ஜுன் 29 06
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
திரையோவியம் : Scarface & புதுப்பேட்டை
- பாஸ்டன் பாலாஜி
Save as PDF | Bookmark in Del.icio.us | | Printable version | URL |

முரண்களால் ஆனவன். தந்தையை வெறுப்பவன். தானே தந்தையானதும் வெறுக்கத்தக்க செய்கையை செய்யும்படி ஆனவன்.

புதுப்பேட்டை தொடர்பான எண்ணற்ற விமர்சனங்களில் பிபி-யின் பார்வை எண்பதுகளின் ஸ்கார்ஃபேஸையும் புதுப்பேட்டையையும் ஒப்புவித்திருந்தது. புதுப்பேட்டையை கேமிரா ப்ரிண்ட்டிலும் ஸ்கார்ஃபேஸ் ஒளித்தகடையும் ஓட்டவிட்டு பார்த்தபின் எழுந்த சில எண்ணங்கள்.


ஸ்கார்ஃபேஸ்: க்யூபாவில் இருந்து அமெரிக்காவுக்கு அகதியாய் பஞ்சம் பிழைக்க வரும் டோனி மொண்டானா என்னும் கிரிமினலின் கதை. அவனுக்கு லாபமாக இருக்கும் வரை, எந்த செய்கையும் சரி என்னும் நியாயத்தின்படி முன்னேறுபவன். பள்ளியில், கல்லூரியில் ஆதர்ச நாயகனைத் தேடியலையும் இளம்பிஞ்சு போல், தன்னுடைய கஞ்சாத் தொழிலின் உதாரண புருஷனின் காதலியையும், சாம்ராஜ்யத்தையும் எப்பாடு பட்டாவது அடைந்து விடுபவன்.

புதுப்பேட்டை: கொக்கி குமாருக்கு ஆதர்ச நாயகர்கள் கிடையாது. அவனும் வீட்டை விட்டு ஓடி வந்தவன் தான். ஆனால், டோனி மொண்டானா போல் ஹோட்டலில் பாத்திரம் கழுவும் வேலை கூட கிடைக்காமல் பிச்சை எடுக்க விதிக்கப்பட்டவன். டோனி போலவே இன்ச் இன்ச்சாய் திட்டம் தீட்டாமல் முன்னேறுபவன். வாக்கு சாதுர்யம், சமயோசிதம் என்று ஒவ்வொரு கல்யாண குணத்துக்கும் ஒரு காட்சி வைக்க திரைக்கதையில் இடமில்லாததால், பாட்டும் கூத்துமாய் படத்தைக் கழிப்பவன்.

ஸ்கார்ஃபேஸ்: விதிமுறைகள் சொல்லித்தரப்படுகிறது:
1. அடுத்தவனின் ஆசையை குறைத்து மதிப்பிடாதே!
2. உன்னுடைய சரக்கில் நீயே உச்சமாகி மதியிழக்காதே!

புதுப்பேட்டை: செய்முறைகள் சொல்லித்தரப்படுகிறது:
1. சடார்னு அரை நிமிஷம் எட்டிப் பார்க்கணும். மொத்த சூழ்நிலையும் உள் வாங்கிக்கணும்.
2. பயமாத்தான் இருக்கணும். உன் உசிர் மேல் உனக்கு பயம் இருந்தாத்தான் நல்லது.

Scarfaceஸ்கார்ஃபேஸ்: ஆல் பசினோவினால்தான் படம் தலை நிமிர்ந்து நிற்கிறது. ஆனால், ஆல் பசினோ என்னும் ஆளுமை வெளிப்படாமல், க்யூபா நாட்டு கடத்தல்காரன் மட்டுமே தெரிகிறான். டோனி மொண்டானாவின் 'உலகம் பிறந்தது எனக்காக' என்னும் பேராசையும், பாசமுள்ள அண்ணனின் அரக்கத்தனமான ஆளுமை கலந்த அழுக்காறும் மட்டுமே வெளிப்படும்.

புதுப்பேட்டை: தனுஷ் மட்டுமே படத்தை நிமிர்த்தி உட்கார வைக்கிறார். முதல் கொலையை கை நடுங்க செய்யும் +2 மாணவன் முதல் மனைவியை முதலிரவில் மிரட்டும் காமாந்தகன் வரை கொக்கி குமாராகத்தான் வலம் வருகிறார்.

ஸ்கார்ஃபேஸ்: வசனகர்த்தா இங்கே மின்னுவார்...

* 'என்னடா பார்க்கறீங்க? போக்கத்த வெட்டிப்பசங்களா... எப்படி வாழணுமோ அப்படி வாழக்கூட தைரியமில்லாத பொட்டைங்கடா நீங்க. உங்களுக்கு என்னை மாதிரி சோமாரிங்க வேணும். என்னக் காமிச்சு 'அவனப் பார்த்தியா? கெட்ட பையன்' என்று சொல்லணும். உன்னை எது நல்லவனா ஆக்குது? உனக்கு எதை மறைக்கணும்னு தெரிஞ்சிருக்கு. எப்படி பொய் சொல்லணுமோ அப்படி சொல்றே. நான் எப்போதும் உண்மைதான் பேசுவேன். பொய் சொல்லும்போது கூட'

புதுப்பேட்டை: சோனியா அகர்வாலுடன் முதலிரவில் தனுஷ் பேசுவதும், குழந்தையைக் காப்பாற்ற கோரும்போது சோனியாவின் பதிலடியும்.

ஸ்கார்ஃபேஸ்: எல்லாம் தெரிந்தவன் பொய் சொல்ல மாட்டான். முழு விவரங்களும் அறிந்தவனுக்கு, பலாபலன்கள் விளங்குவதால் எதைக் கண்டாலும் பயம் தொற்றிக் கொள்ளும். டோனி மொண்டானாவுக்கு உள்ளங்கையில் உலகம் வேண்டும். எப்பொழுதாவதுதான் உண்மை பேசுவான்.

Puthupettai Dhanushபுதுப்பேட்டை: தன் பலம் அறிந்தவனுக்கு பயம் இருக்காது. பலவீனங்களை நிரப்பும் வகை அறிந்து, உரியவர்களை நியமித்துக் கொள்வான். கொக்கி குமாருக்கோ குருட்டு தைரியம். எதிராளிகளை எப்பொழுதும் போட்டுத் தள்ளுவான்,

ஸ்கார்ஃபேஸ்: டோனியின் வலது கரம் 'மானி'. மனைவி+காதலி 'எல்விடேர்'. முதல் முதலாளி 'ஃப்ரான்க்' என்று எல்லாருக்குமே படத்தில் போதிய இடம் உண்டு. அவர்களைப் புரிந்து கொள்வதன் மூலம் டோனி ஏன் இப்படி நடந்து கொள்கிறான் என்பது புரிகிறது.

புதுப்பேட்டை: மனைவி, காதலி, நண்பர் குழாம், அரசியல் தலைவர் என்று சப்போர்டிங் நிறைய இருந்தாலும் ஒருவர் கூட கொக்கி குமார் சித்திரத்தை முழுமையாக்க உதவவில்லை.

ஸ்கார்ஃபேஸ்: கெடுவான் கேடு நினைப்பான் என்று எதற்காக ஓடுகிறோம்? என்ன சம்பாதித்து எதைக் கண்டோம் என்பவனாக விரக்தி மனப்பான்மைக்குத் தள்ளப்பட்டு, தன்னுடைய வலையில் தானே வீழும் - மாற்றங்களின் முன்னேற்றத்தின் ஒவ்வொரு படியிலும் பார்வையாளன் அழைத்து செல்லப்படுகிறான்.

புதுப்பேட்டை: முக்கியமான திருப்பங்கள் எப்படி சாத்தியப்பட்டது என்பது ஹீரோயிஸ பாவமாக படத்தின் வேகத்தில் விழுங்கப்பட்டு, சிதைக்கப்படுகிறது. பாடல்களில் சண்டைக்காட்சிகளும், சண்டைக்காட்சிகளில் அரசியல்வாதிகளும், கூட்டங்களில் இருட்டடிக்கப்பட்டு, வளர்ச்சியின் பரிணாம காரண காரியங்கள் விழுங்கப்பட்டுவிடுகிறது.

ஸ்கார்ஃபேஸ்: இங்கு ஒரே ஒரு நாயகிதான். தூசு படிந்த திரைச்சீலை போல் டோனியினுடைய அராஜக வாழ்க்கையை மறைப்பதற்காக பயன்படுகிறாள். ஆட்சி மாறியதும் கை மாறும் கிரீடம் போல் பட்டத்தரசியும் இடம் மாறித் தொடர்கிறாள். டோனியின் வெறுமையையும் இலட்சியத்தையும் வெளிக்கொணர பெரிதும் உதவும் குணச்சித்திரம்.

புதுப்பேட்டை: இரு நாயகிகள். ஸ்னேஹா போன்ற சீரிய லட்சணங்கள் பொருந்திய விலைமாதுடன் டூயட் பாடாதது மட்டுமே நிஜத்தை பிரதிபலிக்கும் முயற்சியை சொல்கிறது. சோனியாவை மணம் முடிக்க நியாயப்படுத்தும் காரணங்களும் சந்தர்ப்பமும், மனித வாழ்வின் வெகு யதார்த்தம். ஆனால், இருவருமே குமாரின் நடவடிக்கைகளுக்கும் எண்ணவோட்டத்திற்கும் எந்தவிதத்திலும் பயன்படவில்லை.

ஸ்கார்ஃபேஸ்: டோனி என்பவன் முரண்களின் உறைவிடம். குழந்தைகளுக்குப் போதைப் பொருள் விற்பதற்காக கொள்முதல் வியாபாரம் செய்பவன். ஆனால், குழந்தைகளைக் கொல்வதற்கு மனம் பதை பதைப்பவன். தங்கையின் நல்வாழ்வை வேண்டுபவன். ஆனால், தங்கையின் காதலர்களை வதைப்பவன்.

புதுப்பேட்டை: குமாரும் மனிதன் தான். முரண்களால் ஆனவன். தந்தையை வெறுப்பவன். தானே தந்தையானதும் வெறுக்கத்தக்க செய்கையை செய்யும்படி ஆனவன். விலைமாதுவை மணம் முடித்தாலும் ஆணுக்குத் தோன்றும் ஆழ் அச்சம் துளிக் கூட எட்டிப் பார்க்காமல் இருப்பவன்.

ஸ்கார்ஃபேஸ்: தன்னை நம்புபவர்களை கைவிடுவது தான் அடிநாதம். அதை நம்பும்படியாக சொல்வதற்கு, காவல்துறை உயர் அதிகாரிகளையும் போதை தடுப்பு அலுவலர்களையும் நாடி அவர்களின் உதவியோடு எடுக்கப்பட்டது.

புதுப்பேட்டை: யார் மீதும் நம்பிக்கை வைக்கமுடியாதது தான் அடிநாதம். மெய்யை பிரதிபலிக்கும்படியாக எடுப்பதற்கு, அரசியல் கட்சித் தலைவர்களையும் கூலிக்கு உயிரெடுப்பவர்களையும் கண்டு பேட்டியெடுக்காமல் திரையாக்கியது.

ஸ்கார்ஃபேஸ்: எண்பதுகளின் தலை சிறந்த படமாக இல்லாவிட்டாலும்; ஆல் பசினோவின் முத்திரை நடிப்பாகவும், போதை அரசர்களின் இறுதியை துல்லியமாகவும், சரக்குகாரர்களின் வாழ்க்கை சுழற்சியைப் படம் பிடித்ததற்காகவும் கொண்டாடப்படும்.

புதுப்பேட்டை: செல்வராகவனின் தலை சிறந்த படமாக இல்லாவிட்டாலும்; தனுஷுக்கு மைல்கல்லாகவும், தேர்தல்-வேட்பாளர்-தாதா பிணைப்பை இலகுவாக வெளிக்கொணருவதிலும், வரைவின் மகளிர் வாழ்க்கையை சித்தரிப்பதிலும் முக்கியமான படமாகக் கருதப்படும்.

| | |
oooOooo
பாஸ்டன் பாலாஜி அவர்களின் இதர படைப்புகள்.   திரையோவியம் பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2006 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |