ஜுன் 29 06
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
திரைவிமர்சனம் : கொக்கி
- மீனா [feedback@tamiloviam.com]
Save as PDF | Bookmark in Del.icio.us | | Printable version | URL |

Karanஉழைத்துப் பிழைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு கிராமத்தை விட்டு நகரத்திற்கு வரும் அப்பாவி ஊரையே ஆட்டிப்படைக்கும் ஒருவனின் பிடியில் சிக்கினால் அவன் கதி என்னவாகும் என்பதுதான் கொக்கியின் ஒன்லைன் கதை.

முடிதிருத்தும் தொழிலைக் குலத்தொழிலாகக் கொண்ட கரண் கிராமத்தில் இருந்தால் தன் பிழைப்பு நல்லபடியாக நடக்காது என்ற எண்ணத்தில் நகரத்திற்கு வருகிறார். மலேசியா வாசுதேவனின் முடிதிருத்தும் கடையில் வேலைக்குச் சேரும் கரண் வெளிநாடு செல்ல முயற்சி செய்கிறார்.

ஊரையே ஆட்டிப்படைக்கும் தாதா கோட்டா சீனிவாசராவ் சகுனங்களிலும் ஜாதகத்திலும் மிகுந்த நம்பிக்கை கொண்டவர். தினமும் குலதெய்வத்தின் முகத்தில் விழிக்கும் வழக்கம் கொண்ட கோட்டா சீனிவாசராவ் ஒரு நாள் கரணின் முகத்தில் விழிக்க, அன்று பார்த்து தான் வகையாக மாட்டிக்கொண்ட ஒரு சிக்கலான கேஸ்லிருந்து நீதிமன்றம் அவரை விடுவிக்கிறது. கரண் தான் கோட்டா சீனிவாசராவின் அதிர்ஷ்டத்திற்கு காரணம் என்று அவருடைய ஆஸ்தான ஜோசியர் மாணிக்க விநாயகம் சொல்ல, இனி தினமும் தான் கரணின் முகத்தில் தான் கண் விழிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொள்கிறார் கோட்டா.

கோட்டாவின் இந்த எண்ணத்தால் கரணின் வெளிநாட்டுப் பயணம் முற்றிலுமாக நிறுத்தப்படுகிறது. கோட்டாவின் அநியாயங்களைச் சொல்லி போலீஸிடம் கரண் நீதி கேட்க செல்ல, அவர் மீதே பொய் வழக்கு போடுகிறது போலீஸ். அப்போதுதான் போலீஸ் அதிகாரி கோட்டா சீனிவாசராவின் ஆள் என்பதை உணர்கிறார் கரண்.

இதற்கிடையே போலீஸிடமிருந்து கரண் தப்பிக்க உதவி செய்கிறார் கல்லூரி மாணவி சஞ்ஜனா. கரணுக்கு உதவி செய்த காரணத்திற்காகவே கோட்டாவின் ஆட்களால் கடத்தப்படுகிறார். கரண் தான் வெளிநாடு செல்லும் முயற்சியில் வெற்றி பெற்றாரா? தனக்கு உதவி செய்த சஞ்ஜனாவை கோட்டாவிடமிருந்து காப்பாற்றினாரா என்பதுதான் மீதிக்கதை.

ரொம்பவும் மாறுபட்ட வேடத்தில் - வெறித்த பார்வையுடன் கரண். ஆக்ரோஷம், கெஞ்சல், சோகம், கறுப்பு மேக்கப், அளவான வசனங்கள் என்று கலக்குகிறார். அம்மன் படங்களில் வில்லனாக, ஹீரோவின் நண்பணாக இவ்வளவு நாள் பார்த்த கரணுக்கும் கொக்கி கரணுக்கும் இடையே ரொம்ப வித்தியாசம். இது தொடர நம் வாழ்த்துக்கள்.

ஹீரோயின் சஞ்சனா அறிமுகம் என்றாலும் கூட அழகாக நடித்திருக்கிறார். நாடகத்தில் தூக்குப்போட்டுக்கொள்ளும் காட்சிக்கு ஒத்திகை பார்க்கப்போய் நிஜமாகவே தூக்கில் மாட்டிக்கொள்ளும் போதும், பிறகு தன்னைக் காப்பாற்ற வரும் கரணைக் கண்டு மிரளும் காட்சிகளிலும் பிரமாதப்படுத்துகிறார்.

கோட்டா சீனிவாசராவ் - ஜோதிடத்தை நம்பி மற்றவர்களை கழுத்தறுக்கும் வித்தியாசமான வில்லன். உப்பிலியப்பனாக நடிப்பில் அசத்துகிறார். இவருக்குத் துணையாக ஜோதிடராக மாணிக்க விநாயகம், போலீஸ் அதிகாரியாக சக்திகுமார் ஆகியோரும் தங்கள் பங்கை சரியாகச் செய்துள்ளார்கள்.

ஜீவனின் ஒளிப்பதிவு, சதீஷ் ஹர்ஷாவின் எடிட்டிங் இரண்டும் அருமை. தீனாவின் இசையில் பாடல்கள் ஓக்கே ரகம் தான் ஆனால் பின்னணி இசை அருமை.  கதை, திரைக்கதை, வசனம் டைரக்ஷன் என்று நான்கு வேலைகளையும் இழுத்துப்போட்டுக்கொண்டு அவற்றைத் திறமையாகச் செய்திருக்கும் பிரபுசாலமனுக்கு பாராட்டுகள். வித்தியாசமான கதை சொல்லும் இயக்குனர்களின் வரிசையில் இவர் நிச்சயம் இடம் பிடிப்பார்.

| |
oooOooo
மீனா அவர்களின் இதர படைப்புகள்.   திரைவிமர்சனம் பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2006 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |