ஜூன் 17 2004
தராசு
மேட்ச் பிக்சிங்
காந்தீய விழுமியங்கள்
பருந்துப் பார்வை
உ. சில புதிர்கள்
பெண்ணோவியம்
வானவில்
முத்தொள்ளாயிரம்
க. கண்டுக்கொண்டேன்
திரையோவியம்
 
  முதல் பக்கம்
தொடர்கள்
- சத்யராஜ்குமார்
 • கங்கை இல்லாத காசி
 • - பாஸ்டன் பாலாஜி
 • வார்த்தையல்ல, வாக்கியம்
 • - என். சொக்கன்
 • என்னை எழுதியவர்கள்
 • - சத்யராஜ்குமார்
 • சுய சாசனம்
 • - பாஸ்டன் பாலாஜி
 • கோடிட்ட இடங்கள்
 • - சித்ரன்
 • களம்
 • - நாகூர் ரூமி
  யுனிகோடில் தேடல்
  சென்ற இதழ்கள்
  பருந்துப் பார்வை : அதிகபட்சப் பொதுநலத் திட்டம்
  - மதுரபாரதி
  | Printable version |

  ஒரு காட்டிலே சிங்க ராஜாவுக்கு வயதாகிவிட்டது. பலமில்லாத ராஜாவால் என்ன ஆட்சி செய்யமுடியும்? உடனே அவர் மிருகங்களையெல்லாம் அழைத்து "அன்பான மிருகங்களே, என் தலைமையில் ஒரு கூட்டணி ஆட்சி அமைக்கலாம் வாருங்கள். எனக்குத் தள்ளாமை ஆகிவிட்டது. இனிமேல் எல்லோரும் சேர்ந்து ஆளலாம்" என்றது. உடனே நல்ல வலுவாய் இருந்த புலி பெருங்கர்ஜனையோடு எழுந்து "ரொம்பச் சரி. நாமெல்லாம் சேர்ந்து ஆளலாம்" என்றது. இதுதான் சாக்கு என்று யானை "இந்தக் காட்டில் யாரையும் பின்னாலிருந்து துரத்தித் தாக்கக் கூடாது என்று ஒரு சட்டம் கொண்டு வருவதானால் நானும் ஆட்சியில் பங்கு கொள்கிறேன்" என்றது. யானையை நேருக்கு நேர் தாக்கிப் புலி, சிங்கத்தால் கொல்லமுடியாது. அவை பின்னாலிருந்து வந்து முதுகிலேறி மத்தகத்தைப் பிளக்குமாம்.

  கூட்டணி அமைக்கவேண்டுமே, புலியும் சிங்கமும் யானையின் ஷரத்துக்கு ஒப்புக்கொண்டன. "புல்லும் தழையும்தான் எல்லா மிருகங்களும் தின்னவேண்டும். அது கிடைக்காவிட்டால்தான் வேறு பிராணிகளைத் தின்னலாம் என்று ஒரு ஒப்பந்தம் செய்துகொள்வோம்" என்றது ஒட்டைச் சிவிங்கி. மானும், முயலும் கூட அதன்கூடச் சேர்ந்து கொள்ளவே அதற்கும் புலியும் சிங்கமும் ஒத்துக்கொண்டன. "நியாயம் தான், குறைந்த பட்சம் நாம் தின்னுபவை புல் தின்னும் பிராணிகளாகவாவது இருக்கவேண்டும் என்று ஒரு உபஷரத்து அதில் சேர்த்துவிடுங்கள்" என்றதாம் நரி. எல்லாம் நம் பக்கமே இருந்தால் சரியாகாது, கொஞ்சம் நரிக்கும் விட்டுக் கொடுக்கலாம் என்ற எண்ணத்தில் முயல், மான், யானை இவையெல்லாம் இந்த ஷரத்துக்கு ஒப்புக்கொண்டனவாம்.

  ஒரு கூட்டணி அரசின் திட்டம் எப்படித் தயாரிக்கப் படுகிறது என்பதற்கு இது உதாரணம். தமிழில் இதைக் குறைந்தபட்சப் பொதுத் திட்டம் என்று சொல்கிறோம். ஆங்கிலத்தில் 'Common Minimum Program'. லல்லு பிரசாத் யாதவ் தவறாமல் இதை ஆரம்பத்திலிருந்தே 'மினிமம் காமன் ப்ரோகிராம்'  என்றுதான் சொல்லிவந்தார். ரொம்பத் தொலைநோக்குடையவர். சத்திய சந்தர். (ஏராளமான மாட்டுத் தீவனத்தை ஒண்டியாகக் காலிபண்ணினவராயிற்றே!) எப்படியும் இப்படித் தமக்குள் மாறுபட்ட அடிப்படைக் கொள்கைகளையுடைய பல கட்சிகள் ஒன்று சேர்ந்து ஆட்சி அமைக்கும் போது அதில் மக்களுக்குக் கிடைப்பது 'குறைந்தபட்ச' நலத் திட்டங்கள்தாம். அப்படி ஒரு திட்டத்தை வரைவு செய்து எல்லோரிடமும் கைநாட்டு வாங்குவதற்குள் போதும்போதுமென்று ஆகிவிட்டது கூட்டணிக்குத் தலைமை தாங்கும் காங்கிரசுக்கு.

  தேர்தல் முடிந்து, ஏதோவொரு கூட்டல் கழித்தல் அடிப்படையிலே ஆட்சி வந்ததும் "இது ஹிந்துத்துவாவுக்குக் கிடைத்த வெற்றி" அல்லது "சோனியாவின் தலைமைக்குக் கிடைத்த வெற்றி", "இது கம்யூனிஸ்டுகளின் மகத்தான வெற்றி" என்று ஏதாவது ஒரே ஒரு காரணியின் மேல் எல்லாப் பழியையும் சுமர்த்திவிடுவது வழக்கமாகிவிட்டது. இதில் வெறும் வெற்றி எக்காளம் அல்லது தோல்விப் புலம்பல் இருக்குமே தவிர உண்மையின் சுவடு குறைவுதான். அதே போலத்தான் "மக்களின் தீர்ப்பை மதிக்கிறோம்" என்பதும் ஒரு தாற்காலிகப் பதுங்கல்.


  சரி, நமது கவலை இதைப் பற்றியது அல்ல. 'குறைந்தபட்ச செயல் திட்டம்' பற்றியது. ஒன்று யோசித்துப் பாருங்கள். ஒரு நாட்டின் வளர்ச்சி - வறுமை நீக்கம், கல்விக் கண் திறத்தல், அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்தல், நலவாழ்வு, அறிவியல் மேம்பாடு, மனித உரிமைப் பாதுகாப்பு, தொழில்நுட்ப வளர்ச்சி, பிறநாடுகளுடனான உறவும் வணிகமும் உயர்தல் - என்று பல தளங்களில் செயல்படுவது. இவையெல்லாம் வெவ்வேறாகத் தோன்றினாலும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவையே. உதாரணத்துக்கு, உயர் தொழில்நுட்ப மூலம் கல்வியும், மருத்துவமும் தொலைதூரத்துக்கு எட்டும்படிச் செய்யலாம், வேளாண்மை உற்பத்தித் திறன் பெருக்கலாம்.

  அதே போல வன்முறை அடக்கும் சட்டங்களும் மனித உரிமையும் ஒன்றுக்கொன்று எதிரானது என்பது போல ஒரு பிரமை உண்டாக்கப் படுகிறது. உலகின் வேறெந்த நாட்டிலும் நடவாத செயல் இது. MISAவை இதே காங்கிரஸ் கட்சி கொண்டுவந்தபோது அப்போதைய எதிர்க்கட்சிகள் அதை மிகக்கடுமையானது (draconian) என்று விமர்சித்தன. எமர்ஜன்சியின் கறைபடிந்த மிசாவை நீக்கிவிட்டுப் பின்னர் TADA-வைக் கொண்டுவந்ததும் காங்கிரசு ஆட்சிதான். கொஞ்சம் திருத்தங்களுடன் பாஜக ஆட்சி POTA-வைக் கொண்டு வந்தது. இந்த இடைப்பட்ட காலத்தில் இந்தியாவில் வன்முறை அதிகப்பட்டுக்கொண்டுதான் வந்திருக்கிறதே தவிரக் குறையவில்லை.

  தர்க்க ரீதியாகச் சிந்திக்கும் எவரும் இவற்றை நீக்கவேண்டும் என்று பேசுவதற்குப் பதிலாக, இவற்றைக் காலத்திற்கேற்ப மாற்றியமைக்க வேண்டும் என்றுதான் சொல்லுவர். சைக்கிளில் விளக்கு இல்லாமல் போன கிராமத்துக்காரனைப் போலீஸ்காரன் பளாரென்று அறைவதை நான் பார்த்திருக்கிறேன். சைக்கிள்காரன் செய்தது சட்டமீறல்தான். போலீஸ்காரர் செய்தது? அதற்காக வாகனங்கள் இரவில் செல்லும்போது விளக்கு எரியவேண்டும் என்று சொல்லும் சட்டமே தவறா? அந்தச் சட்டம் மனித உரிமைக்கு எதிரானதா? இப்படிப் பார்த்தால் வருமான வரிச்சட்டம், கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டம் உட்பட எல்லாச்சட்டங்களின் கீழும் சாதாரண மனிதர்கள் துன்புறுத்தப்படுகிறார்கள். வெவ்வேறு காரணங்களுக்காக, வெவ்வேறு அதிகாரிகளால். அந்த உரிமைமீறல்களுக்கெல்லாம் சட்டம் இருப்பதா காரணம்?

  எனவே POTA-வைக் கூடிய சீக்கிரம் இல்லாதாக்குவோம் என்று ஜனாதிபதியின் உரையில் பேசவைத்தது தவறு. வன்முறை வளர்கின்ற வேகத்தில் அதைக் கட்டுப்படுத்துவதற்கான எந்திரமோ, சட்டங்களோ வளரவில்லை. வைக்கோ போன்ற தவறுகள் நடந்திருக்கக் கூடாது. அவை தனிப்பட்ட அரசியல் விரோதங்களின் காரணமாக நிகழ்ந்தவை. அப்படி நடக்காமல் இருக்க என்ன செய்யவேண்டும் என்று யோசிக்கவேண்டுமே தவிர ஒரேயடியாக பொடாவை அகற்றுவேன் என்பது ஒப்பக்கூடியது அல்ல.

  குடிபுறங்காத்து ஓம்பி குற்றங்கடிதல்
  வடுஅன்று வேந்தன் தொழில்

  (திருக்குறள்: செங்கோன்மை:549)

  குடிகளைப் பாதுகாக்கும் பொருட்டாகக் குற்றத்தைத் தண்டித்தல் ஒரு அரசனை வன்முறையாளனாக ஆக்காது என்று இந்தக் குறள் தெளிவாகச் சொல்கிறது. மாறாக அதற்காகத்தான் அவன் அரசனாக இருப்பதே. அதைச் செய்யாவிட்டால் அவனுக்கு தன் கடமையில் தவறியவன் ஆகிறான். இது ஜனநாயக அரசுக்கும் பொருந்தும்.

  அதுமட்டுமல்ல. பன்னாட்டு மயமாக்கல், தாராள மயமாக்குதல், பங்குச்சந்தைக்கு மீண்டும் உயிரூட்டுதல், தொடர்ந்து பொருளாதார வளர்ச்சி விகிதத்தைப் பராமரித்தல், விலைவாசியை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருத்தல், பணவீக்கவிகிதத்தை ஒழுங்குபடுத்துதல், தொழிற்சாலை மற்றும் வேளாண் உற்பத்தியை அதிகரித்தல் போன்ற பலவற்றிலும் அரசு உடனடிக் கவனம் செலுத்த வேண்டிய கட்டாயம் இருக்கிறது.

  ஒரு வைரத்துக்கு இருப்பதைவிட அதிக முகங்கள் கொண்ட ஒரு நாட்டின் தேவையை நாம் 'குறைந்தபட்ச செயல் திட்டத்தை' வைத்துப் பூர்த்தி செய்துவிடலாம் எனப் பேசுவது வியப்பாக இருக்கிறது. ஆனால் ஐந்து குதிரைகள் ஐந்து திசைகளில் இழுத்தால் அந்தச் சாரட்டு ஒரு திசையிலும் முன்னேறாது. பலகட்சிக் கூட்டணி அரசின் பிரச்சினை அதுவேதான்.

  பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்து அலைக்கும்
  கொல்குறும்பும் இல்லது நாடு

  (திருக்குறள்: நாடு: 735)

  எண்ணற்ற உட்பிரிவுகளும், தன் நாட்டிற்கே துரோகம் செய்யும் உள்நாட்டுப் பகைவர்களும், அரசுக்குத் துயர்தரும் அராஜகக் கும்பல்களும் இல்லாதது நாடு என்கிறார் வள்ளுவர். நம் நாட்டில் இதில் எதற்குக் குறைவு சொல்லுங்கள். கூட்டணி அரசில் இருக்கும் கட்சிகளே பல்குழு என்பதில் அடங்கும். யோசித்துப் பாருங்கள், தி.மு.க ஆகட்டும், கம்யூனிஸ்டுகள் ஆகட்டும், வேறொருவர் ஆகட்டும் - நாட்டு நலனின் பொருட்டாகத் தமது கட்சிக்குப் பாதகமான (கொள்கைக்குப் பாதகமான என்று நான் சொல்லவில்லை) ஒரு முடிவை ஏற்பார்களா? சந்தேகம்தான். இதோ, ராகுலும் சோனியாவுமாகச் சேர்ந்து முலாயம் சிங் அரசை இறக்குவோம் என்று வேலையைத் தொடங்கிவிட்டார்கள்.

  நமது ஜனநாயகத்தில் இன்னொரு பெரிய பிரச்சனை எதிர்க்கட்சிகள் சேர்ந்துகொண்டு பாராளுமன்றத்தைப் பலநாட்கள் ஸ்தம்பிக்கச் செய்வது.  ஆக்கபூர்வமான சக்தியைக் கூச்சல் குழப்பம் ஏற்படுத்தி வெளிநடப்புச் செய்வதில் செலவழிப்பது நாட்டுப் பற்றின்மையைத்தான் காண்பிக்கிறது.  பாஜக கூட்டணி ஆட்சியில் எதிர்க்கட்சிகள் இதைப் பலமுறை செய்திருக்கின்றன. இப்போது குற்றப் பின்புலமுள்ள அமைச்சர்கள் விஷயத்தில் இதே நடைமுறையைக் கடைப்பிடிக்கப் போவதாக பாஜக மிரட்டியிருக்கிறது. வலுவான ஊடகங்கள், நீதித்துறை மற்றும் மக்கள் இயக்கங்கள் இருக்கின்றன. கட்சிகளே நாடுதழுவிய போராட்டம் நடத்தும் வல்லமை கொண்டவையாய் இருக்கின்றன. பாராளுமன்றத்தைச் செயலிழக்கச் செய்வது அறிவுடைமை அல்ல.

  இந்திய ஜனநாயகத்தின் மிகப் பெரிய பலவீனம் இதுதான்: கட்சிகளின் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டுதான் இருக்கிறது. தனிப்பெரும்பான்மை என்பது கனவாகிக் கொண்டுதான் வருகிறது. இந்தச் சமயத்தில் சிந்திப்பவரின் பணி என்னவாக இருக்கவேண்டுமென்றால் தம் கட்சிச் சார்புகளுக்கு அப்பாற்பட்டுச் சிந்தித்து "எங்கள் ஓட்டுக்களை வாங்கித்தான் நீங்கள் ஆட்சியமைத்திருக்கிறீர்கள். எங்களில் லட்சத்தில் ஒருவர்கூட உங்கள் கட்சித் தேர்தல் அறிக்கையைப் படிக்கவில்லை. எதன்மேலோ கொண்ட வெறுப்பு உங்களுக்குச் சாதகமாயிற்று. அந்த வெறுப்பு உங்கள் மீது பாய்வதற்கு அதிக நாள் ஆகாது. இனிமேலாவது தனிப்பட்ட செயல்திட்டங்களை ஆழப்புதைத்துவிட்டு நாட்டுக்கு ஒரு அதிக பட்ச செயல் திட்டம் கொடுங்கள்"  என்று அறைகூவுவதான்.

  இல்லையென்றால், நேரம் கடந்துவிடலாம். கூரை எறிந்தபின் தீயணைக்கும் வண்டியை அழைத்துப் பயனில்லை.

  PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
  உங்கள் கருத்து  
  (You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
  Copyright © 2004 Tamiloviam - Authors
  Best viewed with IE 4.x and above, Netscape 7.x , Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
  | Privacy |