ஜூலை 06 2006
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
பேட்டி : கவிஞர் திலகபாமா அவர்களுடன் ஒரு நேர்காணல்
- திருமலை கோளுந்து [golundhu1979@yahoo.com]
Save as PDF | Bookmark in Del.icio.us | | Printable version | URL |

ஆபாசமாக எழுதுகிற பெண்கள் என்ற வார்த்தைகளை மாற்றிக் கொள்ளுங்கள். ஏன் என்றால் அந்த வார்த்தை எனக்கு ஒரு வலியை ஏற்படுத்துகிறது. பெண்கள் மட்டும் எழுதுவதில்லை. ஆண்களும் எழுதுகிறார்கள்.

எழுத்தாளர், கவிஞர், விமர்சகர், கட்டுரையாளர் என்ற பல முகங்களை கொண்ட திருமதி திலகபாமா பட்டாசுக்கு பெயர் பெற்ற விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் வசித்து வருகிறார். ஆழமான பார்வையை, சரளமாக மணி ஓசை போல் தெளிவான குரலில் பேசுகிறார். இளநிலை வணிகவியலில் பட்டம், முதுநிலை நிர்வாகத்துறையில் பட்டம் பெற்றுள்ள இவர் சூரியனுக்கு கிழக்கே, சூரியாள், சிறகுகளோட அக்னி பூக்களாய், எட்டாவது பிறவி, கூர் பச்சையங்கள் போன்ற தலைப்புக்களை கொண்ட கவிதை தொகுப்பை எழுதியிருக்கிறார். இவை தவிர நனைத்த நதி என்ற சிறுகதை தொகுப்பையும், இலக்கியவாதி சி.கனகசபாபதி பற்றிய முழுமையான மூன்று தொகுப்புக்களை கொண்ட நூல்களை வெளியிட்டுள்ளார்.  இலக்கிய சிற்றிதழ்களில் இவரது கவிதைகள், கட்டுரைகள், விமர்சனங்கள் வெறும் பரவசத்தை மட்டும் ஏற்படுத்தாமல் ஒரு சிந்தனை தாக்கத்தை, சிந்தனை வழியே ஏற்படுத்துகிறது என்பது இவரது அபிமானிகளின் கருத்து. லட்சுமி அம்மாள் என்ற பெண் இலக்கியவாதியைப் பற்றி வெற்றிகளின் மறைவில் இருந்து வெளிச்சத்தில்........ என்ற குறும்படம் ஒன்றை எடுத்திருக்கிறார். ஒரே ஒரு ஊருக்குள்ள நாலே நாலு பெண் கவிஞர்கள் என்று நேர்மையான, இலக்கிய வாசகர்களால் கேலி செய்யப்படும் கவிஞர்கள் மாலதி மைத்ரி, குட்டிரேவதி, சுகிர்தாராணி, சல்மா போன்ற கவிஞர்களோடு தான் முரண்படுவதாக சொன்னாலும், அவர்களை முழுவதுமாக நிராகரிக்காமல் அவர்களை பார்க்கிறார். ஜரோப்பிய, ஆசிய நாடுகள் பல வற்றிற்கு சுற்றுப் பயணம் செய்திருக்கும் இவரின் பேச்சில் வார்த்தைகளை திணித்தலோ, புகுத்துதலோ இல்லை. யாதார்த்தமாக தொடங்கிய நேர்காணல் சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேல் நீண்டது. இனி..............


தமிழோவியம் :- கவிதை என்பதற்கு பலவிதமான வரையறைகள், இலக்கணங்கள் சொல்லப்படுகிறது. உங்களின் பார்வையில் கவிதை என்பது என்ன?

Thilagabamaபதில் :- கவிதை என்பது எளிமையாக, ஒரு வார்த்தையில் பதில் சொல்லி விட்டு போகக் கூடிய  ஒன்று என்பதை நான் நம்பவில்லை. ஏனென்றால் எங்களின் அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறோம்.. எங்களின் எண்ணங்களை வடிய விடுகின்ற ஒரு வடிகாலாக இருக்கிறது என்று பலவிதமான கருத்துக்களை சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். நான் என்ன சொல்ல நினைக்கிறேன் என்றால் வாழ்க்கையில் பல விஷயங்களை பார்க்கிறோம். பார்க்கின்ற விஷயங்களில் முரண்பட்டுக்கிட்டே இருக்கிறோம். யதார்த்தம் ஒன்றாக இருக்கிறது. நாம எதிர்பார்க்கிறது ஒன்றாக இருக்கு. இயல்பாக இருக்க முடியாது. முரண்படும் பொழுது எங்களுக்குள் நிறைய கேள்விகள் எழுகிறது. விசாரணைகள் கிளம்புது. இது ஒரு பெரிய, நெடிய பயணம். எங்கு தொடங்கி, எங்கு முடிகிறது என்பதை தீர்மானிக்க முடியாத பயணமாக இருக்கிற, இந்தப் பயணத்தில் பலவித அனுபவங்களுக்கு உள்ளாகிறோம். கேள்விகள், விசாரணைகள், பதில்கள், எங்களுக்கு கிடைக்குற தீர்வுகள் கூட சரியாக இருக்கும் பொழுது, இன்றைக்கு பின் சரியில்லாமல் போய் விடுகிறது. கவிதை என்பது எந்த இடத்தில் அமைகிறது என்றால் இந்த எல்லாவற்றினோடு முழுமையான, ஒட்டு மொத்தமான, திரட்சியான சாரமாக கவிதை அமைகிறது. நான் நினைக்கிறேன் எனக்குள் இருக்கும் நினைவு மனம் ஒரு பக்கம் செயல்படுகிறது. நனவிலி மனம் என்று சொல்லக் கூடிய நம்மை அறியாமல் செயல்படும் மனம் ஒரு பக்கம் செயல்படுகிறது. நினைவு மனத்தில் இருக்கும் ஒரு விஷயம், மனதிற்குள் போய் எங்கோ ஒரு இடத்தில் வெளிப்படும். ஏதோ வெறுமனே வெளிப்படும் விஷயம் என்பது மட்டுமல்ல கவிதை. முழு பயணத்தோட விளைவு. திரட்சியான சாறு தான் கவிதை.

தமிழோவியம் :- உங்களோட கருத்தை வைத்துப் பார்க்கும் பொழுது கவிதை என்பது மனித வாழ்க்கையின் இன்பங்கள், துன்பங்கள், சிக்கல்கள் எல்லாவற்றையும் வெளிப்படுத்தும் களம் என்று சொல்லலாமா?

பதில் :- சொல்லலாம். வெளிப்படுத்தக் கூடிய, அதனை பதிவு செய்யக் கூடிய, கேள்வி எழுப்பக் கூடிய களமாக நான் சொல்வேன். இது வரைக்கும் நீ செய்து கொண்டு இருப்பது சரி தானா என்று கேள்வி எழுப்பக் கூடியது என்று எல்லாமாகவே பார்க்கலாம். வெறும் களம் என்று சொல்லிவிட்டு வெறும் பார்வையாளர்களாக நாங்கள் இருந்து விட்டுப் போகல.  சில சமயத்துல பார்வையாளனாகவும், பங்கேற்பாளனாகவும், எல்லாமாகவும் இருக்கிறான் ஒரு படைப்பாளி.

தமிழோவியம் :- கடந்த ஆண்டு உங்களின் ஏற்பாட்டில் நடந்த கானல் காடுகள் என்ற நிகழ்ச்சியில் புதுக் கவிதைகள் காலாவதியாகி விட்டது என்று மாலன் சொல்லி இருக்கிறார். இந்தக் கருத்தை ஏற்றுக் கொள்கிறீர்களா? உங்களுக்கு உடன்பாடு உண்டா?

பதில் :- எனக்கு வந்து எதுவுமே காலவதியாகிறது இல்லை. இன்னொரு மறுபிறப்பு எடுக்கிறது. சாதாரண ஒரு நகரத்தை எடுத்துக் கொண்டாலே, அந்நகரில் குறிப்பிட்ட வருடங்களுக்குப் பின் புதிய தொழில்கள் உருவாகிறது. அதுக்காக பழைய தொழில்கள் காலவதியாகி விடுவதில்லை. அதை அடிப்படையாக வைத்து, இன்னொரு விஷயம் உருவாகுது. நமது மரபுக் கவிதைகள் எல்லாம் காலாவதியாகி விட்டது என்று நாம் சொல்ல முடியாது. அதன் அடிப்படையில் இருந்து தான் நாங்கள் பிறந்து கிட்டு இருக்கிறோம். அதுக்குள்ள இருந்து தான் இன்னொரு பரிணாமம் வருது. ஏன் என்றால் மனிதனின் வாழ்க்கை முறை மாறுது. மாறுதல் என்ற ஒன்று தான் மாறாதது என்பதை நாம் திரும்ப, திரும்ப பார்க்குற விஷயமாக இருக்கு. சமூகத்தின் எல்லா விஷயங்களும் மாறுதலுக்கு உட்படும் பொழுதும், உலகமாயமாதல்  உட்பட எல்லா மயமாக்குதலுக்கும் இடையே தான் பயணித்துக் கொண்டு இருக்கிறோம். மனிதனின் எண்ணங்கள், தேவைகள் எல்லாமே ஒரு மாறுதலுக்கு உட்படும் பொழுது அவனுடைய கலை வடிவங்களும் மாறுதல் அடைகிறது. அது ஏற்கனவே இருந்த ஒரு வடிவத்தில் இருந்து தான் மறுபிறப்பு எடுக்கிறதே ஒழிய அந்த வடிவத்தை காலவதியாக்குவதில்லை.

புதுக்கவிதை என்ற இந்த வார்த்தைக்கு பின்னால் சிலர் நிற்பது தான் பிரச்சினை. ஏன் என்றால் மரபுக்கவிதை, புதுக்கவிதை, நவீன கவிதை, பின் நவீனக் கவிதை, வசன நடை கவிதை என்று போய் விட்டார்கள். இவைகள் வெறும் வார்த்தைகள் தான். எப்ப வந்து ஒரு மனுஷன் இருக்குற கருத்தியலில் இருந்து, புதிய கருத்தியலை சிந்தித்து எழுத தொடங்குறானோ அப்பொழுது எல்லாமே புதியது தான். நவீனம் தான். இங்க இருப்பவர்கள் ஒரு வடிவம் அமைத்துக் கொண்டு, இந்த வடிவத்தில் இருந்து மாறுபட்டு வந்த உடனே இந்த பழைய வடிவம் காலவதியாகிவிட்டதாகவும், புதிதாக வந்தவை தான் நவீனம், அதி நவீனம், பின்னவீனம் என்கிறார்கள். வெளிநாட்டுப் படைப்புக்களை படித்து அதனை மொழி பெயர்க்கும் பொழுது அந்த வார்த்தைகளை அப்படியே இறக்குமதி செய்து புதிய போக்குகளை தேவைகளின் பேரில் உருவாக்காது, போலியாக போக்குகளை உருவாக்கி எழதுகிறார்கள். என்னைப் பொறுத்தவரை என் வாழ்க்கையில் எதை எல்லாம் எதிர் கொள்கிறேனோ, அதன் விளைவாக என் மனதில் ஒரு மனம் எழுகிறது. எல்லாரிடமும் ஒரு புனைவுமனம் இருக்கு. நம்ம தாத்தா, பாட்டி காலத்தில் இருந்தே அவர்கள் கதை சொல்லி, கதை சொல்லி புனைவு மனதிற்கு நாம் பழக்கப்பட்டு இருக்கோம். அதே போல ரசிக்கிற மனமும் இருக்கு. என்னைக் கேட்டால் எல்லாருமே கலைஞர்கள் தான். சிலர் எழுதி பார்க்குறோம். பலர் எழுதி பார்ப்பதில்லை. அந்தப் புனைவு மனத்தில் வந்து ஒவ்வொருத்தர் வழியே பதிவு செய்து விட்டுப் போகிறோம். அது ஒவ்வொரு காலகட்டத்திற்கு ஏற்றவாறு மாறிக்கொண்டே வருகிறதே ஒழிய காலாவதி ஆகிறது என்ற வார்த்தையில் எனக்கு நம்பிக்கையில்லை.

தமிழோவியம் :- இன்றைய காலக்கட்டத்தில் ஒரு படைப்பாளியோ, வாசகனோ தனது கருத்தை வெளிப்படையாக சமூகத்தின் முன் வைப்பதற்கு சுதந்திரம் இல்லை என்ற விமர்சனம் இருக்கிறது. இதற்கு உதாரணமாக சண்டைக்கோழி என்ற திரைப்படத்தில் எஸ்.ராமகிருஷ;ணண் எழுதிய ஒரு சாதாரண வசனத்திற்காக நான்கு பெண் கவிஞர்கள் அவரை தொடர்ந்து கீழ்த்தரமாக விமர்சித்து வருகிறார்களே?

பதில் :- நாம் முதலில் சுதந்திரம் எது என்பதை தீர்மானிக்க வேண்டும். என்னுடைய சுதந்திரம் உங்களுடைய மூக்கு நுனி வரைக்குமே என்ற ஒரு அறியப்பட்ட மொழி இருக்கு. நான் என்னுடைய சுதந்திரத்தை பற்றி யோசிக்கும் பொழுது அடுத்தவங்க காலை மிதித்து விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். என்னுடைய வீட்டில் என்னுடைய அறைக்குள் நான் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் வீட்டு வரவேற்பறையில் இன்னொரு மனிதருக்கான மனுஷியாக மாறி உட்கார வேண்டியதிருக்கு. இது மனிதனுக்கும், மனிதனுக்குமாக சில நேரம் விட்டுக் கொடுத்தலும், பரஸ்பரம் அவர்களை புரிந்து கொள்ளுதலும் இங்கு தேவைப்படுது. அதனை வந்து சுதந்திரத்தை விட்டுக் கொடுப்பதாகாது. பரஸ்பரம் மனிதம் வாழ்வதற்கு இவை எல்லாம் தேவை.

சண்டைக்கோழி விவகாரத்தை நான் ஒரு பிரச்சினையாகவே பார்க்கவில்லை. ஏன் என்றால் இரண்டு பக்கத்து ஆட்களும் அவர்களுடைய விளம்பரத்திற்கு பயன்படுத்த எடுத்துக் கொண்ட விஷயம். இதனை இலக்கிய சர்ச்சையாக நீங்கள் தயவு செய்து முன் நிறுத்தாதீர்கள். அதனை விளம்பர மீடியாக்கள் சந்தோஷமாக முன் நிறுத்துகிறார்கள். இதற்கு உதாரணம் சொல்லும் பொழுதும் பழைய படி அதைத்தான் சொல்ல வேண்டியதாயிருக்கு. எஸ்.ராமகிருஷ்ணண் தெரிந்து தான் உபயோகப்படுத்தி இருக்க வேண்டும். இதனை நான் எழுதவில்லை என்று தப்பித்துக் கொள்வதற்கான வாய்ப்புக்களை வைத்து தப்பித்துக் கொள்வது. வஞ்சம் தீர்ப்பது. ஆனால் அந்த வார்த்தைகளை போடுவதற்கும் இந்தப் பெண்கள் இடம் கொடுத்து விட்டார்கள் என்பது என்னுடைய கருத்து. அதே சமயத்தில் அவர்கள் கண்டனத்தை தெரிவித்த விதங்களும் அடுத்தவர்கள் சுதந்திரத்தை காயப்படுத்தும் விதத்தில் தான் இருந்தது. இப்படி இரண்டு பக்கமும் நிறைய தவறுகள் இருக்கிறது. அதனால் அந்தப்பிரச்சினையில் எது நியாயம், அநியாயம் என்று சொல்ல முடியாது. இதோ இன்றைக்கு கூட காலச்சுவடு இதழில் விருது வாங்கலையோ விருது என்று பெயர் போட்டு, ஒவ்வொரு படைப்பாளியின் பெயர்களை போட்டு அதுக்கு நேரே அவனுங்களா ஒரு பட்டப் பெயர் கொடுக்குறான். இவன்ட யாரு விருது கேட்டது? அதில் என் பெயருக்கு நேரே தணிக்கைச் செல்வினு போட்டு இருக்கான். இது நல்ல விதத்தில், நல்ல விஷயத்திற்காக போடப்பட்டவை அல்ல. இதை நான் கேள்வி எழுப்பப் போனால் உங்களுக்கு நாங்க நல்ல பெயர் தானே கொடுத்துருக்கோம் என்று அவன் பதில் சொல்லுவான். இதுல யாராவது நம்மிடம் சண்டைக்கு வந்தால் நல்லா இருக்கும் என்பதற்காகத் தான் அவன் அப்படி பண்றான். ஆனால் இதே சமயத்தில் என் பெயருக்கு நேரே எந்தவிதமான மோசமான அடைமொழி கொடுக்க முடியாது. குட்டிரேவதியை துப்பட்டா இல்லாமல் அலைவதாக அவரது முலைகள் கவிதை தொகுப்பை சொல்லிக் காட்டாமல், சொல்லிக் காட்டுவதைப் போல எங்கள் மீது அப்படிப்பட்ட வார்த்தைகளை போட முடியாத அளவுக்கு ஓர் இடத்தை உருவாக்கி வைத்திருக்கிறோம். எங்களின் இந்த உருவாக்களையும் அவர்களும், எதிராளிகளும் தான் அனுபவித்துக் கொண்டு இருக்கிறார்கள்.       

தமிழோவியம் :- சில சிற்றிதழ்கள் பெண் எழுத்துக்களை திசை திருப்புகின்ற அரசியலை செய்து வருகின்றன என்று நீங்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறீர்கள். இதில் எந்த அளவிற்கு உண்மை இருக்கிறது?

பதில் :- கண்டிப்பாக, ஆணித்தரமாக அதனைத் தான் சொல்லிக் கொண்டு இருக்கிறேன். மாலதி மைத்ரியை முதன் முதலில் நான் பார்த்த பொழுது அதிகமாக சந்தோஷப் பட்டுள்ளேன். சிலரை பார்த்தவுடன் நமக்குப் பிடிக்கும். அவங்களுக்குள்ள ஏதோ ஒன்னு இருக்குதுனு நமக்குத் தோன்றும். இவரை ஒரு போர்ஸ் உமன் என நான் நினைத்துப் பார்த்து இருக்கிறேன். நான் படைப்பாளியாக இருக்கும் பொழுது சமூக விமர்சகனாக மாற வேண்டியிருக்கு. ஒரு படைப்பாளியின் படைப்பை பார்க்கும் பொழுது படைப்பாளியின் தனி வாழ்க்கையை பார்க்கத் தேவையில்லைனு சொல்றாங்க. ஆனால் ஒரு படைப்பை பார்க்கும் பொழுது, அந்தப் படைப்பு எந்தக் காலத்திற்குள் இருந்து வந்து இருக்கிறது என்பதையும் பார்க்க வேண்டும். அப்படி பார்க்கும் பொழுது அந்தப் படைப்பாளியின் தனி மனித வாழ்க்கை என்னவாக இருக்கிறது என்பதையும் பார்க்க வேண்டும். என்னைப் பொறுத்தவரை மாலதி மைத்ரி ஒரு மோசமான சுழலில் சிக்கிக் கொண்டு இருக்கிறார் என நான் நினைக்கிறேன். சுதந்திரமான வாழ்க்கை, தனித்துவமான வாழ்க்கை, குடும்ப நிறுவனத்தை சிதைத்து வாழ்தல் என்று சொல்கிறார்கள். இதில் பெண்களை பல பேர் சாப்பிட்டு விட்டுத் தான் போய்க் கொண்டு இருக்குறாங்க. இன்னும் அந்த மனநிலை மாறவில்லை. இன்றைக்கு காலச்சுவடு இதழ் எல்லா அரசியலையும் நடத்துகிறது. அவங்க ஒரு பெண்ணை முன்னிறுத்திக் கொண்டுப் போறாங்கன்னா அதுக்குப் பின்னாடி எவ்வளவோ இருக்கு. பார்த்ததையும், உணர்ந்ததையும் நிறுவ முடியாது. அதுக்கு நிறைய விஷயங்களை சாட்சியாக கொண்டு வர முடியாது என்பது சிக்கல்.

சிவகாசி ஜெயலட்சுமி வழக்குல அந்தப் பொண்ணு எல்லா இடத்திலயும் மாட்டிக்கிடுச்சு. தன்னை பயன்படுத்தியவர்களை தானும் பயன் படுத்திக் கொண்டது. இதே நேரத்தில திருப்பி யோசித்துப் பாருங்க. தன்னை ஒருவர் பயன்படுத்திக் கொள்ள வரும் பொழுது, அந்தப் பெண் சுதாரிச்சு தன்னை தவறாக பயன்படுத்திக் கொள்ள பார்க்குறான் என நினைத்து இவனிடம் இருந்து வெற்றி கொள்ளனும்னு வெற்றி பெற்றிருந்தால் எத்தனை போலீஸ்காரர்களை தனக்கு சாட்சியாக அது நிறுத்தி இருக்கும். ஒட்டு மொத்தமாக அவளுக்கு ஆதரவான சாட்சி இருக்காது.

பெண்படைப்பாளிகளின் பின் பக்கங்களை நாங்கள் பார்க்கிறோம். மிக நெருக்கமாக பார்க்கிறோம். நான் சொல்ல முடியாத பக்கங்கள் நிறைய இருக்கு. நான் அடிப்படையில் இருந்து பெண் எழத்துக்களை சிற்றிதழ்கள் திசை திரும்பும் வேலையை பற்றித் தான் யோசித்துக் கொண்டு இருக்கிறேன்.பெண்ணோட சுதந்திரம் எதுவாக இருக்குது. காலம் காலமாக பெண் உடல் சார்ந்தே நிறுவப்பட்டிருக்கிறாள். ஆணோ, பெண்ணோ சிறுவயதில் இருந்து சமமாகத் தான் வளர்க்கப்படுகிறோம். பின் பெண் பருவம் அடைகிற வயதில் தான் உடலை பத்திரப்படுத்த வேண்டும் என்கிற நல்ல எண்ணத்தில் தான் பெற்றோர்கள் செய்கிறார்கள். இப்படி பெண்கள் மீது தொடங்குகிற ஆக்கிரமிப்புகள் தான் மெல்ல, மெல்ல அவள் எதையும் தன்னிச்சையாக செய்ய முடியாத நிலைக்கு போய் விடுகிறது. அதில் இருந்து அவள் மீண்டு வர வேண்டுமானால் உடலைத் தாண்டி மனிதமாக அவள் வளர வேண்டும். இயல்பான வாழ்க்கையில் இருக்கின்ற பெண்கள் வாழ்க்கையில் எழுகின்ற தேவைகளின் போது மாற்றுச் சிந்தனைகளை மிக எளிதாக செய்கிறார்கள். அது பேசப்படாததும், நிகழும் விகிதாச்சார குறைவும் நம் கவனத்திலிருந்து அவற்றை தூர வைத்து விடுகின்றன. இலக்கியவாதிகளால் ஒன்றும் ஆகாத விஷயுத்தைக் கூட பத்திரிக்கையும், பார்க்கப்படுதலையும் கொண்டே, போலிகளை சிலர் நிறுவுவதால் திசை திருப்புதலுக்கும் ஆளாகிவிடுகின்றனர். அப்படி அவள் வளர்ந்து வருகிறாள் என்பதற்கு சின்ன உதாரணம் சொல்கிறேன். முதுமலை காட்டு பகுதியில் நள்ளிரவில் எல்லை ரோந்து பணியில் ஒரு பெண் அதிகாரி ஆண்களோடு பணி புரிந்து கொண்டு இருந்தார். எனக்கு பலத்த ஆச்சர்யம். அந்த பெண் போலீஸ் அதிகாரியிடம் போய் உங்களுக்கு பயம் இல்லையா என்று கேட்டேன். நடுக்காடு, நள்ளிரவு என்று கூட பார்க்காமல் அந்தப் பெண் சொன்னார். ஏன் பார்க்க முடியாது. அதோ அந்த ஆண்கள் மட்டும் பார்க்குறாங்க. நான் ஏன் பார்க்க முடியாது என்றார். அந்தப் பெண்ணுக்குள் இருக்குற போர்ஸ் என்ன? இந்த பெண் கவிஞர்கள், கவிதைகள் சுதந்திரம் பற்றியும், பெண் விடுதலை பற்றியும் எழுதுறாங்களே, அந்தப் பெண்ணோட ஒரு வரி பதிலுக்குள் இருந்த தாக்கத்தை எத்தனை கவிதைகள் ஏற்படுத்திக் கொடுத்திருக்கு? அதே மாதிரி இன்னொரு பெண்ணை நான் பார்த்தேன். அந்தப் பெண் திருமணம் ஆகி தன்னோட அப்பா, அம்மாவை தன்னோடு வைத்திருப்பதாக சொன்னார். எனக்கு ஆச்சர்யம். என்னம்மா, திருமணம் ஆகிவிட்டது என்கிறாய். உன்னோட அப்பா, அம்மாவை எப்படி நீ உடன் வைத்திருக்கிறாய் என்றேன். ஏன் எங்க அப்பா, அம்மாவுக்கு நான் ஒரே பெண். அவங்கள நான் தானே பார்த்துக் கொள்ளனும், அது தான் நான் என் கூட வைத்திருக்கேன் என்றார். இது தான் உண்மையான பெண் இனத்தின் விழிப்புணர்ச்சி, வளர்ச்சி. 

வெற்றி அடைகிற பெண்களை நாம் முன்னுக்கு வைத்து பேசுவதில்லை. மாறாக தோற்றுப் போகிற பெண்களைத் தான் நாம பேசிக்கிட்டு இருக்கோம். அதனை பெண்களை திசை திருப்பும் ஒரு விஷயமாக நான் பார்க்கிறேன். நான்கு பெண் கவிஞர்களை காமத்துப்பால் கவிஞர்கள் என்று இந்தியா டுடே போடுகிறது என்றால் அவங்களுக்கு வேணும். ஆண்கள் வர்ணிக்கிறார்கள் அதனால் தான் நாங்களும் பெண் உடலை வர்ணிக்கிறோம் என்று இந்த பெண் கவிஞர்கள் சொல்வது எல்லாம் சும்மா. இந்தச் சோலி எல்லாம் இங்க எடுபடாது. அதை கேட்குறதுக்கு பரிதாபப் படலாமே தவிர, உண்மையில் நல்லது செய்யப் போவதில்லை.

தமிழோவியம் :- இன்றைய காலக்கட்டத்தில் சில சிற்றிதழ்களில் மாலதி மைத்ரி, சால்மா, குட்டிரேவதி, சுகிர்தாராணி போன்ற கவிஞர்களின் வரவினால், ஆபாசம் இல்லாமல் சமூகத்தைப் பற்றியோ, கலை பண்பாட்டைப் பற்றியோ கவிதை எழுதுகின்ற பெண் படைப்பாளிகளுக்கு முக்கியத்துவம் இல்லாமல் போய் விட்டது. இதனைக் கூட ஒரு வித ஆக்கிரமிப்பு என்று சொல்லலாமா?

பதில் :- நிச்சயமாக, அதனைத் தான் திசை திருப்புதல்னு சொன்னேன். பெண்களுக்கும் தலித்களுக்கும் இது தான் நடக்குதுனு நான் நினைக்கிறேன். தலித் ஓய்ந்து விட்டார்கள் என்றால், அதாவது தலித் என்ற மனப்பான்மை இல்லாமல் போய் விட்டால் தலித் என்ற வார்த்தையை பயன்படுத்தி அரசியல் செய்பவர்களுக்கு பிழைப்பு இல்லாமல் போய் விடும். அதனால் அவர்கள் தலித் என்ற வார்த்தையை அழியாமல் பார்த்துக் கொள்வார்கள். அதே மாதிரி ஒடுக்கப் படுகிற பெண்கள் இருக்கிற வரைக்கும் தான் பெண்கள் என்ற வார்த்தையை பயன்படுத்தி அதன் மூலம் பத்திரிக்கை நடத்தி சம்பாதிக்க முடியும். பெண்கள் ஒடுக்கு முறைக்கு எதிரான கூட்டம் என்று பேனர் போட்டு அதன் மூலம் என்.ஜி.ஓக்கள் காசு சம்பாதிக்குறாங்க. இந்த அரசியல் எல்லாருக்கும் தெரிந்து தான் இருக்கு. ஆனால் வெளியே சொல்ல, பேச பயப்படுகிறோம். இதனை நாட்டுக்கு எதிரான சதியாக நான் பார்க்குறேன். இதை சின்ன விஷயமாக விட்டு விட முடியாது. குண்டு போட்டு நாட்டை அழித்தது எல்லாம் அந்தக் காலம். இப்ப அறிவை ஆக்கிரமிப்பது தான் முக்கியமான போர் யுத்தி. என்.ஜி.ஓக்களிடம் இருந்து காசு வாங்குற எழுத்தாளர்கள் யார் யார் என்று எடுத்துப் பார்த்தால் தெரியும். யாரு, யாரு மனசாட்சிப்படி செய்யுறாங்க. யாரு, யாரு மனசாட்சிக்கு எதிராக செய்யுறாங்கனு தெரியும். இங்கு ஒரு மூலையில் நடக்குற ஒரு விஷயத்தை பெரிதாக்கி, அதை இவங்க எழுத்தில் காட்டிக் கொடுக்குறாங்க. இது வந்து பெண்கள் மீது நடத்துகிற மிகப் பெரிய ஆக்கிரமிப்பு. இந்த நாலு பெண் கவிஞர்களைப் பற்றி டாக்குமெண்டரி கூட எடுக்கப்பட்டு இருக்கு. நாட்டுல வேற பிரச்சினையே இல்லாதது மாதிரியும் இவங்க நாலு பேரும் தான் பெண்கள் அரசியலை பேசுகிறவர்கள் மாதிரியும் இங்கு விவாதிக்கிறார்கள்.

தமிழோவியம் :- சி ரைட் என்ற ஆவணப்படம் தமிழ்நாட்டில் போக்கத்த இந்த நாலு பேர் தான் பெண் கவிஞர்கள். இவர்கள் எழுத்தில் காட்டுகின்ற பார்வை தான் தமிழ்நாட்டின் முகம் என்ற பார்வையை உலகிற்கு காட்ட முயற்சிக்கிறது. இப்படி ஒரு முகத்தை காட்டுவது தமிழகத்தின் கலாச்சார, அடித்தள ஆணிவேரையே மாற்ற முயற்சிக்கின்ற கூட்டு சதி என்று சொல்லலாமா? 

பதில் :- அப்படித் தான் செய்து கொண்டு இருக்குறாங்க. தமிழ்நாட்டுல இருக்குற எல்லாத்தையும் சிதைத்து போடுகிற எல்லா வேலைகளையும் சிலர் செய்கிறார்கள். முதலில் பண்பாடு, கலாச்சாரம் என்ற வார்த்தைக்கு முதலில் அர்த்தத்தைச் சொல்லணும். ஏன் என்றால் இந்த வார்த்தையை திரும்ப, திரும்ப பயன் படுத்துகிறோம். எனக்கு எழுத்தாளர்கள், எழுத்துலகம் கலாச்சார காவலர்கள்னு பெயர் வைக்குறாங்க. அவங்களோட கலாச்சாரமா, பண்பாடா எதை நினைக்குறாங்க என்று எனக்குத் தெரியாது. என்னைப் பொறுத்தவரை கலாச்சாரம், பண்பாடு என்பது ஒரு மனுஷனும், மற்றொரு மனுஷனும் சந்தோஷமாக வாழ என்ன வழிவகைகளை கையில் எடுக்கிறோமோ அது தான் உயர்வான கலாச்சாரம், உயர்வான பண்பாடு. நமது பெரியோர்களின் தகவமைப்பு அப்படித் தான் இருந்திருக்கும். நடுவில் வந்த பலபேர்கள் திணித்தலும், புகுத்தலும், ஆக்கிரமித்தலும் என்று செய்து வருகின்றனர். இவை பழங்காலம் இருந்தே இருப்பவை தான். நான் படைப்பாளியாகவும், சமூக விமர்சகனாகவும் என்ன செய்ய வேண்டி இருக்கிறது என்றால் இந்த திணிக்கப்பட்ட, புகுத்தப்பட்ட, ஆக்கிரமிக்கப்பட்ட விஷயங்களை தூக்கி எறிந்து விட்டு, அடிப்படையில் இன்றைய காலக்கட்டத்தில் எப்படி வேண்டுமோ அதன்படி தகவமைக்க முயற்சி செய்கிறேன். அதனை சிந்தனை வழியே செய்ய வேண்டும் என நான் நினைக்கிறேன்.

தமிழோவியம் :- உங்களுடைய தடையற்ற, தடங்கழற்ற பேச்சு, சிந்தனைகளை பார்க்கும் பொழுது ஒரு பெரிய முதிர்ச்சி தன்மையோடு கலந்த ஆச்சர்யத்தை எனக்குத் தருகிறது. இலக்கிய வாசிப்பில், எழுத்துலகில் உங்களுக்கு எப்படி ஆர்வம் வந்தது?

பதில் :-  எனக்கு எப்படினு தெரியல. நீங்க கேள்வி கேட்ட பின்பு தான் யோசிக்க வேண்டியதிருக்கு. ஒரு வேலை வாழ்க்கையே வந்து எனக்கு அப்படி பல வித விஷயங்களையும், பல கோணங்களையும் யோசித்துப் பார்க்கும் படி அமைந்திருப்பதாக நான் நினைக்கிறேன். ஏன் என்றால் இன்றைக்கு நான் வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கையில் பலருக்கு திலகபாமா பற்றித் தெரியும். ஆனால் ஆறு வருடங்களுக்கு முன்பு இருந்த திலகபாமாவை பார்த்து இருக்க முடியாது. இன்னக்கி கலாச்சார காவலர்கள் என்று என் மீது பழி போடுகின்ற ஆட்கள் எல்லாம் திலகபாமா ஒரு மேட்டுக்குடி பெண் என்று பழி போட்டு விட முடியும். ஆனால் வாழ்க்கையில் நான்கு ரூபாய்கும், ஜந்து ரூபாய்கும் கஷ;டப்பட்டுத் தான் முன்னுக்கு வந்திருக்கிறேன். உழைப்போட, வறுமையோட எல்லாப் பக்கத்தையும் பார்த்திருக்கிறோம். நேர்மையான, உழைப்புக்கான குடும்பச்சு10ழல் எனக்கு வாய்த்திருந்தது பெரும் விசயம் தான். அந்த மாதிரியான அனுபவங்கள் எனக்கு கிடைத்தது பெரிய வாய்ப்பாக இருக்கலாம். மற்றொன்று கவிதை எனக்கு எப்படி சாத்தியம் என்று பல நேரம் நான் யோசித்ததுண்டு. எனக்கு சின்ன வயசுல கதை கேட்கிற வாய்ப்பு அதிகமாக இருந்தது. அப்பா, பாட்டி, நண்பர்கள் என்று கதை சொல்வார்கள். அதில் நண்பர்கள் சொல்கின்ற கதைகளில் அதிகமாக பொய்கள் இருந்தாலும் கேட்க சுவராஸ்யமாக, எந்தப் பாதிப்பும் இருக்காது. அந்தக் கதைகள் வெளியே போகாமல் எனக்குள்ளே இன்னும் இருக்கு. புனைவு வெளிகள் எனக்குள் அப்படியே உள்ளது. இருப்பதை விட்டு வெளியே தாண்டி பார்க்க பழக்கப்படுத்தி விட்டது. புனைவு மட்டும் வாழ்க்கை இல்லை. வெளி உலகத்தில் விழுகிறோம். விழும் பொழுது கன்னா,பின்னாவென்று அடி விழுகிறது. அந்த அடியில் இருந்து எப்படி தப்பிக்கிறதுனு, மீண்டு வந்து விட்டேன். எனது படைப்புக்கள் எல்லாமே அனுபவம் தான். எனது எழுத்து படைப்புக்களில் கண்டிப்பாக திலகபாமா இருப்பாள். எல்லா அனுபவத்திற்குள்ளும் போய் நேர்மையாக வெளி வந்திருந்தால் அதனை சொல்ல எங்களுக்கு தைரியம் இருக்கும். எனக்கு அந்தத் தைரியம் உண்டு.

 தமிழோவியம் :-  உங்கள் படைப்புக்கள் எல்லாமே எல்லையற்ற சுதந்திரம் உடையவை என்று உங்கள் படைப்புக்களை வாசித்த, உங்கள் மீது அபிமானம் கொண்டவர்கள் சொல்கிறார்கள். அதனை அப்படியே ஏற்றக் கொள்கிறீர்களா?

பதில் :-  எனது படைப்புக்கான விமர்சனம், அதுக்குள்ளே நான் இருக்கிறேன் என்பது வேறு. இந்த படைப்புகளுக்கு நல்ல விமர்சனம் கிடைத்து இருந்தால் அதனை விஸ்தரிக்கத் தான் முயற்சி செய்ய வேண்டும். படைப்பாளிகள் இதிலெல்லாம் திருப்தி அடைந்து விடுவதில்லை.என்னைப் பொறுத்தவரை எனது படைப்புக்கள் இன்னும் அதிகமாக பார்க்க, கவனிக்கப் பட வில்லை என்ற வருத்தம் எனக்கு இருக்கிறது. ஏனென்றால் பெண்கள் எதைப் பேசினால் நல்லது கிடைக்குமோ,அதை பார்க்கவிடாமல் செய்வது இங்கு இருக்கிறது. அதே சமயத்தில் படைப்புக்களை விமர்சனம் செய்வதற்கு நிறைய திராணி வேண்டும். அந்தத் திராணி உள்ளவர்கள் இங்கு இருக்கிறார்களா? என்ற சந்தேகம் எனக்கு உண்டு. என்னைப் பொறுத்தவரை இலக்கிய உலகில் இலக்கியவாதிகள் என்று சொல்லக் கூடிய ஆட்கள் நிறைய போலித் தனமாக இருக்கிறார்கள். அதனைவிட வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்கள் நிறைய நேர்மைகளோடு இருக்கிறான்.

தமிழோவியம் :- இன்றைய இலக்கிய உலகம் பல குழுக்களாக இருக்கிறது. இதில் காலச்சுவடு குழுவுக்கம், உயிர்மை குழுவுக்கும் இடையே பலத்த போட்டி, மோதல்கள் நடக்கிறது. இந்த மாதிரியான குழுக்களின் மோதலால் தமிழ் இலக்கிய வளர்ச்சி பாதிப்பு அடையுமா?

பதில் :- குழுக்களாக இயங்கும் பொழுது சில நேரங்களில் எங்களுக்கு பலம். ஏன் என்றால் எல்லாரும் எல்லா நேரங்களிலும் நம்மை தட்டிக் கொடுக்க மாட்டார்கள். இலக்கியத்தில் குழுக்கள் தேவை தான். ஆனால் ஒரு கட்டத்தில் குழுக்களில் இருந்து கடந்து நிற்கப் பார்க்க வேண்டும். இது தான் என்னுடைய கருத்து.

தமிழோவியம் :- குழுக்களால் இலக்கிய வளர்ச்சிக்கு பாதிப்பு இல்லை என்கிறீர்கள் இல்லையா?

பதில் :- குழுக்கள் அதனை கடந்து நிற்க மாட்டேங்குறாங்க. அது தான் பிரச்சினை. இவங்க குழுக்களாக இயங்குவதில் ஒரு பிரச்சினையும் இல்லை. ஆனால் இங்க இவன் அவனை முழுங்குறதும், அவன் இவனை முழுங்குறதும் தான் நிகழ்ந்து கொண்டு இருக்கு. இது இல்லாமல் இந்தக் குழுக்கள் ஒருத்தருக்கு ஒருத்தர் போட்டியாக வளர்வதும் பிரச்சினை இல்லை. எல்லா மனுஷனுமே ஒரே கருத்தியலைக் கொண்டு இருப்பதில்லை. என்னுடைய கருத்தியலை மாலதி மைத்ரி கொண்டு இருக்கணும் என்ற அவசியம் இல்லை. மாலதி மைத்ரிக்கும் ஒரு கருத்தியல் இருக்கிறது என்றால் அதனைக் கேட்டு பதில் சொல்ல நினைக்கிறேன். அவ்வளவு தான். இது அவங்களுக்கும் பொருந்தும். முற்றிலும் அவர் என்னையோ, நான் அவரையோ நிராகரிக்க முடியாது. அதை விட்டுவிட்டு அவர்களுக்கு எதிரானவர்கள் என்று எங்களை ஆணி வேரோடு அழித்து விட நினைப்பதைத் தான் நாங்கள் எதிர்க்கிறோம். இதை தவிர்த்து விட்டால் குழுக்கள் உற்சாகமாக வளரலாமே.

தமிழோவியம் :- ஆபாசமாக எழதுகின்ற பெண்களான மாலதி மைத்ரி, குட்டி ரேவதி, சுகிர்தாராணி போன்றவர்கள், தாங்கள் சுயமாக சம்பாதிக்கிறோம் என்ற சுய சம்பாத்திய தைரியத்தில் தான் ஆபாசமாக எழுதுகிறார்களா?

பதில் :- ஆபாசமாக எழுதுகிற பெண்கள் என்ற வார்த்தைகளை மாற்றிக் கொள்ளுங்கள். ஏன் என்றால் அந்த வார்த்தை எனக்கு ஒரு வலியை ஏற்படுத்துகிறது. பெண்கள் மட்டும் எழுதுவதில்லை. ஆண்களும் எழுதுகிறார்கள். அதனால் ஆபாசமாக எழுதுகின்ற குழுக்கள் என்று மாற்றிக் கொள்ளுங்கள். ஆபாசமாக என்பதை விட இயலாமையை, வக்கிரங்களை எழுதுகிறார்கள். லஷ்மி மணிவண்ணண், பிரேம் ரமேஷ; என்று எழுதிக் கொண்டு தான் இருக்கிறார்கள். இதனால் பெண்கள் என்று ஏன் குறிக்க வேண்டும். பெண்கள் என்பதை கடக்கணும் என்பதற்கு தானே பேசிக் கொண்டு இருக்கிறோம்.

தைரியத்தில் எழுதுகிறார்கள் என்பதை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன். இது தைரியமே இல்லை. தைரியம் என்பது நேர்மையாக இருப்பதற்கு தான் நிறைய தைரியம் வேண்டும். அது வந்து இவங்ககிட்ட யாரிடமும் கிடையாது. அந்த விதத்தில் இதனை தைரியம் என்ற வார்த்தையில் அடையாளப்படுத்துவதே பெரிய தவறு. மாலதி மைத்ரியை ஆதரிப்பவர்களும் இதைத் தான் சொல்கிறார்கள். எதிர்ப்பவர்களும் இதைத் தான் சொல்கிறார்கள். உங்கள் குரலில் எதிர்ப்புக் குரல் இருக்கிறது. இந்த எதிர்ப்புக் குரல் தோனி கூட அதைத் தான் பேசிக் கொண்டு இருக்கிறது. மாலதி மைத்ரி பற்றி பேசவில்லை என்றால் ஒரு நேர்காணலே நிறைவு பெறாதது போல் இன்று இருக்கிறது. இது ரொம்ப வருத்தப்படக் கூடிய விஷயம். இதை தவிர்த்து இன்றைக்கு எழுதிக்கொண்டிருக்கும் பெண்களை இனம் காண வேண்டியதிருக்கிறது. இப்ப இலங்கையில் இருந்து அனார் என்ற கவிஞர் அருமையாக கவிதை எழுதுகிறார். அதாவது பெண் வந்து பாலியல் சுதந்திரம் தெரிவுக்கு சுதந்திரம் இல்லாமல் இருக்கிறாள் என்பது உண்மை தான். அதைப் பேசணும். பாலியல் தெரிவு வேறு. பாலியல் சுதந்திரம் வேறு.

தமிழோவியம் :- பாலியல் சுதந்திரம் என்பது சமுதாய சடங்கு முறைக்கு எதிரான ஒன்றாக அமையாமல், தனி மனிதத்துவம் சார்ந்த தீமையாக மாறுவதை சுதந்திரம், உரிமை என்ற பெயரில் அனுமதிக்க முடியாது என்று லண்டனில் நடந்த பெண்கள் சந்திப்புக் கூட்டத்தில் நீங்கள் பேசி இருக்கிறீர்கள். இதனை கொஞ்சம் விரிவாக, ஆழமாகச் சொல்ல முடியுமா?

பதில் :- கண்டிப்பாக சொல்ல முடியும். இன்றைக்கு நிறைய விஷயங்களில் அடிப்படைப் பிரச்சினைகளுக்கு காரணமாக பாலியல் சிக்கல்களும் இருக்கிறது. ஏன் என்றால் பெண்களுக்கு வந்து சில விஷயங்களை பேசி தெளிவு பெற்றுக் கொள்வதற்கு இடம் இல்லாமல் இருக்கிறது. அது சார்ந்த விஷயங்களை பேசப் போனால் எதிராளி மோசமாக நினைக்கக் கூடிய வாய்ப்பும், இல்லையென்றால் அவள் பேசப் போற இடத்தில் அவளால் ஆக்கிரமிக்கும் வாய்ப்பும் நிகழ்ந்து கொண்டே இருக்கு. காலங்காலமாக பெண்களை வீட்டுக்குள்ளேயே அடக்கி, பத்திரங்கள் கழுவவும், துணி துவைக்கவும் பழக்கப் படுத்திருக்கோம். வேறு சிந்தனை அற்றவளாக பெண் இருந்துக்கிட்டு இருக்கிறாள்.ஆனால் வாழ்க்கை அது இல்லை. எல்லாமே கலந்து இருக்கணும். இது நாள் வரைக்கும் பாத்திரங்கள் கழுவவும், துணி துவைப்பதற்கும் பெண்ணை வைத்திருந்து விட்டு ஒரு காலக் கட்டத்தில் பெண்ணை ஜடப் பொருளாக வைத்திருக்கிறோமோ என்ற எண்ணம் ஒரு ஆணுக்கு வந்து விட்டால், அது வீட்டுக்குள்ள நிறைய சிக்கல்களை உருவாக்கும். அந்தப் பெண்ணுக்குள் நாங்கள் எல்லாவற்றையும் மீட்டு எடுக்க வேண்டியதிருக்கிறது. நான் சொல்வது சமுதாய சடங்கு முறைக்கு எதிரான பாலியல் விஷயங்களை வந்து, நாங்க மீட்க வேண்டியது.

ஒரு விதவையை வந்து திரும்பி திருமணம் செய்து கொள்ள போகிறாள் என்பதை பாலியல் விஷயமாக கருத வேண்டியிருக்கிறது. அதுக்காக பெண்களை சாமியாராக இருக்கச் சொல்லவில்லை. பெண்ணிண் உடல் தேவையைத் தான் எழுதுகிறோம் என்று தானே சொல்றாங்க. இதை எல்லாம் தேவையில்லை என்று சொல்லிவிட்டால், அப்ப பெண் என்ன வெறும் ஜடப் பொருளாகவா இருக்கப் போகிறாள். அப்படி இல்ல. அதை எங்க, எப்படி, எந்த இடத்தில் பேசணும் என்பது கத்திமேல் நடக்கிற விஷயம். அதையும் நாங்கள் செய்ய வேண்டியதிருக்கிறது. அதை எப்போ செய்ய வேண்டிதிருக்கிறது என்றால் சமுதாய சடங்கு முறைக்கு எதிராக ஒரு விஷயமாக மெல்லிசாக நிகழ்த்திக் கொண்டே போவதற்கான கட்டாயம் பெண்ணக்கு இருக்கிறது. ஒழுக்கம் என்பதை ஆணுக்கும், பெண்ணுக்கும் சம இடத்தில் வைக்க வேண்டிய விஷயமாகப் பார்க்குறேன். என் வீட்டு ஆண் தவறு செய்தால், நானும் தவறு செய்வேன் என்று கிளம்புவது ஒரு தீர்வாக அமையாது. நான் ஒரு தவறு செய்துவிட்டு அதனை நியாயப்படுத்தி பேசத் துவங்கி விட்டேன் என்றால் அங்கு தான் தனி மனிதத்துவம் சார்ந்த தீமை என்று சொல்ல வருகிறேன். எனக்குள் இருளும், ஒளியும் இருக்கிறது. இருளுக்குள் போன சந்தர்ப்பங்களை விட்டு விட்டு எந்த இடத்தில் ஒளியைக் கண்டெடுத்தேனோ அதை உங்களிடம் பேசுகிறேன். சில நேரங்களில் இருளுக்குள் போன சந்தர்ப்பங்களை பேச நேர்ந்தால் இருளுக்குள் போய் நீயும் விழக் கூடாது என்ற எண்ணத்தில் தான் பேச வர வேண்டும். இதில் நான் ரொம்பக் கவனமாக இருக்கிறேன். என்னுடைய தவறை நியாயப்படுத்தி, அதனை பொதுமை படுத்தக் கூடாது. பாலியல் விஷயங்கள் ஒரு கத்தி மேல் நடக்கிற விஷயம். அதனை கவனமாக பேச வேண்டும். எழுத வேண்டும். கையாள வேண்டும். நான் சொல்வதை எனது ஆதரவாளர்களும், எதிரானவர்களும் சாதகமாக எடுத்துக் கொள்ளக் கூடிய பதில் எனது கருத்தில் இருக்கும். உடல் தேவையை ஆண் எழுதுகிறானே, வர்ணிக்கிறானே நான் ஏன் எழுதக் கூடாது, வர்ணிக்கக் கூடாது என்று கேள்வியை வைப்பது தனி மனிதத்துவம் சார்ந்த தீமையாக மாறிக் கொண்டே இருக்கிறது. அதனை உரிமை, சுதந்திரம் என்று சொல்லாதீர்கள். பெண்ணாக இருந்து சிகரெட் பிடிக்கிறாள் என்று சொன்னால், பெண்ணாக இருந்து கொண்டு ஏன் சிகரெட் பிடிக்கிறாய் என்று கேட்காமல், சிகரெட் பிடிப்பது தவறு என்று சொல்லுங்கள். பெண்ணாக இருந்து ஏன் சிகரெட் பிடிக்கிறாய் என்று கேட்காதீர்கள். எங்களைப் பொறுத்தவரை சிகரெட் பிடிப்பது இரு பாலருக்கும் பொதுவான தீமையாக நிறுவுகிறோம்.

தமிழோவியம் :-  குட்டி ஜப்பான் என்று சிவகாசி நகர் புகழப்பட்டாலும் இது ஒரு இரண்டாம் நிலை நகரமாகவே இருக்கிறது. இலக்கிய வளர்ச்சியில் பின் தங்கிய இந்த ஊரில் பாரதி இலக்கிய சங்கத்தை வெற்றிகரமாக நடத்தி வருகிறீர்கள். உங்களது பாரதி இலக்கிய சங்கத்தை பற்றி சொல்லுங்களேன்?

பதில் :- 2000ம் ஆண்டில் பாரதி இலக்கிய சங்கத்தை துவக்கினோம். இலக்கியம் சம்மந்தமாக பேசுவதற்கு இப்ப வந்து கூட்டங்கள் பரவாயில்லாமல் இங்க நடக்குது. கந்தகப் பூக்கள் கூட்டம் நடக்குது. கலை இலக்கிய பெருமன்றம் இயங்கத் துவங்கி இருக்கு. முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் அவ்வப் போது கூட்டம் போடுறாங்க.  ஆனால் 2000ம் ஆண்டில் எந்த இலக்கிய சங்கமும் செயல்படாமல் இருந்த நேரம். இலக்கியம் பற்றி பேச ஒரு தளமாக இருக்கட்டுமே என்று தான் பாரதி இலக்கிய சங்கம் ஆரம்பிக்கப்பட்டது. இதில் நான் மட்டுமே உறுப்பினர். நான் மட்டுமே உறுப்பினராக இருப்பதால் பலர் கேள்வி கேட்டு இருக்கிறார்கள். இதில் நான் உறுதியாக இருக்கிறேன். எதையும் ஒரு அதிகார நிறுவனமாக நடத்த வேண்டும் என்ற எண்ணம் எனக்கு துளியும் இல்லை. திலகபாமா நடத்துகிறார் என்பதற்கு பதிலாக பாரதி இலக்கிய சங்கம் நடத்துகிறது என்று இருக்கட்டுமே என்று தான் நினைத்து நடத்தி வருகிறோம். எனக்கு எப்போ வாய்ப்பு கிடைக்கும் பொழுது சங்கத்தை நடத்தலாம். முடியாத பட்சத்தில் தூக்கி போட்டுட்டு வேலையை பார்ப்போம் என்று தான் இருக்கிறேன். வீம்பு பண்ணி எதையும் பண்ணக் கூடாது என்ற எண்ணத்தில் அதனை ஒரு அதிகார நிறுவனமாக உருவாக்காமல் வைத்துள்ளேன்.

தமிழோவியம் :- உங்களின் பாரதி இலக்கிய சங்கத்தின் சார்பில் நடக்கின்ற இலக்கிய சந்திப்புக் கூட்டத்தில் காரசாரமான விவாதங்கள் நடக்கும் என்று கேள்விப் பட்டிருக்கிறோம். அதில் மறக்க முடியாத, முக்கியமான விவாதங்கள் எதையாவது சொல்ல முடியுமா?

பதில் :- கண்டிப்பாக பதிவு செய்ய வேண்டிய சம்பவங்கள் இருக்கின்றன. நாச்சியார் மடம் விவகாரம் என்று இலக்கியத்தில் ஒரு பிரச்சினை உண்டானது. அதனை அனைவரும் அறிவோம். சொல்புதிது என்ற இதழில் சுந்தரராமசாமி கதை பற்றி வந்த விமர்சனம். இது சென்னையில் பிரச்சினையாக உருவாகுவதற்கு முன்னால், சிவகாசியில் பாரதி இலக்கிய சங்கம் சார்பில் நடந்த விவாதத்தில் சொல்புதிது விமர்சனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. வந்திருந்த அனைத்து விமர்சகர்களும், படைப்பாளிகளும் அந்தப் படைப்பை எப்படி பார்த்திருந்தார்கள் என்றால் தனி மனிதனுக்கு எதிரானது எனனன்ற தோனியில் பார்க்காமல், ஒரு படைப்பு ஏன் தோற்றுப் போய் இருக்கு என்ற தோனியில் விமர்சனத்தை வைத்தார்கள். ஆனால் இதே விவாதம் சென்னையில் சொல்புதிதும், காலச்சுவடும் சார்பில் நடைபெற்ற பொழுது அது ஒரு வித அரசியலாக மாறி விட்டது. ஆனால் ஒரு படைப்பு சார்ந்த விமர்சனமாக சிவகாசியில் தொடங்கி வைத்ததில் எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது. அதாவது நாங்கள் எந்தவித அரசியலுக்கும் ஊடாக இல்லாமல் படைப்பு, படைப்பை விமர்சனம் செய்யக் கூடிய ஆட்கள் இங்கே இருக்கிறார்கள். எங்கள் விமர்சனத்திற்கு ஜெயமோகன் எந்த மறுப்பே தெரிவிக்காமல் உங்கள் விமர்சனம் கண்டேன் நன்றினு பதில் அனுப்பி இருந்தார்.

தமிழோவியம் :-   கடந்த ஆண்டு நீங்கள் முன் நின்று ஏற்பாடு செய்து நடத்திய கானல் காடுகள் என்ற இலக்கிய கூட்டத்தை பற்றி, அதில் கலந்து கொண்ட கவிஞர் மதுமிதா உட்பட பலர் உங்களை புகழ்ந்திருக்கிறார்கள். இம்மாதிரியான நிகழ்ச்சி நடத்த வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு எப்படி வந்தது?

பதில் :- நான் இந்த முறை ஜரோப்பா நாடுகளுக்குப் போன பொழுது எல்லா இடத்திலும் கானல் காடுகள் நிகழ்ச்சிகளைப் பற்றி அதிகமாக பாராட்டி விசாரித்தார்கள். அந்த நிகழ்ச்சியின் தீவிரம் அப்பொழுது தான் புரிந்தது. பரவாயில்லை அந்த நிகழ்ச்சி இவ்வளவு தூரம் போய்ச் சேர்ந்திருக்கிறது என்று. உண்மையில் அந்த இரண்டு நாள் பொழுதும் ரொம்ப அருமையாக இருந்தது. வடிவமைக்கிற கூட்டம் ஒன்று. பேச்சைக் கேட்கின்ற கூட்டம் ஒன்று. அதன் பின் மற்ற பொழுதுகள் இருக்கிறது இல்ல. அங்கு தொலைபேசி கிடையாது, தொலைக்காட்சி கிடையாது, யாரும், யாரோடும் செல்போனில் பேச முடியாது. வேலை நெருக்கடி கிடையாது. எந்த வேலைப் பழுவும் இல்லாமல் எல்லோரும் போட்டதை போட்டபடி உட்கார்ந்து முழு நேரமும் இலக்கியத்தைப் பற்றி, கவிதையைப் பற்றி விமர்சனம் செய்யக் கூடிய, பகிர்ந்து கொள்ளக் கூடிய ஆட்களாக இருந்தார்கள்.

கூட்டத்தை தவிர தனிப்பட்ட முறையில் ஒவ்வொருவரும் பேசிக் கொண்ட விதங்கள் வித்தியாசமாக இருந்தது. வந்த எல்லோரும் தன் இடத்தை விட்டு கீழே இறங்கி பேசினார்கள். இது ரொம்ப நிறைவாக இருந்தது. அதுக்கு அந்தச் சு10ழலும் ஒரு காரணம் என்று நான் நினைக்கிறேன். கடைசியில போகும் பொழுது இந்த இயற்கைக்கு முன்னாடி நாங்கள் எல்லாம் ஒன்னுமே இல்லைனு எல்லாரும் சொன்னாங்க. இதைச் சொன்னது இன்னைக்கு மிகப் பெரிய படைப்பாளிகளாக இலக்கிய உலகம் பார்த்துக் கொண்டு இருக்கற ஆட்கள். இது ரொம்ப சந்தோஷமாக இருந்தது. நாம எவ்வளவோ உயரத்திற்குப் போனாலும், ஒரு இடத்தில் திரும்ப வந்து முதலில் இருந்த, ஆரம்பிக்கிற மனநிலை இருக்கிறதுல. அதை அந்த இடத்தில் உருவாக்க முடிந்தது.

இன்னைக்கு இரண்டு நாள், மூன்று நாள் இலக்கிய சந்திப்புகள் நிகழ்கிறது. அந்த சந்திப்புக் கூட்டங்களில் எல்லாம் மாலையில் எவ்வளவு பெரிய கலாட்டாவில் முடியும் என்பது பொதுவாக எல்லாருக்கும் தெரியும். வெறும் தண்ணி போடுவதற்கு என்றே இலக்கிய சந்திப்புகள் எல்லாம் இன்று நடக்கிறது. கானல்காடுகள் இரண்டு நாள்கள் நிகழ்ச்சியில் சிகரெட் குடிக்க முடியாத சு10ழல்களைத் தான் உருவாக்கி வைத்திருந்தோம். முதலில் திலகபாமா இவ்வளவு கட்டுப்பாடு தேவையா என்று என்னைத் திட்டிக்கிட்டே இருந்தாங்க. ஆனால் இரண்டு நாள் நிகழ்ச்சி முடிந்து போகும் பொழுது எல்லாரும் சொல்லிக்கிட்டே போனாங்க. எல்லாரும் ஒரு சுய பிரக்ஞையோடு பேசுகிற வார்த்தையாக இருந்தது. இது எல்லாருக்கும் ரொம்ப சந்தோஷத்தை கொடுத்தது. இந்த மாதிரி ஒரு இலக்கிய சந்திப்பு நடக்கிறது அபூர்வமானதாகத் தான் இருக்கிறது என நான் நினைக்கிறேன்.

சமீபத்தில் கோவில்பட்டியில் ஒரு இலக்கிய கூட்டத்திற்கு நானும், லஷ;மி அம்மாளும் போய் இருந்தோம். ஒரு சின்ன அறை, அந்த அறையில் மது பாட்டிலை துணியை மூடி ஒவ்வொருத்தராக பாஸ் செய்து கொண்டு இருந்தார்கள். ஒரு பத்து நிமிடத்திற்கு மேல் அந்த அறையில் என்னால் இருக்க முடியவில்லை. கிளம்பி வந்து விட்டோம். தண்ணி போட்டுட்டு அவன் என்ன சுயபிரiஐயோடயா பேசப் போறான். இந்த மாதிரி தான் இன்னைக்கு பெரும்பாலான கூட்டங்கள் நடக்குது.    

தமிழோவியம் :- படைப்பாளிக்கும், வாசகனுக்கும் உள்ள உறவை ஆக்கப்பூர்வமாக மேம்படுத்தும் வேலைகள் தமிழ்நாட்டில் நடக்கிறதா?

பதில் :- வாசகனை விட்டு கொஞ்சம் எட்டித் தான் நின்னுட்டு இருக்கோம். இன்னிக்கி வணிகமயமாக்கப்படும் விஷயங்கள் எல்லாம் வாசகனை போய் எளிதில் சேர்ந்து விடுகிறது. வாசகனை இன்னைக்கு ஒரு கஸ்டமராக பார்க்கின்ற மனநிலை தான் இருக்கு. அது காலச்சுவடாக இருந்தாலும் சரி, ஆனந்த விகடனாக இருந்தாலும் சரி. காலச்சுவடுக்கு வந்து காஸ்ட்லி கஸ்டமர்ஸ். எல்லாம் யூரோவுலயும், டாலர்லயும் பே பண்றாங்க அவ்வளவு தான். பத்திரிக்கை உலகம் தூர நின்னு வாசகனுக்கு ஒரு மிரட்சியைக் கொடுத்து, தன்னை அவன் ஒரு பிரமிப்பாக பார்க்கச் செய்யும் பணியை பத்திரிக்கைகள் செய்கின்றன. ஒரு நாள் ஒரு ரயில் பயணத்தில் ஒரு கணவனும், மனைவியும் என்னுடைய புத்தகத்தை இரவு முழுவதும் வாசித்து விட்டு அவர்களாகவே புத்தகத்தில் உள்ள ஒவ்வொரு விஷயத்திற்கும் ஒரு கதை சொல்லிக் கொண்டு வந்தார்கள். நான் நினைச்சு பார்க்காத பார்வையை அவர்கள் நினைத்து சொன்னதை பார்க்கும் பொழுது எனக்கு சந்தோஷமாக இருந்தது. அவங்க ஒன்னும் பெரிய வாசகர்கள் இல்லை. இயல்பாக வாழும் மனிதர்களுக்குள்ளும் ஒரு வாசகன் இருக்கிறான் இல்லையா. ஒரு படைப்பாளி வாசகனை போய் சேர்கின்ற வேலையை செய்ய முடியவில்லை. செய்யவும் முடியாது. அதை பதிப்பகத்தார் தான் அதைச் செய்யனும். படைப்பாளி எழுதுவதோடு நின்று விடுகிறோம். வாசகன் தான் தேடிப் படிக்கும் நிலை இங்க இருக்கு. அதே சமயத்துல வாசகனை விட்டு தூரமாக போய் விட்டதாகவும் எனக்குத் சொல்ல முடியாது. சில சமயங்களில் வாசகனை விட முன்னோக்கி செல்ல வேண்டிய நிலை படைப்பாளிக்கு இருக்கிறது. பாரதியார் ஆடுவோமே, பள்ளிப் பாடுவோமே, ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம் என்று பாடுவோமே என்று அன்று பாடினார். அவர் பாடியதைக் கேட்டு அன்றைய மனிதர்கள் பாரதியாரைப் பார்த்து சிரித்திருப்பார்கள். அவரை கிறுக்கன், பைத்தியம் என்று கூட சொல்லி இருப்பார்கள். எப்படி நமக்கு சுதந்திரம் கிடைக்கும் என்று நினைத்திருப்பார்கள். ஆனால் இன்று அவர் எப்படி முன்னோக்கி பார்க்கக் கூடியவராக இருந்திருக்கிறார் என நாம் நினைத்துப் பார்க்கிறோம். படைப்பாளி முன்னோக்கி பார்க்கக் கூடியவனாக இருக்கும் பொழுது கொஞ்சம் வாசகனை விட்டு தூரமாகத் தான் நின்னுக்கிட்டு இருக்குறான். இது ஒரு நடைமுறைச் சிக்கல். இது இருந்து கொண்டே தான் இருக்கும் என நான் நினைக்கிறேன்.

தமிழோவியம் :- பொதுவாக ஆண்கள் பேசுகின்ற பெண் சுதந்திரம், பெண் விடுதலை எல்லாமே ஊருக்குத் தான் உபதேசம் என்ற அளவிலேயே இருக்கிறது என்று விமர்சனம் செய்யப்படுகிறது. இது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

பதில் :- அப்படித் தான் இருக்கு. இன்றைக்கு பெண்ணியம் பேசுகின்ற எல்லாப் படைப்பாளிகளையும் நெருங்கிப் போய் பார்த்துவிட்டு வந்துட்டேன். எல்லாருடைய வீட்டுலயும் பெரிய தகராறாக இருக்கு(சிரிக்கிறார்). நிறைய எழுத்தாளர்கள் வீட்டுக்கு ஒரு கடிதம் போடுவதற்கோ, ஒரு போன் செய்வதற்கோ கொஞ்சம் யோசிக்க வேண்டியதிருக்கு. சில இலக்கியவாதிகள், வீட்டுக்கு கடிதம் போட வேண்டாம். அலுவலகத்திற்கு போடுங்கள் என்று சொல்லி இருக்கிறார்கள். அப்ப நான் கொஞ்சம் யோசிக்க வேண்டியதிருக்கு. இது என்னடா வம்புனு தோன்றும். சிலர் வீட்டுக்கு வாங்கனு சந்தோஷமாக கூப்பிடுவாங்க. அவங்க வீட்டு பெண்களை எந்த அளவுக்கு சுதந்திரமாக வைத்திருக்காங்கனு தெரியாது. நான் அந்தப் பெண்களை குறை சொல்ல மாட்டேன். பெண்கள் வந்து ஆண்களை நம்பி வாழ்கிற மனநிலையில் தான் இருக்காங்க. அவங்களுக்கு பயம் வருகிறது. தங்களது வாழ்க்கை எந்த இடத்திலாவது பறி போய் விடுமோ என, ஆணுக்கும், பெண்ணுக்குமான நட்பை, உடலை கடந்து பார்க்கும் மனோபாவத்திற்கு நாம் இன்னும் பழக்கப்படவில்லை. உடலை கடந்து பார்க்கின்ற மனநிலை எனக்கு இருந்தாலும், அதை பார்க்கின்ற சாதாரண பெண்ணிற்கு பயம் வரும். அப்போ நாம அந்த இடத்தில இருந்து விலகி நிற்க வேண்டியதிருக்கு. அந்தப் பயத்தைப் போக்கும் வகையில் அந்த இலக்கியவாதியும் மனைவியிடம் செயல்பட்டு இருக்கணும். அது இங்க நடக்கிறதில்லை.

ஒரு படைப்பாளி வீட்டில் நான் கொஞ்சம் நேரம் இருந்தேன். அந்த நேரத்தில் இருந்த இருப்பில் என்னுடைய கவனிப்புகள் சரியாகவும் இருக்கலாம், தவறாகவும் இருக்கலாம். முமுமையாக நான் சொல்வது எல்லாம் சரினு வாதிட மாட்டேன். நாங்கள் நண்பர்கள் எல்லாம் அந்தப் படைப்பாளியின் வீட்டில் இருந்த பொழுது அவருடைய மனைவி சமைத்து, சமைத்து கொண்டு வந்து கொடுத்துக் கொண்டிருந்தார். நான் பார்த்துக் கொண்டே இருந்தேன்.எல்லாமே எனக்கு கேள்விக் குறியாகதெரிஞ்சுச்சு. தலித் இலக்கியம் பேசுகின்ற எத்தனை இலக்கியவாதிகள் தங்கள் வீட்டு கழிப்பறையை தாங்களே சுத்தம் செய்யுறாங்க? கேள்வி இருக்கிறது இல்லையா? நிறைய அடிப்படை விஷயங்களை மாற்ற வேண்டி இருக்கிறது. எல்லாருமே தனித் தனியாக ஒரு விஷயத்தை சொல்லி, ஒரு பேனர் போட்டு அதுக்கு பின்னாடி நிற்கப் பார்க்குறாங்க. இல்லாவிட்டால் அதை போட்டு அதுக்கு மேலே நிற்கப் பார்க்குறாங்க. அது தான் நடக்குது. ரொம்ப சிலர் தான் எழுதிக்கிட்டு இருக்காங்க.

தமிழோவியம் :- கவிஞர் திலகபாமா, லதா ராமகிருஷ;ணன் போன்ற பெண் படைப்பாளிகளுக்கு எழுத்துலகில் போதிய முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை என்று உங்கள் அபிமானிகள் கருத்து சொல்கிறார்கள். இது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

பதில் :- கவனிக்கப்படவில்லை என்ற விஷயத்தில் பெண் மொழி விஷயங்கள் எழுதுகின்ற பெண்கள் தான் பார்க்க பட்டாங்க என்பது ஒரு பக்கம் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கு. இதை நாங்கள் மறுக்க முடியாது தான். அதே சமயத்தில் திலகபாமாவுக்கு ஒரு அடையாளத்தை கொடுக்க முடியுமா என்ற கேள்வியை நான் எனக்கு எழுப்பிப் பார்க்கிறேன். அப்படி ஒரு அடையாளத்திற்குள் சிக்குவேனா என்பது எனக்கே சந்தேகம் தான். பெண்ணியம் பற்றி நான் எழுதுகிறேனா என்று கேள்வி எழுப்பினால், நான் எழுதவில்லை என்று தான் சொல்வேன்.

தமிழோவியம் :- சரி மேடம், பெண் படைப்பாளிகளுக்கு, எழுத்தாளர்களுக்கு உரிய அங்கீகாரம் இலக்கிய உலகில் வழங்கப்படுகிறதா?

பதில் :- இல்லை மறுக்கப்பட்டுக் கொண்டு தான் இருக்கு.ஏன் என்றால் விமர்சனங்கள் எல்லாமே ஆண்களால் வைக்கப்பட்டு இருக்கு. நல்ல எழுத்து எது என்று தீர்மானிப்பவர்கள் ஆண்களாக இருக்காங்க. இப்ப எனக்குள்ள ஒரு நல்ல எழுத்து எதுனு ஒரு தீர்மானம் இருக்குதுனா, அது கூட ஒரு ஆண் வழியாக கொடுக்கப்பட்டது தான். சாதாரண ஒரு வாசகியாக நான் வாசிக்கும் பொழுது அது எனக்குள்ள என்னென்ன உணர்வுகளை கிளர்கிறது என்பதை வைத்து நான் தீர்மானிக்க வேண்டும். இல்ல நவீன கதையாடல்களில் இது, இது எல்லாம் இருந்தால் தான் நவீனம், அதி நவீனம் என்று இவங்க வைத்திருக்கிற அளவுகோலை கையில் எடுத்தேனு வைச்சுக்கோங்க, நானும் ஆணிண் சிந்தனைக்கு உள்ளே தான் போவேன். இதை எல்லாம் தூக்கிப் போட்டுட்டு எந்த வித சாயமும் இல்லாமல் புதிதாக வாசித்து தீர்மானம் செய்ய வேண்டி இருக்கு. ஆனால் அதை எத்தனை பேர் ஏற்றுக் கொள்வார்கள் என்ற கேள்வியும் இருக்கு.

தமிழோவியம் :- சாதியும், மதமும் பெண்ணடிமைக்கு மூல காரணம் என்று இங்கு சொல்லப்படுகிறது. இது குறித்து உங்களின் கருத்து என்ன?

பதில் :- அப்ப மதத்தை கடந்து நிற்கிறவங்க எல்லாம் பெண்ணடிமைத் தனம் இல்லாமல் இருக்குறாங்களா? எத்தனை வீட்ல கலப்புத் திருமணம் நடந்து எந்தப் பக்கமும் இல்லாத ஒரு தலைமுறை உருவாகிடுச்சு. வேறு, வேறு ஜாதியில திருமணம் செய்து குழந்தை பிறந்த குடும்பத்தில் பெண்ணடிமைத் தனம் இல்லாமலா இருக்கு? இல்ல நான் கேட்கிறேன். மதங்கள் எங்களை அடிமைப்படுத்துனு சொல்லி, இந்து மதத்தில் இருந்து கிறிஸ்தவ மதத்துக்குப் போனா, அங்கயும் அது தான் நடக்குது. ஒரு கிறிஸ்தவ பெண், கிறிஸ்தவ மதத்தில் பெண் போப்பாண்டவராக வர முடியுமா? உத்தரவாதம் இருக்கா? முஸ்லீம் பெண்கள் இன்னும் ரொம்ப இருட்டுக்குள் இருக்காங்க. அப்ப பெண்களை ஜாதி தான் சிறைப்படுத்துதா? மதம் தான் சிறைப்படுத்துதா? இல்லை நாடு தான் சிறைப்படுத்துதானு தெரியல. லண்டனில் போய் பார்த்தாலும் அங்கயும் இது தான் நடக்குது. பிரஞ்சு பெண் கவிஞர்களை பார்த்தால், அவங்களும் மண முறிவுக்கு ஆளாகி தற்கொலைக்கு உள்ளான பெண் கவிஞர்கள் நிறைய இருக்காங்க. ஜாதியும், மதமும் பெண்ணடிமைக்கு காரணம் என்று சொல்வது பொய் காரணங்கள். ஜாதியும், மதமும் அழியாதுனு தெரிஞ்சுக்கிட்டு, அதை சொல்லி தப்பிக்கப் பாக்குறாங்க.

தமிழோவியம் :- நீங்கள் ஐரோப்பா நாடுகள் உட்பட பல நாடுகளுக்கு போய் வந்து இருக்குறீங்க. அங்க உள்ள சு10ழலுக்கும், இங்க உள்ள சு10ழலுக்கும் உள்ள வித்தியாசத்தை சொல்ல முடியுமா? எந்தச் சு10ழல் உங்களுக்கு சிறந்ததாக தெரிகிறது?

பதில் :- நான் இந்த மண்ணோடு தொடர்பு உடையவள். என்னைக் கொண்டு எங்கு போட்டாலும், இங்க இருக்கும் சந்தோஷத்தை விட்டுக் கொடுக்க முடியாது. என்னைப் பொறுத்த வரை இந்த வாழ்க்கை முறை, தட்ப வெப்ப நிலை, எங்களுடைய அரசியல் அமைப்பு, எல்லாமே மகிழ்ச்சியாக வாழ்வதற்கு ஆதாரமாக இருக்கு. நாம் சந்தோஷமாக இருந்து கொண்டு இருக்கிறோம். நான் வெளிநாடுகளில் பார்த்த வரைக்கும் நாங்கள் ஒருத்தருக்கு ஒருத்தர் தலையிடாமல் இருக்கிறோம் என அவர்கள் சொல்வதை கேட்க வேண்டுமானால் நமக்கு சந்தோஷமாக இருக்கலாம். ஆனால் தலையிடாமல் இருக்கின்ற நேரத்திலேயே அவர்கள் ஒருவருக்கு ஒருவர் நம்பிக்கை இல்லாமல்  இருக்குறாங்க. நமது குடும்ப அமைப்பு வந்து ஒருவருக்கொருவர் நம்பிக்கையை கொடுக்கின்ற அமைப்பு. இந்த நம்பிக்கையும், உண்மைகளும் மனுஷன் வாழ்க்கைக்குத் தேவை. அதே மாதிரி அங்க கடுமையான குளிர், நீண்ட இரவுகள் எல்லாம் வந்து அவங்களுக்குள்ள இருக்கிற, மனித வக்கிரங்களை எழுப்பக் கூடிய விஷயமாக இருக்கு. இங்க இருக்கிற தட்பவெப்ப நிலையும் சரி, சமூக அமைப்பும் சரி மனித வக்கிரங்களை எழுப்ப விடாத விஷயங்களை நிறைய வைத்திருக்கிறோம். அவங்களுடைய கலை வடிவங்கள் எல்லாமே வக்கிரங்களை வடிய விடுவதற்கான விஷயங்களையும் சேர்த்தே செய்கிறது. அதனால தான் அங்க இருக்கக் கூடிய விஷயங்களை அப்படியே இறக்காதீங்கன்னு சொல்கிறோம். ஏன்ன நம்ம சமூக வாழ்க்கை வேற. அங்க அவனுக்கு பாலியல் தொழில் கண்டிப்பாக தேவைப்படுது. மதுவும் அவனுக்கு அத்தியாவசியத் தேவையா இருக்குது. அதே நேரத்துல அவங்க குடியில முழ்கிப் போறதும் இல்ல. அங்கயும் குடித்து விட்டு ரோட்டுல கிடந்தால் அதையும் அவங்க அவமரியாதையாகத் தான் பார்க்குறாங்க. இப்படி ஒப்பிட்டு hPதியில் நாம சந்தோஷமாக வாழ்கிறோம். 
 

தமிழோவியம் :- நீங்கள் படித்து மகிழ்ந்த, ஆச்சர்யமடைந்த, இவர் நல்லா வருவார் என்று நீங்கள் யாரை சொல்வீர்கள்?

பதில் :- எனக்கு நிறைய பேர் மேல நம்பிக்கை இருக்கு. அனார் என்ற பெண் கவிஞரின் கவிதைகள், வைகைச் செல்வி கவிதைகள் வந்து சுற்றுப் புறச் சுழலை சார்ந்து இருக்கும். இப்ப எழுதுகின்ற இரண்டு, மூன்று கவிதைகளில் தளம் மாறி இருந்தது. அது வந்து எனக்கு ரொம்ப நம்பிக்கையை கொடுத்தது.எல்லாம் நகர்ந்து கொண்டே போகக் கூடிய பாதைகள் தானே இது. எந்த இடத்திலயும் வளர்ச்சி முடிந்து விட்டதுனு சொல்ல முடியாது. கனடாவில் இருந்து திருமாவளவன் என்பவருடைய கவிதை நல்லா இருக்கு. நான் சிலாகித்து வாசித்திருக்கிறேன். ஜெயபாலனோட ஆரம்ப கால கவிதைகள். ஒரு ஆளைச் சொல்லும் பொழுது அவங்களோட எல்லா கவிதைகளையும் சொல்லி விட முடியாது. அதே மாதிரி பாரதி இலக்கிய சங்கத்தில் இருந்து வருடந்தோறும் சிறந்த கவிதை தொகுப்புக்கு பரிசு கொடுக்கிறோம். ஏ.ராஜலட்சுமி என்பவர் பாண்டிச்சேரியில் இருந்து எழுதுகிறார். இவர் எழுதுவதை எல்லாம் பெண் மொழி தளத்தில் பார்க்க வேண்டியதிருக்கு. ஏன் என்றால் இதுவரை ஆண்கள் சொல்லாத விஷயங்களை இந்த பெண்கள் சொல்றாங்க. அது வந்து ஆண்களுக்கு சாதகமாக இல்லாமல் இருக்கு. அதனால அது பேசப்படுவதில்லை. சென்ற ஆண்டு தேவேந்திர பூபதி என்பவருடைய கவிதை தொகுப்புக்கு பரிசு கொடு:த்தோம். இந்தத் தொகுப்பு நம்பிக்கையும். சந்தோஷத்தையும் கொடுத்தது.

தமிழோவியம் :- கவிதைக்கும், அரசியலுக்கும் சம்மந்தம் இருக்கிறது என்பதை நம்புகிறீர்களா?

பதில் :- கண்டிப்பாக சம்மந்தம் இருக்கு. கவிதையில் இல்லாத அரசியலே கிடையாது. மாலதி மைத்ரி வந்து என்னுடைய கவிதைகளில் மட்டும் தான் அரசியல் இருக்குனு சொல்றாங்க. அப்படி இல்ல. எல்லா கவிதையிலும் ஒரு வகை அரசியல் ஊஞ்சலாடிக்கிட்டுத் தான் இருக்கு. ஒரு கவிதையில் ஒரு பெண் எழுதியிருக்காங்க

யுத்தகால இரவுகளின்
நெருக்குதல்கள்
என் - குழந்தைகளை 
வளர்ந்தவர்களாக்கி
விடும்.

அந்தப் பெண் வந்து குழந்தையை பற்றித் தான் யோசித்திருக்காங்க. ஆனால் அதுக்குள் எப்படி அரசியல் இல்லாமல் இருக்கும். யுத்தத்தை பற்றி பேசி இருக்குது இல்லையா. பெண்கள் வந்து குழந்தைகளையும், வீட்டுக்காரர் பற்றி கவிதை எழுதினால் அதில் அரசியல் கலக்க முடியும். ஆனால் ஆண்கள் அரசியல் எழுதினால் வீடே இல்லாமல் எழுதுவாங்க. வீட்டை அவுங்க தன்னோட வார்த்தைகளில் சேர்ப்பதே இல்லை. என் கற்பப்பையை முன்நிறுத்தியே எப்பவும் என்னை ஜெயித்துக்கொண்டு இருக்கிறீர்கள் என்று நான் சொல்வது வந்து, வெறுமானே என்னோட வாழ்க்கை இல்லை. அதுக்குள்ள வந்து ஆணுக்கும், பெண்ணுக்குமான ஆதிக்கப் போருக்கான அரசியல் இருக்கு. இப்படி பார்த்தால் எல்லாக் கவிதையிலும் அரசியல் இருக்கத் தான் செய்யுது.

தமிழோவியம் :-  ஒரு விமர்சகராக, கட்டுரையாளராக, மனுஷpயாக, கவிதாயினியாக, குடும்பத் தலைவியாக உலகில் வாழ் தமிழர்களுக்கு நீங்கள் தமிழோவியம் மூலம் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

பதில் :- நான் திலகபாமா என்ற மனுஷியாக இல்லாமல் இலக்கியவாதியாகத் தான் அறிமுகம் ஆகிறோம். இலக்கியத்தை தொட்டுத் தான் சில விஷயங்களை சொல்லலாம். இலக்கியவாதிகள் நிறைய விஷயத்தை முன்னோக்கிப் பார்ப்பதாக நம்புகிறோம். ஆனால் இலக்கியவாதிகள் நிறையப் பேரை பார்க்கும் பொழுது ஏமாற்றமா இருக்கு. இலக்கியவாதிகள் போலிகளாக இல்லாமல் உண்மைகளை எடுத்துப் பேசுகிற ஆட்களாகவும், அந்த உண்மைகள் மூலம் கலைகளை கண்டு எடுக்குற ஆட்களாகவும் மாறணும். எங்களுக்குள்ள நிறுவப் பார்க்கறதுல ஒன்னுமே இல்ல. நான் வந்து ஒரு பெண்ணோட சுதந்திரத்தை நிறுவ பார்க்குறேன் என்றால் அந்த சுதந்திரம் கிடைக்கும் பட்சத்தில் திலகபாமா காணாமல் போய் விடுவாள். அடுத்த கட்டத்தை நோக்கிப் போகணும். ஒவ்வொரு படைப்பாளியும் தன்னை உருவாக்குதலுக்கும், அழிப்பதற்கும் ஒப்புக் கொண்டால் போலித்தனம் இல்லாமல் இருக்கும். முதலில் அதே தகுதியோடு என்னை நான் வைத்துக் கொள்ள பார்த்துக் கொண்டே இருக்கிறேன். இலக்கியம் தான் சிந்தனையை வழி வகுக்கிறது. அந்தச் சிந்தனை வழியாகத் தான் எங்களோட வாழ்க்கை, செயல், அரசியல் என எல்லாமே வடிவமைக்கப்படுகிறது. ஒழுங்கீனமாக இருப்பது படைப்பாளிக்கு அழகல்ல என்று நான் நினைக்கிறேன்.ஆனால் ஒழுங்கீனமாக இருப்பது தான் படைப்பாளிகளுக்கு அடையாளமாக நிறைய பேர் நிறுவிக் கொண்டு இருக்குறாங்க. அதைக் கொஞ்சம் கவனித்தால் எங்களது கலையும், கலைப் படைப்பும் மனுஷனுக்கான முழுமையான சாதனமாக பயன்படும். வாழ்த்துக்கள்.

புகைப்படம் : தமயந்தி

| | | | |
oooOooo
திருமலை கோளுந்து அவர்களின் இதர படைப்புகள்.   பேட்டி பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2006 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |