ஜூன் 16 2005
தராசு
வ..வ..வம்பு
உள்ளங்கையில் உலகம்
டெலிவுட்
முச்சந்தி
திரைவிமர்சனம்
மனம் போன போக்கில் மனிதன் போகலாமா?
அடடே !!
டிவி உலகம்
அமெரிக்க மேட்டர்ஸ்
சிறுகதை
ஆன்மீகக் கதைகள்
கவிதை
தொடர்கள்
 
  முதல் பக்கம்
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
திரைவிமர்சனம் : அந்நியன்
- மீனா [feedback@tamiloviam.com]
| Printable version | URL |

இந்தியன், ரமணாவின் மறுபதிப்பாக அந்நியன். கதை என்னவோ ஒரு வரியில் அடக்கிவிடக்கூடியதுதான், சீர்கெட்டிருக்கும் சமுதாயத்தைத் திருத்தப்பாடுபடுகிறான் நாயகன் - கொஞ்சம் வித்தியாசமான முறையில்.

ஐயங்கார் வீட்டு அம்மாஞ்சி விக்ரம்(அம்பி) ஒரு நேர்மையான வக்கீல். ஒரு சிறிய தப்பு நடந்தாலும் அதை எதிர்த்துக் கேட்கும் ஆள். ரூல்ஸ் பேசியே வாழ்பவர். பக்கத்து வீட்டு சதாவை சின்ன வயதிலிருந்தே காதலித்து வந்தாலும் அதைச் சொல்லும் தைரியம் இல்லாத அம்மாஞ்சி அம்பி. ஒருவழியாக அம்பி காதலைச் சொன்னாலும் அதை மறுக்கிறார் சதா. இதை எண்ணிப் புழுங்கும் அம்பி தற்கொலைக்கு முயற்சி செய்து அது சட்டவிரோதம் என்ற நினைப்பு வர அதைக் கைவிடுகிறார்.

இது இப்படி இருக்க அம்பி எதையெல்லாம் எதிர்த்து குரல் கொடுக்கிறாரோ அதையெல்லாம் தட்டிக்கேட்டு குற்றவாளிகளுக்கு கருடபுராணத்தின் படி தண்டனை கொடுக்கிறார் அந்நியன். வித்தியாசமாக நடக்கும் கொலைகளைப் பார்த்து போலீஸ் குழம்பி நிற்கும் போது கொலைகளைத் துப்புத்துலக்க வருகிறார்கள்
பிரகாஷ்ராஜும் அம்பியின் நண்பரான விவேக்கும். இதற்கிடையே சதா ரெமோ என்ற நபரைக் காதலிக்கிறார்.

ஒரு நிலத்தை அண்டர் வேல்யுவிற்கு சதா ரிஜிஸ்டர் செய்ய அம்பியைக் கூட்டிச் செல்கிறார். இப்படிச் செய்வது தவறு என்று அம்பி சுட்டிக்காட்டினாலும் அதை அலட்சியம் செய்கிறார் சதா. பிறகு ரெமோவுடன் சதா இருக்கும்போது திடீரென்று தோன்றும் அந்நியன் சதாவைக் கொலை செய்ய வெறியுடன் துரத்துகிறான். ரெமோ - அந்நியனாக மாறியதைப் பார்த்து திகிலடையும் சதா கடைசியில் அம்பிதான் ரெமோ மற்றும் அந்நியன் - அம்பியின் ஆழ்மனதில் தோன்றிய சதாவின் மீதான காதல் தான் அவனை ரெமோவாக்கியது என்பதையும், சமுதாய அவலங்களைக் கண்டு கொதிப்படையும் மனநிலைதான் அம்பியை அந்நியனாக்கியது என்ற உண்மையை மனோதத்துவ நிபுணரான நாசரின் உதவியுடன் கண்டுபிடிக்கிறார்.

தொடர்ந்து நடக்கும் கொலைகளுக்கான காரணங்களை ஆராயும் பிரகாஷ்ராஜ் ஒரு கட்டத்தில் விக்ரம் தான் கொலையாளி என்று கண்டுபிடிக்கிறார். சட்டத்தினால் அந்நியன் தண்டிக்கப்பட்டானா? இல்லையா என்பதே மீதிக்கதை.

அடிப்படைக் கதை என்னவோ இந்தியன் - ரமணா சாயலில் இருந்தாலும் மல்டிபிள் பர்சனாலிட்டி என்பதை வைத்துக்கொண்டு கதையை நகர்த்தியிருக்கிறார் ஷங்கர்.

அம்மாஞ்சியாக - எதற்கெடுத்தாலும் ரூல்ஸ் பேசும் விக்ரம் ஆழ்மனதில் அந்நியனாக உருமாறும்போது கொலைவெறியுடன் உருமாறுகிறாரே அந்த காட்சிகள் அருமை. நாசருடன் பேசும்போது நிமிடத்திற்கு நிமிடம் அம்பியாகவும், அந்நியனாகவும், ரெமோவாகவும் மாறுவது சூப்பரோ சூப்பர். அந்நியனாக தலையை விரித்துக் கொண்டு பிரகாஷ்ராஜிடம் உறுமி அடுத்த நிமிடமே அம்பியாக மாறி கெஞ்சும் காட்சிகளில் விக்ரமுக்கு இந்தப் படத்திற்காக ஏதாவது ஒரு விருது நிச்சயம் கிடைக்கும் என்பதை உறுதிப்படுத்துகிறது. இதற்கிடையே ரெமோவாக அவர் போடும் ஆட்டமும் அட்டகாசம். விவேக்குடன் சேர்ந்துகொண்டு காமெடியிலும் அப்பாவித்தனமாக கலக்கியிருக்கிறார் விக்ரம்.

சதா சாதாரணமாக வந்து போகிறார். அந்நியனிடம் மாட்டிக்கொண்டு அவர் அவஸ்தைப்படும் அந்த சில நிமிடங்களில் மட்டும் சதாவிடமிருந்து அருமையான நடிப்பை வரவழைத்திருக்கிறார் இயக்குனர். மற்ற நேரங்களில் எல்லாம் வழக்கமான நாயகி செய்யும் வேலையைச் செப்ய்திருக்கிறார்.

விக்ரமின் நண்பன் மற்றும் காவல்துறை அதிகாரியாக கலக்கியிருக்கிறார் விவேக். ஆரம்ப காட்சிகளில் விக்ரமிற்கு காதல் டியூஷன் எடுக்கும் காட்சிகளில் விவேக்கின் நகைச்சுவையால் தியேட்டர் குலுங்குகிறது. அதிலும் அந்த "கண்ணடி" சீன் அருமை. டி.சி.பியாக வரும் பிரகாஷ்ராஜ் அருமையான தேர்வு. அண்ணன் அந்நியனால் கொல்லப்பட்ட போதும் அழாமல் ஆத்திரத்தைத் தேக்கி வைத்திருக்கும் காட்சியில் பிரகாஷ்ராஜின் நடிப்பு அவரது திறமைக்கு ஒரு சின்ன சாம்பிள்.

ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் பாடல்கள் எல்லாம் அருமை. ஆனால் அவை படமாக்கப்பட்ட விதத்தில் தெரியும் பிரும்மாண்டம் - இந்த மாதிரி காட்சிகள் எல்லாம் தேவைதானா என்று கொஞ்சம் யோசிக்க வைக்கிறது. சண்டைக் காட்சிகளில் பீட்டர் ஹெயினின் உதவியால் அருமையாக அமைந்திருந்தாலும் ஒரே சமயத்தில் அந்நியன் 100க்கும் மேற்பட்டவர்களைச் சமாளிப்பது கொஞ்சம் நெருடல்தான். அதேபோல அந்நியன் எப்படி நேரு அரங்கத்தில் விளம்பரம் செய்து தோன்றுகின்றான் என்பதும் அதைத் தொடர்ந்துவரும் காட்சிகளும் எப்படி என்று மண்டையைக் குடைய வைக்கின்றன. ஷங்கரின் ஜெண்டில்மேன், இந்தியன், முதல்வன் - எல்லாமே சமுதாய அவலங்களைப் பிரதிபலிப்பவை. அதே வரிசையில் அந்நியன். அவ்வளவே !!

PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2005 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |