேங்கிக்கிடக்கிறது, கவனமாகக் கடந்து போகவேண்டியிருக்கிறது. அந்தக் குட்டையின் நட்டநடுவே ஒரு சிறிய குழி இருந்து அதில் நான் விழுந்துவிட்டால் எப்படி இருக்கும் என்று பைத்தியக்காரத்தனமாக யோசிக்கிறேன். அந்த அசட்டு பயத்தினாலோ என்னவோ, நடைபாதையிலிருந்து விலகி சிலதூரம் சாலையிலும் நடக்கிறேன். போக்குவரத்து அதிகமில்லை. லேசாக மூச்சிரைக்கிறது. எதிரில் தெரிந்தவர்கள் யாரேனும் வண்டியில் வந்தால் ஏறிக்கொண்டுவிடலாமே என்று இயலாமை யோசனை வருகிறது.

மனநிலை தவறியவர்களுக்கான மையம் ஒன்று கண்ணில்படுகிறது. வெளிச்ச ஜன்னல்களை ஊடுறுவிப் பார்க்கிறேன், உள்ளே ஏதும் கலாட்டா நடப்பதாகக் காணோம் - எல்லாம் தூங்கிப்போயிருப்பார்கள். பக்கத்திலேயே இன்னொரு கட்டடத்தின் வாசலில் வாட்ச்மேன் தொய்ந்து உட்கார்ந்திருக்க, உள்ளே ஏகப்பட்ட பைக்-களும், கார்களும். இது என்னவாக இருக்கும் என்று யோசித்தபடி அந்தக் கட்டடத்தைக் கடந்து சென்றுவிட்டு மேலே நிமிர்ந்து பார்க்கிறேன், ஏதோ யுனிவர்சிட்டி என்பதுபோல் எழுதியிருக்கிறது. ஏதாவது தனியார் பயிலகமாகவும் இருக்கலாம், அல்லது வேறெதாவதாகவும்கூட இருக்கலாம். சரியாகப் புரியவில்லை. ராத்திரி வேலையில் என்ன யுனிவர்சிட்டி, அதுவும் இத்தனைபேர் காரில் வந்துபோகிறவிதமாக ?

ஒருபக்கம் அடிக்கடி சக்தி வாய்ந்த வெளிச்சம் பாய்ச்சும் போக்குவரத்துக்கும், இன்னொரு பக்கம் காடுபோன்ற புதர்களின் இருளுக்கும் இடையே இன்னும் கொஞ்ச தூரம் நடக்கிறேன், கால் செருப்பில் ஏதோ பூச்சி புகுந்ததுபோன்றதோர் உணர்வு, உதறிக்கொள்கிறேன். ஒரேமாதிரி உடையணிந்த இரு பெண்கள் ஒரேமாதிரி வாகனமோட்டிப்போகிறார்கள். குறுக்குச்சாலையில் அவர்கள் பிரியும்போது ஒரேமாதிரி தோள்கள் குலுக்கியதாகக்கூட தோன்றியது.

அங்கங்கே தட்டுப்படுகிற சுவர்களில் சினிமா போஸ்டர்களும், ரங்கீலா வண்ண விளம்பரங்களும். இங்கே வந்த புதிதில் ஒரு தமிழ்ப் படப் போஸ்டரைப் பார்த்துவிட்டு, வண்டியை நிறுத்தி, நானும் இறங்கி நின்று, கடந்துபோன ஒருவரிடம், 'இந்தப்படம் எந்த தியேட்டர்ல ஓடுது ?' என்று ஆவலோடு விசாரித்ததை நினைத்து சிரித்துக்கொள்கிறேன். லேசாக மாமிச நாற்றமடிக்கிறது. நடைபாதையிலிருந்து மீண்டும் விலகுகிறேன்.

தெருவோரங்களில் கைவண்டிகள் நிறைய. மீன், சிக்கன் என்று ஏகப்பட்ட மாமிச வகைகள். இவற்றுக்கிடையில் பொருந்தாமல் ஒரு இளநீர்க்கடை. மீன்வறுவல் கடையொன்றை மூடிக்கொண்டிருக்கிறார்கள். சுற்றிலும் நாய்கள் மிச்சம் மீதிக்காகப் போட்டியிடுவதைப் பார்த்தபோது, ஒரு ஹோட்டல் வாசலில், அன்றைய ஸ்பெஷல் பட்டியலை ஆவலோடு பார்க்கிற பூனைகளைப்பற்றிய நகைச்சுவைத்துணுக்கு நினைவுக்கு வருகிறது.

அந்த மீன் வறுவல் வண்டி மிக நவீனமானது. மிஞ்சியதையெல்லாம் உள்ளேயே வைத்து, அணைத்த அடுப்பையும் உள்ளே பதுக்கி, வானம் மறைத்து நிற்கிற இரும்புத் தட்டிகளை இறக்கிவிட்டு மூடினால், வேனை ஓட்டிக்கொண்டுபோய்விடலாம். அந்தக் கடை வண்டி இப்படி மூடிக்கொண்டிருக்கையில், பக்கத்திலேயே இன்னொரு கடை இன்னும் மும்முரமாக நடக்கிறது. சாப்பிடுகிறவர்களை ஏக்கமாகப் பார்த்தபடி காத்திருக்கிற நாய்கள், பிறிதொரு மிருகத்தைக் கொன்று உண்டாலும், சாப்பாட்டினிடையே ஒருதுண்டு, இருதுண்டு இந்த மிருகங்களுக்கும் போடுகிற ஒரு மனிதர், அவரைப் பார்த்துமட்டும் குரைக்காமல், மற்றவர்களை உறுமியபடி வாலைக்கூட ஆட்டச் சக்தியின்றிக் கிடக்கிறது ஒரு நாய். உள்ளே இன்னும் நிறைய மாமிசம் தயாராகிக்கொண்டிருக்கிறது. இதெல்லாம் எந்த அளவு உடம்புக்கு ஆகும் ? என்று யோசித்தபடி நடக்கிறேன். பாம்புப்புற்றுகளுடன் ஒரு ஆலயம் வருகிறது, மனதில் கும்பிடு போட்டுக்கொள்கிறேன்.

சாலை இறுதி வந்துவிட்டது. வேகத்தடையில் தயங்கித் தயங்கி நகர்கிற வாகனங்களைப் பார்த்தபடி பாதிபாதியாக சாலையைக் கடக்கிறேன். சாலையின் மறுமுனையில் ஒரு மண்மேடு இருக்கிறது. ஒருமுறை என் செல்பேசி நடுரோட்டில் தவறிக் கீழே விழுந்தபோது இங்கேதான் ஓரமாக வண்டியை நிறுத்திவிட்டு அவசரமாக அதைப் போய்ப்பார்த்தேன், அதற்குள் ஏதோ ஒரு லாரியால் மிதிபட்டு, முழுக்க நொறுங்கிப்போய் அது கிடந்த கோலம் இன்னும் அழியாமல் நெஞ்சுக்குள் இருக்கிறது.

எதிரே ஒரு லாரிக்காரரிடம் டிரா·பிக் கான்ஸ்டபிள் ஏதோ பேசிக்கொண்டிருக்கிறார். அவரைப் பார்த்ததும் எப்போதும் உள்ளிருக்கிற பயம் எழுந்தது, எனது வாகனம் பக்கத்தில் இல்லை என்றாலும், பயம் பயம்தானே - உயரக் குறைவான பாலத்தைக் காரில் கடக்கும்போது, அதன் ஓட்டுனர் அனிச்சையாகத் தலை குனிந்துகொள்வதுபோல.

போலீஸ்காரரின்பக்கம் தலையைத் திருப்பாமல், சரசரவென்று சாலையைக் கடந்து நான் நடந்து வந்த பக்கத்துக்கு நேர் எதிர்பக்கத்தை அடைகிறேன்.

இந்தப்பக்கம் நடைபாதை ஓரளவு ஒழுங்காக இருக்கிறது. மணல்தான் நிரவியிருக்கிறார்கள் என்றாலும், நடக்க சுகமாக இருக்கிறது. வலதுபக்கம் சிறுகூடாரங்களில் மனிதமுனகல்கள் கேட்கிறது. விறுவிறுவென்று நடந்து கடக்கிறேன். ஒயின் ஷாப் ஒன்றின் வாசலில் வரிசையாக தக்காளிச்செடிபோல ஏதோ நட்டிருக்கிறார்கள், சாலை ஓர மரத்தின் அடியில் ஒரு உடைந்த கழிவறை பீங்கான் கிடக்கிறது. அதையடுத்து உயர்கிற பாதைமுழுக்க இருட்டு. ஒற்றை அறை ஹோட்டல் ஒன்றில் பாதியை அடைத்துக்கொண்டு ஒரு ·ப்ரிட்ஜ். அங்கே ஆனியன் தோசையும், ஐஸ் பியரும் ஒருவர் சாப்பிடுகிறார். (அவர் சாப்பிட்டது அதுதானா என்று தெரியவில்லை, ஆனால் இப்படிச் சொல்லும்போது நன்கு மோனை நயமாக இருக்கிறது !)

விநோதமான தொப்பி அணிந்த அரசு ஊழியர் ஒருவர் என்னைக்கடந்துபோகிறார். செல்·போன்காரர் ஒருவர் சாலையோரமாக வண்டியை நிறுத்தி 'சொல்லும்மா' என்கிறார் அன்புபொங்க. அவர் நிறுத்தியது ஓரமில்லை என்று ஆட்சேபிக்கும்வண்ணம் இரண்டு வண்டிகள் ஹாரனை அலறவிட்டுச் செல்கின்றன. இந்த நேரத்திலும் பஸ்ஸ¤க்கு சிலர் காத்திருக்க, ஒரு உலகை மறந்தவர் விளக்குக் கம்பத்தின் அடியில் தரையில் உட்கார்ந்து ஏதோ யோசித்தபடி இருக்கிறார்.

சாலையைக் கடக்கையில், ஓரமாக நிற்கிற பஸ் எனக்காக மேலும் இரு நிமிடங்கள் காத்திருந்து, நான் கடந்தபிறகு விரைகிறது. இஸ்லாமியத் தொப்பியணிந்த இருவர் கைகாட்டி நிறுத்தி அதில் ஏறிக்கொள்கிறார்கள். அவர்களுக்கு உட்கார இடம் கிடைத்ததா என்று பார்த்தபடி இடதுபக்கம் திரும்பினால், வீடு.

எங்கள் அடுக்ககத்தின் கீழே நான்கைந்து பேர் ஷட்டில் விளையாடிக்கொண்டிருக்கிறார்கள். தொளதொளப்பான ராத்திரி ஆடை அணிந்த பெண் ஒன்று பொதுபொதுவென்று விளையாடுகிறது, சட்டையைக் கீழிறக்கி சரிசெய்துகொள்கிறது. திரும்பிப் படியேறும்போது ஒருமுறை என் வண்டியை ஆதூரமாகப் பார்க்கிறேன் !

மேலே வீடு பூட்டியிருக்கிறது. ஏதோ ஞாபகத்தில் வண்டி சாவியை நுழைத்து அதைத் திறக்கப் பார்க்கிறேன். பிறகு சரியான சாவியைப் பயன்படுத்தித் திறந்து உள்ளே நுழைந்ததும், எல்லா ஞாபகங்களும் மறைந்துபோய், தூங்கலாமா என்கிற யோசனைமட்டும் மனதில் நிற்கிறது.

தூங்கலாமா ?!

PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2005 Tamiloviam.com - Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |