ஜூன் 16 2005
தராசு
வ..வ..வம்பு
உள்ளங்கையில் உலகம்
டெலிவுட்
முச்சந்தி
திரைவிமர்சனம்
மனம் போன போக்கில் மனிதன் போகலாமா?
அடடே !!
டிவி உலகம்
அமெரிக்க மேட்டர்ஸ்
சிறுகதை
ஆன்மீகக் கதைகள்
கவிதை
தொடர்கள்
 
  முதல் பக்கம்
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
உள்ளங்கையில் உலகம் : கைமாறுதல்
- எழில்
| Printable version | URL |

இந்த வாரம் கைமாறுதல் (Hand over) பற்றிப் பார்ப்போம்.

பேசிக்கொண்டே நகர்ந்து செல்கையில் (அல்லது நகர்ந்து கொண்டே பேசிச் செல்கையில்) தற்போது இணைக்கப்பட்டுள்ள தள நிலையத்தை விட்டுத் தொலைவில் செல்கிறது செல்பேசி. அந்தக் குறித்த தள நிலையத்தின் ஒலிபரப்பு எல்லையைத் தாண்டி செல்பேசி சென்று விட்டால் தொடர்பு துண்டிக்கப்படும் அபாயம் ஏற்படும். செல்பேசி முடக்க நிலையில் ( செல்பேசியைப் பேசப் பயன்படுத்தா நிலை) இருக்கும் போது நீங்கள் நகர்ந்து சென்றால் அப்போது தகவல் பரிமாற்றம் நிகழ்வதில்லை , எனவே செல்பேசி வேறு தள நிலையத்தை அடைந்ததும், அத்தள நிலையத்தின் தகவல்களைக் கவனிக்க ஆரம்பிக்கும் . ஆனால் நீங்கள் தற்போது பேசிக்கொண்டு நகர்கிறீர்கள்; தள நிலையத்துடன் தொடர்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது .
இணைக்கப்பட்டுள்ள தள நிலையத்தை விட்டு வெகு தொலைவு வந்து விட்டீர்கள். செல்பேசியானது தள நிலையத்தின் அலைத்திறன் ( Power) குறைந்து விட்டதைக் கவனிக்கின்றது. எல்லாச் சமயங்களிலும் அருகிலுள்ள மற்ற ஆறு தள நிலையங்களின் அலைபரப்புத்தகவல்களின் (Braodcast messages) திறன் குறித்து செல்பேசி கவனித்துக் கொண்டே இருக்கும் என்று முந்தைய பதிவுகளில் படித்ததை நினைவு படுத்துங்கள் . செல்பேசி, ஒரு தள நிலையத்துடன் தகவல் பரிமாற்றத்தில் ( பேசிக்கொண்டு) இருந்தாலும் அருகாமைத் தள நிலையங்களின் திறன் கணக்கிடுதல் தொடர்ந்து நிகழும்.

சரி, இவ்வாறு பேசிக்கொண்டு நகர்ந்து செல்கையில், தள நிலையத்திலிருந்து பெறும் தகவல் திறன் ஒரு குறித்த அளவுக்கு மேல் குறைந்து விட்டதாய் வைத்துக்கொள்வோம் . திறன் கணக்கீட்டுத் தகவலைத் தள நிலையத்திற்கு அனுப்புகின்றது செல்பேசி. இத்தகவலைத் தளக் கட்டுப்பாட்டு நிலையத்துக்குத் தெரியப்படுத்துகிறது தள நிலையம் . இது கண்ட தளக்கட்டுப்பாட்டு நிலையம் , செல்பேசிக்குத் தகவல் வழங்கும் தள நிலையத்தை மாற்றத் தீர்மானிக்கிறது . அதாவது, திறன் குறைந்த (தற்போது இணைக்கப்பட்டுள்ள ) தள நிலையக்கட்டுப்பாட்டிலிருந்து அதனை மாற்றி, தற்போது செல்பேசி நெருங்கி வந்துள்ள தள நிலையத்தின் ( திறன் அதிகம் உள்ள) கட்டுப்பாட்டுக்கு மாற்றத் தீர்மானிக்கிறது.
இவ்வாறு பேச்சு நிகழ்கையிலேயே, தொடர்பு துண்டிக்கப்படாத வண்ணம் ஒரு செல்பேசியின் தகவல் பரிமாற்றம் ஒரு தள நிலையத்திலிருந்து இன்னொரு தள நிலையத்துக்கு மாற்றப்படுதலைக் கை மாறுதல் (Hand over)என்றழைக்கிறோம். இந்தக் கைமாறுதல் நிகழ்வின் போது செல்பேசி தனது அதிர்வெண் பயன்பாட்டை மாற்றிக் கொள்ள வேண்டும் . அதாவது எந்தத் தள நிலையத்துடன் இணைக்கப்படப் போகின்றதோ, அத்தள நிலையத்தின் அதிர்வெண்ணுக்கு ஏற்ப தனது செலுத்தி /பெறுனரின்(Transmitter/Receiver) அதிர்வெண்ணை மாற்றிக் கொள்கிறது .

பேசிக் கொண்டிருக்கையில் மூன்று வகையான கைமாறுதல்கள் ஏற்படலாம்.
1. தள நிலையங்களிடை கைமாறுதல் ( Intra BSC Handover)
2. தளக் கட்டுப்பாட்டு நிலையங்களிடை கைமாறுதல் ( Inter BSC Handover)
3. செல்பேசி இணைப்பகங்களிடை கைமாறுதல் ( Inter MSC Handover)  மேலே குறிப்பிடப்பட்டுள்ள மூன்று வகைகளிலும், கை மாறுதல் நிகழ ஒரே காரணம் தான்: இணைக்கப்பட்டுள்ள தள நிலையத்தின் திறன் குறைந்து அருகிலுள்ள மற்ற தள நிலையத்தின் திறன் அதிகரிக்கையில் கை மாறுதல் நிகழ வேண்டும் . ஆனால் செல்பேசி வலையமைப்பு எவ்வாறு வடிவமைக்கப் பட்டுள்ளதோ அதற்கேற்றாற்போல் கை மாறுதல் நிகழ வேண்டும். செல்பேசி வலையமைப்பின் கட்டமைப்பு பற்றி ஏற்கனவே பழைய பதிவில் பார்த்தோம் . இருப்பினும் , கைமாறுதல் பற்றி புரிந்து கொள்ள மீண்டும் அதனைச் சுருக்கமாய் நினைவு கூர்வோம்.
 
ஒரு இடத்தில் இயங்கும் செல்பேசிகள் அனைத்தும் அவ்விடத்தில் இருக்கும் தள நிலையத்திடம் (Base Station) தொடர்பு கொண்டு தகவல் பரிமாற்றம் செய்கின்றன. ஒன்றிற்கு மேற்பட்ட தள நிலையங்களைக் கட்டுப்படுத்தும் பொறுப்பு தளக் கட்டுப்பாட்டு நிலையத்திற்கு (Base Station Controller, BSC) உண்டு. அது போல் நிறையத் தளக்கட்டுப்பாட்டு நிலையங்கள் ஒரு செல்பேசி இணைப்பகத்தில் ( Mobile Switching Center MSC) இணைக்கப் பட்டிருக்கின்றன. எல்லா செல்பேசி இணைப்பகங்களும் நுழைவாயில் இணைப்பகத்தில் (Gateway MSC) இணைகின்றன. ஆக, ஒரு செல்பேசி ஒரு தள நிலையத்திலிருந்து மற்றொரு தள நிலையத்துக்கு நகர்ந்து செல்கையில் , புகுந்த வீடு ( புகுந்த தள நிலையம்) பழைய தள நிலையம் இணைக்கபட்டுள்ள தளக்கட்டுப்பாட்டு நிலையத்துடன் இணைந்திருக்கலாம் . அதாவது பழைய தள நிலையமும் புதுத் தள நிலையமும் ஒரே தளக்கட்டுப் பாட்டு நிலையத்தால் கட்டுப்படுத்தப் படலாம். அல்லது இரு வேறு தளக் கட்டுப்பாடு நிலையத்தால் கட்டுப்படுத்தப் படலாம் . அல்லது இரு வேறு செல்பேசி இணைப்பகங்களில் இணைந்துள்ள தளக்கட்டுப்பாடு நிலையங்களால் கட்டுப்படுத்தப் படலாம். குழப்புகிறதா ? படத்தைப் பாருங்கள்.

தள நிலையங்களிடை கைமாறுதல் (Intra BSC Handover)  ஒரே தளக்கட்டுப்பாட்டு நிலையத்தில் இணைக்கப்பட்டுள்ள தள நிலையங்களுக்கிடையே ஏற்படும் கைமாறுதலை இவ்வகையில் சேர்க்கலாம். பழைய தள நிலையத்திலிருந்து புதிய தள நிலையத்துக்கு மாறச் சொல்லும் கட்டுப்பாட்டுத்தகவல்களை தளக்கட்டுப்பாட்டு நிலையம் ஏற்றுக்கொள்கிறது .

படத்தில் காட்டப்படுள்ளது போல், ஒரு தளக்கட்டுப்பாட்டு நிலையத்துடன் நான்கு தள நிலையங்கள் இணைந்துள்ளது எனக் கொள்வோம். செல்பேசியானது இரண்டாவது தள நிலையத்திலிருந்து மூன்றாவது தள நிலையம் நோக்கிச் செல்கிறது எனலாம். திறன் குறைவது கண்ட இரண்டாவது தள நிலையம் , தளக்கட்டுப்பாட்டு நிலையத்துடன் தொடர்பு கொண்டு நிலைமையைச் சொல்கிறது. எந்தத் தள நிலையத்துக்கருகே செல்பேசி நகர்கிறது என்ற தகவலையும் சொல்லும் . இத் தகவல்களைப் பெறும் தளக் கட்டுப்பாட்டு நிலையம் மூன்றாவது தள நிலையத்தைத் தொடர்பு கொண்டு , "ஒரு செல்பேசி பேசிக்கொண்டே உனதருகே நகர்கிறது . அதற்கான பேச்சுப்பரிமாற்றத் தகவலை நீயும் அனுப்பு " என்று கட்டளையிடுகிறது . இது குறித்த அறிவிப்பு செல்பேசிக்கும் தெரிவிக்கப்படும். கைமாறுதல் கட்டளை ( Handover request) எனும் தகவலில் இது தெரிவிக்கப்படுகிறது. ஆக ஒரு நேரத்தில் இரு தள நிலையங்களிலிருந்தும் தகவல்கள் ஒரு செல்பேசிக்கு அனுப்பப் படுகிறது . கைமாறுதல் கட்டளை பெற்றவுடன், செல்பேசி பழைய தள நிலையத்துடன் தொடர்பைத் துண்டித்துப் புதிய தளநிலையத்துடன் இணைகிறது . தனது ஒலிபரப்பு அதிர்வெண்ணையும் புதிதாய்ப் புகுந்த தள நிலையத்திற்கு ஏற்றாற்போல் உடனே மாற்றியமைக்கிறது. செல்பேசி புதிய தள நிலையத்தைத் தேர்ந்தெடுத்தவுடன் , பழைய தள நிலையம் (தளக்கட்டுப்பாட்டு நிலையத்தின் கட்டளைப்படி ) செல்பேசிக்குத் தகவல் அனுப்புவதை நிறுத்திக் கொள்கிறது.
தளக் கட்டுப்பாட்டு நிலையங்களிடை கைமாறுதல் (Inter BSC Handover) இந்த வகைக் கைமாறுதல் ஏற்படக் காரணம், பழைய தள நிலையமும் புதிய தள நிலையமும் இரு வேறு தளக்கட்டுப்பாட்டு நிலையங்களால் கட்டுப்படுத்தப்படுவதால்தான் . இந்த இரு தளக் கட்டுப்பாட்டு நிலையங்களூம் ஒரே இணைப்பகத்தில் இணைந்துள்ளன, படத்தில் காண்பது போல்.

இத்தகைய கைமாறுதல் ஏற்படுகையில் செல்பேசி இணைப்பகம் (Mobile Switching Center, MSC) எல்லாவிதமான கட்டுப்பாட்டுத்தகவல்களையும் வழங்கி கைமாற உதவி செய்கிறது . செல்பேசி இணைந்துள்ள பழைய தள நிலையத்தின் கட்டுப்பாட்டு நிலையத்துடனும், செல்பேசி நிலையம் புதிதாய் இணையப் போகும் புதிய தள நிலையத்தைக் கட்டுப் படுத்தும் கட்டுப்பாட்டு நிலையத்துடனும் , இணைப்பகம் தொடர்பு கொள்கிறது. செல்பேசியின் தகவல்கள் துண்டிக்கப்பட்டுவிடாமல் கைமாறுதல் நிகழ வழிவகுக்கிறது .
 

செல்பேசி இணைப்பகங்களிடை கைமாறுதல் (Inter MSC Handover) செல்பேசியானது , இரு வேறு இணைப்பகங்களுடன் (MSC) இணைக்கப்பட்டுள்ள தள நிலையங்களிடை கைமாறினால் இந்த மூன்றாம் வகையான கைமாறுதல் நிகழ்கிறது. இந்த வகைக் கைமாறுதலில் தளக் கட்டுப்பாட்டு நிலையங்கள் இரு இணைப்பகங்களுடன் இணைக்கப் பட்டிருக்கும். இந்த மாதிரியான கைமாறுதலில் எவ்வாறு தகவல் பரிமாற்றம் கட்டுப்படுத்தப் படுகிறது? இரண்டு இணைப்பகங்கள் சம்மந்தப்பட்ட கைமாறுதல் என்று பார்த்தோம். ஒரு இணைப்பகத்தில் தற்போது செல்பேசி இணைந்திருக்கிறது, மற்றொரு இணைப்பகத்துக்கு செல்பேசியின் கட்டுப்பாடு மாற்றித்தர வேண்டும். தற்போது இணைந்திருக்கும் இணைப்பகம் இந்தக் கட்டுப்பாட்டுத் தகவல்களின் வேலையை முன்னின்று நடத்துகிறது. இந்த இணைப்பகத்தை நடத்துனர் இணைப்பகம் ( Anchor MSC) எனலாம். புதிய தள நிலையம் இணைக்கப்பட்டிருக்கும் இணைப்பகத்தை பெறுனர்
(Target MSC) இணைப்பகம் எனலாம். செல்பேசியின் கட்டுப்பாட்டைப் புதிய தள நிலையத்திற்கு மாற்றும் கட்டளைகளை நடத்துனர் இணைப்பகம் பெறுனர் இணைப்பகத்துக்கு வழங்கி கைமாறுதல் நடைபெற உதவுகிறது. கைமாற்றம் நிகழ்ந்தவுடன் பழைய தள நிலையத்தைத் தொடர்பு கொண்டு , தள நிலையத்தைச் செல்பேசி மாற்றிவிட்ட தகவலை அறிவிப்பதும் நடத்துனர் இணைப்பகம்தான். 

ஆக, நீங்கள் பேசிக்கொண்டே நகர்ந்து செல்கையில் உங்களுக்குத் தெரியாமலேயே இவ்வளவு வேலைகள் செல்பேசியின் பின்புலத்தில் நிகழ்ந்து, அழைப்புத் துண்டிக்கப் படாவண்ணம் தொடர்ந்து நிகழ உதவுகின்றன.

PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2005 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |