ஜூலை 13 2006
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
சிறப்பு ஆசிரியர் : உங்களுடன்
- ராமசந்திரன் உஷா
Save as PDF | Bookmark in Del.icio.us | | Printable version | URL |

"எழுத்தாளி செத்துப் போய் விட்டாள்" என்று சொன்ன அதே வார்த்தைகளை மீண்டும் சொல்லியப் பொழுது செய்கையின் வேதனை காலம் கடந்து புரிந்தது.

போட்டிகளில் கலந்துக்கொண்டு வெற்றிவாகை சூடி பரிசுப் பெறுவது என்பது பொதுவாய் மகிழ்ச்சி தரும் விஷயம். ஆனால் தேன்கூடு - தமிழோவியம் இணைந்து நடத்திய சிறுகதைப்போட்டிடின் பரிசு பற்றிய விவரம் தெரிந்ததும் மனதில் பயம்தான் தோன்றியது. கதை எழுதுவதும், என்னுடைய வலைப்பதிவில் மனதில் தோன்றுவதை போட்டுக் கொண்டிருந்தவளுக்கு சிறப்பு ஆசிரியர் பதவி என்றால் என்ன எழுதுவது என்ற குழப்பம் வருமா இல்லையா?

முன் ஒரு காலத்தில் குமுதம் பத்திரிக்கையில் பிரபலங்களை,  அதிகமாய் நடிக நடிகைகளை வாராவாரம் ஆசிரியராய் தேர்தெடுப்பார்கள். பெரும்பாலும் சொந்த புராணங்களே ஆறாய் வழிந்து ஓடும். சில சமயம் தமிழே தெரியாதவர்கள்கூட தமிழ் பத்திரிக்கைக்கு ஆசிரியப்பணி செய்தது நினைவில் நிழலாட, ஏதோ ஓரளவு தமிழ் தெரிந்தவள், ஒப்பேற்ற முடியாதா என்ன என்ற தைரியத்தில் களத்தில் குதித்துவிட்டேன்.

அறிமுகப்படுத்துக்கொள்ளுங்கள் என்று சன் டீவி புகழ் விஜயசாரதி பாணியில் என்னைப் பற்றி நானே சொல்ல வேண்டும் என்றால், வசிப்பது அமீரகம் என்று அழைக்கப்படும் UAE யில் கணவர் மற்றும் மகனுடன், மகள் இந்தியாவில் இப்பொழுது இரண்டாம் ஆண்டு எல்.எல்.பி (சட்டம்) படிக்கிறாள். மகன் பத்தாம் வகுப்பு  போயிருக்கிறான். சொன்ன பேச்சை கேட்கும் பிள்ளைகள் (இந்த கால பிள்ளைகளிடம் எதை மட்டும் பேச வேண்டும் தெரியாதா என்ன?), என் எழுத்தார்வத்தை ஊக்கிவிக்கும் கணவர்  (அவர் நான் எழுதியதை படிப்பது கிடையாது, படி என்று நான் வற்புறுத்துவதும் இல்லை. சில சமயங்களில் ஏதாவது பிரச்சனை என்றால் உட்கார வைத்து கதை சொல்லிவிடுவேன். படிக்காதது என்னப் பொறுத்தவரையில் நிம்மதி தரும் செயலே. இல்லை என்றால் ஏன் எதற்கு என்று அறிவுரைகள் வருமே ?)

Ramachandran Ushaஎன் தந்தை தினமணி செய்திதாளில்  செய்தி ஆசிரியராய் பணிப்புரிந்து பதினெட்டு வருடங்களுக்கு முன்பு ஓய்வு பெற்ற பத்திரிக்கையாளர். பத்திரிக்கையாளர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் வித்தியாசம் அதிகம். அப்பாவுக்கு வாசிப்பில் அதிக ஆர்வம் இருந்தாலும், புனைக்கதைகளை அவருக்கு ஆர்வமே இல்லை. இதே குணம் என் கணவரிடமும் உண்டு என்பது ஆச்சரியமான விஷயம்!

மாமனார், மயிலாடுதுறையில் மேன்நிலைபள்ளி ஆசிரியராய் பணியாற்றி ஓய்வு பெற்றவர். ஆக இரண்டு ஆசிரியர்களைப் பார்த்திருந்தாலும், ஆசிரியர் பதவியின் பொறுப்பும், கஷ்டமும் நான் அறிந்ததுதான். பல பத்திரிக்கைகள், முக்கியமாக பெண்கள் பத்திரிக்கையைப் பார்க்கும் பொழுதெல்லாம், பல விஷயங்களை சொல்லலாமே எழுதலாமே என்று தோன்றும்.

சிறுவயதில் அம்மா, அத்தைகள், பாட்டி மாய்ந்து மாய்ந்து கதைகளைப் படித்துவிட்டு அலசிக்கொண்டு இருப்பார்கள்.
ஓவியாவின் சந்தேகம் - 1

Oviya

சிறப்பு எடிட்டர் அம்மா !

சன் டிவியில [நீங்கள் கேட்ட பாடல், உங்கள் சாய்ஸ்] நிகழ்ச்சிகளில்
"புதுப்படத்துலிருந்து ஏதாவது புதுப்பாட்டு போடுங்கன்னு சொல்லறாங்களே ...'
பின்னே புதுப்படத்துலிருந்து பழைய பாட்டா போட முடியும் ?

அம்மாவின் ஓரே ஒரு, ஒரு பக்க கதை மங்கையிலும், பிறகு அரைப்பக்க கதை அம்புலிமாமாவிலும் வந்தது. பிறகு தொடர்ந்து அனுப்பிய கதைகள் போன மாயம் தெரியாமல் போனது. தொடர்ந்த முயற்சிகளின் தோல்வியாலும், தபாலுக்கு ஆகும் செலவைப் பார்த்து அம்மா தான் எழுதிய அனைத்து கதைகளையும் கொண்ட நோட்டு புத்தகங்கங்களை,  ஒரு நாள் தீக்கு இரையாக்கினார். அன்று அந்த செய்கையின் வலி புரியாமல் நாங்கள் (நான், அண்ணன், தம்பி) வேடிக்கைப் பார்த்துக் கொண்டு இருந்தோம். சமீபத்தில் கணிணியில் எழுத சொல்லிக் கொடுக்கிறேன் என்று அம்மாவை வற்புறுத்தியும், அன்று தீயில் தன் படைப்புகளை போட்டு விட்டு, "எழுத்தாளி செத்துப் போய் விட்டாள்" என்று சொன்ன அதே வார்த்தைகளை மீண்டும் சொல்லியப் பொழுது செய்கையின் வேதனை காலம் கடந்து புரிந்தது.

பிறகு அத்தைகள் கல்யாணம் ஆகி போய்விட்டார்கள். பாட்டிக்கு வயதானது. அம்மாவுக்கு ஒரு சாதாரண மத்தியவர்க்கத்தின் சுமைகள் அழுத்த அழுத்த படிக்க நேரமில்லாமல் போனது, இல்லை விருப்பமில்லாமல் போனது. எனக்கோ வீட்டில் புத்தகங்களும் செய்தி தாளும் குவிந்துக்கிடந்ததால் படிக்கும் ஆர்வம் சுலபமாய் தொத்திக்கொண்டது. ஆனால் என்னைத் தவிர யாருக்கும் தமிழின் மேல் ஆர்வம் வரவில்லை. இதனால் படிப்பதை பகிர்ந்துக் கொள்ள எனக்கு யாருமே கிடைக்கவில்லை. தோழிகளோ  சீரீயஸ் ரீடிங்கில் ஆர்வம் காட்டவில்லை.

மூன்று வருடங்களுக்கு முன்பு முரசு அஞ்சல் கிடைத்த சந்தோஷத்தில், காதில் விழுந்த விஷயத்தில் சிறிது மசாலா சேர்த்து திண்ணை இணைய இதழுக்கு அனுப்ப, அதுவும் பிரசுரமாக, அன்று ஆரம்பித்த எழுத்தார்வம், இணைய நண்பர்களின் வாழ்த்தும், விமர்சனங்களும் ஊக்கிவிக்க இன்று இங்கு சிறப்பாசிரியராய் உங்கள் முன்பு நிற்கிறேன்.

| |
oooOooo
ராமசந்திரன் உஷா அவர்களின் இதர படைப்புகள்.   சிறப்பு ஆசிரியர் பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2006 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |