ஜூன் 16 2005
தராசு
வ..வ..வம்பு
உள்ளங்கையில் உலகம்
டெலிவுட்
முச்சந்தி
திரைவிமர்சனம்
மனம் போன போக்கில் மனிதன் போகலாமா?
அடடே !!
டிவி உலகம்
அமெரிக்க மேட்டர்ஸ்
சிறுகதை
ஆன்மீகக் கதைகள்
கவிதை
தொடர்கள்
 
  முதல் பக்கம்
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
அமெரிக்க மேட்டர்ஸ் : டாக்டர் அன்புமணியின் அமெரிக்க விஜயம்
- திருமலை ராஜன் [strajan123@yahoo.com]
| Printable version | URL |
"சினிமாக்களில் புகைப் பிடிப்பதாக வரும் காட்சிகளை தடை செய்யும் ஒரு பழைய சட்டத்தை அமுல் படுத்தப் போவதாகவும் அது கடும் எதிர்ப்பைக் கிளப்பியிருப்பதாகவும் தெரிவித்தார்."

இந்தியக் குடியரசின் மாண்புமிகு சுகாதாரத்துரை மந்திரியும், மருத்துவரும் பாட்டாளி மக்கள் கட்சியின் ராஜ்யசபா உறுப்பினரும், மருத்துவர் ஐயா தமிழ்குடிதாங்கி இராமதாஸ் அவர்களின் புதல்வனுமாகிய மருத்துவர் திரு.அன்புமணி அவர்கள் தன் மனைவி மற்றும் அதிகாரிகள் குழுவுடன் அமெரிக்காவின் பல்வேறு நகரங்களுக்கு விஜயம் செய்தார். அந்த விஜயத்தின் ஒரு பகுதியாக சான்பிரான்ஸிஸ்கோ வளைகுடாப் பகுதிக்கு வந்திருந்த பொழுது அவர் கலந்து கொண்ட நிகழ்ச்சி பற்றி ஒரு குறிப்பு:

கடந்த 8ம் தேதி அன்று மில்பிடாஸ் நகரில் உள்ள சரோவர் உணவக அரங்கத்தில் திரு,அன்புமணி அவர்களுக்கு இரு வரவேற்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப் பட்டிருந்தன. அமெரிக்கவாழ் இந்திய மருத்துவர்கள் சங்கத்திலிருந்து (AIPO) ஒரு வரவேற்பும், வளைகுடாப் பகுதி தமிழ் மன்றம் மற்றும் கலிஒபோர்னியா தமிழ்க் கல்வி ந்லையம் சேர்ந்து மற்றொரு வரவேற்பும் அளிக்கப் பட்டன. இந்தியக் கலாச்சாரப் படி ஒரு அரைமணி நேரம் தாமதமாக தனது அதிகாரிகள் படை சூழ நல்ல உயரமான, கோட்டு சூட்டு, டை அணிந்த, முன் வழுக்கையுடன் ஏதோ ஒரு தெலுங்குதேச பாபு நடிகர் போல கம்பீரமாகத் தோற்றமளித்த அன்புமணி ஒரு பெரிய கருப்பு நிற லிமோவில் வந்திறங்கினார்.  இரண்டு வார ஓயதாத அலைச்சலும், விமான அழற்சியும், தூக்கமின்மையும், கால நேர, சீதோஷ்ண வித்தியாசங்களும் சேர்ந்து ஒரு வித மயக்க நிலையில் இருப்பதாக அவர்கள் கண்கள் கூறின. ஏகப் பட்ட கோட்டு சூட்டுக்கள் அவருடன் சேர்ந்து கை குலுக்கி புகைப்படம் எடுத்து பதிவு செய்து கொண்டபின், இந்திய மருத்துவர்கள் ஒரு ஐம்பது அறுபது பேர் காத்துக் கொண்டிருந்த அர்ங்கிற்குள் சென்றார். அமெரிக்காவில் இருக்கும் இந்திய மருத்துவர்களின் அமைப்புத்தான் இந்திய அமைப்புக்களிலேயே மிகவும் சக்தி வாய்ந்த பணக்கார அமைப்பு. இங்கு இருக்கும் மிகப் பிரமாண்ட வீடுகள் பலவும் இவர்களுக்குச் சொந்தம், இந்த மாவட்டத்திலேயே மிகப் பெரிய வீடு (அதையெல்லாம் வீடு என்று சொன்னால் பாவம்) ஒரு இந்திய மருத்துவருக்குச் சொந்தமானது. அத்தகைய மருத்துவ
கள் கூட்டத்தில் அமைச்சர் ராமதாஸ் (அப்படித்தான் இங்கு அவரை எல்லோரும் அழைத்தார்கள்) தனது தாமததிற்கு மன்னிப்புக் கேட்டுக்கொண்ட பின் ஆங்கிலத்தில் உரையற்றினார். தடையில்லாத ஆங்கிலப் பேச்சு. சிறந்த, கேட்பவர்க்ளைக் கவரும் திறமையான, ஆடம்ப்ரமான பேச்செல்லாம் இல்லையெனினும், உரை தங்கு தடையின்றி சரளமாக இருந்தது. தவறில்லாத ஆஙகிலம் அவர் முழு பள்ளிப் படிப்பையும் ஏற்காடு ஆங்கிலப் பள்ளியில் படித்தவர் என்பதை உறுதிப் படுத்தியது. அவரது உரை புள்ளி வியரங்களால் நிறைந்து வழிந்தது. புள்ளி விபரங்களைச் சொல்லும் பொழுது அவரது தற்போதைய எதிரியான ரமணா வி.காந்துக்குச் சரியான போட்டி கொடுத்தார்.

மருத்துவர்களின் கூட்டம் ஒரு அரைமணி நேரத்தில் முடிவடைய, பலரும் பல்வேறு கேள்விகளைக் கேட்டுத் துளைத்தனர். பின்னர் நன்றி நவில்ந்து அனைவரையும் வழியனுப்பிய  பின் அதே அறையில் வளைகுடாப் பகுதி தமிழர்கள் ஒரு நூறு பேர்கள் குழுமினர். இரண்டு நிகழ்ச்சிகளிலும் இந்திய தூதரக துணைத் தூதுவரான பிரகாஷ் கலந்து கொண்டார். இரண்டாவது நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மில்பிடாஸ் நகர மேயரான ஓசே எஸ்டிரடாவும், ·ப்ரீமாண்ட் நகர மன்ற உறுப்பினர் திருமதி.அனு நடராஜன் அவர்களும் வந்திருந்தனர். முதலில் தமிழ்ப் பள்ளியைச் சேர்ந்த குமார் குமரப்பன் அமைச்சரை வரவேற்று, ந்கர மேயரை பேசுமாறு அழைத்தார். ஓசேயும்,தனது சின்ன நகரத்திற்கு ஒரு பெரிய நாட்டின் பெரிய சுகாதாராத்துறை மந்திரியே வந்திருந்தது மிகவும் சிறப்பானதொரு விஷயம் என்றும், அதனால் தானும், நகர மக்களும் மகிழ்ச்சி அடைவதாகவும், கூறி மாண்புமிகு மந்திரியை வரவேற்றார். வரவேற்புச் சடங்குகளின் ஒரு பகுதியாக நகரத்தின் சாவியை, ஒரு பெரிய தங்க நிறச் சாவியை மந்திரியிடம் அளித்து தங்கள் நகரத்தின் சார்பாக நல்வரவு நல்கினார். இந்தச் சடங்குகள் எல்லாம் முடிந்து மந்திரி பேச ஆரம்பித்தார். சற்று முன் நிகழ்த்திய ஆங்கிலப் பேருரையை அப்படியே தமிழிலும் பேசினார். தமிழில் நிறுத்தி நிதானாமாக பிசிறின்றி பேசினார். மிகவும் யோசித்து ஒவ்வொரு வார்த்தைக்கும் ஆங்கிலம் கலவா தனித்தமிழில் பேச முதல் ஒரு சில நிமிடங்களில் பெரும் சிரத்தை எடுத்துக் கொண்டாராயினும், கொஞ்சம் கொஞ்சமாக, ஆங்கில வார்த்தைகள் கலந்துதான் பேச்சு வர ஆரம்பித்தது. அவரது ஐயா அருகில் இருந்திருந்தால் அவரது பண முடிச்சில் இருந்து (பர்ஸ்) வார்த்தைக்கு நூறு டாலர் வீதம் ஒரு பத்தாயிரம் டாலராவது வசூலித்திருப்பார். உரையாற்றி முடிந்த பின் கேள்விகள் கேட்கப் பட்டன. அவையாவுக்கும் பொறுமையாகப் பதிலளித்தார். பின் இரவு உணவு அருந்தும் பொழுதும் ஏகப்பட்ட பேர்கள் அவரைச் சூழ்ந்து கொண்டு ஏகப் பட்ட கேள்விகளைக் கேட்டுத் தள்ளினர். இரவு வெகு நேரம் வரை கலந்து கொண்டவர்களுடன் கலந்து உரையாடி விட்டு மறுநாள் பல்வேறு பணிகள் காத்திருப்பதால் சற்று உறங்கவும் வேண்டும் என்று கூறி விடை பெற்றுச் சென்றார். இனி அவரது உரையின் சில முக்கியமான அம்சங்கள்.

முப்பத்தாறே வயதாகும் தான் இந்திய அமைச்சரவைலியே இளமையான மந்திரி என்றார்.  பா ம க என்ற கட்சியில் இருந்து அதன் தலைவர் டாக்டர் ஐயாவின் ஆசியுடன் தான் இந்த மந்திரிப் பணியைச் செவ்வனே செய்து நூறு கோடி இந்திய மக்களுக்கு அயராது உழைத்து வருவாதாகவும், 91ம் ஆண்டு மெட்ராஸ் எம் எம் சியில் மருத்துவப் பட்டப் படிப்பை முடித்தாகவும் கூறி பேச்சைத் தொடங்கினார். கடந்த இரு வாரங்களாக ஓய்வு ஒழிச்சலின்றி அமெரிக்காவின் முக்கிய நகரங்களில், முக்கிய அதிகாரிகளையும் ஆராய்ச்சியாளர்களையும் சந்தித்து, பல்வேறு ஒப்பந்தங்களில் கையெழுத்து விட்டு இங்கு வந்திருப்பதாகவும், காலையில் இருந்து தொடர்ந்து கருத்தரங்கங்களிலும், கூட்டங்களிலும் கலந்து கொண்டு மிகவும் களைப்படைந்திருப்பதாகவும் கூறினார். ஒரு ஐந்து நிமிட ஓய்வு கூட தனக்குக் கிட்டவில்லையென்று சொன்ன பொழுது, இப்படி நாட்டுக்காக பசி நோக்காமல், கண் துஞ்சாமல் உழைக்கும் ஒரு இளைஞரை, எவ்வளவு எளிதாகப் பத்திரிகைகளும் இணைய வலைப் பதிவாளர்களும் கிண்டல் செய்து விடுகிறார்கள் என்று நினைக்கும் பொழுது வருத்தமாக இருந்தது. வாஷிங்டன் டி சி நகரத்தில் அமெரிக்க மருந்துக் கட்டுப்பாட்டு அதிகாரிகளைச் சந்தித்து இந்தியாவிலும் மருந்துக் கட்டுப்பாட்டுத் துறையை அதே போல் வலுவுல்லதொரு அமைப்பாக மாற்ற கலந்தாலோசித்து, அவர்களின் ஆலோசனைகளைப் பெற்றுக் கொண்டிருக்கிறார். பின்னர் அமெரிக்க சுகாதாராத் துறைச் செயலரை சந்தித்து பல்வேறு இரு நாட்டுப் பரஸ்பர ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டேன் என்று குறிப்பிட்டார். தலைநகரில் உள்ள தேசிய சுகாதாரக் கல்வி நிலையத்தில் சென்று முக்கியமான சுகாதாரப் பிரச்சினைகளைப் பற்றி கலந்தாலோசித்துள்ளர். பின்னர் ஜியார்ஜியா மாநிலத்தில் உள்ள அட்லாண்டா நகரில் நீரழிவு நோய்த் தடுப்புச் சம்பந்தமான ஒரு மாநாட்டில் கலந்து கொண்டிருக்கிறார். கோபி அன்னனைச் சந்தித்த பொழுது எயிட்ஸ் நோய் கட்டுப்பாட்டில் இந்தியாவின் பங்கை மிகவும் பாராட்டியதாகக் குறிப்பிட்டார். அவரது உரையில் குறிப்பிட்ட பல்வேறு புள்ளி விபரங்களின் சுருக்கம்:

- இந்தியாவில் 5.1 மில்லியன் எயிட்ஸ் நோயாளிகள் உள்ளனர். ஆனால் அதன் வளர்ச்சி கட்டுக்குள் உள்ளது. கடுமையான் நடவடிக்கைகள் எடுக்கப் பட்டு வருகின்றன.

- இந்தியாவில் நீரழிவு நோய் பெருமள்வில் உள்ளது, அதையும் கட்டுப்படுக்க நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். டயபடிஸ் இந்தியாவின் மிகப் பெரும்வா ஆப்த்தான நோயாக உருவெடுத்து வருகிறது.

- 42 லட்ச கண் அறுவைச் சிகிச்சை ஆண்டுதோறும் நடத்தப் பெறுகின்றன.

- 2020க்குள் இந்தியாவின் கண்பார்வைக் குறைவை தீர்க்க விஷன் 2020 என்ற திட்டம் தீட்டப் பட்டுள்ளது.

- மன நோய் இந்தியாவின் மற்றொரு பெரிய பிரச்சினை, இதைத் தீர்ப்பதற்கு போதுமான மனநோய் மருத்துவர்கள் கிடைப்பதில்லை என்பது பெரிய சவாலாக அமைந்துள்ளது. மன நோய் மருத்துவர்களுக்குப் பிற நாடுகளில் அதிக தேவை இருப்பதால் இந்தியாவில் பற்றாக்குறை.

- உப்பில் அயோடின் சேர்ப்பையும், இரும்பு அயோடின் சேர்ப்பையும் கட்டாயமாகக் கலக்க சட்டத் திருத்தங்கள் செய்யப்பட்டு வருகின்றன நாட்டில் 235 மருத்துவக் கல்லூரிகளும், 210 பல் மருத்துவக் கல்லூரிகளும் 410 இந்திய மருத்துவக் கல்லூரிகளும், வருடத்திற்கு 2500 வெளிவரும் புதிய மருத்துவர்களும் 12000 சுகாதார நிலையங்களும் இருப்பதாகக் குறிப்பிடார்.

- இந்திய மருத்துவர்கள் ஒவ்வொரு ஐந்தாண்டுகளுக்கும் ஒரு தரச்சான்று தேர்வுக்கு உள்ளாக வேண்டும் என்று ஒரு மசோதா கொண்டு வரப் போவதாக அறிவித்தார். ஆனால் அது மருத்துவர்களிடம் கடும் எதிர்ப்பைத் தெரிவித்திருப்பதாகக் குறிப்பிட்டார்.

- அது போல் மருத்துவ மேற்படிப்பிற்கும், பிற சலுகைகளுக்கும் முந்தகுதிகளாக குறைந்தது 2 ஆண்டுகளாவது கிராமங்களில் பணியாற்றி இருக்க வேண்டும் என்ற சட்டமும் அமுலாக்கப் படும் என்று தெரிவித்தார்.

- தனியார் மருந்தகங்கள், சிறு மருத்துவமனைகள், அனைத்தும் அரசாங்கத்திடம் உரிய முறையில் பதிவு செய்யவும், அதை மக்களுக்கு வெளிப்படுத்தவும், அதன் குறைந்த பட்ச தர நிர்ணயங்களை அமுல் படுத்தவும் சட்டங்கள் கொணரப் போவதாகக் குறிப்பிடார். இந்தியாவில் யார் வேண்டுமானாலும் மருத்துவர் என்று சொல்லிக் கொண்டு மக்களை ஏமாற்றுவது தடுக்கப் படும் என்று அறிவித்தார்.

- பிரான்ஸ், ஜெர்மனி, சிலி, அர்ஜென்டினா, போன்று ஒரு ஆறு நாடுகளின் அதிபர்கள் தங்கள் நாட்டுக்கு இந்தியப் பாரம்பரிய மருத்துவ முறைகளை முறையாக அறிமுகப் படுத்துமாறு தன்னைக் கேட்டிருப்பதாகவு, இந்திய பாரம்பரிய மருத்துவங்களை உலக நாடுகளுக்கு எடுத்துச் செல்ல முயற்சிகள் நடந்து வருவதாகவும் குறிப்பிட்டார். வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வந்து மருத்துவ வசதிகளும், அறுவைச் சிகிச்சைகளும்  பெற்றுக் கொண்டு திரும்புவது அதிகரித்து வருவதாகவும் அவ்வாறு சிகிச்சைக்காக வரும் வெளிநாட்டினருக்கு உரிய பாதுகாப்பும், வசதிகளும் செய்து அந்த திறக்கில் அதிக முதலீடுகள் செய்ய தனியார் மருத்துவமனைகளை ஊக்குவிப்பதாகவும் குறிப்பிட்டார்.  இந்திய மருத்துவ முறைகளில் பயன்படுத்தப் படும் மூலிகைகள், உணவு வகைகள், சித்த, ஆயுர்வேத, யுனானி, ஹோமியோபதி மருத்துவத் துறைகளில் மிகுந்த வளர்ச்சியையும் பரப்புதலும் செய்யப் பட்டு வருகின்றன என்று குறிப்பிட்டார். இந்திய மருத்துவ முறைகள் இந்தியாவிலும் உலகெங்கிலும் எடுத்துச் செல்லப் படுவதின் அவசியத்தையும் முக்கியத்துவத்தையும் அரசு உணர்ந்து அதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகக் குறிப்பிடார்.

- இந்தியாவின் மிகப் பெரும் சுகாதாரச் சவால் அதன் வளர்ந்து வரும் மக்கள் தொகை என்றும் அதைக் கட்டுப் படுத்துவதே தனது பிராதான பணி என்றும் குறிப்பிட்டார்.

- ஆஷா என்று ஒரு திட்டத்தின் மூலம் ஒவ்வொரு கிராமத்திலும் துணை மருத்துவப் பயிற்சி பெற்ற ஒரு பெண் அமர்த்தப் படுவார் என்றும் அவர் அந்த கிராமத்தினரின் மருத்துவ தேவையினைக் கண்டு பிடித்து அருகில் உள்ள மருத்துவ நிலையங்களுக்கு அனுப்புவார் என்றும் அவர் அந்த கிராமத்தின் மருமகள் போல் அங்கேயே தங்கி செயல் படுவார் என்றும் அந்த ஊழியருக்கு அவர் செய்யும் சேவையின் அடிப்படையில் ஊதியம் வழங்கப் படும் என்றும் அறிவித்தார். இது போன்ற பல திட்டங்களை கிட்டத்தட்ட 100000 கோடி ரூபாய்களில் வரும் ஆண்டுகளில் நடத்தத் திட்டமிட்டிருப்பதாகவும் குறிப்பிட்டார்.

- மலேரியா தடுப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கப் படும். நவீன கொசு வலைகள் இலவசமாக மக்களுக்கு வழங்ப்படும் மக்களிடம் அடிப்படை சுத்தம் சுகாதாராம் குறித்த விழிப்புணர்வு பெருமளவில் எடுத்துச் செல்லப்படும் அப்படி அடிப்படை சுகாதார அறிவு பெற்றால் அரசின் 60 சதவிகித பொறுப்புக் குறைந்து விடும் என்று கூறினார்.

- கலி·போர்னியாவின் ஸ்டெம் செல் ஆராய்ச்சியில் இந்தியா எந்த அளவிற்கு கலந்து கொள்ளலாம் என்பது குறித்து ஸ்டான்போர்டு பல்ககலைக் கழக மருத்துவ ஆராய்ச்சியாளர்களுடனும், ஆராய்ச்சி அமைப்பின் அதிகாரிகளுடனும் தொடர் கூட்டங்கள் நடத்தி வருவதாகவும் குறிப்பிட்டார்.  இந்தியாவை எதிர் நோக்கியுள்ள பெரும் சவால்கள். அதை அரசாங்கம் எதிர் கொள்ளப் போகும் திட்டங்கள் என்று பல்வேறு விபரங்களைத் தொகுத்தளித்தார் திரு.அன்புமணி.

- பசுமைத் தாயகம் மூலம் பல லட்சம் மரங்கள் நடப்பெற்று வருகின்றன. தானே பல நூறு மைல்கள் சைக்கிளில் சென்று பல சுற்றுச் சூழல் மேம்பாட்டுத் திட்டங்களில் கல்ந்து கொண்டு வருவதாகவும் கூறினார். அமைச்சரான பின்பும் கூட தமிழகத்தில் மரம் வளர்ப்பதிலும், ஆறுகள், வனங்கள் போன்றவற்றைக் காப்பதிலும் மிகுந்த அக்கறை செலுத்தி வருவதாகவும் குறிப்பிட்டார்.

- சினிமாக்களில் புகைப் பிடிப்பதாக வரும் காட்சிகளை தடை செய்யும் ஒரு பழைய சட்டத்தை அமுல் படுத்தப் போவதாகவும் அது கடும் எதிர்ப்பைக் கிளப்பியிருப்பதாகவும் தெரிவித்தார்.  ஆசியாவிலேயே தமிழ் நாட்டில்தான் சினிமா இளைஞர்களை பெரிதும் பாதிப்பதாகவும் ஆகவே சினிமாக்கள் ஒரு முன்னோடியாக இருக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினார்.

- இந்தியாவின் சுகாதார நிலமை குறித்து அதன் அமைச்சரின் நேரடித் தகவல்கள் பெற முடிந்த ஒரு பயனுள்ள கூட்டமாக அன்றைய மாலைக் கூட்டம் அமைந்திருந்தது.

PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2005 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |