ஜூன் 15 06
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
சிறுகதை : பந்தயக்குதிரை
- என்.கணேசன் [nganezen@yahoo.com]
Bookmark in Del.icio.us | | Printable version | URL |

தூக்க மாத்திரைகளை விழுங்கும் முன் பரத் தாத்தாவிற்கு மட்டும் ஒரு வரியில் கடிதம் எழுதினான். "என்னை மன்னிச்சுடுங்க தாத்தா" அவர் அவன் மேல் உயிரையே வைத்திருந்தார். அவன் பிரிவை அவர் தாங்க மாட்டார். ஆனாலும் அவனுக்கு வேறு வழி தெரியவில்லை. மாத்திரைகள் உள்ளே போய் மரணம் நெருங்குகிற அந்த கடைசி தருணத்தில் கூட அவன் அவரை மட்டுமே நன்றியோடு நினைத்துப் பார்த்தான்.

அவனை அவர் போல யாரும் நேசித்ததில்லை...

Grand Fatherஅவனுக்கு நினைவுக்கு எட்டிய பிஞ்சுப் பருவத்திலேயே அவன் கூட இருந்தது அவர் தான். அப்பா மாதவன் பெரும்பாலும் வியாபார விஷயமாக வெளியூர்களில் இருந்தார். அம்மா மைதிலி அவன் தூக்கத்திலிருந்து காலையில் எழும் போது வேலைக்குப் போயிருப்பாள். அவள் இரவில் திரும்பி வரும் போது அவன் உறங்கியிருப்பான். அவள் ஒரு வெளிநாட்டுக் கம்பெனியில் உயர்ந்த பதவியில் இருந்ததால் நேரம் காலம் இல்லாமல் உழைக்க வேண்டியிருந்தது. விடுமுறை நாட்களிலோ மகன் உட்பட யாரும் தன்னை  தொந்திரவு செய்யாமல் இருப்பது நல்லது என்று அவளுக்குப் பட்டது. இப்படி பெற்றோர் இருவருமே தங்கள் ஒரே பிள்ளையைக் கவனிக்க நேரமில்லாமல் இருப்பது தாத்தா ரங்கநாதனுக்கு சரியாகப் படவில்லை.

ஒரு நாள் அவர் தன் மகன் மாதவனிடமும் மருமகள் மைதிலியிடமும் வெளிப்படையாகச் சொல்லி ஆதங்கப் பட்டார். மாதவனோ "என்னப்பா செய்யறது" என்று கேள்வியையே பதிலாகச் சொல்லி அடுத்த கணம் அதை மறந்து போனார். மைதிலியோ அமெரிக்காவை உதாரணம் காட்டினாள். "அங்கெல்லாம் இங்கத்து மாதிரி எப்பவுமே குழந்தைகள் கூட இருந்து கொஞ்சி செல்லம் கொடுத்துக் கெடுக்கறதில்லை மாமா". அவர் அப்படித்தான் செய்கிறார் என்று அவள் சொல்லாமல்  சொல்லிக் காண்பித்தாள்.  தாத்தா வந்த கோபத்தை அடக்கிக் கொண்டு அவனை அணைத்தபடி சொன்னார்: "இவங்களுக்கு எப்படிடா குழந்தை புரிய வைப்பேன்".

தன்னால் முடிந்த வரை தாத்தா அவனுக்கு சர்வமாக இருந்தார். கூட விளையாடினார்.  கதைகள் சொன்னார்.  சோறு ஊட்டினார். தாலாட்டு பாடினார். அவன் பள்ளிக்கு செல்ல ஆரம்பித்த பின் வேறு ஒரு பிரச்சினை ஆரம்பித்தது. மகன் படிப்பதைத் தவிர வேறு என்ன செய்தாலும் அது நேரத்தை வீணாக்குவது என்று அம்மா நினைக்க ஆரம்பித்தாள். தன் மகன் அகில இந்திய அளவில் படிப்பில் சாதனை படைக்க வேண்டும்

என்றும் அதற்கு அவனுக்கு மிகச் சிறு வயதிலேயே பயிற்சி அவசியம் என்று எண்ணினாள்.  ஒவ்வொரு தேர்விலும் அவன் முதல் ரேங்க் வர வேண்டும் என்று எதிர்பார்த்தாள்.  அவனும் படிப்பில் சுட்டியாக இருந்ததால் முதல் ரேங்க் வந்தான்.  ஒன்றாம் வகுப்பில் ஒரு முறை அவன் நான்காம் ரேங்க் வந்து விட அது அவளுக்குப் பெரிய அவமானமாக இருந்தது.  தன் மாமனாரிடம் அவன் விளையாடுவதும் கதை கேட்பதும் தான் அவன் ரேங்க் குறையக் காரணம் என்று கண்டுபிடித்தாள்.  அதை மாமனாரிடம் சொல்லியும் காண்பித்தாள்.

"குழந்தை என்ன மெஷினா மைதிலி. அந்தந்த வயசு சந்தோஷங்கள் அதுக்கு வேண்டாமா? ஒன்றாம் கிளாசில் போய் இதை நீ பெரிசு பண்றியே"

"இது அந்தக் காலம் மாதிரி இல்லை மாமா. எவ்வளவு படிச்சாலும் பத்தாது. நாலாம் ரேங்க் வரும் போது முழிச்சுக்காட்டா அப்புறம் அது பெயிலில் வந்து நிற்கும்"

தாத்தா அந்த முறை விடவில்லை. தொடர்ந்து வாதாடினார். அம்மா கடைசியில் அப்பாவிடம் போய் சொன்னாள் "இதப் பாருங்க. உங்க அப்பா இங்க இருக்கிற வரை நம்ம பையன் உருப்பட மாட்டான்"

அப்பா தாத்தாவிடம் சலிப்புடன் கேட்டார். "என்னப்பா இது.."

தாத்தாவின் முகத்தில் தெரிந்த வலி பரத்திற்கு இப்போதும் பசுமையாக நினைவு இருக்கிறது. மருமகளின் வார்த்தைகளா, மகன் அதைக் கேட்டுக் கொண்டு வந்து தன்னிடம் வந்து சலித்துக் கொண்டதா எது அதிகமாக அவரை அதிகமாய் காயப் படுத்தியது என்று தெரியவில்லை. 

அன்றே தன் கிராமத்து பூர்வீக வீட்டுக்குப் போய் விட தாத்தா முடிவு செய்தார்.  அன்று அவனைக் கட்டிப் பிடித்துக் கொண்டு நிறைய நேரம் அழுதார்.  "தாத்தாவோட உடம்பு தான் அங்கே போகுது. மனசையும், உயிரையும் உங்கிட்ட தான் விட்டுட்டுப் போறேன். நீ நல்லாப் படிக்கணும். பெரிய ஆளா வரணும் என்ன"

அவர் போன அந்தக் கணமே அவன் உலகம் சூனியமாகியது.  அவன் அன்று அழுதது போல் வாழ்வில் என்றுமே அழுததில்லை. அம்மா அலட்சியமாகச் சொன்னாள். "எல்லாம் நாலு நாளில் சரியாயிடும்" அந்தத் துக்கம் அவள் சொன்னது போல நான்கு நாட்களில் சரியாகவில்லை.

சாசுவதமாக அவனுள் தங்கி விட்டது. 

அம்மா அவனிடம் எப்போது பேசினாலும் அது அவன் படிப்பைப் பற்றித் தான் இருந்தது. ஆரம்ப நாட்களில் ஞாயிற்றுக் கிழமைகளில் அவன் அம்மாவிடம் வேறு எதைப் பற்றியாவது சொல்லப் போனால், "ப்ளீS, பரத். அம்மாவுக்கு இன்று ஒரு நாள் தான் கிடைக்கிறது. தொந்திரவு செய்யாதே" என்று சொல்லி டீவியைப் பார்க்க ஆரம்பித்து விடுவாள். மற்ற விடுமுறை நாட்களிலும் அவள் டீவியில் முழுகி விடுவாள். அவனுக்கு எந்த விலை உயர்ந்த பொருளையும் அவனது பெற்றோர் வாங்கித் தரத் தயாராக இருந்தார்கள். தங்களது நேரத்தை மட்டும் அவனிடம் பங்கிட்டுக்கொள்ள அவர்கள் தயாராக இல்லை. அவனுக்கோ மனிதர்கள் தேவைப்பட்டார்கள்.  தாத்தா போகும் போது லீவிலாவது அவனை கிராமத்துக்கு அனுப்பச் சொல்லி விட்டுப் போனார். அப்போது தலையாட்டினாலும் அவனை எந்த லீவிலும் அங்கே அனுப்பாமல் அம்மா பார்த்துக் கொண்டாள்.  முழுப் பரிட்சை லீவுகளில் கூட அவனை ஸ்பெஷல் கிளாஸ்களில் சேர்த்தாள். அவனுக்கு ஏதாவது படிக்க இருந்தது.

தாத்தா அந்த வீட்டு வாசற்படியை மறுபடி மிதிக்கவில்லை. அப்பா மட்டும் அவரை எப்போதாவது ஒரு முறை சென்று பார்த்து விட்டு வருவார். "எப்பப் போனாலும் அப்பா பரத்தை ஏன் அனுப்பலைன்னு கேட்டுப் புலம்பறார். ஒரு லீவிலாவது அனுப்பணும்  மைதிலி" என்று பல வருடங்கள் கழித்து ஒரு முறை அப்பா அம்மாவிடம் சொல்வது அவன் காதில் விழுந்தது.  "பார்க்கலாம்" என்று அம்மா சொன்னாலும் இது வரை ஒரு முறை கூட அவனை அனுப்பவில்லை. தாத்தாவின் கிராமத்து வீட்டுக்கு போன் வந்த பிறகு எப்போதாவது ஒரு முறை அவனிடம் போனில் பேசுவார்.

அம்மாவின் கண்காணிப்பில் அதுவும் அதிக நேரமோ, அடிக்கடியோ இருக்கவில்லை. அந்த நாட்களில் அவன் மிக
சந்தோ"மாக இருப்பான்.

ப்ளஸ் டூ பரிட்சைக்கு ஒரு மாதத்திற்கு முன் போன் செய்த போது தாத்தா சொன்னார். "பரத் ரிசல்ட் வர்றப்ப உன் போட்டோவை பேப்பரில் பார்க்க ஆசையாய் இருக்குடா".  தாத்தாவுக்காக பரிட்சை முடியும் வரை  படிப்பைத் தவிர வேறு எதிலும் சிறிதும் கவனம் செலுத்தாமல் படித்தான்.

மாநிலத்தில் முதல் மாணவனாக வந்தான். போட்டோவைப் பத்திரிக்கைகளில் பார்த்த தாத்தா அவனுக்குப் போன் செய்து நிறைய நேரம் பேச வார்த்தைகள் கிடைக்காமல் தவித்தார். மாநிலத்தில் முதலிடம் கிடைத்ததை விடத் தாத்தாவின் திக்குமுக்காடல் அவனை அதிகமாக சந்தோஷப்பட வைத்தது. ஆனால் அம்மா அப்பாவிடம் பெருமையாக சொன்னாள் "நான் கண்டிப்பாய் இல்லாமல் இருந்திருந்தால் இந்த ரிசல்ட் வந்திருக்குமா? இப்பவாவது உங்கப்பா இதைப் புரிஞ்சிருப்பார்னு நினைக்கறேன்"

கல்லூரியில் சேர்ந்த பிறகு  அவன் தனிமையை அதிகமாய் உணர ஆரம்பித்தான். ஆரம்பத்தில் இருந்தே அவன் நண்பர்களுடன் பழக அம்மா விதித்த கடும் கட்டுப்பாடுகளால் பெரியவனான போது அவனுக்கு நெருங்கிய நண்பர்கள் கூட இருக்கவில்லை. அப்படியொரு பலவீனமான சந்தர்ப்பத்தில் தான் அவனது சக மாணவன் ஒருவன் அவனுக்கு போதை மருந்தை அறிமுகப் படுத்தி வைத்தான். தனிமையையும் வெறுமையயும் அது மறக்க வைத்தது.  ஒரு செமஸ்டரில் அவனது மதிப்பெண்கள் குறைந்த போது தான் அம்மா ஆராய்ந்து அதைக் கண்டு பிடித்தாள்.

வீட்டில் ஒரு சூறாவளியையே அவன் சந்திக்க நேர்ந்தது.  எல்லாப் பிரச்னைகளும் தீர மரணம் ஒன்று தான் வழியாகத் தெரிந்தது...

நினைவுகள் நின்று போய் எத்தனை நேரம் மயக்கத்திலிருந்தானோ தெரியவில்லை. டாக்டரும் நர்ஸ்களும் பேசும் சத்தம் லேசாகக் கேட்ட போது தான் மரணமும் அவனை ஏமாற்றி விட்டதை உணர்ந்தான்.

அவன் முழுவதும் குணமாகும் வரை அம்மாவும் அப்பாவும் அவனருகிலேயே இருந்தார்கள். அம்மா மிகவும் அதிர்ந்து போயிருந்தாள். எப்போதும் தொடுக்கும் கேள்விக்கணைகளும் இல்லாமல், நீண்ட பிரசங்கங்களும் இல்லாமல் மௌனமாகவே இருந்தாள். அப்பா தான் தேவைப் பட்டபோது பேசினார். வீட்டுக்கு வந்த மறு நாள் அவராகவே அவனிடம் சொன்னார். "சில நாளுக்கு உனக்கு ஒரு இட மாறுதல் நல்லதுன்னு டாக்டர்

சொல்றார். தாத்தாவும் உன்னை அனுப்பச் சொல்லி நிறைய நாளாய் சொல்றார். கிராமத்தில் அடுத்த வாரம் திருவிழாவும் இருக்காம். நீ போய் சில நாள் இருந்துட்டு வா". தன் காதுகளை நம்ப முடியாமல் பரத் அம்மாவைப் பார்த்தான்.  அம்மா முகத்தில் உணர்ச்சியே இல்லை.  அப்பாவின் அக்கறையும், அம்மாவின் மௌனமும் அவன் இது வரை கண்டிராதது.
 
மகனைக் காரில் அனுப்பி விட்டு மாதவன் தந்தைக்குப் போன் செய்து பேசினார்.  நடந்ததைச் சுருக்கமாகச் சொன்னார். கிழவர் உணர்ச்சி வசப்பட்டு வெடித்தார். "நீங்க ஆரம்பத்திலிருந்தே அவனை ஒரு பந்தயக் குதிரை மாதிரி தான் வளர்த்தீங்க. என்னைக்கும் முதல் இடத்தில் வரணும். அது ஒண்ணு தான் உங்களுக்கு முக்கியம். அந்தக் குழந்தைக்குன்னு ஒரு மனசு இருக்கு. ஆசைகளும் தேவைகளும் இருக்குன்னு நீங்க என்னைக்குமே நினைச்சுப் பார்த்ததில்லை. அந்தப் பிள்ளைக்குன்னு ஒரு சுதந்திரம் உன் வீட்டில் இருந்திருக்கா? படிப்பு விஷயம் தவிர, பணத்தால் உங்களால் செய்ய முடிஞ்சதைத் தவிர, தகப்பனாய், தாயாய் நீங்க இது வரைக்கும் அவனுக்கு எதாவது செய்திருப்பீங்களா, ஒரு வி"யமாவது சொல்லு பார்ப்போம்...."
 
அவருக்குச் சொல்ல இன்னும் எத்தனையோ இருந்தது.  ஆனால் நிராயுதபாணியாக, நொந்து போயிருக்கும் இந்தத் தருணத்தில் மகனிடம் மேற்கொண்டு பேச அவரால் முடியவில்லை. க?டப் பட்டுத் தன்னை அடக்கிக் கொள்ள அவருக்கு சிறிது நேரம் தேவைப்பட்டது. "சரி விடு. குழந்தை பிழைச்சுட்டானில்ல அது போதும். அவனை இப்பவாவது இங்க அனுப்பணும்னு உங்களுக்குத் தோணிச்சே. தேங்க்ஸ்" என்று சொல்லி போனை வைத்தார்.
   
தாத்தாவின் கிராமத்துப் பெரிய வீட்டை பரத் முதல் முறையாகப் பார்க்கிறான். பழைய காலத்து வீடு. தாத்தா பேரனைக் கண் கலங்க வரவேற்றார். "வாடா குழந்தை". உள்ளே நுழைந்தவுடன் அவனது சிறு வயதுப் போட்டோ பெரிதாக்கபட்டு சுவரில் தொங்கிக் கொண்டிருந்ததைப் பார்த்தான். தாத்தாவின் தொடர்ச்சியான உபசரிப்பில் பரத் திக்குமுக்காடிப் போனான். அப்பா போனில் எல்லாவற்றையும் சொல்லியிருக்க வேண்டும் என்று ஊகித்தாலும் தாத்தா எதையும் கேட்காதது அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. நிறைய நேரம் கழித்து அவன் கேட்டான். "நடந்ததைப் பற்றி எதுவும் கேட்க மாட்டீங்களா தாத்தா"."சொல்லாமலேயே எனக்கு உன்னைத் தெரியும்டா குழந்தை. நீ முழுசாய் இத்தனை வருஷம் கழிச்சு என் முன்னாடி இங்கே இருக்காய்.  எனக்கு இது போதும். வேற எதுவும் எனக்குக் கேட்க வேண்டாம்" என்று சொல்லி விட்டு உடனடியாக பேச்சை மாற்றினார்.

"இது தான் உங்கள் பேரனா?" என்று கேட்டபடி கிராமத்தினர் பலர் அன்று மாலை வந்தார்கள். அன்பாகப் பேசினார்கள். நிறைய கேள்வி கேட்டார்கள். நிறைய சொன்னார்கள். அவன் காதில் திரும்பத் திரும்பக் கேட்டது ஒன்றே ஒன்று தான். "உங்களைப் பத்திப் பெரியவர் பேசாத நாளில்லை தம்பி".

தொடர்ந்த நாட்களில் எல்லோரும் மிகவும் உரிமையுடன் அந்த வீட்டில் வந்து போனதை பரத் கவனித்தான். சில சிறுவர்கள் தாத்தாவின் வீட்டு முன்பிருந்த விசாலமான காலி இடத்தில் கபடி விளையாடினார்கள். சிலர் உள்ளே வந்து டிவி பார்த்தார்கள். கோயில் திருவிழாவுக்கு ஐந்தே நாட்கள் இருப்பதால் கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் பற்றி கூட தாத்தாவுடன் வந்து பேசினார்கள். இட வசதி தாராளமாக இருந்ததால் தாத்தா வீட்டில் தான் நாடகத்திற்கும், வில்லுப்பாட்டிற்கும், ஒத்திகைகள் நடந்தன. வீடே கலகலவென இருந்தது.  பரத்திற்கு எல்லாமே அதிசயமாக இருந்தது.

"இது என்னோட இன்னொரு குடும்பம்" என்று எல்லாரும் போன பிறகு ஒரு நாளிரவில் தாத்தா புன்னகையோடு சொன்னார். "உன்னை விட்டுட்டு வந்தப்ப எனக்கு திடீர்னு தனியாயிட்ட மாதிரி ஒரு தோணல்.  எனக்கு யாருமே இல்லைன்னு ஒரு விரக்தி. நல்லா யோசிச்சப்போ, நாலே பேர் இருக்கறது தான் உன் உலகம்னு என் மனசு குறுகிட்டது தான் பிரச்னைன்னு புரிஞ்சது.  இந்த கள்ளங்கபடமில்லாத கிராமத்து ஜனங்களையும் என்னவங்களா நினைச்சுப் பழக ஆரம்பிச்சேன்.  நேசிக்க ஆரம்பிச்சேன்.... இப்ப நான் பெரிய குடும்பஸ்தன்"

தாத்தா தன் வாழ்க்கையின் பிரச்னையான கட்டத்தை அணுகிய விதம் அவனை யோசிக்க வைத்தது. "வாழ்க்கையில் எல்லா பிரச்னைகளும் மேலோட்டமாய் தெரிகிற அளவு தாங்க முடியாதது இல்லையோ?"

ஒரு நாள் ஒரு இளைஞன் தயக்கத்துடன் வந்து பரத்திடம் சொன்னான். "சார்..எங்க டிராமால கலெக்டர் வர்ற மாதிரி ஒரு சீன். அந்த வேஷத்துக்குப் பொருத்தமான மூஞ்சி எங்க யாருக்குமில்லை.  நீங்க நடிக்கிறிங்களா? ஒரு அஞ்சு நிமிச சீன் தான். வசனமும் இல்லை..."

பரத் மறுக்கும் முன் ரங்கனாதன் உற்சாகமாகச் சொன்னார்  "அதெல்லாம் என் பேரன் வெளுத்து வாங்கிடுவான்". அவரைப் பொருத்த வரை அவர் பேரனால் முடியாதது எதுவுமில்லை.

வேறு வழியில்லாமல் பரத்தும் அவர்களுடன் சேர்ந்து கொண்டான்.  எல்லாமே அவனுக்கு வித்தியாசமாயும் தமாஷாயும் இருந்தன. முன்பெல்லாம் அவனுக்கு சில மணி நேரம் போவதே ஆமை வேகத்திலிருக்கும்.  ஆனால் இங்கு வந்த பின்பு திருவிழா நாள் வரை நாட்கள் போனதே தெரியவில்லை. அவனும் அவர்களுடன் ஐக்கியமாகி விட்டான். அந்த நாட்களில் போதை மருந்து கூட வந்து ஆசை காட்டவில்லை.

அந்த நாட்களில் தாத்தா கூட ஓய்வெடுக்காமல் எல்லாவற்றிலும் கலந்து கொண்டார்.  "ஐயா, உங்களுக்கு என்ன சின்ன வயசா? இப்படி துள்ளிக் குதித்து ஓடுறீங்க. உடம்பு என்னத்துக்காகும். கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க" என்று ஒருவர் கிழவருக்குப் 'பிரேக்' போட முயன்றார்.

"என் பேரன் வந்தவுடனேயே எனக்கு வயசு குறைஞ்சிடுச்சு. பயப்படாதீங்க. என் பேரன் ஒரு நாள் பெரிய ஆளாய் வருவான். அதைப் பார்க்கிற வரைக்கும் எனக்கு எதுவும் ஆகாது."
 
பரத் அன்றிரவு தூங்கவேயில்லை. அந்த வார்த்தைகள் திரும்பத் திரும்ப அவன் காதில் ஒலித்தன. அந்தக் குரலில் தான் எத்தனை நம்பிக்கை, எத்தனை பெருமிதம்... 

அதிசயமாக மாதவனும் மைதிலியும் திருவிழாவிற்கு கிராமத்திற்கு வந்தார்கள். மைதிலி திருமணம் முடிந்து ஒரே ஒரு முறை தான் அங்கு வந்திருக்கிறாள்.  காரை விட்டு அவர்கள் இறங்கிய மறு கணம் வாண்டுப் பயல்கள் கார் ?¡ரனை மாற்றி மாற்றி அடிக்க ஆரம்பித்தார்கள். மருமகள் வந்ததே பெரியது என்று மனதில் நினைத்த ரங்கனாதன் பயந்து போய் அந்தச் சிறுவர்களை விரட்டி விட்டு வந்தார். அந்தக் கூட்டம், அந்த

சத்தம், அந்த சுத்தமில்லாத சுற்றுப்புறம் எல்லாம் அவளுக்கு என்றுமே ஆகாத விஷயங்கள் என்றாலும் வந்ததில் இருந்து ஒரு வார்த்தை பேசாமல் ஒரு ஓரமாய் கணவனுடன் நாற்காலியில் அமர்ந்து நிகழ்ச்சிகளைப் பார்த்தாள். ஆனாலும் அவள் முழுக் கவனமும் அவள் மகன் மேல் தான் இருந்தது. 

நாடகத்தில் மகன் கம்பீரமாக கலெக்டர் வேடத்தில் நடித்து விட்டுப் போன போது கூட்டத்தினரோடு மாதவனும் கூட சேர்ந்து கை தட்டினார். அப்போதும் கூட ஆழ்ந்த சிந்தனையோடு பார்த்தாளே தவிர அந்த உற்சாகத்தில் கலந்து கொள்ளவில்லை.  அவன் தனது காட்சி முடிந்த பின் அவர்களோடு வந்து உட்கார்ந்து கொண்டான். ரங்கநாதன் முகத்தில் அவனைப் பார்த்த போது ஆயிரம் வாட்ஸ் பல்பு எரிந்தது.

"என் பேரனுக்கு வீட்டுக்குப் போனவுடன் மறக்காமல் திருஷ்டி கழிக்கணும்"

நாடகம் முடிந்த பின் வில்லுப் பாட்டு ஆரம்பித்தது. மாயப் பொன்மானைக் கண்டு மயங்கி சீதா ராமனிடம் எனக்கு வேண்டும் என்று கேட்பதில் ஆரம்பமானது.  நள்ளிரவாகி விட்டதால் நான்கு பேரும் வீட்டுக்குத் திரும்பினார்கள்.  ரங்கநாதனும் பரத்தும் சற்று முன்னால் நடக்க மாதவனும் மைதிலியும் பின்னால் வந்து கொண்டு இருந்தார்கள். பேரனிடம் உணர்ச்சி வசப்பட்டு ரங்கநாதன் சொன்னார்.  "இப்படி எத்தனையோ பேர் இல்லாத ஒரு மாயப் பொன் மானைத் தேடிப் போய் பெரிய பெரிய பிரச்னைகளில் மாட்டிகக்கிறாங்கடா குழந்தை.  இதனால் எல்லாம் சந்தோஷம் வந்துடறதில்லை. இதைத் தொடர்ந்து ஓடற ஓட்டம் என்னைக்கும் முடியறதுமில்லை...." தாத்தா என்ன சொல்ல வருகிறார் என்பது பரத்திற்குப் புரிந்தது. போதையைத்தான் அவர் மாயப் பொன் மான் என்கிறார். அந்த உவமானம் எத்தனை பொருத்தமானது என்று ஒரு கணம் அவன் யோசித்துப் பார்த்தான்.  எத்தனையோ நாள் அவனும் அதன் பின் ஓடி இருக்கிறான். வாழ்க்கையில் முழு மனதாக உற்சாகமாக ஈடுபடும் போது, சின்னச் சின்ன சந்தோஷங்களை பகிர்ந்து கொண்டு அனுபவிக்கும் போது கிடைக்கும் ஆனந்தத்திற்கு முன் இந்த செயற்கையான சமாச்சாரங்கள் குப்பை என மானசீகமாய் அவனால் உணர முடிகிறது.

"இனி நான் அந்த முட்டாள்தனத்தை என்னைக்குமே செய்ய மாட்டேன் தாத்தா பயப்படாதீங்க.  உங்க மனசு வேதனைப் படற மாதிரி நான் இனி எதையும் செய்ய மாட்டேன்.  நீங்க என் மேல வச்சிருக்கிற பாசத்திற்கு கைம்மாறா என்னால வேற என்ன செய்ய முடியும் தாத்தா" சொல்லும் போது அவன் கண்கள் கலங்கின.

"அது போதும்டா குழந்தை எனக்கு.  நீ நல்லா இருந்தா அது ஒண்ணே போதும்"

வீட்டிற்குப் போன பின் மாதவன் தந்தையிடம் சொன்னார். "நாங்க ரெண்டு பேரும் நாளைக்குக் காலைலயே கிளம்பறோம்ப்பா"

ரங்கநாதன் தலையசைத்தார்.  சிறிது யோசித்து விட்டு பரத்தும் சொன்னான். "நானும் அவங்க கூடயே கிளம்பறேன் தாத்தா.  விட்டுப் போன பாடங்களை எல்லாம் பிக்கப் செய்யணும். இப்பப் போகலைன்னா பின்னால் சிரமமாயிடும்"

மகனையே கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்த மைதிலி முதல் முறையாக வாயைத் திறந்தாள். "தாத்தாவையும் இனிமேல் நம்ம கூடவே வந்துடச் சொல்லுடா. நாலு பேரும் சேர்ந்து போலாம்"

மாதவனும் ரங்கநாதனும் அவளை அதிசயமாகப் பார்த்தார்கள். பரத் சந்தோஷத்தின் எல்லைக்குப் போய் அவள் கன்னத்தில் முத்தமிட்டான். குழந்தையின் அன்பு முத்தம் தாயிற்கு எவ்வளவு இனிமையானது என்பதை மைதிலி இருபது வருடங்கள் கழித்து உணர்கிறாள்.

நன்றி: நிலாச்சாரல்.காம்

| |
oooOooo
என்.கணேசன் அவர்களின் இதர படைப்புகள்.   சிறுகதை பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2006 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |