ஜூன் 16 2005
தராசு
வ..வ..வம்பு
உள்ளங்கையில் உலகம்
டெலிவுட்
முச்சந்தி
திரைவிமர்சனம்
மனம் போன போக்கில் மனிதன் போகலாமா?
அடடே !!
டிவி உலகம்
அமெரிக்க மேட்டர்ஸ்
சிறுகதை
ஆன்மீகக் கதைகள்
கவிதை
தொடர்கள்
 
  முதல் பக்கம்
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
முச்சந்தி : புத்தக விளையாட்டு
- என். சொக்கன் [nchokkan@gmail.com]
| Printable version | URL |
"உபநிஷதங்கள், இந்து பக்தி இலக்கியங்களுள், பகவத் கீதை மற்றும் பிரம்ம சூத்ரம் ஆகியவற்றுடன், அறுதிப் பிரமாணமாய் அமைந்த நூல்களாக கருதப்படுபவை."

இணையத்தில், குறிப்பாக வலைப்பதிவாளர்களிடையே மிகப் பிரபலமாகிவிட்ட புதிய விளையாட்டு, அவரவர் வாசித்த / ரசித்த புத்தகங்களைப்பற்றியது. இப்படிப் பட்டியலிடும் ஒவ்வொருவரும், வேறு ஐவரை இந்த விளையாட்டுக்கு அழைப்பதால், தினசரி புத்தகப் பிரியக் கட்டுரைகளின் எண்ணிக்கை அதிவேகத்தில் பெருகிக்கொண்டிருக்கிறது.

இன்னும் சிலர், வெறுமனே புத்தகங்களின் பட்டியலைச் சொல்வதோடு நிறுத்திக்கொள்ளாமல், புத்தகங்களைப்பற்றிய தங்களின் அனுபவங்களையும் சுவாரஸ்யமாக எழுதியதால், சென்ற வாரத்தில் வெளியான இதுபோன்ற கட்டுரைகளைத் தொகுத்துப் படிக்கும்போது, ஒரு இலக்கியச் சிறப்பிதழ் வாசித்ததைப்போன்ற அனுபவம் கிடைத்தது.

ஆங்கிலத்திலும், தமிழிலுமாக வெளியாகியுள்ள இந்தப் பட்டியல்களை, யாரேனும் நேரம் செலவழித்துத் தொகுத்தால், புதிதாக வாசிக்கிறவர்களுக்குச் சிறந்த சிபாரிசுப் பட்டியலாக அது அமையும். (ஆனால் ஒன்று, சிறந்த புத்தகங்கள் வரிசையில் எந்த எழுத்தாளர் அதிகம் இடம்பெறுகிறார், அந்த கவுரவத்துக்கு அவர் தகுதியானவர்தானா என்றெல்லாம் யாரும் கோஷ்டி கிளப்பாமல் இருக்கவேண்டும் !)

நிற்க. அயல்நாட்டுத் தூதுவர்போல் இதைப்பற்றி நான் இங்கே டிப்ளமாடிக் விமர்சனம் கொடுத்துக்கொண்டிருப்பதற்குக் காரணம், சிங்கப்பூர் நண்பர் அன்பு என்னையும் இந்த விளையாட்டுக்கு அழைத்திருக்கிறார். ஆகவே, இந்த இணையத் தொடரில், என் துரும்பையும் கிள்ளிப்போட்டுவிடுகிறேன்.

முதலாவதாக, என்னிடம் இருக்கும் புத்தகங்களின் எண்ணிக்கை.

புத்தகங்களை எண்ணுவது ஆகாது என்கிற அசட்டு நம்பிக்கை எனக்கு உண்டு. ஆகவே, இந்தக் கேள்விக்கு நேரடியான பதில் சொல்லாமல் தவிர்க்கிறேன். சுமாரான எண்ணிக்கை போதுமென்றால், குத்துமதிப்பாக ஒரு மூவாயிரம் புத்தகங்கள் இருக்கும். இதில் பத்து சதவிகிதம் ஆங்கிலம், மீதமெல்லாம் தமிழ்.

இவற்றுள் நான் விரும்பிப் படித்த புத்தகங்கள் என்று கேட்டால், நூற்றுக்கணக்கில் தேறும். அவற்றுள் ஐந்தைமட்டும் தேர்ந்தெடுத்துச் சொல்வது ரொம்பச் சிரமம். ஆகவே, நான் அடிக்கடி, அதாவது திரும்பத் திரும்ப வாசிக்கிற இரண்டு புத்தகங்களைமட்டும் சொல்லிவிடுகிறேன் - பாரதியார் கவிதைகள் & திருக்குறள்.

இந்த இரண்டு நூல்களிலும் என்ன விசேஷமென்றால், இவை வெறுமனே அச்சிட்ட புத்தகங்கள் என்ற நிலையைக் கடந்து, நமது சிநேகிதன்போல் உரிமையோடு தோளில் கை போட்டுப் பழகக்கூடியவை. சந்தோஷம், துக்கம், விரக்தி, சோர்வு, படைப்பூக்க வறட்சி என்று நான் எந்த மனோநிலையிலிருந்தாலும், திருக்குறளையோ, பாரதியின் கவிதைகளையோ எடுத்து, சட்டென்று ஏதேனுமொரு பக்கத்தைப் பிரித்துப் படிக்கத்தொடங்கிவிடுவேன். அதன்பின், சூழலை மறந்து அவற்றில் ஒன்றிவிடுவது நிச்சயம்.

இவற்றைத்தவிர, சென்ற ஓரிரு ஆண்டுகளில் நான் ரசித்துப் படித்த நூல்கள் : (இவை எந்தக் குறிப்பிட்ட வரிசையிலும் இல்லை !)

- தி. ஜானகிராமன் படைப்புகள் (சிறுகதைகள் / கட்டுரைகள் - தி. ஜானகிராமன் - ஐந்திணை பதிப்பகம்)

- கம்பர் தரும் ராமாயணம் (உரை - டி. கே. சி. - திருவரசு)

- டாலர் தேசம் (வரலாறு - பா. ராகவன் - கிழக்கு பதிப்பகம்)

- Delhi (Novel - Khushwant Singh - Penguin)

- Alice in the wonderland (Novel - Lewis Carroll - Magpie)

- புலிநகக் கொன்றை (நாவல் - பி. ஏ. கிருஷ்ணன் - காலச்சுவடு)

- யாரும் யாருடனும் இல்லை (நாவல் - உமா மகேஸ்வரி - தமிழினி)

- துணையெழுத்து (கட்டுரைகள் - எஸ். ராமகிருஷ்ணன் - விகடன் பிரசுரம்)

- அரசூர் வம்சம் (நாவல் - இரா. முருகன் - கிழக்கு பதிப்பகம்)

- பறந்துபோன பக்கங்கள் (கட்டுரைகள் - கோமல் சுவாமிநாதன் - திருமகள்)

- எழில் வேட்கை (மைக்கேல் ஆஞ்சலோ வாழ்க்கை வரலாறு - இளஞ்சேரன் - வாசகர் வட்டம்)

- முதல் மழை (சிறுகதைகள் - ஆர். வெங்கடேஷ் - மித்ர)

- குதிரைகளின் கதை (சிறுகதைகள் - பா. ராகவன் - கிழக்கு பதிப்பகம்)

- நாலு மூலை (கட்டுரைகள் - ரா. கி. ரங்கராஜன் - கிழக்கு பதிப்பகம்)

- துளிர் (சிறுகதைகள் - ரிஷபன் - மதி நிலையம்)

- அள்ள அள்ளப் பணம் (வர்த்தகம் - சோம. வள்ளியப்பன் - கிழக்கு பதிப்பகம்)

- ஐம்பது பைசா ஷேக்ஸ்பியர் (சிறுகதைகள் - இரா. முருகன் - ஸ்நேகா)

- எப்படிக் கதை எழுதுவது (கட்டுரைகள் - ரா. கி. ரங்கராஜன் - மதி நிலையம்)

- மெல்லினம் (நாவல் - பா. ராகவன் - கிழக்கு பதிப்பகம்)

- அலகிலா விளையாட்டு (நாவல் - பா. ராகவன் - தமிழோவியம்.டாட்.காம் மின்னூல்)

- Angels & Daemons (Novel - Dan Brown - Pocket Books)

- மரப்பாச்சி (சிறுகதைகள் - உமா மகேஸ்வரி - தமிழினி)

- The Making of Jurassic Park (Articles - Don Shay & Jody Duncan - Ballantine)

- நாலு திசையிலும் சந்தோஷம் (கட்டுரைகள் - ரா. கி. ரங்கராஜன் - திருவரசு)

இப்போது படித்துக்கொண்டிருப்பவை :

1. உப பாண்டவம் (நாவல் - எஸ். ராமகிருஷ்ணன் - அடையாளம்)

2. Japan (Articles - Ira Peck - Scholastic)

3. பிரச்சனை பூமிகள் (கட்டுரைகள் - ஜி. எஸ். எஸ் - விகடன் பிரசுரம்)

4. Secrets of the Code : The unauthorized guide to the mystries behind The Da Vinci Code (Articles - Ed : Dan Burstein - Orion)

5. Ozma of Oz (Novel - L. Frank Baum - Scholastic)

6. Made in America (Autobiography of Sam Walton - Sam Walton, with john Huey - Bantam)

7. அனுமன் : வார்ப்பும் வனப்பும் (கட்டுரைகள் - ஹரி கிருஷ்ணன் - கிழக்கு பதிப்பகம்)

8. அகி (கவிதைகள் - முகுந்த் நாகராஜன் - வரப்புயர)

நான் விரும்பிப் படித்த புத்தகங்களின் பட்டியலில், வேண்டுமென்றே எட்டு புத்தகங்களை விட்டுவிட்டேன். அதற்கு முக்கியக் காரணம், விறுவிறுவென்று பக்கங்களைக் கடந்துவிட்டேனேதவிர, அவற்றை நான் முழுமையாக இன்னும் வாசித்தறியவில்லை. ஆகவே, சில காலம் பொறுத்து அவற்றை மீண்டும் வாசித்துப் புரிந்துகொள்ள உத்தேசம், இன்ஷா அல்லா !

அந்த எட்டு நூல்கள், முக்கிய உபநிஷதங்களுக்கான எளிய விளக்கவுரைகள். சென்னை ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் வெளியீடு. எளிய உரை வழங்கியிருப்பவர் சுவாமி ஆசுதோஷானந்தர்.

உபநிஷதங்கள், இந்து பக்தி இலக்கியங்களுள், பகவத் கீதை மற்றும் பிரம்ம சூத்ரம் ஆகியவற்றுடன், அறுதிப் பிரமாணமாய் அமைந்த நூல்களாக கருதப்படுபவை. உலகின் மிகப் பழைய நூல்களாக நம்பப்படும் இவை, வாழ்க்கை குறித்த பல உண்மைகளைத் தீர்க்கமாய் எடுத்துரைக்கின்றன, அவை இன்றைக்கும் பொருந்துவதாய் அமைந்திருப்பதே இவற்றின் பெருமையும், சிறப்பும் !

உபநிஷத சுலோகம், அதிலமைந்த வார்த்தைகளுக்கான பொருள், விளக்கம் என்னும் வடிவிலேயே இந்த நூல்கள் அமைந்திருப்பினும், சிரமமான மொழிபெயர்ப்பு நடையைக் கையாளாமல், முதன்முறையாக உபநிஷதங்களை வாசிக்கிறவர்களைக் கருத்தில்கொண்டு, பெரும்பாலான சுலோகங்கள், இன்றைய வாழ்க்கை தொடர்பான, நம் அனைவருக்கும் புரியக்கூடிய, மற்றும் பொருந்தக்கூடிய உதாரணங்களோடு விரிவாக அலசி ஆராயப்பட்டிருக்கின்றன. இவை வாசிப்பையும், புரிந்துகொள்வதையும் எளிமையாக்குவதால், சிற்சில வார்த்தைகளில் உபநிஷத சுலோகங்கள் சொல்லிவிடுகிற அரிய உண்மைகளையெல்லாம் ஆழ்ந்து சிந்திக்கமுடிகிறது. இந்தச் சிறப்பினாலேயே, தமிழில் வந்திருக்கிற பிற உபநிஷத நூல்களிலிருந்து இந்த வரிசை நூல்கள் வேறுபட்டு நிற்கின்றன. முன்னுரையில் குறிப்பிடப்பட்டிருப்பதுபோல், உபநிஷதங்களுக்கு இத்தகைய எளிமையான விளக்க நூல்கள், சாதாரண வாசகனைக் கருத்தில் கொண்டு படைக்கப்பட்ட, அதேசமயம் உபநிஷதங்களின் புனிதத் தன்மையையும் கவனத்தோடு காத்துக்கொண்ட உரைநூல்கள் தமிழில் இதுவரை வெளியாகவில்லை என்றே சொல்லிவிடலாம்.

ஸ்ரீ ராமகிருஷ்ணர் மற்றும் சுவாமி. விவேகானந்தர் ஆகியோரின் படைப்புகள் / சொற்பொழிவுகளிலிருந்து பொருத்தமான மேற்கோள்களை நூலெங்கும் பொருத்தமான சந்தர்ப்பங்களில் அழகுற பயன்படுத்தியிருப்பது, நூலின் நோக்கத்துக்குப் பெரிதும் துணைபுரிவதோடு, அந்த மேற்கோள் படைப்புகளையும் முழுமையாக வாசிக்கவேண்டும் என்கிற ஆர்வத்தை உண்டாக்குவதாகவும் அமைந்துவிடுகிறது. (குறிப்பாய், சுவாமி. விவேகானந்தரின் 'ஞான தீபம்' மற்றும் ஸ்ரீராமகிருஷ்ணரின் 'அமுத மொழிகள்' !)

ஒவ்வொரு பகுதியின் இறுதியிலும், அதுவரை வாசித்த தலைப்புகள், அவற்றில் அமைந்த சுலோகங்களின் மையக் கருத்து போன்றவற்றைத் தெளிவாய்ப் பட்டியலிட்டிருப்பது, நினைவூட்டலுக்கும், தேவைப்படும்போது விரைவான அணுகலுக்கும், Referenceக்கும் பயன்படும். அதேபோல் ஒவ்வொரு நூலின் முதற்பகுதியிலும், உபநிஷதங்கள், அவற்றின் பின்னணி, பெருமை, வரலாறு, அவற்றை அணுகவேண்டிய முறை போன்றவற்றை விளக்கமாய் எழுதியிருப்பதும் மிகவும் பயனுள்ள விஷயம் !

ஓவியர்கள் மணியம் செல்வன் மற்றும் ரவி ஆகியோரின் கைவண்ணத்தில் நூல்களின் அழகிய வடிவமைப்பும், பார்த்தவுடன் கையிலெடுக்க / கண்ணில் ஒற்றிக்கொள்ளத் தோன்றும் அற்புதமான அட்டைப்படங்களும், நூல் கட்டுமானமும் குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய பிற விஷயங்கள். குறிப்பாக உபநிஷத அலசல் கட்டுரைகளினிடையே ம. செ. அவர்களின் பொருத்தமான கோட்டோவியங்கள், வாசிப்பைச் சிலிர்ப்பூட்டும் ஒரு அனுபவமாகவே ஆக்குகின்றன !

இந்நூல்களின் பெயர் / விலைப்பட்டியல் கீழே உள்ளது. ஆர்வமுள்ளவர்கள், ராமகிருஷ்ண மடத்தின் வலைப்பக்கத்தை அணுகலாம் (http://www.sriramakrishnamath.org/).

1. வாழ்க்கையை வாழுங்கள் (தைத்திரீய உபநிஷதம்) - ரூ 35 /-

2. மரணத்திற்குப் பின்னால் (கட உபநிஷதம்) - ரூ 35 /-

3. ஒன்றென்றிரு (மாண்டூக்ய உபநிஷதம்) - ரூ 15 /-

4. நிழலும், நிஜமும் (முண்டக உபநிஷதம்) - ரூ 25 /-

5. மிஞ்சும் அதிசயம் (ஐதரேய உபநிஷதம்) - ரூ 12 /-

6. எல்லாம் யாரால் ? (கேன உபநிஷதம்) - ரூ 12 /-

7. ஒளிக்கு அப்பால் ... (ஈசாவாஸ்ய உபநிஷதம்) - ரூ 15 /-

8. அறிவைத் தேடி ... (பிரச்ன உபநிஷதம்) - ரூ 20 /-

PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2005 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |