ஜூன் 23 2005
தராசு
வ..வ..வம்பு
உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால்
முச்சந்தி
சிறுகதை
உள்ளங்கையில் உலகம்
மனம் போன போக்கில் மனிதன் போகலாமா?
இசையோவியம்
அறிவிப்பு
கவிதை
திரைவிமர்சனம்
கவிதை
அடடே !!
நையாண்டி
தொடர்கள்
 
  முதல் பக்கம்
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
உள்ளங்கையில் உலகம் : குறுந்தகவல்
- எழில்
| Printable version | URL |


 
உலகெங்கும் உள்ள செல்பேசிச் சேவை வழங்கும் சேவையாளர்களின் மொத்த வருமானத்தில் 20 சதவீதம் குறுந்தகவல் மூலம் கிடைக்கிறது. செல்பேசிச் சேவையில் அழைப்பு ஏற்படுத்தலுக்கு அடுத்தபடியாய்க் குறுந்தகவல் அனுப்புவது முக்கிய இடம் வகிக்கிறது. இந்த வருட (2005) முதல் நாளன்று இங்கிலாந்தில் மட்டும் சுமார் 133 மில்லியன் குறுந்தகவல்கள் பரிமாறிக்கொள்ளப் பட்டனவாம் . சென்ற வருடத்தில் உலகெங்கும் சுமார் நூற்று எண்பத்தாறு பில்லியன் குறுந்தகவல்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டன.முன்பெல்லாம் பிறந்த நாள் , பண்டிகை, நண்பர்கள் தினம், அன்னையர் தினம் போன்றவற்றிற்கு வாழ்த்து அட்டைகள் அதிகம் பரிமாறிக்கொள்ளப் படும் . தற்போது குறுந்தகவலிலேயே எல்லாவிதமான வாழ்த்துக்களும் அனுப்பப் படும் அளவுக்கு பயனாளர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. வருமான வரிக் கணக்கை குறுந்தகவல் மூலம் சமர்ப்பிக்க இங்கே, ஸ்வீடனில் வழியுண்டு. திரைப்பட அனுமதிச் சீட்டுகள், வானிலை அறிக்கை, விளையாட்டுத் தகவல்கள் , ஜோதிடம் என குறுந்தகவலின் பயன்பாடு நீண்டு கொண்டே செல்கிறது . ஆயினும் மின்னஞ்சலில் எவ்வாறு எரிதங்கள் புகுந்து எரிச்சலூட்டுகின்றனவோ அந்த அளவுக்கு குறுந்தகவல்களில் பல வெறுந்தகவல்களும் வெட்டித்தகவல்களும் அனுப்பப் படுகின்றன .

இந்தப்பதிவில் குறுந்தகவல் அனுப்புவது எவ்வாறு சாத்தியமாகிறதென்று பார்ப்போம்.

இரண்டு வகையான குறுந்தகவல்களென வகைப்படுத்தலாம். ஒன்று நாம் அன்றாடம் அனுப்பும்/பெறும் சாதாராண வகைக் குறுந்தகவல் . இன்னொன்று வலையமைப்பே (Network) அனுப்பும் தகவல் . ஒரு குறித்த தள நிலையத்தில் இணைக்கப்பட்டிருக்கும் எல்லாச் செல்பேசிகளுக்கும் ஒரே நேரத்தில் தகவல் அனுப்ப இயலும். இத்தகவலுக்கு அலைபரப்புத்தகவல் (Cell Broadcast message) என்று பெயர் . உதாரணமாய், ஒரு குறித்த பகுதியில் ஏதேனும் விழா அல்லது புதிய நிகழ்ச்சி எனில் அப்பகுதியில் இருக்கும் செல்பேசிகளுக்கெல்லாம் , தள நிலையமானது ஒரு அலைபரப்புத்தகவல் அனுப்பி அனைவரையும் கவன ஈர்ப்பு செய்யலாம். அவசர காலங்களில் ஒரு தகவலை உடனடியாக அறிவிக்க இந்த வகைத் தகவலைப் பயன்படுத்திக்கொள்ளலாம் . உதாரணத்துக்கு, சுனாமி பற்றிய எச்சரிக்கை அறிவிக்கவேண்டுமெனில் கடற்கரைக்கருகில் இருக்கும் தள நிலையமானது அத்தள நிலையத்தில் இணைக்கப்பட்டிருக்கும் எல்லாச் செல்பேசிகளுக்கும் ஒரு குறுந்தகவல் அனுப்பி எச்சரிக்கையாய் இருக்கச் சொல்லலாம். நாம் அனுப்பும் குறுந்தகவல்கள் எவ்வாறு எதிர்முனையைச் சென்றடைகின்றன என்று பார்ப்போம். செல்பேசி வலையமைப்பின் கூறுகளை முந்தைய பதிவுகளிலே பார்த்தோம் . ஆனால் குறுந்தகவல் அனுப்ப உதவும் குறுந்தகவல் மையம் (Short Message Service Center) பற்றி இதுவரை நாம் பார்க்கவில்லை. நாம் அனுப்பும் எல்லாக் குறுந்தகவல்களைச் சரியான செல்பேசிக்கு அனுப்பவும், நமக்கு அனுப்பப் பட்ட தகவல்களைச் சரியாக நம்மிடம் சேர்க்கவும் உதவுவதே குறுந்தகவல் மையத்தின் வேலை . இந்தக் குறுந்தகவல் மையமானது செல்பேசி வலையமைப்பின் அங்கமான செல்பேசி இணைப்பகத்திலோ (MSC, Mobile Switching Center) அல்லது நுழைவாயில் இணைப்பகத்திலோ (Gateway MSC) இணைக்கப்பட்டிருக்கும்.

நீங்கள் உங்கள் நண்பருக்கு ஒரு குறுந்தகவல் அனுப்புவதாகக் கொள்வோம். வழக்கம்போல் தள நிலையத்திடம் அந்தக் குறுந்தகவலை அனுப்புவதற்கு ஒரு நேரத்துண்டு (Time Slot) கேட்கிறது செல்பேசி. தள நிலையம் ஒரு நேரத்துண்டைச் செல்பேசிக்கு வழங்கியவுடன் , எதற்காக அந்த நேரத்துண்டைக் கேட்டுப்பெற்றது என்ற தகவலினைச் (குறுந்தகவல் அனுப்ப ) செல்பேசி தள நிலையத்திடம் சொல்கிறது. பின்னர் நடைபெறும் தகவல் பரிமாற்றத்தின் மூலம் யானது , அனுப்ப வேண்டிய தகவல், அனுப்ப வேண்டிய எண் மற்றும் பிற தேவையான தகவல்களைச் செல்பேசி தள நிலையத்திற்குத் தெரிவிக்கிறது. தள நிலையமும் அதனைத் தளக்கட்டுப்பாட்டு நிலையத்துக்கு அனுப்ப, பின்னர் அனுப்பப் பட்ட தகவல்கள் குறுந்தகவல் மையத்துக்கு அனுப்பப் படுகின்றன. குறுந்தகவல் மையமானது நாம் அனுப்பிய தகவல்கள் , அனுப்பிய எண் மற்றும் பிற உதவித்தகவல்கள் ஆகியவற்றினை ஆராய்ந்து அந்த எண்ணுக்கு நுழைவாயில் இணைப்பகம் வழியாக அனுப்பி வைக்கிறது.

இதே போல்தான் உங்களுக்கு அனுப்பப்பட்ட தகவல்கள் முதலில் நுழைவாயில் இணைப்பகம் வழியாக குறுந்தகவல் மையத்தினை அடைகின்றன. குறுந்தகவல் மையம் முதன்மை இருப்பிடப் பதிவேடு /வருகை இருப்பிடப்பதிவேடு மூலம் செல்பேசியில் இருப்பிடத்தைக் கேட்டுப் பெறுகிறது. பின்னர் செல்பேசி தற்போது இருக்குமிடத்திலுள்ள தளக்கட்டுப்பாட்டு நிலையத்திற்கு , குறுந்தகவல் மையம் குறுந்தகவலை அனுப்பி உரிய எண்ணிடம் சேர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறது. தளக்கட்டுப்பாட்டு நிலையமும் , தன் கட்டுப்பாட்டிலுள்ள தள நிலையங்களைத் தொடர்பு கொண்டு பக்கமாக்குத்தகவலை ( Paging Message) அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறது. அந்தப் பக்கமாக்குத்தகவலில் செல்பேசியின் தற்காலிக எண் அனுப்பப் பட்டு "இந்த எண்ணுக்கு ஒரு குறுந்தகவல்" என்று குறிக்கப்பட்டிருக்கும். அந்த இடத்திலுள்ள எல்லாச் செல்பேசிகளும் இந்தத் தகவலைப் பெறுகின்றன. ஆனால் அந்தக் குறித்த எண்ணுக்குச் சொந்தமான செல்பேசி மட்டும் அத்தகவல் தனக்குரியது என்று தெளிகிறது . பின்னர் தள நிலையத்தைத் தொடர்பு கொண்டு, நேரத்துண்டு பெற்று பின்னர் தனக்குரிய குறுந்தகவலையும் தள நிலையத்திடமிருந்து பெறுகிறது.

ஆக குறுந்தகவல் பரிமாற்றம் ஏறத்தாழ அழைப்பு வரும்போது ஏற்படும் தகவல் பரிமாற்றம் போலத்தான், ஆனால் இரண்டு முக்கிய வேறுபாடுகள் :

1. அழைப்பு ஏற்படுத்துகையில் , முதலில் தகவல்கள் எல்லாம் ஒரு குறிப்புத்தடத்தில் (Signalling Channel) அனுப்பப் பட்டு பின்னர் பேச்சுப் பரிமாற்றம் நிகழ்கையில் அக்குறிப்புத்தடமானது பேச்சுத்தடமாக (Traffic Channel) மாற்றப் படுகிறது. ஆனால் குறுந்தகவல் அனுப்புகையில் குறிப்புத்தடமே போதுமானது. பேச்சுப் பரிமாற்றம் நிகழாத காரணத்தால் குறிப்புத்தடத்திலேயே எல்லாத்தகவல்களும் பரிமாறப்படுகின்றன.

2. உங்களை ஒருவர் அழைக்கையில் உங்களது செல்பேசி தொடர்பு ஏற்படுத்தாத நிலையில் இருக்கின்றது என்றால், அதாவது நீங்கள் இருக்குமிடத்தில் நெட்வொர்க் இல்லை அல்லது உங்கள் செல்பேசி இயக்க நிலையில் இல்லை(Powered off) என்றால் அவ்வளவுதான். உங்களைத்தொடர்பு கொள்ள முடியாது. உங்களை அழைப்பவர் மீண்டும் மீண்டும் ( உங்கள் செல்பேசி இணைப்பு ஏற்படும் வரை) தொடர்பு கொண்டால்தான் உங்களிடம் பேச முடியும். ஆனால் குறுந்தகவல் பரிமாற்றம் அப்படியில்லை. ஒரு முறை ஒரு தகவல் உங்களுக்கு அனுப்பப் பட்டு விட்டால் போதுமானது. குறுந்தகவல் மையம் அத்தகவலை உங்களுக்கு அனுப்ப முயற்சிக்கும் . அப்போது உங்களுடைய செல்பேசி இணைப்பில் இல்லை என்றாலும் பரவாயில்லை. அத்தகவல்தான் குறுந்தகவல் மையத்தில் சேர்த்து வைக்கப்பட்டிருக்கிறதே .உங்களுக்குத் தகவல் அனுப்பியவர் மீண்டும் உங்களுக்குத் தகவல் அனுப்பத் தேவையில்லை. உங்கள் செல்பேசி இணைப்புக் கிடைக்கும் வரை (அல்லது ஒரு குறித்த கால அளவு வரை) குறுந்தகவல் மையம் தொடர்ந்து முயற்சி செய்து கொண்டே இருக்கும்.

அப்படியானால் பத்து நாள் உங்கள் செல்பேசியை நீங்கள் உறக்க நிலையைலேயே வைத்திருக்கிறீர்கள். பத்து நாட்களும் குறுந்தகவல் மையம் உங்களைத் தேடிக்கொண்டே இருக்குமா? இல்லை. எவ்வளவு நேரம் முயற்சி செய்யும் என்பது செல்லுபடிக் கால அளவினைப் பொறுத்தது (Validity Period). உங்கள் செல்பேசியில் தகவல் அனுப்பும் பட்டியைத் (menu) தேர்ந்தெடுங்கள். அதில் அமைப்பு (Settings) எனும் பட்டியின் கீழ் பல உப பட்டிகள் இருப்பதைக் காணலாம்.  அப்பட்டிகளுள் செல்லுபடிக் கால அளவும் (Validity Period) ஒன்று. செல்லுபடிக் கால அளவு ஒரு மணி நேரமாகவோ, ஒரு நாளாகவோ,  ஒரு வாரமாகவோ தேர்ந்தெடுத்துக்கொள்ள வசதி இருக்கும். நீங்கள் ஒரு நாள் என்று செல்லுபடிக்கால அளவைத் தேர்ந்தெடுத்துப் பின்னர் பிறருக்குத் தகவல் அனுப்பினால் அதிகபட்சமாக ஒரு நாள் அந்தத் தகவல் குறுந்தகவல் மையத்தில் சேர்த்து வைக்கப்படும் . ஒரு நாளுக்குப் பின்னும் நீங்கள் தகவல் அனுப்பிய எண்ணைத் தொடர்பு கொள்ள முடியவில்லை எனில் நீங்கள் அனுப்பிய தகவல் குறுந்தகவல் மையத்திலிருந்து அழிக்கப்படும்.

சரி, நாம் அனுப்பிய தகவல் போய்ச்சேர்ந்ததா அல்லது வழி தவறியதா என்று எவ்வாறு தெரிந்து கொள்ளலாம்? சேர்த்தல் அறிக்கை (Delivary Report) எனும் வசதி உள்ளதே! அதனைப்பயன்படுத்திக்கொள்ளலாம். இந்த சேர்த்தல் அறிக்கை வசதியைத் தேர்ந்தெடுக்கும் பட்டியைச் சுட்டுங்கள். பின்னர் ஒவ்வொரு முறை நீங்கள் தகவல் அனுப்பும் போதும் குறுந்தகவல் மையத்துக்கு சேர்த்தல் அறிக்கையைச் சொல்லும் வசதி வேண்டுமென்றும் தெரிவிக்கப்படும் . எதிர்முனையைத் தகவல் அடைந்ததும் தகவல் சேர்ந்த விவரத்தைக் குறுந்தகவல் மையம் பெற்று உங்கள் செல்பேசிக்குத் தெரிவிக்கும். " நீங்கள் இன்னாருக்கு அனுப்பிய தகவல் இந்த நேரத்தில் போய்ச் சேர்ந்துவிட்டது " என்றோ, "தகவல் இன்னும் அனுப்பவில்லை, தகவல் அனுப்ப முயற்சிகள் தொடர்ந்து நிகழ்கிறது " என்றோ உங்களுக்கு சேர்த்தல் அறிக்கை அனுப்பப்படும்.

மின்னஞ்சலைப்போன்றே, குறுந்தகவலிலும் பதில் தகவல் கேட்கும் வசதியும் உண்டு (Request Reply ). நீங்கள் தகவல் அனுப்பியவரிடமிருந்து நீங்கள் ஏதேனும் பதிலை எதிர்பார்த்தால் ("நூறு ரூபாய் கடன் வாங்கினாயே , எப்போது திருப்பித்தரப் போகிறாய்" போன்ற ) அதனையும் ஏற்படுத்திக் கொள்ளலாம். பதில் தகவல் கேட்டல் ( Request Reply) எனும் பட்டியைத் தேர்ந்தெடுத்துப் பின் தகவல் அனுப்பினால் போதும். உங்களது தகவலைப் பெறுபவர் , அத்தகவலைப்படித்த பின் " உங்களுக்குத் தகவல் அனுப்பிய ஆசாமி உங்களிடமிருந்து பதில் எதிர்பார்க்கிறார் . பதில் அனுப்ப விருப்பமா?" என்ற கேள்வி அவருக்குக் கேட்கப்படும். பதில் அனுப்புவதும் , அனுப்பாமலிருப்பதும் எதிர்முனையிலிருப்பவர் விருப்பம்.

குறுந்தகவல் பற்றிச் சொல்ல வந்து, பெருந்தகவலாகி விட்டது. அடுத்தவாரம் இன்னும் பல (குறுந்) தகவல்கள் தெரிந்து கொள்ளலாம்.

PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2005 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |