ஜூன் 17 2004
தராசு
மேட்ச் பிக்சிங்
காந்தீய விழுமியங்கள்
பருந்துப் பார்வை
உ. சில புதிர்கள்
பெண்ணோவியம்
வானவில்
முத்தொள்ளாயிரம்
க. கண்டுக்கொண்டேன்
திரையோவியம்
 
  முதல் பக்கம்
தொடர்கள்
- சத்யராஜ்குமார்
 • கங்கை இல்லாத காசி
 • - பாஸ்டன் பாலாஜி
 • வார்த்தையல்ல, வாக்கியம்
 • - என். சொக்கன்
 • என்னை எழுதியவர்கள்
 • - சத்யராஜ்குமார்
 • சுய சாசனம்
 • - பாஸ்டன் பாலாஜி
 • கோடிட்ட இடங்கள்
 • - சித்ரன்
 • களம்
 • - நாகூர் ரூமி
  யுனிகோடில் தேடல்
  சென்ற இதழ்கள்
  முத்தொள்ளாயிரம் : ஒரு பெரிய திருடன்
  - என். சொக்கன்
  | Printable version |

  பாடல் 19

  அழகான சொற்களைப் பேசும் என் தோழியே,

  சேரன்மேல் காதல் கொண்ட பெண்ணே, உனக்கு ஒரு சேதி சொல்கிறேன் கேள் !

  இந்தச் சேரன், நியாயவான், நேர்மையானவன், செங்கோல் ஆட்சி நடத்துகிறவன் என்றெல்லாம் மக்கள் பேசுகிறார்கள், ஆனால், எல்லோரும் நினைப்பதுபோல், நம் சேரன் கோதை நல்லவன் இல்லை, உண்மையில் சிலருக்கு அவன் பெரும் அநீதி இழைத்திருக்கிறான், 'அவன் ஒரு பெரிய திருடன்', என்று பலரும் குற்றம் சாட்டுகிறார்கள் !

  இந்த விஷயம் உனக்கு எப்படித் தெரியும் என்று கேட்கிறாயா ? நேற்று மாலை, அவன் ஊர்முழுதும் உலா வந்தபோது, நானும் அவனோடு சென்றேன், அப்போதுதான், இந்த அதிர்ச்சியூட்டும் உண்மையைத் தெரிந்துகொண்டேன் !

  ஊர்வலமாய் வரும் சேரனைக் கண்டவுடன், பல பருவப் பெண்கள் அதிர்ச்சியுற்று அலறினார்கள்.

  'இவன்தான் என் நலத்தைத் திருடிக்கொண்ட கள்வன், காதல் நோயில் என்னைத் தள்ளிவிட்டவன் இவன்தான் !', என்று ஒருத்தி கத்தினாள்.

  இன்னொருத்தி, 'என்னுடைய அடக்கத்தை அழித்து, மனதைக் கெடுத்த திருடன் இவன்தான் !', என்று அழுத்தமாய்க் குற்றம் சாட்டினாள்.

  இப்படியாக, அவன் உலா வந்த வீதியெங்கும் ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள் !

  இவன் என் நலம்கவர்ந்த கள்வன் இவன் எனது
  நெஞ்சம் நிறையழித்த கள்வன்என்(று) அம்சொலாய்
  செல்லும் நெறியெலாம் சேரலர்கோக் கோதைக்குச்
  சொல்லும் பழியோ பெரிது.

  (நிறையழித்த - அடக்கத்தை அழித்த / மனதைக் கெடுத்த
  அம் - அழகிய
  நெறி - வழி)


  பாடல் 20

  காதல் கொண்ட ஒரு பெண்ணைப்பற்றி, சமீபத்திய திரைப்பாடல் ஒன்று, இப்படிச் சொல்கிறது -

  'காதல் வந்ததும் கன்னியின் உள்ளம், காதலை யாருக்கும் சொல்வதில்லை,
  புத்தகம் மூடிய மயிலிறகாக, புத்தியில் மறைப்பாள், தெரிவதில்லை !'

  அந்தக் காலத்திலும் இதே கதைதான். காதலில் விழுந்த பெண், அந்தச் சேதியை அவளாக யாருக்கும் சொல்வதில்லை - ஆனால் அவள் உடலிலும், பழக்கவழக்கங்களிலும் ஏற்படுகிற சிறு மாற்றங்களைக்கொண்டு, மற்றவர்கள் அதை எளிதில் ஊகித்துவிடலாம்.

  ஆனால், அன்றுமுதல், இன்றுவரை, இந்தக் காதலியரின் அம்மாக்களுக்குமட்டும், இந்த சூட்சுமச் செய்தி புரிவதேயில்லை.

  ஏனெனில், அவர்களைப்பொறுத்தவரை, தங்களின் மகள், 'இன்னும்' சிறு குழந்தைதான் என்று நினைக்கிறார்கள் - ஒரு குழந்தை திடீரென்று நிலைமாறி, உற்சாகம் குறைந்து, ஒரே திசையைப் பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருந்தால், நாம் என்ன நினைப்போம், 'ஐயோ, ஏதோ தெய்வகுற்றம் நிகழ்ந்துவிட்டது, அல்லது யாரோ என் குழந்தைக்குச் சூனியம் வைத்துவிட்டார்கள் !'

  அந்தக் காலத் தாய்மார்களும், தங்கள் மகளின் 'காதல் நிலை' கண்டு, அப்படியொரு முடிவுக்குதான் வந்தார்கள், 'ஏதோ தெய்வ குற்றம், அதைப் போக்குவதற்கான பரிகாரம் செய்யவேண்டும்' என்ற திசையில்தான் அவர்களின் சிந்தனை சென்றது.

  ஆகவே, அவர்கள், இறைவனை பூஜிக்கும் வெறியாடலுக்கு, ஏற்பாடு செய்கிறார்கள் - இதற்கென தனியான களன் அமைத்து, பூஜை செய்து, வெள்ளாட்டைப் பலி கொடுத்து, பின்னர், புனித நீரில் அவளைக் குளிக்கச் சொல்கிறார்கள்.

  இதையெல்லாம் பார்த்த மகள் சொல்கிறாள், 'என் அன்புக்குரிய அம்மா, நீ சொல்வதையெல்லாம் நான் மறுக்காமல் செய்கிறேன், ஆனால், என்னுடைய ஒரே ஒரு கேள்விக்குமட்டும் நீ பதில் சொல் !'

  அம்மாவுக்கு இப்போதும் விஷயம் புரியவில்லை, 'என்னடி கேட்கப்போகிறாய் ?', என்று அதட்டுகிறாள்.

  அழுத்தமான குரலில் பேசுகிறாள் மகள், 'அம்மா, கோபம் மிக்க வேலுடன், போர்க்களம் பல கண்டு, வெற்றி கொண்ட சேரன் கோதையை நான் காதலிக்கிறேன், அந்தக் காதலால் உண்டான இந்த நோய், ஆண்டவனைப் பிரார்த்தித்து, நீராடுவதால் போய்விடுமா என்ன ?'


  காராட்(டு) உதிரம்தூஉய் அன்னைகளன் இழைத்து
  நீராட்டி நீங்(கு)என்றால் நீங்குமோ போராட்டு
  வென்று களம்கொண்டு வெஞ்சினவேல் கோதைக்(கு)என்
  நெஞ்சு களங்கொண்ட நோய்.

  (காராடு - வெள்ளாடு
  உதிரம் - ரத்தம்
  தூஉய் - தூவி
  களன் - தெய்வத்துக்கான பூஜை / வெறியாடல் நடைபெறும் இடம்
  போராட்டு - போரில் பங்குபெற்று
  வெஞ்சினவேல் - கோபம் மிக்க வேல்)

  PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
  உங்கள் கருத்து  
  (You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
  Copyright © 2004 Tamiloviam - Authors
  Best viewed with IE 4.x and above, Netscape 7.x , Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
  | Privacy |