ஜூலை 13 2006
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
கட்டுரை : தடைசெய்யப்பட்ட லாட்டரி விற்பனை
- திருமலை கோளுந்து [golundhu1979@yahoo.com]
Save as PDF | Bookmark in Del.icio.us | | Printable version | URL |

Banned Lotteryசெய்வதைத் தான் சொல்வோம், சொல்வதைத் தான் செய்வோம் என்ற கோஷத்தோடு தமிழகத்தில் ஆட்சி செய்து வரும் தி.மு.க.வின் ஆட்சியில் ஒரு சட்டவிரோத செயல் சொல்லாமல் செயல்படுகிறது. கடந்த அ.தி.மு.க.ஆட்சியில் தடைசெய்யப்பட்ட  லாட்டரி விற்பனை, தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் படு உற்சாகமாக லாட்டரி விற்பனை தமிழகத்தில் நடைபெற்று வருகிறது. தடைசெய்யப்பட்ட ஒரு மாநிலத்தில், லாட்டரி சீட்டு எப்படி விற்பனை செய்யப்படுகிறது? லாட்டரி விற்பனையாளர்களுக்கு வெளிமாநில லாட்டரி சீட்டு எப்படி கிடைக்கிறது? அப்படி விற்பனை செய்யப்படுகின்ற சீட்டுக்களுக்கு பரிசுகள் விழுந்தால் அவைகள்  உரியவரிடம் போய் சேர்கிறதா? இவர்களின் நெட்வொர்க் எப்படி துள்ளியமாக இயங்குகிறது என்ற கேள்விகளோடு களத்தில் இறங்கினோம். இது குறித்த ஒரு பிரத்யோக ரிப்போட்டிங் இதோ..

விழுந்தால் வீட்டிற்கு, விழாவிட்டால் நாட்டிற்கு என்று அறிஞர் அண்ணாவால் முழங்கப்பட்டு லாட்டரி விற்பனை தமிழகத்தில் தொடங்கப்பட்டது. லாட்டரி முதலில் விற்பனைக்கு வந்த பொழுது மக்களிடம் அவ்வளவாக மதிப்பு இல்லாமல், இது ஒரு சூதாட்டம் என்ற அளவில் தான் இருந்தது. ஆனால் அன்றைய முதல்வர் அண்ணாதுரை தலைமையிலான அரசாங்கம் தான் பிரச்சாரம் செய்து லாட்டரியை மக்களிடம் கொண்டு சென்றது. இப்படி அரம்பமான லாட்டரி விற்பனை பின்னர் 5 லட்சம் பேர்களுக்கு வேலை, அரசாங்கத்துக்கு முதலீடு என்பதே இல்லாத, வருமானத்தை கொட்டிக் கொடுக்கும் துறை, அதிஷ்டத் தேவதையின் இருப்பிடம் என்று ஆலமரமாக வளர்ந்தது. இப்படி அசைக்க முடியாத, அரசியல்வாதிகளின் செல்லப்பிள்ளையாக இருந்த லாட்டரியை 2003ம் ஆண்டு ஜனவரி மாதம் 8ம் தேதி முதல்வராக இருந்த ஜெயலலிதா தடை செய்தார். பொதுமக்களிடம்  அட்டகாசமாக வரவேற்பைப் பெற்ற இந்த தடை உத்தரவை அனைவருமே வரவேற்றனர். ஆனால் இந்த தடை உத்தரவு அ.தி.மு.க. ஆட்சியிலும், இன்றைய தி.மு.க. தலைமையிலான ஆட்சியிலும் முழுமையாக அமல் செய்யப்பட்டதா என்பது பெரிய கேள்விக் குறி தான். அதிலும் அ.தி.மு.க. ஆட்சியில் அங்கொன்றும், இங்கொன்றுமாக நடைபெற்று வந்த கள்ளச் சந்தை லாட்டரி விற்பனை இன்றைய தி.மு.க. ஆட்சியில் பயமே இல்லாமல் விற்பனை செய்து வருகின்றனர். அதிலும் தமிழக எல்லையோரக் கிராமங்களில் லாட்டரி விற்பனை அமோகமாக நடக்கிறது. தடைசெய்யப்பட்ட ஒரு மாநிலத்தில் எப்படி வெளிமாநில லாட்ரி சீட்டுக்கள் விற்பனைக்கு வருகிறது என்பது ஒரு பரபரப்பான மர்மங்கள் நிறைந்த ஒன்று. தமிழகத்தை அடுத்துள்ள அனைத்து மாநிலங்களிலும் லாட்டரி விற்பனை அமலில் இருக்கிறது. லாட்டரி விற்பனை தான் மாநிலங்களின் வருமானத்தில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. அதிலும் சிக்கிம், மிசோராம், மணிப்பூர் போன்ற மாநிலங்களில் லாட்டரி மட்டும் இல்லை என்றால் அங்கு மாநில அரசாங்கமே ஸ்தம்பித்து விடும் நிலை ஏற்படும். இந்த மாநிலங்களில் இருந்து தான் சத்தம் இல்லாமல் லாட்டரிகள் கடத்தப்படுகின்றன. குறிப்பாக தமிழக எல்லைகளில் இருந்து அதிகாலை 2 மணி முதல் 4 மணிக்குள் லாட்டரிகள் கடத்தப்படுகின்றன.

Banned Lotteryஇதற்கு உதாரணமாக தமிழகத்தின் தென் மாவட்டத்தின் எல்லைப்பறமான செங்கோட்டையில் பார்டர் என்ற இடத்தில் நாம் இருந்தோம். அப்பொழுது கேரள மாநில பதிவு எண்ணைக் கொண்ட ஒரு கார் தமிழக எல்லையைக் கடந்து வருகிறது. தமிழக எல்லையைக் கடந்து குற்றாலம் அருகே இருக்கும் மேலகரம் என்ற கிராமத்து சாலையில் அக்கார் நிற்கிறது. அதில் இருந்து சிலர் பெரிய சாக்கு மூட்டைகளோடு தமிழக பதிவு எண் கொண்ட காரில் ஏறித் தப்பிக்கிறார்கள். இவர்களை ஏற்றி வந்த கேரள கார் தனது கேரளா மாநிலத்தை நோக்கிப் போகிறது. தமிழக பதிவு எண் கொண்ட கார் மதுரை தேசிய நெடுஞ்சாலையில் இருளைக் கிழித்துக் கொண்டு செல்கிறது. இவைகள் எல்லாம் நடந்தது அதிகாலை 3 மணி என்பது குறிப்பிடத் தக்கது.

இப்படிக் கடத்தப்பட்டு வரும் லாட்டரிகள் அதிகாலை 6 மணிக்குள் சில்லரை வியாபாரிகளின் கைகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. அவர்கள் தங்களது வாடிக்கையாளர்களை நோக்கி படை எடுக்கின்றனர். இப்பப்பட்ட நெட்வொர்க் தான் லாட்டரியை தமிழகம் முழுவதும் கள்ளச் சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது. இவைகள் எல்லாம் நடப்பதற்கு எல்லையோர காவல் படையினரின் பங்கு அதிகம். இப்படி விற்பனை செய்யப்படும் லாட்டரி சீட்டுக்கு பரிசு விழுந்தால் அதனை பரிசுக்குரியவர்களிடம் சேர்த்து விடுகின்றனர். அதனால் தான் இந்தத் தொழில் எந்தவித சலசலப்பும் இல்லாமல் கன ஜோராக நடக்கிறது என்கிறார் தென்காசியில் வசி;க்கும் பிரபல புலனாய்வு இதழின் நிருபர் தேவராஜன். 

லாட்டரி சீட்டு விற்பனை மூலம் அதனை விற்பவர்கள் கொள்ளை லாபம் அடிக்கின்றனர் என்பது எல்லாம் ஏற்றக் கொள்ள முடியாத வாதம் என்று சொல்லும் சில்லரை விற்பனையாளர் கண்ணண் தமிழகத்தில் தி.மு.க. அரசு லாட்டரித் தொழிலுக்கு மீண்டும் அனுமதி கொடுத்து விடும் என்று நம்பிக்கையோடு சொல்கிறார். முன்பு தமிழகத்தில் லாட்டரி சீட்டு விற்கப்படும் பொழுது உடல் ஊனமுற்றோர், பார்வையற்றோர் என சுமார் 5 லட்சம் பேர்களுக்கு வேலை கொடுக்கும் துறையாக இருந்தது. ஆனால் இந்த 5 லட்சம் குடும்பத்தைப் பற்றி கடந்த அரசு கவலைப்படாமல் அத்தொழிலை நிறுத்தி விட்டது. பத்து ரூபாய்க்கு ஒரு லாட்டரி சீட்டு விற்கப்படும் பொழுது அரசாங்க வரியாக 10 சதவீதமும், பரிசுத் தொகையாக 59 சதவீதமும், பெரிய ஏஜெண்டுகளுக்கு 5 சதவீதமும், ஸ்டாக்கிஸ்டுக்கு 2 சதவீதமும், துணை ஸ்டாக்கிஸ்டுக்கு 3 சதவீதமும், சில்லரை ஏஜெண்டிற்கு 2 சதவீதமும், விற்பனையாளருக்கு 16 சதவீதமும், பிரிண்டிங் செலவுக்கு 3 சதவீதமும் செலவாகும். இவை தான் லாட்டரியின் பார்முலா. இப்படி இருக்கும் பொழுது காலை முதல் இரவு வரை லாட்டரி விற்பனை செய்தால் தான் லாபத்தை பார்க்க முடியும். இதனை எல்லாம் மறந்துவிட்டு லாட்டரியை தமிழக அரசு தடை விதித்து விட்டது. அப்படி தடை விதித்தாலும் தமிழகத்தில் பிற மாநிலங்களின் லாட்டரி சீட்டு ஒரு நாளைக்கு 75 லட்சத்திற்கும் மேல் விற்பனை செய்யப்பட்டுக் கொண்டு தான் இருக்கிறது. இதனை யாராலும் தடுக்க முடியவில்லை. தமிழக அரசுக்கு கிடைக்க வேண்டிய தமிழனின் பணம் வேறு மாநில அரசாங்கத்திற்கு போய்க் கொண்டு இருக்கிறது என்கிறார் தனது தரப்பை நியாயப்படுத்திக் கொண்டு.

பெரும்பாலும் இந்திய மாநிலங்களான அருணாசலப் பிரதேசம், மணிப்பூர், இமாசலப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் தான் லாட்டரி உற்பத்தி அதிகம். இங்கு இருந்து பெரும்பானலான இந்திய மாநிலங்கள் அனைத்திலும் விற்பனைக்கு லாட்டரி அனுப்பப்படுகிறது. இந்த மாநிலங்களில் அதிகமான தொழிற்சாலைகளோ, தொழில் நிறுவனங்களோ கிடையாது. அதனால் வரி வருவாய்க்கு அங்கு வழியே கிடையாது. பிரதான தொழிலே லாட்டரி தான். லாட்டரி வருமானத்தால் தான் அங்குள்ள மாநில அரசுகளே பட்ஜெட் போடுகின்றன. ஆனால் தமிழகத்தில் அப்படி இல்லை. அதனால் தான் கடந்த அரசு லாட்டரியை தடை செய்தது. லாட்டரிக்கு வரி செலுத்திவிட்டுத் தான் விற்பனை செய்கிறோம் என்பது எல்லாம் வடி கட்டிய ஏமாற்று வேலை. முன்பு தமிழகத்தில் லாட்டரி விற்பனை அமலில் இருந்த பொழுது அதன் மூலம் மாநில அரசுக்கு 150 கோடி வருமானம் கிடைத்தது. அதற்கு மாற்று ஏற்பாடாக வரி வருமானம் இருந்ததால் தான் அதனை தமிழக அரசு தடை செய்தது. அதே போல் லாட்டரி விற்பனை தமிழகத்தில் அமலில் இருந்த பொழுது, அதன் மூலம் கிடைத்த வருமானத்தை வைத்துத் தான் சென்னை ரிப்பன் கட்டிடம், கோட்டை மியூசியம், கேன்சர் மருத்துவமனை, விளையாட்டு மைதானம் போன்றவற்றை அரசுகள் கட்டியதாக சொல்லப்படுவதுண்டு. அதே போல் பிற மாநில லாட்டரிச் சீட்டுக்களைப் போல் போலியாக சிவகாசியில் அடித்து அதன் மூலம் சம்பாதித்த கூட்டங்கள் அதிகம். ஒரு லாட்டரி மொத்த ஏஜெண்ட் 1 கோடிக்கு லாட்டரி விற்பனை செய்தால் அரசாங்கத்திடம் 1லட்சத்திற்கு விற்றதாக கணக்கு காட்டுவார்கள். அது தான் தமிழகத்தில் நடந்தது. அதனால் தான் ஜெயலலிதா அரசு தடை செய்தது. அதே போல் இன்றும் லாட்டரி சீட்டு விற்பதற்கு காரணம் காவல் துறையின் பலவீனம் தான். காவல் துறையினர் மட்டும் நேர்மையாக நடந்தால் கள்ளச் சாரயத்தை ஒழித்தது போல் இதனையும் ஒழித்து விடலாம். ஆனால் காவல் துறையினருக்கு லஞ்சமாக பணத்தை அளந்து விட்டு இங்கு லாட்டரி விற்பனை பயமே இல்லாமல் இந்த ஆட்சியில் நடக்கிறது. இது எல்லாம் எங்களுக்கு தெரிகிறது அதனை புகாராக செய்தாலும் காவல் துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்க மறுக்கிறார்கள் என்கிறார் தமிழக கலால் வரித்; துறையில் முக்கிய பதவி வகிக்கும் ஜெயராமன்.

லாட்டரி தடை தமிழக மக்களுக்கு குறிப்பாக ஏழை, எளிய மக்களுக்கு பெரும் நன்மை தருகின்ற விஷயம். அதனால் தான் அதனை மக்கள் வரவேற்கிறார்கள். ஆனால் தமிழகத்தைத் தாண்டி நமது பக்கத்து மாநிலம் கர்நாடகா, கேரளாவைப் போய் பார்த்தால் அதன் விபாPதம் தெரியும். அங்கு மக்கள் காலையில் எழுந்தவுடன் லாட்டரிக்கடையில் தான் நிற்கிறார்கள். முன்பு எல்லாம் அச்சடிக்கப்பட்ட லாட்டரி தான் அதிகமாக இருந்தது. ஆனால் இப்பொழுது ஆன்லைன் லாட்டரி என்ற பெயரில் மோதி, பிளேவின், விடியோகான், ஜின்தார், ஸ்டார் போன்ற பெரிய நிறுவனங்கள் கொள்ளை லாபம் அடிக்கின்றன. கர்நாடகா, கேரளா, மகாராஷ;டிரா போன்ற மாநிலங்களில் இண்டர்நெட் வழியாகவும் லாட்டரி விற்பனை நடந்து அப்பாவி மக்களையும் தாண்டி படித்த மக்களிடமும் பணம் பறிக்கும் வேலைகளை அந்த மாநில அரசுகள் ஆதரிக்கின்றன. இந்ந நிலை தமிழகத்தில் இல்லை என்பது மகிழ்ச்சியான விஷயம். முன்பு தமிழகத்தில் லாட்டரி விற்பனை இருக்கும் பொழுது இரண்டு நம்பர் லாட்டரி, சுரண்டல் லாட்டரி என்று விற்பார்கள். அதில் பெரிய மோசடியே இருந்தது. பரிசுகள் யாருக்கு விழுகிறது என்பதே யாருக்கும் தெரியாது. அப்படி கொள்ளையடித்தவர்கள் இன்று அத்தொழிலை விட்டு விட்டு பர்னிச்சர், ஜவுளிக்கடை வைத்து தங்களது பிழைப்பை ஓட்டிக் கொண்டு இருக்கிறார்கள். இவர்களை மீண்டும் தலையெடுக்க தமிழக அரசு அனுமதிக்கவே கூடாது என்கிறார் கல்லூரி பேராசிரியர் சுகுமாரன்.

தேசிய அளவில் செயல்படும் யுஐகுடுவுயுஐ என்ற நிறுவனம் மீண்டும் தமிழகத்தில் லாட்டரி விற்பனையை கொண்டு வர தீவிர முயற்சி எடுத்து வருகிறது. இதற்காக இந்த நிறுவனம் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனை பலமாக கவனிக்கிறதாம். வரும் சட்டமன்ற  பட்ஜெட்  தொடரில் அதற்கான அறிவிப்பு வரும் என இவர்கள் எதிர்பார்த்து இப்பொழுது அதற்காக கடைகளை பிடித்து வைத்துள்ளனர். அதனால் தான் புதிதாக தி.மு.க. அரசு அமைந்தவுடன் லாட்டரி விற்பனை எந்த வித பயமும் இல்லாமல் நடக்கிறது. இதனை நாங்கள் மறக்க வில்லை. ஏற்றுக் கொள்கிறோம். ஒரு சீட்டை விற்பனை செய்யும் அப்பாவி சில்லரை வியாபாரிகளைத் தான் எங்களால் கைது செய்ய முடிகிறது. ஆனால் சில்லரை விற்பனைக்கு வருவதற்கு காரணமாக இருக்கும் மொத்த வியாபாரிகளை அடையாளம் கண்டு கைது செய்தால் அடுத்த நிமிடமே ஆளும் கட்சியினர் வந்து அழைத்துச் சென்று விடுகின்றனர். ஏனெனில் தேர்தல் பிராச்சாரத்திற்கு லாட்டரி விற்பனையாளர்கள் சங்கத்தினர் தி.மு.க.வினருக்கு மாவட்ட அளவில் பணம் கொடுத்து உதவி உள்ளனர் என்று கட்சிக்காரர்கள் சொல்கிறார்கள். இந்த விஷயத்தில் காவல் துறையினர் முழு சுதந்திரத்தோடு செயல்பட அனுமதிக்கப்படுவதில்லை என்பது தான் உண்மை. சாதாரண பிட்பாக்கெட் அடிப்பவனை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துகிறோம். ஆனால் தடை செய்யப்பட்ட ஒரு பொருளை விற்பனை செய்பவனை இங்கு ஒன்றும் செய்ய முடியவில்லை. அதே போல் முன்பு லாட்டரி முடிவுகளை வெளியிடும் அதிர்ஷ;டம், யோகலட்சுமி பத்திரிக்கைகளும் இப்பொழுது விற்பனைக்கு ரகசியமாக வந்து விட்டன. இத்தனைக்கும் அதிர்ஷடம் பத்திரிக்கை அ.தி.மு.க.வின் கொள்கைகளை முழங்கும் தினபூமி என்ற பத்திரிக்கையின் சார்பு நிறுவனம். இப்படி ஆளும் கட்சியும், எதிர்கட்சியினரும் சேர்ந்து கொண்டு கொள்ளையடிக்கும் பொழுது எங்களால் என்ன செய்து விட முடியும் எனச் சொல்லி தனது தொப்பியை கழட்டி தலையை தடவிக் கொள்கிறார் மாவட்ட அளவில் முக்கிய உளவுத் துறையில் இருக்கும் ஒரு அதிகாரி.

| | |
oooOooo
திருமலை கோளுந்து அவர்களின் இதர படைப்புகள்.   கட்டுரை பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2006 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |