ஜூலை 13 2006
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
சிறப்பு ஆசிரியர் : பிள்ளை பருவத்திலே....
- ராமசந்திரன் உஷா
Save as PDF | Bookmark in Del.icio.us | | Printable version | URL |

ஒரு சீக்ரெட் சொல்லறேன்பா.. யாருக்கிட்டையும் சொல்ல மாட்டியே?"

தினமும் ஸ்கூல் முடிந்ததும் பஸ் பிடித்து, வீடு வந்து சேரும்பொழுது, பசியில் மயக்கமே வந்துவிடும். மதியம் கொண்டு சென்ற தயிர்சாதம், எப்போதோ ஜீரணம் ஆகியிருக்கும். தயிர்சாதம் என்று தோழிகள் கேலி செய்வதைக் காதிலேயே போட்டுக் கொள்ள மாட்டேன். வேறு ஏதாவது கொண்டுப் போனால் எல்லாம் பிடுங்கி தின்றுவிடும். அன்றும் அதே அசுர பசியோடு வீட்டுக்கு திரும்பியப் பொழுது அம்மா ரவா உப்புமாவை நீட்டினாள்.

"ஏம்மா.. உனக்கு இந்த உப்புமா தவிர வேற ஒண்ணும் செய்ய தெரியாதா? நேத்து அரிசி உப்புமா, முந்தாநாள் மோர்கிளி. சே! இட்லி, தோசை, பூரின்னு ஏதாவது செய்யகூடாதா?" என்று அழுகையுடன் கேட்டேன்.

"கிளி இல்லேடி, மோர்களி " என்றாள் பாட்டி.

"இதோ பாரு! என்னால ஆட்டுகல்லுல அரைக்க முடியாது. இங்க எல்லாரும் மிக்சி, கிரைண்டர் வாங்கியாச்சு. உங்க அப்பாகிட்ட கேட்டு அலுத்துப் போச்சு. இஷ்டமிருந்தா தின்னு, இல்லாட்டி எழுந்து போ!" என்றாள்.

"தொட்டுக்க சட்னியாவது அரைச்சியா?" என்றுக் கேட்டதும், சர்க்கரைதான் என்றாள்.

"போட்டு தொலை" வேறு வழியில்லாமல் பசியில் அதை எடுத்து வாயில் போட்டுக் கொண்டேன்.

"சொவத்து கீரையை வழிச்சி போடடி சொரணை கெட்டவளே"

இந்த பாட்டி ஒண்ணு. எப்ப பார்த்தாலும் பழமொழிதான். பாட்டியை முறைத்ததும், "அந்த காலத்துல ஆட்டுகல், ஒரல், அம்மி, மாவு திரிக்கிற எந்திரம்னு  மாங்கு மாங்குன்னு கையாலதான் அத்தனையும் அரைப்போம். " பாட்டிக்கு சமயம் கிடைத்தால் போதும் மலரும் நினைவுகளை ஆரம்பித்துவிடுவாள்.

"நாளைக்கே ஒரு படி அரிசி ஊறப் போடரேன். அரைச்சிக் கொடுங்கோ" அம்மா பதில் கொடுத்ததும், அடுத்து ஆரம்பிக்கப் போகும் அவர்களின் வாக்குவாதத்தைப்  பார்க்க விருப்பம் இல்லாமல் விளையாட ஓடினேன்.

இரவு அப்பா படுக்கையில் படுத்துக் கொண்டு வீக்லி படித்துக் கொண்டு இருக்கும்பொழுது, "அப்பா! நான் என்.சி. சில சேரட்டுமாபா?" என்று மிகுந்த பணிவை வரவழைத்துக் கொண்டுக் கேட்டேன்.

அப்பா ஒரு நிமிடம் பதில் சொல்லாமல் பேசாமல் இருந்தவர், " அம்மாவைக் கேட்டியா? ஸ்கூல் முடியஞ்ச பெறகுதானே பிராக்டீஸ் இருக்கும். நீ பஸ் பிடிச்சி வரதுக்குள்ள இருட்டிடாது. ஹை ஸ்கூல் வந்தாச்சு. உன்ன டாக்டர் ஆக்கணும்னு நெனச்சிக்கிட்டு இருக்கேன். நம்ம பேமிலில லேடி டாக்டருக்கு யாருமே படிக்கலை!  இனி மேல இந்த வெளையாட்டுதனத்த எல்லாம் மூட்டைக் கட்டி வெச்சிட்டு, ஒழுங்கா படிக்கிற வழிய பாரு" என்றார்.

பக்கத்தில் நின்றிருந்த அண்ணா, " சயின்ஸ்ல பதினெட்டு மார்க்கு, பிரோக்ரஸ் ரிப்போர்ட்ல மொத்தம் மூணு ரெட் லைன். இவ எம்.பி.பி.எஸ் படிக்கப் போறாளா?" என்றதும் அவனைப் பார்த்து முறைத்தவாறு, அப்பா சரி என்று சொல்கிறாரா, வேண்டாம் என்கிறாரா என்று புரியாமல் "இனிமே ஒழுங்கா படிக்கிறேம்பா" என்று சிணுங்கிக்கொண்டே, " போப்பா! நா பெரியவவள் ஆனதும் லைப்ரரியன் இல்லாட்டி ஏர்ஹோஸ்டஸ்தான் ஆவேன்" என்றேன்.

"அப்பா! இவ என்.சி. சி டேக்கு ராஜரத்தினம் ஸ்டேடியத்துல,  இவ கிளாஸ் பொண்ணுங்க கூட பாரதியார் பாட்டுக்கு டான்ஸ் ஆடினாளே, அன்னில இருந்து என். சி. சில சேரப் போறேன்னும் எல்லார்கிட்டையும் சொல்லிக்கிட்டு இருக்கா..." என்றான்.

சமையலறை வேலை எல்லாம் முடித்துவிட்டு வந்த அம்மா, " என்ன இங்க மகாநாடு?  இன்னும் படுக்கலை? மணி ஒம்பது ஆச்சு. காலைல ஒங்கள் எழுப்பறதுக்குள்ள உயிர் போறது" என்றாள்.

நான் பேசாமல் நின்றிருந்தேன். அப்பா, " இவளுக்கு என். சி. சில சேரணுமாம். ஒன்னக் கேக்க சொன்னேன்" என்றார்.

"நானே சொல்லணும்னு இருந்தேன்.  டான்ஸ் டீச்சர் ஒருத்தி, சாயிபாபா கோவிலாண்ட குடி வந்திருக்காளாம். ரொம்ப நல்லா சொல்லி தராளாம். புஷ்பா மாமி பொண்ணுகூட சேர்ந்திருக்காளாம். நாலே வருஷத்துல அரங்கேற்றத்துக்கு தயார் பண்ணிடராளாம்.  இவளயும் சேர்க்கலாம்னு பார்க்கிறேன்" என்றாள் பரபரப்பாய்.

"எவ்வளவு பீஸ்?" அப்பா கேட்கும்பொழுதே, "போம்மா! எனக்கு டான்ஸ் வேண்டாம். என். சி. சில தான் சேரப்போறேன்" என்றுக் கொஞ்சம் வேகமாய் சொன்னேன்.

"அந்த காலத்துல நான் டான்ஸ் கத்துகணும்னு ரொம்ப ஆசைப் பட்டேன். எங்கம்மா விடலை.. எம் பொண்ணாவது பத்மா சுப்ரமணியன், சுதாராணி மாதிரி வரட்டும்னு பாக்கறேன். வாரம் மூணு கிளாஸ் கிளாஸ்தான்." அம்மா சொன்னதும் அப்பா, " என்னமோ பண்ணு" என்றார்.

கால் நீட்டிக் கொண்டு அறை வாசலில் அமர்ந்திருந்த பாட்டி, "ரொம்ப நன்னா இருக்கு, டான்சுனு பொண் கொழந்தை நாலு பேரு முன்னாடி தையதக்கான்னு ஆடினா நன்னாவா இருக்கும்?" என்றாள்.

சமயத்தில் ரட்சிக்க வந்த பாட்டியை நன்றியுடன் பார்க்கும்பொழுது, "வாய்பாட்டு எதாவது சொல்லிண்டா, நாளைக்கு பொண் பார்க்கும்போது, ரெண்டு கீர்த்தனையாவது பாடலாம் " என்றதும், எரிச்சலுடன், "போ பாட்டி, நான் கல்யாணமே பண்ணிக்க போறதில்லை" என்றேன்.

"எனக்குதான் கொடுப்பினையில்லை. என் பொண்ணு டான்ஸ் கத்துக்கதான் போறா" என்று அம்மா தீர்மானமாய் சொன்னாள். நான் பாட்டியை பரிதாபமாய் பார்த்தேன்.

"கொழந்தைக்கு விருப்பம் இல்லைனா விடேன். அப்படி ஒனக்கு அவ்வளவு சைன்னா, இப்பதான் என்ன கொறஞ்சிப் போச்சு? நீயே டான்ஸ் கத்துக் கோயேன்" என்றாள்.

அம்மா, என் மனக்கண்ணில் நெத்திசூட்டி, ஒட்டியாணம், டான்ஸ் டிரஸ் போட்டுக்கிட்டு வந்ததும் என்னால் சிரிப்பை கட்டுப் படுத்த முடியவில்லை.

என்னைப் பார்த்து முறைத்துக் கொண்டே, "பாத்தேளே ஒங்க அம்மாவ..? அத்தனையும் கும்மோணம் திரிசமன்" என்றதும், அப்பா, "அம்மா! கொஞ்சம் பேசாமல் இரேன் " என்று அலுத்துக் கொண்டார்.

பாட்டி, " அவ டான்ஸ் ஆடரது இருக்கட்டும். நீ எதுக்கு அவ தட்டற நட்டுவாங்கத்துக்கு இப்படி ஆடரே?" என்றுக் கேட்டாள்.

அப்பா டான்ஸ் ஆடுகிறாரா, நான் பார்த்ததில்லையே என்று  ஆச்சரியத்துடன் அப்பாவைப் பார்த்தேன்.

அம்மா கோபமாய், "போய் படுடி" என்றாள்.  "அப்பா" என்று அப்பாவின் தோளைப் பிடித்துக் குலுக்கினேன். அப்பாவும், "நேரமாச்சு, போய் படு" என்றார். என். சி. சி யில் சேர நாளைக்கு பெயர் கொடுக்கலாம் என்ற ஆசையில் மண் விழுந்தது.

ஆனால் அம்மா, மறுநாள் ஸ்கூலில் இருந்து வந்ததும், பூ, பழம், வெற்றிலைப்பாக்கு வாங்கிக் கொண்டு டான்ஸ் கிளாசில் சேர்த்துவிட்டு விட்டாள்.

ஸ்கூல் விட்டதும், நேராய் டான்ஸ்கிளாஸ்க்குப் போய் விட வேண்டும்.  அம்மா டிபனும் பிளாஸ்கில் பூஸ்டும் கொண்டு வந்திருப்பாள். வேறு என்ன அதே உப்புமாதான்! அதை தின்றுவிட்டு பயிற்சி ஆரம்பிக்கும். அம்மா கண்ணைக் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருப்பாள்.

பிறகு அம்மாவுடன் வீட்டுக்கு திரும்புவேன். வழியெல்லாம் பிரபல நடனமணிகள் பற்றி சொல்லிக் கொண்டும். நானும் அப்படி ஆக வேண்டும் என்றும் ஓரே போதனையாய் இருக்கும். அம்மாவைப் பார்த்தால் பாவமாய் இருந்தது, அதனால் ஓரளவு ஒழுங்காய் நடனம் கற்றுக் கொள்ள ஆரம்பித்தேன்.

வீட்டுக்கு யார் வந்தாலும் ஆடிக் காட்ட சொல்லுவாள். ஆனால் நான் ஆடுவதைப் பார்த்தே அண்ணாவும், தம்பியும் ஆடத் தொடங்கினர். ஒரு கட்டத்தில் விருந்தினர்கள் என் ஆட்டத்தைவிட அவர்கள் ஆட்டம் நன்றாக இருப்பதாக நற்சான்றிதழ் வழங்கத் தொடங்கினர்.

அந்தோ அம்மாவின் கனவு இரண்டே மாதத்தில் கலைந்தது! டான்ஸ் டீச்சருக்கு திடீரென்று கல்யாணம் நிச்சயமாகிவிட்டது. மாப்பிள்ளை கல்யாணத்திற்கு பிறகு நடனம் ஆடக் கூடாது என்று கண்டிஷன் போட்டு விட்டானாம். அம்மா வேறு டீச்சர் தேடியும் யாரும் சரியாய்  கிடைக்கவில்லை.

திரும்ப என். சி. சியில் சேரும் ஆசையை வெளியிட்டேன். இந்த தடவை பாட்டி தீர்மானமாய் என்னை பாட்டு கிளாசில் சேர வேண்டும் என்று சொல்லிவிட்டாள். எங்கள் வீட்டுப் பக்கத்திலேயே ஒரு மாமி பாட்டு சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தாள். ஸ, ரீ, க. ,ம என்று பாடவேண்டும் என்றாலே எனக்கு அழுகையாய் வந்தது. எவ்வளவு மறுத்தும்  வலுக்கட்டாயமாய், விஜயதசமி அன்று சேர்த்துவிட்டார்கள்.

தினமும் வீட்டுக்கு வந்ததும், என் பிரண்ட்ஸ் எல்லாம் விளையாடும்பொழுது நான் மட்டும் பாட்டு நோட்டை எடுத்துக் கொண்டு அடுத்த தெருவில் இருக்கும் பாட்டு கிளாஸ்க்கு போவேன்.

பாட்டுமாமி,  ஸ, ரீ, க, ம என்று சொன்னதும் நானும் அதையே திருப்பி சொன்னேன்.  அந்த மாமியும் தலை கீழாய் நின்று தண்ணீர் குடித்துப் பார்த்தும், கர்நாடக சங்கீதத்தில் வரும் 'க' வும், 'த' வும் என் வாயில் நுழையவேய்¢ல்லை. சில நாள் பார்த்துவிட்டு பாட்டுமாமி, அம்மாவைக் கூப்பிட்டு தன்னால் எனக்கு பாட்டு சொல்லிக் கொடுக்க இயலவில்லை என்றுச் சொல்லிவிட்டாள்.

அந்த மாமி வீணைகிளாசும் எடுத்துக் கொண்டு இருந்ததால், அப்பா இன்ஸ்ரூமெண்ட் கத்துக்கிட்டா நல்லது என்று வீணைக் கற்றுக் கொள்ள சொன்னார். அடுத்து வீணை கிளாஸ் ஆரம்பித்தது.

எங்கள் தெருவில், ஞாயிற்றுகிழமை காலையானால், ஒரு பூம்பூம் மாட்டுக்காரன் நாகஸ்வரத்தில் அன்னக்கிளி ஒன்ன தேடுதே, மச்சானை  பாத்தீங்களா வாசித்துக் கொண்டே வருவான். பீபீயில் பாட்டு  வருவது எனக்கு ஆச்சரியமாய் இருந்தது.

ரயில்வே ஸ்டேஷனில் ஒரு முறை கண்ணில்லாத ஒருவன், எம்ஜிர் சினிமா பாட்டு, அன்றொரு நாள் இதே நிலவில் பாட்டை ஹார்மோனியத்தில் வாசித்ததைக் கேட்டு எனக்கும் அதே மாதிரி  வாசிக்க வேண்டும் என்ற கனவு இருந்தது. நானும் சிப்பியிருக்கு முத்து இருக்கு பாட்டை வீணையில் வாசிக்கலாம் என்ற கற்பனையில் ஆர்வமாய் வகுப்பில் கலந்துக் கொண்டேன். டீச்சரிடம் ச., ரி, க, ம எல்லாம் வேண்டாம், நேராய் சினிமா பாட்டு வாசிக்க சொல்லிக் கொடுங்கள் என்றுக் கேட்டதற்கு அதற்கு இன்னும் நிறைய வருடங்கள் ஆகும் என்றுச் சொல்லிவிட்டாள். நான் சுவாரசியம் இழந்தேன்.

டீச்சரிடம் ஒரே ஒரு வீணைதான் இருந்தது. அந்த நேரத்தில் மொத்தம் ஐந்து குட்டிகளுக்கு வகுப்பு. எல்லாரும்

ஓவியாவின் ஆச்சர்யம் - 2

Dhoniசெய்தி : இலங்கை கிரிக்கெட் தொடருக்கு மஹேந்திர சிங் டோனி தேர்வு.

ஓவியா : அம்மா...  டிவி விளம்பரங்கள்ல நடிப்பாரே டோனி, அவரை கிரிக்கெட் டீம்ல செலக்ட் செஞ்சு இருக்காங்க !!!

வீணைக்குப் போட்டி போடும்பொழுது, நான் சுவாரசியமாய் அங்கிருந்த பத்திரிக்கைகளை படித்துக் கொண்டிருப்பேன். இரண்டு நாளில் அந்த பத்திரிக்கையெல்லாம் படித்து முடித்ததும், என்னைப் போல கடனே என்று கிளாஸ்க்கு வந்த குட்டிகளுடன் வாசலில் நொண்டி, கல்லா மண்ணா எல்லாம் விளையாடிவிட்டு வீட்டிற்கு கிளம்பிவிடுவேன். என் பழைய பிரண்ட்ஸ்சும் அங்கே வந்து சேர்ந்துக் கொள்ள ஆட்டம் நன்றாக
நடந்தது. என்னால் மற்ற குட்டிகளும் கெடுகின்றன என்று டீச்சரும் என்னைப் பார்க்கும்பொழுது எல்லாம் கரித்துக் கொட்ட ஆரம்பித்தாள்.

 ஒரு நாள் சாயந்தரம் ஸ்கூல் முடிந்ததும் என் வகுப்பில் பிரேமலதா, உமா, சாந்தி எல்லாரும் காக்கி சட்டை, பேண்டு, "¥ , தொப்பிப் போட்டுக் கொண்டு என். சி. சி வகுப்பிற்குப் போவதைப் பார்த்தப் பொழுது மனதில் தீர்மானமாய் முடிவெடுத்தேன். அன்றிரவே  இந்த டான்ஸ்கிளாஸ், வீணை எல்லாம் கற்றுக் கொள்ள விருப்பம் இல்லை என்றும், என். சி. சி வகுப்பில் சேர்ந்தே ஆக வேண்டும் என்று அறிவித்துவிட்டேன்.

அம்மாவும், பாட்டியும் ஏதோ சொல்ல வந்தப் பொழுது அப்பா, அவள் ஆர்வத்தை தடைப் போட வேண்டாம் என்று சொல்லிவிட்டார். மறு நாளே என். சி. சி வகுப்பில் சேர்ந்துவிட்டேன். பி. டி சார் காட்டிய பெட்டியில் இருந்து ஓரளவு அளவு சரியான உடைகள், ஷ¥, தொப்பி எடுத்துக் கொண்டேன். இரட்டை சடையை எஸ் கட்டுகட்ட சொல்லி தந்தார்கள்.

எல்லாவற்றையும் அணிந்துக் கொண்டு ஸ்டாண்டடிஸ், அட்டெங்ஷன், மார்ச் பாஸ்ட்  என்று ஒரு மணி நேரம் பயிற்சி நடந்தது.

"இன்னைக்கு பொங்கல், வடை" என்று யாரோ கத்தினார்கள். என் கையில் தரப்பட்ட பொட்டலத்தைப் பிரித்ததும், நெய் மணக்க, மிளகும், முந்திரி பருப்புகள் என்னைப் பார்த்து கண் சிமிட்ட, தையல் இலை வாசனையும் சேர சுடசுட ஸ்கூலுக்கு அருகில் இருந்த உடுப்பி துர்காபவன் வெண்பொங்கல் கமகமத்தது. மேலே வடை, கீழே தேங்காய் சட்னி வேறு!

"பொங்கல் வடை, பூரிக்கிழங்கு செட், கிச்சடி, மசால் தோசை இல்லாட்டி இட்லி வடைனு மாறி மாறி வரும்" என்றுப் பக்கத்தில் இருந்த பிரேமலதா சொன்னாள்.

மடமடவென்று சாப்பிட்டுவிட்டு, புத்தக பையை தூக்கிக் கொண்டு பஸ் ஸ்டாப்பை நோக்கி நடந்தேன். மனம் முழுக்க பொங்கலின் நறுமணம். கையை முகர்ந்துக் கொண்டே, கூட வந்த பிரேமலதாவிடம் " ஒரு சீக்ரெட் சொல்லறேன்பா..  யாருக்கிட்டையும் சொல்ல மாட்டியே?" என்றுக் கேட்டேன்.

பிரேமலதா "காட் பிராமிசா சொல்ல மாட்டேன்பா.. னா நீ என்ன சொல்லப் போறேன்னு எனக்கு தெரியுமே.. நீ மட்டும் இல்லே,  நாங்க எல்லாருமே இந்த டிபனுக்காகதான் என். சி. சி லையே சேர்தோம்பா.  என்ன வாசனையில்லே?" என்று தன் கை வாசனையை உள்ளிழுத்தப்படி!

மீண்டும் என்கையை முகர்ந்துப் பார்த்தேன். பொங்கல், வடை, சட்னியின் வாசனை கலந்து அடித்தது. நானும் நன்றாக வாசனையை உள்ளிழுத்தப்படி,  வீட்டுக்குப் போய் எல்லாரிடமும் காட்டணும் என்று நினைத்தவாறு பஸ் பிடிக்க வேகமாய் நடந்தேன்.

| |
oooOooo
ராமசந்திரன் உஷா அவர்களின் இதர படைப்புகள்.   சிறப்பு ஆசிரியர் பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2006 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |