ஜூலை 8 2004
தராசு
வேர்கள்
பருந்துப் பார்வை
காந்தீய விழுமியங்கள்
திரையோவியம்
வானவில்
மேட்ச் பிக்சிங்
முத்தொள்ளாயிரம்
பெண்ணோவியம்
க. கண்டுக்கொண்டேன்
உங்க. சில புதிர்கள்
கடிதங்கள்
 
  முதல் பக்கம்
தொடர்கள்
- சத்யராஜ்குமார்
 • கங்கை இல்லாத காசி
 • - பாஸ்டன் பாலாஜி
 • வார்த்தையல்ல, வாக்கியம்
 • - என். சொக்கன்
 • என்னை எழுதியவர்கள்
 • - சத்யராஜ்குமார்
 • சுய சாசனம்
 • - பாஸ்டன் பாலாஜி
 • கோடிட்ட இடங்கள்
 • - சித்ரன்
 • களம்
 • - நாகூர் ரூமி
  யுனிகோடில் தேடல்
  சென்ற இதழ்கள்
  பருந்துப் பார்வை : நமக்கும் வரும் முதுமை...
  - மதுரபாரதி
  | Printable version |

  நெடுந்தூரப் பயணத்தின்போது அரைத்தூக்கத்தில் பார்த்த ஒரு திரைப்படத்தில் கவுண்டமணி தந்தையும் மகனுமாக வருவார். அப்பா கவுண்டமணி மகன் கவுண்டமணியின் மனைவியை விரசமாகப் பார்ப்பதும் அதற்குச் சற்றும் மட்டு மரியாதையற்ற வார்த்தைகளால் பிள்ளை அப்பாவை ஏசுவதும் எனக்குக் காதுகொடுத்துக் கேட்க முடியவில்லை. நகைச்சுவை என்றால் முதியோரை "ஏ பெரிசு" என்று கூப்பிடுவதும், நண்பர்களை "போடா நாயே" என்று சொல்வதும்தான் என்பதாக சினிமா தொடங்கிவைத்த குரூர வழக்கம் என்னைச் சுற்றிலும் நிஜவாழ்விலும் புழக்கத்துக்கு வந்துவிட்டதை ஏராளமான சோகத்தோடு பார்க்கிறேன்.

  'மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம்' என்று எல்லோருமே நம்பவேண்டும் என நான் நினைப்பதற்குக் காரணம் நானும் மூத்தோர் பட்டியலில் விரைந்து நுழைந்துகொண்டிருக்கிறேன் என்பது மட்டுமல்ல. குறைந்த பட்சம் மூத்தோரையே விஷம் என்று நினைக்காமல் இருக்கவேண்டுமே என்ற கரிசனத்தால். எண்பதைத் தொட்டுக்கொண்டிருக்கும் என் தந்தையார் 'முதியோர் சேவை சங்கம்' என்று ஓர் அமைப்பை நடத்திவருகிறார். கால் மைல் தூரத்தை அரைமணி நேரத்தில் நடக்கும் கிழவர்கள் அங்கே வியாழன் தோறும் கூடி உடல்நலம், மருத்துவம், ஆன்மிகம் என்று தமக்குத் தெரிந்தவற்றை விவாதிப்பார்கள். அதில் ஹியரிங் எய்டு மாட்டிய ஒருவர் ஏதாவது ஒரு தலைப்பில் அரை குயர் தாளில் குறிப்புகள் எடுத்துக்கொண்டு வந்து வேறு யாருக்குமே காது கேட்காது என்கிற பாவனையில் எட்டு ஊருக்குக் கேட்கப் பேசுவார். இவ்வளவு சிரமப்பட்டுத் தயாரித்து வந்து பேசுகிறீர்களே என்றால் 'எதிர்காலத்தில்' மேடைப் பேச்சாளராக வேண்டும் என்கிற எண்ணம் இருக்கிறதாம் அவருக்கு.

  இராணுவத்திலிருந்து ஓய்வுபெற்ற ஒருவர் இருந்தார். மிகவும் சுறுசுறுப்பு. நான் அவரைச் சந்திக்கும்போது ஐம்பது வயதிருக்கும் என்று நினைத்தேன். ஆனால் எழுபதைத் தாண்டிவிட்டதாம். தோட்டவேலை செய்வார். வீட்டைப் பளிச்சென்று வைத்துக்கொள்வார். எதைச் செய்தாலும் அதைப்பற்றி எல்லாவற்றையும் படித்துவிட்டுச் செம்மையாகச் செய்வார். இவர் வைத்தியத்துக்குப் போனால் டாக்டருக்கு நடுக்கம். டாக்டர் ஏதாவது தப்பாகச் சொன்னால் வறுத்து எடுத்துவிடுவார்.

  இவர் ஊரில் இல்லாதபோது ஒரு திருடன் பூட்டை உடைத்துப் புகுந்தான். ஒன்றும் கிடைக்கவில்லை. திரும்பி வந்தார். மிலிட்டரிக்காரர் ஆயிற்றே, போலிஸ் திருடனைப் பிடித்து இவருடைய வீட்டுக்கு அழைத்து வந்தார்கள். "வாப்பா, உட்கார். காப்பி சாப்பிடுகிறாயா?" என்றார் இவர். "தெரியாமச் செஞ்சுட்டேன் சாமி, மன்னிச்சுக்குங்க" என்றான் பிடிபட்டவன். "அப்படியெல்லாம் சொல்லாதே, நல்லா யோசிச்சுத்தான் திருடப் புறப்பட்டிருக்கே. நான் வீட்டிலே எதையும் வைக்கறதில்லே. சாரி. உன்னாலே நாலைஞ்சு பூட்டு நஷ்டம்" என்று அவர் சொன்னதும் திருடன் வெலவெலத்துப் போனானாம். போலீஸ்காரருக்கு ஒரே வியப்பு.

  சென்ற மாதம் திருநெல்வேலியருகே ஒரு கிராமத்துக்குப் போயிருந்தபோது தொண்ணூறு வயதுக்காரர் ஒருவரைப் பார்த்தேன். ஆசிரியராக இருந்து பணி ஓய்வு பெற்றவர். காலை நான்கு மணிக்கு எழுந்து உடற்பயிற்சி செய்து, குளித்துவிட்டு ஜபங்கள் செய்கிறார். சரியாக ஆறுமணிக்கு வானொலி நிலையத்தில் பூட்டைத் திறக்கும்போதே இவர் வானொலிப் பெட்டியை அலற விடுகிறார். மனைவி உயிரோடு இல்லை. மகள் மும்பையில். இவருக்கு மும்பையின் நெரிசல் வாழ்க்கை சரிப்படவில்லை. கிராமத்துக்குத் திரும்பி வந்துவிட்டார். ஏழரை மணிக்கு எதிர் வீட்டிலிருந்து காபி. முடித்துவிட்டுத் தெருக்கோடியில் இருக்கும் கோவிலுக்குப் போகிறார். அவர் என்ன செய்கிறார் என்பதை வைத்து நம் கடிகாரத்தில் மணியைத் திருத்திக் கொள்ளலாம். "எனக்கு 27 வயதாக இருக்கும்போது ஒரு தடவை எனக்குக் காய்ச்சல் வந்தது. அதுவும் என் தப்புத்தான். மற்றப்படி எனக்கு எந்த வியாதியும் கிடையாது" என்று அவர் சொன்னதைக் கேட்டு எனக்கு மயக்கமே வந்துவிட்டது. முழங்கால் வலி என்று போன வருடம் டாக்டரிடம் சென்றபோது "மூட்டு தேய்ந்திருக்கும், ஒரு எக்ஸ்ரே எடுத்துவிடலாம்" என்று டாக்டர் சொன்னதற்கு, "இந்த வயதில் மூட்டு தேய்ந்துதான் இருக்கும், சந்தேகமில்லை. எக்ஸ்ரே எல்லாம் வேண்டாம்" என்று சொல்லிவிட்டு மருந்தை வாங்கிக்கொண்டு வந்துவிட்டாராம்.

  அவருடன் பேசிக்கொண்டிருந்துவிட்டு வந்து மிகையான பாவனைகளுடன் வீட்டிலும் கூரை இடிந்துவிழும்படியாக நான் விஷயத்தை என் மனைவியிடம் விவரித்தபோது "அவருக்குக் கொஞ்சம் காது கேக்காதோ?" என்றாள். உண்மைதான், அதைத்தவிர அவர் தொண்ணூறு வயதுக்கான எந்த அடையாளமும் தெரியவில்லை. ஒவ்வொரு வேளையும் சாப்பிட்டபின் இரண்டுமூன்று ஆரஞ்சு மிட்டாய்களைச் சாப்பிடுகிறார். சிறுவயதுப் பழக்கமாம்!

  ஜப்பானில் முதியோர்கள் கொடுமைப்படுத்தப் படுவதாக அண்மையில் ஒரு செய்தி வந்திருந்தது. அங்கு சிறுவயதினரைவிட வயதுமுதிர்ந்தோரின் எண்ணிக்கை மிக அதிகம் இருக்கிறதாம். இந்தியாவைப் போலவே கூட்டுக்குடும்பத்தைப் பெரிதாக மதிக்கும் சமூதாயம் அது. கிழட்டுக் கணவன் தன் நோயாளி மனைவிக்குச் சேவை செய்து அலுத்துப் போய்க் கோபத்தில் அவளை அடித்தும் கன்னத்தில் கிள்ளியும் செய்ததில் ஏற்பட்டிருந்த கருப்புத் தடங்களைப் பார்த்து மருத்துவர் அதிர்ந்து போனாராம். "இது ஒன்றுமில்லை, பிள்ளைகள் தாய் தந்தையரை இப்படிக் கொடுமைப்படுத்துவது இப்போது சாதாரணமாகிவிட்டது" என்கிறார் அவர்.

  இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் தென்மாவட்டம் ஒன்றில் நான் இருந்தபோது பார்த்த சம்பவம் ஒன்று நினைவுக்கு வருகிறது. எதிர் வீட்டில் பெரிய சண்டை. கிழவனார் பெண்டாட்டிக் கிழவியை கெட்டியாகப் பிடித்துக் கொள்ள, மகன் அரிவாளால் அவள் காதை வெட்டி எடுத்துவிட்டார். பாம்படம்தான் அவர்களுக்கு வேண்டுமென்றால் அதைப் பெற இன்னும் சுலபமான வழிகள் இருந்திருக்கவேண்டும். எப்படிச் செய்ய மனது வந்தது என்பதுதான் என்னால் இத்தனை வருடங்களுக்குப் பின்னும் புரிந்து கொள்ளமுடியாத ஒன்று.

  முதியவர்களை நாம் இயலாதவர்கள் என்று ஒதுக்கிவிடுகிறோம். ஆனால் அவர்களில் பலர் மிக நல்ல பணிகளைச் செய்கிறார்கள். பணி ஓய்வு பெற்ற எட்டுப் பேர் தம் ஓய்வூதியத்திலிருந்து மாதாமாதம் பணம் போட்டு 'உதவும் உள்ளங்கள்' என்ற அமைப்பைச் சென்னை நங்கநல்லூரில் நடத்துகிறார்கள். இங்கே ஆதரவற்ற ஏராளமான முதியோரும், குழந்தைகளும் இருக்கிறார்கள். முதியோர் இல்லங்களில் பார்த்தால் பெண்கள்தான் அதிகம் அனாதைகளாகி விடுகிறார்கள் என்று தோன்றுகிறது. எனக்குத் தெரிந்த இன்னொரு பெரியவர் தன் ஓய்வூதியத்தில் பெரும்பகுதியைத் துன்புறுவோருக்குக் கொடுப்பதற்கே பயன்படுத்துகிறார். நல்ல நிலைமையில் இருக்கும் தமது பெண்களுக்குச் சொத்து வைக்கவேண்டியதில்லை என்கிறார். எப்போதும் ஏதாவது பொதுப்பணிக்காக அலைந்து கொண்டே இருப்பார். தனக்காகவும் சேமிப்பதில்லை.

  அமெரிக்கா போன்ற இடங்களில் தம் மக்களுடன் வசிக்கச் செல்லும் முதியோரின் பிரச்சினை வேறு மாதிரி இருக்கிறது. அவர்களுக்கு அங்கே வீட்டுக்குள்ளே எல்லா வசதிகளும், சொகுசுகளும், நல்ல உணவு வகைகளும், பொழுது போக்கும் இருந்தாலும், நினைத்ததும் புறப்பட்டு வெளியே கோவில், குளம் என்று போக முடிவதில்லை. நண்பர்களைச் சந்திக்க முடிவதில்லை. மற்றொருவர் வாகனம் ஓட்டிக் கொண்டு வந்தாலொழிய வீட்டைவிட்டு நகரமுடிவதில்லை. மகன் அல்லது மகள் மற்றும் அவர்களது துணைவரும், பேரக்குழந்தைகளும் பகல் முழுதும் வெளியே போய்விட, தனியே வீட்டில் உட்கார்ந்திருப்பது பெரிய தண்டனையாக இருக்கிறது. எவ்வளவுதான் தூங்கமுடியும்! அதிலும் ஆசாரம் பார்ப்பவர்களாய் இருந்தால் இன்னுமே கஷ்டம். தமது வாழ்க்கை முறையையே அவர்கள் மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டியதாக இருக்கிறது.

  முதுமை என்பது நமக்கும் வரும். நாமும் அவர்களைப் போல் 'அந்தக் காலத்தில்' என்று தொடங்கிப் பேசுவோம். வாய் ஓயாமல் அறிவுரை வழங்குவோம். நம்முடைய நோய்களைப் பட்டியலிடுவோம். இயற்கை அதுதான். முதுமை வரம் இல்லை; சாபமும் இல்லை. ஆனால் உடல் அவர்களுக்குத் துன்பத்தைத்தான் தருகிறது. நம் வீட்டு முதியவர்களின் வாழ்க்கையை நம்மால் எளிதாக்க முடியும். முதியவர்களிடத்தும் குணக் குறைபாடுகள் இருக்கலாம். ஆனால் நம்மில் பலபேர் அவர்களைத் திருத்த வேண்டும் என முயல்கிறோம். அது நடவாதது. சிறுவயதில் நாம் தவறுகள் செய்தபோதும், நோயுற்றிருந்த போதும் தம்முடைய கஷ்டத்தையும், வறுமையையும் பாராது நம்மை அவர்கள் பொறுத்துக்கொண்டார்கள், தாங்கினார்கள் என்ற எண்ணம் இருந்தால் போதும், அவர்களை நாம் மகிழ்ச்சியோடு வைத்துக்கொள்ள முடியும். அது நம் கடமை.

  PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
  உங்கள் கருத்து  
  (You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
  Copyright © 2004 Tamiloviam - Authors
  Best viewed with IE 4.x and above, Netscape 7.x , Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
  | Privacy |