ஜூன் 17 2004
தராசு
மேட்ச் பிக்சிங்
காந்தீய விழுமியங்கள்
பருந்துப் பார்வை
உ. சில புதிர்கள்
பெண்ணோவியம்
வானவில்
முத்தொள்ளாயிரம்
க. கண்டுக்கொண்டேன்
திரையோவியம்
 
  முதல் பக்கம்
தொடர்கள்
- சத்யராஜ்குமார்
 • கங்கை இல்லாத காசி
 • - பாஸ்டன் பாலாஜி
 • வார்த்தையல்ல, வாக்கியம்
 • - என். சொக்கன்
 • என்னை எழுதியவர்கள்
 • - சத்யராஜ்குமார்
 • சுய சாசனம்
 • - பாஸ்டன் பாலாஜி
 • கோடிட்ட இடங்கள்
 • - சித்ரன்
 • களம்
 • - நாகூர் ரூமி
  யுனிகோடில் தேடல்
  சென்ற இதழ்கள்
  வானவில் : சிபியும் புறாவும்
  -
  | Printable version |

  கருணைக்கும் கொடைத்திறனுக்கும் பெயர்பெற்ற அரசர்கள் பலர் அக்காலத்தில் இருந்தார்கள். அப்படிப் பட்டவர்களில் ஒருவன் சிபி. அவன் மிருகங்கள், பறவைகளிடம் கூடக் கருணை காட்டுபவன். அவனிடம் கொடை வேண்டி வந்தவர்கள் யாரும் வெறுங்கையுடன் திரும்பியதில்லை.

  அப்படிப்பட்ட சிபியின் புகழ் தேவலோகத்தை எட்டியது. தேவேந்திரன் சிபியைச் சோதித்துப் பார்க்க விரும்பினான். அக்கினி பகவானை அழைத்துக்கொண்டு பூமிக்கு வந்தான். இந்திரன் ஒரு கழுகு வடிவத்திலும், அக்கினி ஒரு புறா வடிவத்திலும் வந்து சேர்ந்தார்கள். புறாவைத் துரத்திக்கொண்டு கழுகு பறந்து வந்தது.

  தனது நந்தவனத்தில் சிபிச் சக்ரவர்த்தி ஏழைகளிக்கு உணவு அளித்துக்கொண்டிருந்தான். அவர்கள் எல்லோரும் திரும்பியபிறகு தனது அரண்மனைக்குச் செல்லத் திரும்பிய சிபியின் கையில் ஒரு புறா வந்து விழுந்தது. அந்தப் புறாவின் உடல் நடுங்கிக்கொண்டிருந்தது. கண்கள் பரிதாபமாக அவனைப் பார்த்தன. "என்னை நீங்கள் தான் காப்பாற்றவேண்டும்.." என்பது போல அவன் மடியில் சுருண்டு விழுந்தது.

  "கவலைப்படாதே! நான் உன்னை எப்படியாவது காப்பாற்றுகிறேன்!" என்று அந்தப் புறாவைக் கையில் எடுத்து தடவிக்கொடுத்தான் சிபி. அப்போது ஒரு பெரிய கழுகு அவன் முன்னால் வந்து உட்கார்ந்துகொண்டது. சிபியின் மடியில் இருந்த புறாவைக் கவ்விடுத்துக்கொண்டு போக முயன்றது. சிபி அதைத் தடுத்து ஒதுக்கினான். புறாவின் பயத்துக்கான காரணம் என்னவென்பது இப்போது அவனுக்குப் புரிந்தது.

  "அரசனே! அந்தப் புறா என்னுடைய பசியைத் தீர்க்கவேண்டிய இரையாகும். என்னைத் தடுக்காதே! புறாவைக் கீழே விடு. " என்று அதிகாரமாகப் பேசியது கழுகு. மனிதனைப் போல அது பேசியதைக் கேட்க பெரும் வியப்பாக இருந்தது சிபிக்கு.

  "நீ யார் என்பது எனக்குத் தெரியவில்லை. மனிதனைப் போலப் பேசும் உன் சக்தியும் என்னை வியப்படையச் செய்கிறது. எதுவானாலும், இந்தப் புறா தற்போது என்னை நாடி வந்துள்ளது. அதைக் காப்பாற்ற வேண்டியது என்னுடைய கடமை. அதனால் இந்தப் புறாவை நீ பறித்துச் செல்வதை

  என்னால் அனுமதிக்க முடியாது!" என்றான் சிபி.

  "அரசே! நீங்கள் எல்லாருக்கும் நியாயம் சொல்ல கடமைப்பட்டவர். புறாவுக்காக மட்டும் நீங்கள் பரிந்துபேசுவது தவறு. புறாவைப் போல நீங்கள் தான் என்னையும் காப்பற்றவேண்டும். பசியால் வாடும் என் கதி என்ன? எனக்குக் கிடைக்க வேண்டிய இரையை நீங்கள் பிடுங்கிக்கொண்டு விட்டீர்களே? நான் பசியால் இறந்துபோக வேண்டும் என்பதுதான் நீங்கள் கூறும் நியாய தர்மமா? " என்று கேட்டது கழுகு.

  இதைக் கேட்ட சிபி திகைத்துப் போனான்.  மனிதனைப் போலவே பேசுவதல்லாமல், விவாதம் செய்யும் திறனும் அக்கழுகுக்கு இருப்பதைக் கண்ட அவனுக்கு பெரும் வியப்பாக இருந்தது. புறாவுக்கு ஆதரவு கொடுத்ததைப் போலவே கழுகின் பசியைத் தீர்ப்பதும் தன் கடமை என்பதை உணர்ந்தான்.

  கழுகிடம், "உனக்கு என்ன வேண்டுமோ கேள். அதை நான் உனக்குத் தருகிறேன். ஆனால் புறாவை விட்டுவிடு." என்று கூறினான்.

  "அரசே! புறாவுக்குப் பதிலாக எனக்கு மாமிசம் உடனே தேவை! அது மனித மாமிசமாக இருந்தாலும் பரவாயில்லை.  உங்களுக்கு உட்பட்ட மிருகம் அல்லது மனிதனைக் கொன்று எனக்குக் கொடுங்கள்.  என்னால் பசி தாங்க முடியவில்லை!" என்றது கழுகு.

  "உன் பசியை ஆற்ற நான் ஒப்புக்கொண்டேன். ஆனால் அதற்காகப் பிறரைத் துன்புறுத்த என் மனம் இடம் கொடுக்காது. உனக்குத் தேவையானது புறாவின் எடையளவு மாமிசம் தானே! அதை நான் என் உடலிலிருந்தே வெட்டித் தருகிறேன்." என்று கழுகிடம் உறுதி கூறிவிட்டு சிபி திரும்பினான்.

  பணியாளரை அழைத்து ஒரு தராசைக் கொண்டு வரச்செய்தான்.

  தராசின் ஒரு தட்டில் சிபி அந்தப் புறாவை வைத்தான். மறு தட்டில் தன் உடலிலிருந்து சிறு பகுதியைச் செதுக்கி எடுத்து வைத்தான்.  புறா அமர்ந்த தட்டு இறங்கவில்லை. தொடர்ந்து சிபி தன் உடலிலிருந்து பகுதி பகுதியாக வெட்டி எடுத்து வைக்கத் தொடங்கினான். எவ்வளவு வெட்டி வைத்தாலும் புறாவின் தட்டுக்குச் சமமாக முடியவில்லை. கடைசியில் சிபி கழுகைப் பார்த்து, "புறாவுக்குக் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்ற நான் என்னையே கொடுப்பதைத் தவிர வேறு வழியில்லை. நானே தட்டில் ஏறி அமர்ந்துகொள்கிறேன். என்னை ஏற்றுக்கொள்!" என்று கூறிவிட்டுத் தட்டில்

  ஏறி அமர்ந்தான். உடனே புறா இருந்த தட்டு சமநிலையில் இறங்கிவிட்டது.

  மறுகணமே கழுகு இந்திரனாகவும். புறா அக்னி தேவனாகவும் மாறினார்கள். சிபியை அவர்கள் அன்புடன் தொட, அவன் உடல் சிதைவு எல்லாம் மாயமாய் மறைந்து தேகம் புதுப் பொலிவு பெற்றது.  தேவர்களைக் காலில் விழுந்து வணங்கினான் சிபி. " என்னைக் காணத் தாங்கள் மாறுவேடத்தில் வந்த காரணம் என்னவோ? " என்று கேட்டான்.

  "அரசே! உன் புகழைக் கேள்விப்பட்டு, அதைச் சோதித்துப் பார்க்கவே வந்தோம். உன்னுடைய கருணையையும் கொடைத் தன்மையையும் புரிந்துகொண்டோ ம். நீ எல்லா நலமும் பெற்று நீடூழி வாழவேண்டும்!" என்று வாழ்த்தி மறைந்தார்கள்.

  அரசாட்சி செய்பவன் தன்னலமின்றி இருக்கவேண்டும். தியாகம் செய்யவேண்டும் என்று வரும்போது தன்னையே முதலில் அர்பணித்துக்கொள்ளவேண்டும். எளியாரை வலியார் துன்புறுத்த வந்தால் எளியவர்களுக்கு ஆதரவு கொடுக்கவேண்டும். எல்லாருடைய குறைகளையும்

  சமமாகப் பாவித்து நியாயம் வழங்கவேண்டும். அப்படிப்பட்ட அரசன் ஆளும் நாட்டுக்கு எந்தக் குறையும் ஏற்படாது.  இதை எடுத்துச் சொல்வதுதான் சிபிச் சக்ரவர்த்தியின் கதை.

   

  PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
  உங்கள் கருத்து  
  (You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
  Copyright © 2004 Tamiloviam - Authors
  Best viewed with IE 4.x and above, Netscape 7.x , Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
  | Privacy |