ஜூன் 15 06
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
சிறப்பு ஆசிரியர் : சிவந்தமண் துவங்கி சிக்காகோ வரை
- சிறில் அலெக்ஸ்
Bookmark in Del.icio.us | | Printable version | URL |

சிறப்பு ஆசிரியராய் தமிழோவியத்தில் எழுதும்போது எங்க ஊரு பாட்டுத்தான் நியாபகம்வருது. 'தாஸ் தாஸ், சின்னப்ப தாஸ் தாஸ்... பாஸ் பாஸ் நீ இப்ப பாஸ் பாஸ்".

லைகள் பாறைகள் மணல் மேடுகள். என் முதல் பதிவுத் தொகுப்பை படித்தவர்களுக்குத் தெரியும் நான் ஒரு அங்கீகரிக்கப்பட்டு, மூன்றுமுறை வடிகட்டப்பட்டு, ஐ எஸ் ஐ முத்திரை குத்தப் பட்ட மீனவ கிராமத்தான். உலகின் ஏதோ ஒரு அடையாளம் தெரியாத மூலையில், வெளி உலகைவிட்டே ஒதுங்கி, தெற்கே முடிவில்லா கடல் நோகி வாழும் சில மனிதர்கள் மத்தியில் பிறந்தேன் வளர்ந்தேன்.

பாரதி ராஜா தன் 'இனிய தமிழ் மக்களுக்கு' அறிமுகப் படுத்திவைத்த முட்டத்தின் ஒரு சிறுபகுதிதான் 'சிவந்தமண்'. 16 கி.மி தொலைவிலுள்ள நாகர்கோவில்  போய்வருவதே எங்களுக்கு ஒர் செல்லச் சிற்றுலா. பஸ் ஏறி பயணிப்பது ஒரு பரவச அனுபவம். சைக்கிள் வைத்திருப்பது பெரிய விஷயம். ஐந்து அல்லது ஆறு கிலோமீட்டர் நடந்தே சென்று நல்ல நீரில் குளிப்பதும், துணிதுவைப்பதும். சிவந்தமண்ணில் ஒரு கடைகூட அப்போது இருக்கவில்லை. கால் சிவக்க, செம்மண் காட்டு வழி நடந்தே உலகை எட்டுவோம். செம்மண் அகழிகளால் பிரிக்கப்பட்ட ஒரு குட்டித்தீவு அந்த 'சிவந்தமண்'.

நாகர்கோவிலில் 'நல்ல' பள்ளிக்கூடங்கள் இருந்தன. கார்மல் ஒரு பேர்போன பள்ளிக்கூடம். குறிப்பிடத் தகும்படி நான் படித்த முதல் பள்ளிக்கூடம். 6 முதல் 9பது வரை. கிராமங்களைவிட்டு வெளியே செல்லச்செல்ல நம்மிடமிருக்கும் கிராமத்தான் நம்மை வீடு மெதுவாக வெளியேறுவான். நம் பார்வை பரவலாகிறது. மாதாகோயில் கெழக்காலே மணல்மேடு மேக்காலே என இருக்கும் நம் ஊரைவிடவும் 'உலகம்' பெருசு எனப் புரிகிறது. நம்ம சிலுவை, சின்னப்பன், லூர்து, லூக்காசை தவிர்த்து ராம், ரஹீம் எல்லாம் இருக்கிறார்கள் என்பதும் தெரிகிறது.

10ஆம் வகுப்பு முடித்ததும் வாழ்க்கையில் பெரிய திருப்பம். 'சாமியார்' (பாதிரியார்)ஆகவேண்டும் எனச் சொல்லி வட ஆர்காட்டில் திருப்பத்தூரரிலிருக்கும் 'டான் போஸ்கோ' நிறுவனங்களை நிறுவி கண்காணிக்கும் சலேசிய சபை குருத்துவப் பள்ளியில் சேர்ந்தேன். இளைஞர்களை தங்கள் சேவையின் மையமாய் வைத்து செயல்படுகிறார்கள் சலேசியர்கள். சென்னையில் சில 'அன்பில்லங்களில்' குப்பைக் காகிதம் சேர்த்து பிழைக்கும் மாணவர்களுக்கு ஆதரவளிப்பவர்களும், மேல்தட்டு மாணவர்கள் படிக்கும் எக்மோர் டான் போஸ்கோவை நிர்வகிப்பவர்களும் இவர்கள் தான்.

டான் போஸ்கோவில் என்னிடம் மீதி ஒட்டிக்கொண்டிருந்த கிராமத்தானையும் கழட்டிவிட்டேன். கவிதை, கதை, காமெடி, நடிப்பு என இரண்டு வருடங்களில் புதுமையான அனுபவமாயிருந்தது பள்ளிப்படிப்பு. 'தன்னம்பிக்கை' எனும் மந்திரம் கற்றேன். 10ஆம் வகுப்புவரை தமிழில் படித்துவிட்டு 11, 12 ஆங்கில வழிப்பாடம். அதிலும் ஜெயித்தேன். பள்ளியில் மூன்றாவதாக தேர்ந்தேன். குறுகிய காலத்தில் செம்மையாக ஆங்கிலம் படிக்க, அந்த 30 நாட்கல் புத்தகம் தவிர, ஒரு வழி கண்டுபிடித்தேன். நாம் தமிழில் நன்றாக அறிந்த விஷயம் ஏதாவது ஆங்கிலத்தில் இருக்கிறதா எனத் தேடினேன். பைபிள் கிடைத்தது. இப்படித்தான் ஆங்கிலம் கற்றேன். 10ஆம் வகுப்பில் டீச்சர் தந்த ஆங்கில இலக்கணப் பாடங்கள் உதவின.

+2 முடித்து இரண்டு வருடம் தொடர்ந்து பாதிரியார் படிப்பு. திடீரென மனமாற்றம். செமினேரி விட்டு வெளியேறினேன். இது என் வாழ்க்கையில் சுகமான ஒரு தோல்வியாக அமைந்தது.

Cyril Alex1993 சென்னை வந்து என் மைத்துனரின் மிலிட்டரி ஹோட்டலில் தங்கி பில் போட்டுக் கொண்டே கணிணி படிப்பும். சர்ச் பார்க்குக்கு நேர் எதிராய் மாடியில் இருந்தது அந்த ஹோட்டல். கிராமம், செமினரி என சிறு குட்டையிலிருந்த மீனைத்தூக்கி காவிரி(கூவம் என்றும் சொல்லலாம்) ஆற்றில் விட்டதுபோல வாழ்க்கை ஓடியது. இந்த நாட்கள் அதிகம்  தனிமையில் கழிந்தன. இதுபோல ஹோட்டல்களில், புகையும் அழுக்கும் படிந்த அறைகளில் தங்கிக்கொண்டு, கூரையில்லாத கழிவறையில் கழித்து, குளித்துக்கொண்டு வாழும் அனுபவம் எல்லொருக்கும் வாய்க்கவேண்டுமென நினைக்கிறேன்..வாழ்த்துகிறேன். எங்கேயும், எதையும் சாதிக்கமுடியும் எனும் நம்பிக்கையைத் தந்தன இந்த நாட்கள்.

1993 சென்னை லொயோலாவில் சூர்யாவுக்கு ஜூனியராக வணிகவியல் பிரிவில் இடம் கிடைத்தது. இங்கும் ஒளிர வாய்ப்புக் கிடைக்குமா என ஒன்றரை வருடம் காத்திருப்பு. பின்னர் 'லொயோல டைம்ஸ்' எனும் ஆங்கில வாரப் பத்திரிகை கல்லூரியில் துவங்கப்பட்டது அதன் தலமை எடிட்டாராகும் வாய்ப்பு வந்தது. இந்தியன் எக்ஸ்பிரஸில் எங்கள் குழுவை வைத்து கலந்தாலாய்வு நடத்தி படத்தோடு கட்டுரை வந்தபோது அந்த முட்டத்து கிராமவாசி என்னைவிட்டு வெகுதூரம் போயிருந்தான்.

மூன்றாம் வருடம் ஐக்கஃப்(AICUF) எனும் ஒரு மாணவர் இயக்கத்தின் ஆங்கிலப் பிரிவுக்கு தலமை பொறுப்பு. அதில் பெரிதாய் ஒன்றும் சாதிக்கவில்லை என்றாலும் முதன்முறை ஒரு பெரிய உலகளவிலான அரசியல் இயக்கத்தின் அறிமுகம் கிடைத்தது. திபெத் மாணவர்கள் சங்கமும் ஐக்கஃபும் சேர்ந்து திபெத் பற்றிய விழிப்புணர்வு கூட்டம் நடத்தினோம். மேடையில் பல ஜாம்பவான்களோடு சேர்த்து எனக்கும் மரியாதை கிடைத்தது. சாயுங்கால செய்தித்தாளின் என் பெயரை கடித்துக் குதறி ஒரு செய்திக் குறிப்பும் வந்திருந்தது. 

லொயோலா போன்ற கல்லூரியில் மேல்தட்டு கீழ்தட்டு நடுத்தட்டு என்று தெளிவாக மாணவர்களை அடையாளம் காணமுடியும். நம்ம எல்லாருக்கும் பொதுத்தட்டு.

இன்னும் இரண்டு வருடம் லிபாவில்(LIBA) மெலாண்மை. முதல் முதலாய் பெண்களோடு படித்த அனுபவம். இனிய தோழிகளின் பழக்கம் இன்னும் தொடர்கிறது. தோழர்கள்? சொல்லவே வேண்டாம். ஒரு தோழியின் வீட்டுக்கு வாராவாராம் 'விடாது கறுப்பு' பார்க்கப் போவோம். இன்னொருத்தியின் கைனட்டிக் ஹோண்டாவில் சம்மர் ப்ராஜெக்ட். தோழியின் டால்ஃபின் காரை எடுத்து முதன் முதலில் இரண்டாம் கீயரிலேயே ஓட்டிக் கொண்டிருந்தது, முப்பதுபேராய் 'While you were Sleeping' எனும் மெல்லிய காதல் படத்துக்குப் போயிருந்து கத்தி கலாட்டா செய்து அங்கிருந்த தீவிர 'பீட்டர்களை' எரிச்சலூட்டியது, தி. நகர் அருணாவில் கூடியது, நள்ளிரவில் அடையார் பீச்சில் போலீஸ் துரத்த,"மச்சான் ஏ.சீடா"(Asst. Commissioner)எனக் கத்திக்கொண்டே ஆளுக்கொரு திசைநோக்கி ஓடியது என நினைவுகள் பல. இவற்றிற்கு மத்தியில் படிப்பும்.

கல்லூரி முடித்ததும் மென்பொருள் வித்தகர் வேலை கிடைக்குமா எனத் தேடினேன், மென்பொருள் விற்பனர் வேலைதான் கிடைத்தது. பல்லைக் கடித்துக்கொண்டு கிடைத்த வேலையை செய்யவேண்டியதாயிற்று. சில வருடங்கள் விற்பனராய் வேலை. கடினமான வருடங்கள் அவை. ஞாயிறு எப்போது வரும் எனும் ஏக்கத்திலேயே வார நாட்கள் கழிந்தன. விருப்பமில்லாத ஒரு வேலையை செய்வது எத்தனை கடினமான சுமை?

ஒருபோதும் வெளிநாடு போய் பணம் சேர்க்க வேண்டுமென்றோ பெரிய பணக்காரனாகவேண்டுமென்றோ நான் நினைத்ததில்லை. நானும் என் நண்பனும் சொல்லிக்கொள்வோம், '12 ஆயிரம் ரூபாய் சம்பளம் கிடைத்தால் போதும். கல்யாணம் பண்ணிக் கொள்ளலாம்' என்று. வாழ்க்கையில் விதி விளையாடியது, நண்பர்கள், உறவினர், தாய், தந்தை என சந்தோஷமாக வாழ்ந்திருந்தேன். மென்பொருள் படிக்க கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தினேன். சிறிது நாட்களிலேயே அமெரிக்காவிற்கு அனுப்பப் பட்டேன்.

சின்ன வயதில் சிவந்தமண்ணில் விளையாடிக்கொண்டிருக்கும்போது சில நேரங்களில் திருவனந்தபுரம் நோக்கிப் பறக்கும் விமானங்களை," ஐ ஏரோப்ளேன்" என, அரைக்கால்சட்டை நழுவுவதயும் மறந்து  துரத்திக்கொண்டு ஓடியிருக்கிறோம். முதன் முதலில் விமானத்தில் ஏறிய போது ஏனோ ஜீன்சை மேலே இழுத்து விட்டுக்கொள்ளத் தோன்றியது.

சிக்காகோ வந்திறங்கினேன். உலகம் ரெம்ப பெருசு என அந்த 18 மணி நேர பயணத்தில் புரிந்தது. 

நாட்கள் ஏனோ நமக்காய் காத்திருப்பதில்லை. ஒருநாள் இந்தப் பெண் பிடித்திருக்கிறதா எனும் மின்னஞல் புகைப்படத்தோடு வந்தது. சிக்காகோவில் இருந்துகொண்டே சென்னையில் பெண் பார்க்கும், திருமணத்துக்கு கூட நேரமில்லாத பல மென்பொருள் வித்தகர்களில் நானும் ஒருவன். திருமணம் இனிய அனுபவம். தந்தையானது அதனினும் இனிய அனுபவம்.

மனைவி பிள்ளை என மீண்டும் சிக்காகோ பிரவேசம்.

என் மனைவியின் உந்துததால்தான் எழுத ஆரம்பித்தேன். அவர்தான் என் முதல் ரசிகை. என் முதல் விமர்சகி.Sathyaraj Rekha

தொலைந்துபோன அந்த முட்டத்து மீனவ கிராமத்தானை தேடிக் கண்டுபிடித்து, அலைகள் பாறைகள் மணல்மேடுகள் எழுதினேன். திரு. செயமோகனின் பாராட்டும், தினமலரின் குட்டிக் கட்டத்தில் அங்கீகாரமும் கிடைத்தன.

இன்று ஒரு சிறப்பு ஆசிரியராய் தமிழோவியத்தில் எழுதும்போது எங்க ஊரு பாட்டுத்தான் நியாபகம்வருது. 'தாஸ் தாஸ், சின்னப்ப தாஸ் தாஸ்... பாஸ் பாஸ் நீ இப்ப பாஸ் பாஸ்".

நன்றி!!! என் மனைவி ஷோபனாவுக்கு, தேன்கூட்டுத் தோழர்களுக்கு, தமிழோவிய நண்பர்களுக்கு, வலைப்பதிவர் வட்டத்திற்கு, வாசக அன்பர்களுக்கு.

காட்டில் பூத்த மலர்களை காட்டாறு எங்கெல்லாமோ அடித்துச் செல்வதைப்போல வாழ்க்கை நம்மை நடத்திச் செல்கிறது. ஓஷோ சொல்வதைப்போல 'நீந்தத் தேவையில்லை, மிதந்தாலே போதும்'.

| | | | |
oooOooo
சிறில் அலெக்ஸ் அவர்களின் இதர படைப்புகள்.   சிறப்பு ஆசிரியர் பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2006 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |