ஜூலை 1 2004
தராசு
க. கண்டுக்கொண்டேன்
வேர்கள்
மேட்ச் பிக்சிங்
வானவில்
காந்தீய விழுமியங்கள்
உங்க. சில புதிர்கள்
பருந்துப் பார்வை
பெண்ணோவியம்
முத்தொள்ளாயிரம்
கலைஞருக்கு ஒரு கடிதம்
 
  முதல் பக்கம்
தொடர்கள்
- சத்யராஜ்குமார்
 • கங்கை இல்லாத காசி
 • - பாஸ்டன் பாலாஜி
 • வார்த்தையல்ல, வாக்கியம்
 • - என். சொக்கன்
 • என்னை எழுதியவர்கள்
 • - சத்யராஜ்குமார்
 • சுய சாசனம்
 • - பாஸ்டன் பாலாஜி
 • கோடிட்ட இடங்கள்
 • - சித்ரன்
 • களம்
 • - நாகூர் ரூமி
  யுனிகோடில் தேடல்
  சென்ற இதழ்கள்
  வேர்கள் : வெடிக்காய் வியாபாரம் - 1
  - ஹரிகிருஷ்ணன்
  | Printable version |

  வள்ளுவருக்கு ஒரு சிறப்பு உண்டு.  எத்தனையோ சிறப்புகளில் இதுவும் ஒன்றென்று சொல்ல வந்தேன்.  வள்ளுவர் ஒரு கிறிஸ்தவரே என்பது தொடங்கி ஒவ்வொருவரும் அவரவர் மதத்தைத்தான் வள்ளுவர் கடைப்பிடித்திருக்க வேண்டும் என்று ஆராய்ச்சி செய்திருக்கிறரார்கள்.  இப்படி அனைவரும் செய்கிறார்கள் என்றால், சம்பந்தப்பட்டவர் எவ்வளவு தூரம் விரும்பப்படுகிறார் என்பது வெளிப்படை.  இவன் நம்மைச் சேர்ந்தவன் என்று எந்த மனிதன் அனைவராலும் மதிக்கப்படுபவன் என்பதில் என்ன ஐயம் இருக்க முடியும்?

  பாரதிக்கும் இந்தப் பெருமை உண்டு.  அவனுடைய மத அடையாளங்களைச் சொல்ல வரவில்லை.  அவன் மதங்களுக்கு அப்பாற்பட்டவன்.  கம்யூனிஸ்டுகள் தொடங்கி, மிகப்பெரும்பான்மையான சமூக அரசியற் பிரிவினர் பாரதியில் தம் லட்சியங்களைக் காணுவதில் மகிழ்ச்சி அடைகின்றனர். இதில் நமக்கும் மகிழ்ச்சியே.  எங்கெங்கு மனித நேயம் அடிநாதமாக இருக்கிறதோ அங்கெல்லாம் பாரதி நேசிக்கப்படுவான்.

  ஒரு காலத்தில் விளையாட்டாக பாரதியை ஒரு தீவிரவாதியாகச் சித்திரித்தார்கள்.  "பாரதி ஒரு நக்சலைட்" என்று ஒரு கட்டுரை எழுதி தான் எழுதிய கட்டுரைத் தொகுப்பிற்கே இந்தத் தலைப்பினைச் சூட்டினார், திரு. கோ. பன்னீர்செல்வம்.  இவர் தினமணி இதழின் துணையாசிரியராகப் பணியாற்றியவர்.  தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவராய் இருந்தவர்.  தனியொரு மனிதனுக் குணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்ற லட்சியத்தையே நக்சலைட்டுகள் கடைப்பிடிக்கின்றனர்.  ஆகவே பாரதியும் ஒரு நக்சலைட்டே என்று எழுதினார் அவர்.  இது உண்மையல்ல என்றாலும் ரசிக்கத்தகுந்த வாதம் என்பதால் யாரும் பொருட்படுத்தவில்லை.

  ஆனால் சமீபகாலமாக ஒரு போக்கு கவலை தருவதாக இருக்கிறது.  பாரதியை ஒரு தீவிரவாதியாகச் சித்திரிக்கும் போக்கு ஒருபுறம்.  மதவாதிகளும் மதவெறியர்களும் பாரதி தம்மைச் சார்ந்தவனே என்று கொண்டாடிக் கொள்ளும் வேடிக்கை ஒருபுறம்.  மத விஷயத்தைப் பார்ப்பது இந்தக் கட்டுரையின் நோக்கமல்ல.  அதனைத் தனியே பார்ப்போம்.

  தொலைக்காட்சியில் ஒரு பட்டிமன்றம் நடைபெற்றது.  அல்லது வழக்காடு மன்றம்.  நடுவர் அரசியலிலும் இலக்கியத்திலும் பெயர் பெற்றவர்.  பாரதி ஒரு தீவிரவாதியா என்று தலைப்பு.  வாதிட்டவர்களோ பெரும் பேச்சாளர்களாக மதிக்கப்படும் இரண்டு பெண்கள்.  தீவிரவாதியே என்று வாதிட்டவர் பாரதியின் வசன கவிதை என்றறியப்படும் காட்சியிலிருந்து பின்வரும் பகுதியைப் படித்தார்.

  ஆண் நன்று.  பெண் இனிது.
   குழந்தை இன்பம்.  இளமை இனிது.
   முதுமை நன்று.
   உயிர் நன்று.  சாதல் இனிது.

  சாதல் இனிது என்ற சொற்களைத் திரும்பத் திரும்பப் படித்தார்.  ஒரு தீவிரவாதியால் மட்டுமே சாதல் இனிது என்று எண்ண முடியும் என்று கூறினார்.  இது என்ன விபரீதம் என்று தோன்றியது எனக்கு.  நல்ல காலம்  தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா நின்னைத் தீண்டும் இன்பம் தோன்றுதடா நந்தலாலா என்ற அடியை விட்டுவிட்டாரே என்ற நிம்மதியும் உண்டானது.  (ஆமாம்.  தீவிரவாதியைத் தவிர வேறு யாருக்குத் தீயைத் தீண்டினால் இன்பம் தோன்றும்?

  இதைப் போலவே இன்னும் சில கட்டுரையாளர்களும், ஆய்வாளர்களும், தொடர்பில்லாத துணுக்குகளாக பல செய்திகளை எடுத்து வைக்கிறார்கள்.  இப்போதைய எழுத்தாளர்கள் இருக்கட்டும்.  பாரதியுடன் பழகிய சிலரே பாரதியையும் பயங்கரவாதத்தையும் தொடர்புபடுத்திப் பேசியும், எழுதியும் இருக்கிறார்கள்.  அந்தக் காலத்துக் கட்டுரையாளர்கள், பாரதி நண்பர்கள் உட்பட, பரபரப்புக்காகவும், பாரதிக்குச் சற்றும் பொருந்தாத 'ஹீரோ' மகுடம் சூட்டுவதற்காகவும் பொய்யான தகல்களையும் தந்திருக்கிறார்கள்.  நாம்தான் ஒவ்வொன்றையும் உரைத்துப் பார்த்து உய்த்துணர வேண்டியிருக்கிறது. 

  அப்படியே ஒருவேளை உண்மைகளைத்தான் சொல்கிறார்கள் என்றாலும், எடுத்து வைக்கிற மேம்போக்கான விதத்தால் அவர்கள் சொல்ல வரும் செய்தி, முற்றிலும் வேறொரு பரிமாணத்தில் காட்சியளிக்கிறது.  கலெக்டர் ஆஷைக் கொன்ற வாஞ்சிநாதனை பாரதி கண்டித்ததைப் பற்றிய கருத்துகளும் அப்படிப்பட்ட தோற்றத்தைத்தான் கொள்கின்றன.  பாரதி வாய் மூலமாக இல்லை, எழுத்து மூலமாக வாஞ்சிநாதனின் செயலைக் கண்டித்திருக்கிறான்.  இந்தக் கட்டுரையின் பிற்பகுதியில் விவரங்களைக் காண்போம்.  

  பாரதி தீவிரவாதியா?  தீவிரவாதிதான்.  பாரதியே சொல்கிறான்.  அதாவது திலகாரின் பேச்சை மொழிபெயர்த்துச் சொல்கையில் பின்வருமாறு சொல்கிறார்.

  "நம்முடைய ராஜாங்க விவகாரங்களின் சம்பந்தமாக இப்போது இரண்டு வார்த்தைகள் ஏற்பட்டிருக்கின்றன.  அதாவது நிதானஸ்தர்கள்.  தீவிரஸ்தர்கள்.  இந்த இரண்டு வார்த்தைகளும் கால சம்பந்தமான குறிப்பையுடையன.  ஆதலால் இவற்றின் அர்த்தங்களும் காலம் மாறமாற மாறிக்கொண்டே வரும்.  இன்றைக்குத் தீவிரக் கட்சியார் என்று அழைக்கப்படுவோர்கள் நாளைக்கு நிதானஸ்தர்களாய் விடுவார்கள்.  எது போலென்றால் நேற்றுவரை தீவிரக் கட்சியென்றழைக்கப்பட்டோ ர் இன்று நிதானஸ்தர்கள் என்று சொல்லப் படுவது போல."  (The Tenets of the New Party - புதிய கட்சியின் கொள்கைகள் - திலகர் பேச்சு - பாரதி மொழிபெயர்ப்பு.)

  அந்நாளில் காங்கிரசில் மிதவாதியரென்றும் தீவிரவாதியரென்றும் இருபிரிவினர் இருந்தனர்.  பாரதி திலகரைப் பின்பற்றிய தீவிரவாதியே.  ஆனால் பயங்கரவாதமும் தீவிரவாதமும் சமமான பொருளுடைய சொற்களாகக் கருதப்பட்டும் பயனபடுத்தப்பட்டும் வரும் இன்றைய சூழலில் பாரதிக்கும் வெடிகுண்டு கலாசாரத்திற்கும் தொடர்பேற்படுத்தி அவரை வேறுவிதமான ஹீரோவாகச் சித்திரிக்கும் அபாயம் வெகுவாகவே இருக்கிறது.  வெடிகுண்டும் கையுமாக அலைந்திருப்பாரோ என்று இனி வரும் காலம் நினைக்கக் கூடும்.

  ஆயின் அப்படி ஒரு கருத்து இதுவரை இருந்ததே இல்லை என்று கூறமுடியாது.  பாரதியுடன் தொடர்புள்ள ஒரு சிலரின் கருத்துக்களைப் பார்க்கும்போது பாரதிக்கு அப்படிப்பட்ட ஒரு எண்ணம் இருந்திருக்கக் கூடுமோ என்ற ஐயப்பாடு எழாதிருக்க வாய்ப்பில்லை.  அப்படிச் சில கருத்துக்களைப் பார்த்துவிட்டு பாரதி இதுபற்றி என்ன சொல்கிறார் என்பதை அவர் எழுத்துக்கள் மூலமாகப் பார்ப்போம்.

  எழுத்தாளர் பி. ஸ்ரீ. பாரதி வாழ்ந்த காலத்தில் மாணவராக இருந்தவர்.  பாரதியை நேரில் கண்டு பழகியவர். பாரதி நான் கண்டதும் கேட்டதும் என்ற புத்தகத்தில் பி. ஸ்ரீ. சொல்வது இது.

  "ஒரு நண்பரின் வீட்டிலே சிலர் கூடிப் பேசிக்கொண்டிருந்தபோது டாக்டர் அப்பாவு பிள்ளையும் அங்கே இருந்தார்.  பழைய அரசியல் நினைவுகள் சிலருக்கு வந்தன.  பொதுவாக அவற்றைக் குறித்துப் பேசிக்கொண்டிருந்தபோது பாரதியார் குறுக்கிட்டார்.  'டாக்டர், நீரும் நானும் அந்தக் காலத்தில் ஒருநாள் வெடிகுண்டுகளைக் குறித்துப் பேசிக்கொண்டிருந்தோ மல்லவா?' என்று கேட்டுவிட்டார்.  போலீஸ் கெடுபிடி குறைவில்லாமல் இருந்த காலமாதலால் டாக்டர் சிறிது நடுங்கினார். ஒருவர் ஓடிப்போய் வாசற்பக்கத்தில் யாராவது உளவாளி நின்று கொண்டிருக்கக் கூடுமோ என்று பார்த்தார்.

  பாரதியார் டாக்டரை நோக்கி, அந்த வழி தவறு என்று தெரிந்துகொண்டேன்.  பகைவனுக் கருள்வாய் என்றுகூடப் பாடியிருக்கிறேன்....' என்ற பீடிகையுடன் அந்தப் பாட்டைப் பாடிக் காட்டினார்.  அந்தச் சமயம் நான் அங்கே இல்லை.  நண்பர் சொல்லக் கேட்ட செய்திதான்."

  மேற்படி சம்பவம் பாரதிக்கு ஏதோ ஒரு சமயத்திலேனும் கொலை வழியில் நம்பிக்கை இருந்திருக்குமோ என்று எண்ணத் தூண்டுகிறது.  ஆனால் இந்தச் சம்பவம் பி. ஸ்ரீ. அவர்கள் முன்னிலையில் நடந்ததல்ல.  செவிவழிச் செய்தியே.

  பாரதியின் வாழ்வும் நூல்களும் என்ற நூலை எழுதிய திரு. வை. சச்சிதானந்தன் அவர்கள், பாரதியின் நண்பரான நாராயண அய்யங்கார் சொன்னதை மேற்கோள் காட்டுகிறார். 

  பாரதி மேற்படி நாராயண அய்யங்காருக்கு ஒரு வங்காள வாலிபனை அறிமுகப்படுத்தி அவரைக் கல்கத்தாவிலிருந்து வரவழைத்திருப்பதாகக் கூறினாராம்.  வெடிகுண்டு தயாரிப்பதில் நிபுணரான அவர், கையில் இரண்டு வெடிகுண்டு தயாராக வைத்திருக்கிறார் என்றும், தன்னைப் போலீஸார் கைது செய்தாலோ,  கெட்ட எண்ணத்தோடு நெருங்கினாலோ அவர்கள் வெடிகுண்டுக்கு இரையாவார்கள் என்றும் கூறினாராம்.  50000 வெடிகுண்டுகளைத் தயாரித்து, வீசப் பழகிக்கொண்டால் வெள்ளையர்களைச் சுலபமாக ஒழித்துவிடலாம் என்று அவர் கூறினாராம்.  பாரதி பற்றி நண்பர்கள் என்ற நூலிலிருந்து அவர் மேற்கோள் காட்டுவது இது.  (பாரதியாரின் வாழ்க்கையும் நூல்களும் - வை. சச்சிதானந்தன் - பக்கம் 45).

  படிப்பதற்குச் சுவையாய் இருக்கும் இது எவ்வளவு தூரம் உண்மையாய் இருக்கும் என்பது ஐயத்திற்குரியது.  தன்னைப் பாதுகாத்துக் கொள்ள ஒரு கருப்புப் பூனை வைத்துக் கொள்ளுமளவுக்கு பாரதிக்கு நிதி ஆதாரம் இருந்ததா?  கல்கத்தாவிலிருந்து வந்திருந்த அந்த வாலிபர் தேச பக்தியின் காரணமாகப் பாரதியைப் பாதுகாப்பதைத் தன் கடமையாகக் கருதி ஒரு சேவையாகவே இதனைச் செய்தார் என்று வைத்துக்கொண்டால் கூட, அவர் உயிர் வாழத் தேவையான உணவிற்கு பாரதி என்ன ஏற்பாடு செய்திருக்க முடியும்?  தன் உற்றார் உறவினரை விட்டுவிட்டுக் கல்கத்தாவிலிருந்து பாண்டிச்சோரிக்கு வந்து பாரதியைப் பாதுகாப்பதில் தன்னை அர்ப்பணித்துக் கொள்ளும் அளவுக்குப் பாரதியின்பால் அவருக்கு என்ன ஈடுபாடு?  ஒரு தாகூரையோ, அரவிந்தரையோ பாதுகாப்பதை விட்டுவிட்டு இவர் ஏன் பாரதிக்குச் சேவை செய்ய வந்தார்?  தொரியவில்லை.

  நாரயண அய்யங்கார் இன்னொன்றும் சொல்கிறார்:

  "இந்நாட்களில் விபின் சந்திர பாலின் கூட்டுறவினாலும், பாலகங்காதர திலகாரின் தீவிர கொள்கைகளிலுள்ள ஆழ்ந்த பற்றினாலும் பாரதியாரின் வாழ்வில் புயல் வீச ஆரம்பித்தது.  வீட்டில் பின்பற்றி வந்த பழைய பழக்க வழக்கங்களையும் பண்பாடுகளையும் அடியோடு விட்டுவிட்டார்."

  சுருக்கமாகச் சொன்னால், திலகருடன் சேர்ந்து பாரதி கெட்டுப்போய் விட்டார் என்கிறார்!  பழைய பண்பாடுகளை அடியோடு கைவிடும்படி பாரதியைத் தூண்டிய இத்தகைய தொடர்புகள் எத்தனை மோசமாயிருந்திருக்கும் என்றல்லவா எண்ணத் தோன்றுகிறது?  திலகரைப் பற்றியும் விபின சந்திரரைப் பற்றியும் இவர் பேசியிருப்பதைக் கேட்டிருந்தால் பாரதி என்ன செய்திருப்பான்?  புதுச்சோரியில் (வ. வே. சு. ஐயாரின் நண்பரான) ஒரு பிரபல வக்கீல், பழக்கம் காரணமாக, "ஏன் சார்!  ஒங்க டிலக் இப்போ எப்படி இருக்கான்?" என்று கேட்டதற்காக, பெயரைத் தவறாக உச்சாரித்ததற்காகவும், ஒருமையில் திலகரைக் குறிப்பிட்டதற்காகவும் பாரதிக்கு வந்த ஆவேசத்தை வ. ரா. அவர்கள் எழுதியிருப்பதைப் படித்தால் நாராயண அய்யங்காருக்கு என்ன நேர்ந்திருக்கும் என்று கற்பனை செய்ய முடிகிறது.  எனவே, திலகரைப் பற்றியே இவ்வளவு பேசும் இவர் வார்த்தைகளுக்கு எவ்வளவு மதிப்பு தர முடியும்?  நண்பர்கள்!

  டாக்டர் ச. சு. இளங்கோவன் வேறொரு தகவலைத் தருகிறார்.  வ. வே. சு. ஐயரும் பாரதியாரும் புதுவையில் மண்பொம்மைக் கலைஞர்களிடம் சொல்லி பாரத மாத பதுமையொன்று செய்யச் சொன்னார்கள்.  இந்தப் பதுமையின் படம் இளங்கோ அவர்களின் புத்தகத்திலும், ரா. அ. பத்மநாபன் வெளியிட்ட சித்திர பாரதியிலும் வெளியாகி இருக்கிறது. 

  இந்திய விடுதலை வீரர்களுக்குப் பயன்படும் சிறு துப்பாக்கி முதலிய கருவிகளைப் பாரதமாதா பதுமைகளில் மறைத்துப் புதுச்சோரியிலிருந்து சென்னைக்குக் கொண்டு செல்லப்படுவது வழக்கமாக இருந்தது.  அவ்வாறு துப்பாக்கிகள் மறைக்கப்பட்ட பாரதமாத மண்பொம்மைகள் அடங்கிய ஒரு பெட்டியைச் சென்னைக்குக் கொண்டு சென்று, தமக்குத் தொரிந்த நண்பர்களிடம் சேர்ப்பிக்குமாறு பாரதியார்,  பாரதிதாசனுக்குப் பணித்தார்.  (பாரதிதாசன் பார்வையில் பாரதியார் - டாக்டர் ச. சு. இளங்கோவன் - பக்கம் 59)  இதற்கு ஆதாரமாக அவர் குடும்ப விளக்கு நூலின் 54-55 பக்கங்களைக் காட்டுகிறார்.  ஒருவரின் வாழ்க்கைக் குறிப்புக்குக் காவியங்களும் கற்பனை நூல்களும் ஆதாரமாக முடியுமா?

  சாரி.  அப்படியே வைத்துக்கொள்வோம்.   பெட்டிபெட்டியாக துப்பாக்கிகளையோ, எறிகுண்டுகளையோ கடத்திச் சென்றுவரத் தேவையான நிதி பாரதிக்கு எங்கேயிருந்து கிடைத்தது?  புதிர்.  ஒரு பெட்டியில் பத்து பதுமைகள் என்று வைத்துக்கொண்டாலும் பத்து கைத்துப்பாக்கிகள் கடத்தப்பட்டன என்று பொருள்.  எப்படி இத்தனை துப்பாக்கிகளை பாரதி வாங்கினான்?  எந்த கஜானாவைக் கொள்ளையடித்தான்?  புதிர்.  அல்லது பாரதி வேறு யாரிடமிருந்தோ ஆயுதங்களைப் பெற்று அவற்றை இவ்வாறு விநியோகித்தான் என்றால்,  யார் அந்த யாரோ?   யார் இந்தியத் தீவிரவாதிகளை ஊக்குவிக்க பெட்டி நிறைய ஆயுதங்களைத் தந்திருப்பார்கள்?  புதிர்.  பாண்டிச்சோரியில் பாரதி முதலானவர்களைக் கண்காணிக்க என்றே அலைந்து கொண்டிருந்த பிரிட்டிஷ் ஒற்றர்களிடம் சிக்காமல் இது எப்படி நடந்திருக்க முடியும்?  புதிர்.  Bharathi and Imperialism -A Documentation  என்ற தலைப்பில் வெளிவந்திருக்கும் பாரதி சம்பந்தப்பட்ட போலிஸ் ஒற்றர் குறிப்புகள் ஓரிடத்திலும் பாரதிக்கும் ஆயுதக் கடத்தலுக்கும் தொடர்பிருந்ததாகச் சொல்லவில்லையே?  புதிர்.

  பாரதி இப்படிச் சொன்னார் அப்படிச் செய்தார் என்று சொல்பவர்கள் ஒருபுறம் இருக்கட்டும்.  ஆயுதக் கலாசாரத்தைப் பற்றி பாரதி என்ன நினைத்தான்?   அவன் எழுத்துக்களை விடவும் வலிமையான ஆதாரம் வேறென்ன இருக்க முடியும்?

  அடுத்த வாரம் காண்போம்.

  PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
  உங்கள் கருத்து  
  (You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
  Copyright © 2004 Tamiloviam - Authors
  Best viewed with IE 4.x and above, Netscape 7.x , Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
  | Privacy |