ஜுன் 22 06
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
கட்டுரை : மெகா சீரியல்கள் - சீர்குலைவா ? சீரமைப்பா ?
- திருமலை கோளுந்து [golundhu1979@yahoo.com]
Bookmark in Del.icio.us | | Printable version | URL |

கோலங்கள், செல்வி நாடகங்கள் ஜெயித்ததற்கு காரணம் அதில் உள்ள யாதார்த்தம் தான்.

திரையரங்குகளில் கூட்டம் இல்லாததற்கு முக்கிய காரணம் தொலைக்காட்சிகள் தான். அதுவும் அதில் ஒளிபரப்பப்படும் சீரியல்கள் என்று சொல்லப்படுகின்ற நாடகங்கள் மக்களை குறிப்பாக பெண்களை வீட்டுக்குள்ளேயே கட்டிப் போட்டு விடுகிறது என்ற குற்றச்சாட்டு கோடம்பாக்கத்தில் இருந்து அவ்வப் போது ஒலித்துக் கொண்டு தான் இருக்கிறது. கடந்த காலத்தில் பிரிக்க முடியாதது எது என்றால் நகமும் சதையும் என்று கூறுவார்கள். இப்பொழுது யாரிடமாவது இந்தக் கேள்வியைக் கேட்டால் தொலைக்காட்சி தொடர்களும், பெண்களும் என்று சொல்வார்கள். அந்த அளவிற்கு இன்றைய பெண்கள் தொலைக்காட்சி தொடர்களின் ரசிகர்(அடிமை)களாக மாறி விட்டனர். தொலைக்காட்சி  தொடர்கள் சமூதாயத்திற்கு என்ன பயன் அளிக்கிறது என்ற கேள்வியை முன்வைத்த பொழுது..............
 
Anandham TV Serialதொலைக்காட்சிகள் பல ஆண்டுகளுக்கு முன்பு அறிவு வளர்க்கும் சாதனமாக இருந்தது. ஆனால் 1991ம் ஆண்டுக்குப் பிறகு தனியார் தொலைக்காட்சிகளின் ஆக்கிரமிப்பு காரணமாக தொலைக்காட்சிகள் தொல்லைக் காட்சிகளாக மாறி விட்டது. அதிலும் குறிப்பாக மெகா சீரியல் என்று ஆரம்பித்தார்களோ அன்றில் இருந்து பெண்களை கவரத் தொடங்கி இன்று மெகா தொடர்கள் பார்க்காமல் பெண்களால் இருக்க முடியாது என்ற நிலை ஏற்பட்டுவிட்டது. இதற்கு அடிப்படைக்காரணம் ஆரம்ப காலத்தில் இருந்து இன்று வரை நடுத்தர மக்களை குறி வைத்து மெகா சீரியல்கள் எடுக்கப்படுவதைத் சொல்லலாம். நடுத்தர மக்களின் வாழ்க்கையை மையமாக எடுக்கப்படுகின்ற தொடர்கள் தான் இன்று அதிகமாக வெற்றியடைந்து இருக்கின்றன. அதில் பெண்கள் பாதிக்கப்படும் பொழுது நடுத்தர வாழ்க்கை வாழும் பெண்களினை அற்புதமாக கவர்ந்து விடுகிறது. ஆரம்பகாலத்தில் சினிமாவில் கொடிகட்டிப்பறந்த கே.பாலசந்தர் தான் மெகா சீரியல்களுக்கு பிள்ளையார் சூழி போட்டார். அதன் பின் வந்த அனைத்து தொலைக்காட்சிகளுமே மெகா சீரியல் என்பதை அத்தியாவசிய நிகழ்ச்சியாக மாற்றிவிட்டனர். ஆரம்பகாலக் கட்டங்களில் அரசு தொலைக்காட்சியான பொதிகையில் தான் நாடகங்கள் ஒளிபரப்பாகிவந்தன.அதிலும் சிறிய நாடகங்கள் தான் ஒளிபரப்பபட்டன. அப்பொழுது எல்லாம் ஒளிபரப்பான நாடகங்கள் ஒரு வீட்டிற்குள்ளேயே எடுக்கப்பட்டு ஓரளவுக்கு பார்ப்பதற்கு நன்றாக இருக்கும் வகையில் எடுக்கப்பட்டன. அதன் பின் தமிழக மக்களின் வீடுகளில் கேபிள் மூலம் எட்டிப்பார்த்த தனியார் தொலைக்காட்சிகள் தான் முதன் முதலில் மெகா சீரியல்களை தொடங்கி வைத்தன. அன்று ஆரம்பித்த பார்வையின் ஆக்கிரமிப்புகள் இன்று ஒரு நோயாக மாறிவிட்டது. தனது குடும்பத்தினரின், தனது உறவினரின் நலன்களை பற்றி பெண்கள் இன்று கவலைப் படுகிறார்களோ இல்லையோ நாடகங்களில் வரும் கதாபாத்திரங்களுக்கு அதிகமாக கவலைப்படுகின்றனர். பெண்கள் பாதிக்கப்படுவதாக காட்டி நாடகம் தொடரும் என்று போடப்படும் பொழுது பார்க்கும் பெண்கள் அழுகின்றனர் என்பது ஓர் யாதார்த்த உண்மை. பணத்தை வாங்கிக் கொண்டு நாடகங்களில் நடித்து பெண்கள் தங்களின் கண்களில் கிளிசரின் போட்டுக் கொண்டு அழுகின்றனர். ஆனால் அதனை பார்க்கும் நமது குடும்பத்துப் பெண்கள் கேபிள்காரர்களுக்கு  பணம் கொடுத்து, கரண்ட் பில் கட்டி தங்கள் பணத்தை இழப்பதோடு நாடகங்களை பார்த்து உண்மையிலேயே அழுகின்றனர். அதை விடக் கொடுமை நாடகங்கள் பார்க்கும் பொழுது குடிக்க தண்ணீர் கேட்டால் கூட அது தவறாகி விடுகிறது. குறிப்பாக ராதிகாவின் சித்தி, அண்ணாமலை, மெட்டி ஒலி நாடகங்கள் நமது மக்களை பிடித்து ஆட்டிப்படைத்ததை யாராலும் எளிதில் மறக்க முடியாது. இப்பொழுது அந்த இடத்தை கோலங்கள், கல்கி, செல்வி பிடித்துக் கொண்டுள்ளது.

Kolangal Devayaniஅது போல் ஒரு சில குடும்பங்களில் நாடகங்கள் அனைத்தும் முடிந்த பின்பு தான் சாப்பாடே கிடைக்கிறது என்பது ரசிக்க கூடிய செய்தியாக இருந்தாலும், உண்மையில் இது வருத்தப்படக்கூடிய செய்தி. இது தவிர ஆரம்பகாலக்கட்டத்தில் இருந்து இன்று வரை ஜெயித்த நாடகங்கள் எந்த அளவு மக்களுக்கு நன்மைகளை அளித்தது, அளித்துக் கொண்டு இருக்கிறது என்பது புரியாத புதிர் தான். ஆனால் மக்களின் மனதில் நாடகங்கள் ஓர் எதிர்ப்புணர்வை உருவாக்கி வருகிறது என்பது தான் உண்மை. ஒரு நாடகம் என்றால் பெண்களை தூக்கியும் அவளது கணவனை மட்டம் தட்டியும் காட்டப்படுகிறது. அதற்கு சிறந்த உதாரணம் தற்பொழுது தமிழகத்தைக் கலக்கி வரும் கோலங்கள் நாடகத்தை சொல்லலாம். அபி என்கிற கேரக்டர் எங்வளவு அற்புதமாக காட்டப்பட்டாலும் அவளது கணவனான பாஸ்கர் மற்றும் அவரது குடும்பத்தை எவ்வளவு கேவலமாக சித்தரிக்க வேண்டுமோ அவ்வளவு கேவலமாக சித்தரிக்கின்றனர். அது போல் மற்றொரு தொலைக்காட்சியில் முதன் முறையாக கற்பழிப்பு காட்சியை ஒளிபரப்பி நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தினார்கள். அந்த நாடகத்தை எடுத்தவர் நம்ம பாலசந்தர் தான். அதே போல் குஷ்பு நடிக்கும் கல்கி நாடகமும் அந்த வகை தான். பெண்களை தூக்கிப்பிடித்தும், ஆண்களை மட்டம் தட்டி காட்டுவதையே தொழிலாக கொண்டு இருக்கின்றனர். அதே சமயத்தில் பெண்ணுக்கு எதிரி பெண் தான் என்பதை மக்களின் மனதில் பதிய வைக்கும் வேலைகளையும் நாடகங்கள் அற்புதமாக செய்கின்றன. தற்பொழுது நாடகங்களில் புதிய கலாச்சாரம் ஒன்று கிளம்பி இருக்கிறது. அதாவது திருமணம் செய்தாலும் தனது கணவருக்குத் தெரியாமல் மற்றொருவரை காதலிப்பது, அவரோடு ஊர் சுற்றுவது, தனது கணவனுக்காக மற்றொரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள பரிந்துரை செய்வது என்ற கூத்தும் சமீபகால நாடகங்களில் நடக்கிறது. ஒரு குடும்பத்தில் இருக்கும் பெண்ணை மாமியார் கொடுமை படுத்துவது போல் காட்டுவதும், அதற்கு மருமகள் வீறுகொண்டு எழுவது போலவும் காட்டுகின்றனர். மாமியாரை நல்லவராக சித்தரித்த நாடகங்கள் எதுவுமே இன்று இல்லை.

Radhika Selviபொதுவாக ஒரு நாடகங்கள் பற்றிச் ஒரு வரையறை சொல்ல வேண்டும் என்றால் பெண்களை தூக்கிப் பிடிப்பது. ஆண்களை நல்லவர்களாக காட்டி கவிழ்ப்பது. குடும்ப அமைப்பிற்கு எதிரான அத்தனை அம்சங்களையும் கொண்ட ஓர் சமூக சீர்கேடுகள் தான் தொலைக்காட்சி நாடகங்கள் என்றால் அதில் தவறே இல்லை. அதே போல் தற்பொழுது மெகாசீரியல்களை தயாரிப்பவர்கள் சினிமா நடிகைகளை நாடகங்களில் நடிக்க வைத்து புதிய உத்திகளை கையாளுகின்றனர். நடிகை ரேவதியில் ஆரம்பமாகி சுஹாசினி, சுகன்யா,பானுப்பிரியா,கவுதமி, குஷ்பு, தேவயாணி, மீனா, கௌசல்யா என்று பட்டியல் நீள்கிறது. நவீனத்துவம் என்ற இலக்கினை நோக்கி இன்றைய காலக்கட்டத்தில் நாம் ஓடிக்கொண்டு இருக்கிறோம். நாட்டிற்கும், வீட்டிற்கும், குறிப்பாக அறிவு வளர்ச்சிக்கும் எத்தனையோ நல்ல தகவல்களை பல தொலைக்காட்சிகள் தருகின்றன. என்று அது போன்ற நிகழ்ச்சிகளை மக்கள் பார்க்க ஆரம்பிக்கின்றனரோ அன்று தான் நம் பெண்களுக்கு விமோசனம் கிடைக்கும். ஆனால் இங்கு என்ன நடக்கிறது. இலவசமாக டி.வி. கொடுத்து மக்களை இன்னும் முட்டாள்களாக்கும் வேலை தான் நடக்கிறது என்கிறார் விஷ்வல் கம்னிகேசன் பிரிவு பேராசிரியர் சுந்தரம்.

தொலைக்காட்சிகளில் வரும் மெகா சீரியல்கள் மக்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு ஓர் சிறந்த வடிகால் என்று சொல்பவர்களும் அதிகமாக இருக்கின்றனர். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தொலைக்காட்சிகளில் மெகா சீரியல்கள் இல்லாமல் இருந்த காலத்தில் அதிகளவு இளம்பெண்கள் தற்கொலை, பக்கத்து வீட்டு பையனோடு பெண் குழந்தைகள் வீட்டை விட்டு ஓடிப்போவது போன்ற சம்பவங்கள் அதிகளவு இருந்தன. ஆனால் இன்று தொலைக்காடசி மற்றும் நாடகங்கள் வந்த பொழுது அது போன்ற சம்பவங்கள் அதிகமாக இல்லை. அதே போல் தொலைக்காட்சி இல்லாத சமயங்களில் பெண்கள் மொத்தமாக சேர்ந்து ஒருவரை பற்றி மற்றொருவர் குறை சொல்லிக் கொண்டு இருந்தனர். தொலைகாட்சி நாடகங்கள் வந்தவுடன் பெண்களிடம் அது போன்ற சண்டைகள் குறைந்து இருக்கின்றன. அதே போல் இன்று நாடகங்களில் காட்டப்படும் கதாபாத்திரங்கள் அனைத்தமே யாதார்த்தமாகவே இருக்கிறது. ஒரு சாதாரண குடும்பத்தில் நடைபெறும், நடைபெறக்கூடிய சம்பவங்களைத் தான் காட்டுகின்றனர். கெட்டுப்போக வேண்டும் என்றால் நாடகங்கள் பார்த்துத் தான் கெட்டுப்போக வேண்டும் என்பதில்லை. அதனால் இன்றைய அவசரமான வாழ்க்கையில் ஆண் மற்றும் பெண் இருவருமே ஒரு குடும்பத்தில் உழைக்க வேண்டிய கட்டாயத்தில் ஓடிக்கொண்டு இருக்கின்றனர். அப்படி ஓடி உழைத்து விட்டு வீட்டில் ஓய்வு எடுக்கும் பொழுது மெகா தொடர்கள் தான் அவர்களுக்கு ஆதரவாக இருக்கிறது. பல நல்ல தரமான நாடகங்கள் வரத்தான் செய்கின்றன. குறிப்பாக பாலுமகேந்திரா இயக்கிய நாடகங்கள், ரேவதி இயக்கிய நடித்த நாடகங்கள் பாலசந்தரின் சஹானா, ரெக்கைகட்டி பறக்கும் மனசு போன்ற நல்ல நாடகங்கள் வரத் தான் செய்தன. கோலங்கள், செல்வி நாடகங்கள் ஜெயித்ததற்கு காரணம் அதில் உள்ள யாதார்த்தம் தான்.

இன்று உண்மையில் வீடுகளில் பெண்கள் தான் எல்லாமே என்று ஆகிவிட்டது. அதனால் அவர்கள் வாழ்க்கையை பிரதிபலிக்கும் வகையில் நாடகங்கள் வரும் பொழுது அதனை பார்க்கத்தான் செய்வார்கள். அதே போல் பெண்கள் நாடகங்கள் பார்க்கும் பொழுது தண்ணீர் கேட்டால் கொடுப்பதில்லை, சாப்பாடு வைப்பதில்லை என்று  சொல்வது எல்லாம் ஏற்றுக் கொள்ள முடியாதவைகள். வீட்டிற்குள் வரும் பொழுது அன்பாக, மென்மையாக சொன்னால் எந்தப் பெண்களாக இருந்தாலும் கேட்கத்தான் செய்வார்கள். அதனை விட்டு விட்டு தனக்கு வெளியில் ஏற்பட்ட கோபத்தை மனைவியிடமோ, அல்லது தாயிடமோ மறைமுகமாக காட்டும் பொழுது அவர்கள் நாடகத்தை தான் பார்ப்பார்கள். எல்லாமே ஆண்களின் கையில் தான் இருக்கிறது. ஒரு சில திரைப்படங்கள் மக்களினை கெடுப்பது போல் இருக்கும். ஆனால் அதனை பார்ப்பவாகள் எல்லாம் கெட்டுப் போய்விடுவதில்லை. அது போல் தான் நாடகங்களும். ஒரு சில நாடகங்கள் சமூகத்தை கெடுப்பது போல் இருக்கலாம். அதனால் ஓட்டு மொத்த மெகா சீரியல்களையும் குறை சொல்வது ஏற்றுக்கொள்ள முடியாதது என்கிறார்கள் நாடக விரும்பிகள்.

| | | | |
oooOooo
திருமலை கோளுந்து அவர்களின் இதர படைப்புகள்.   கட்டுரை பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2006 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |