ஜூலை 14 2005
தராசு
வ..வ..வம்பு
முச்சந்தி
ஹல்வா
திரையோவியம்
மனம் போன போக்கில் மனிதன் போகலாமா?
உள்ளங்கையில் உலகம்
கவிதை
நையாண்டி
சிறுகதை
தொடர்கள்
 
  முதல் பக்கம்
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
முச்சந்தி : சத்தியமாக இது 'சந்திரமுகி' விமர்சனம் இல்லை
- என். சொக்கன் [nchokkan@gmail.com]
| Printable version | URL |
"ரஜினியின் எந்தப் படமும் இந்த அளவு குழப்பமான திரைக்கதையோடு இருந்ததில்லை ..."

மண்ணைக் குவித்துவைத்துப் படம் பார்க்கும் டூரிங் டாக்கிஸ்கள் பற்றிப் படித்ததும், கேட்டதும்தான் உண்டு. (சின்ன வயதில் விவரம் புரியாமல் பார்த்தவைகள் கணக்கில் சேராது). நேற்றைக்குதான் நேரில் பார்த்தேன்.

'தொரசானி பான்யா' என்பது அந்தச் சிறிய கிராமத்தின் பெயர். நிறைய தொழிற்சாலைகள் கண்ணில் பட்டது, அங்கங்கே உழைப்பின் அழுக்கோடு சந்தோஷ ஜனங்கள், தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என்று பல பாஷைகள் பேசுகிறார்கள். ரொம்ப சுமாரான, அங்கங்கே கற்கள் தலைகாட்டிப் பல்லிளிக்கிற தெருக்கள். அப்போதே தியேட்டர் பற்றி ஊகித்திருக்க வேண்டும். ஏதோ ஒரு தைரியத்தில் ஸ்கிப்பிங்போல வண்டியை ஓட்டிக் கொண்டு போய்விட்டேன்.

கன்னட எழுத்துகள் விதம்விதமாக நெளிகிற 'சந்திரமுகி' போஸ்டரில் ஒரே தமிழ் வார்த்தையாக 'தொரசானி பான்யா'தான் கண்ணில் பட்டது, அதுதான்  தியேட்டரின் பெயராக்கும் என்று நினைத்துக்கொண்டு கேட்டால், அந்தத் தப்பான விசாரிப்புக்கே, உலக அதிசயமாக தியேட்டருக்கு எல்லோரும் சரியாக வழி காட்டினார்கள். அந்த ஏரியாவில் அந்தத் தியேட்டர் எத்தனை பிரபலம் என்று அப்போதுதான் புரிந்துகொண்டேன்.

ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளோடு அந்தப் பக்கம் போனால், ... நெல் மண்டி என்று எங்கள் ஊரில் சொல்வோம்., அப்படி அகலம் குறைவாக, நீளம் அதிகமான ஒரு செவ்வக ஹால், ஆஸ்பெஸ்டாஸ் கூரை, அங்கங்கே முட்டுக்கட்டிய மரக்கட்டைகள், அவற்றினிடையே அபத்திரமாகத் தொங்கும் மின்விசிறிகள் என்று அதிசாதாரணமாக இருந்தது தியேட்டர்.

ஓரமாக ஒரு சின்ன அறை, அதன் ஜன்னல் கதவில் லேசாக ஜிகினா வேலைகள் செய்து கவுன்டராக்கியிருந்தார்கள். பயங்கரமான கூட்டங்களைச் சமாளிக்கிற உத்தேசத்துடன் அதன் முன்னே அசௌகர்யமாகச் சில கம்பிகள் வைத்து வரிசை செய்திருந்ததை யாரும் பயன்படுத்த வேண்டிய அவசியம் வரப்போவதில்லை என்று நினைத்தேன். என்னதான் ரஜினிகாந்த் படமென்றாலும், என்னையும் சேர்த்து மொத்தம் ஆறு பேர்மட்டுமே காத்திருந்தோம் - அதில் ஒருவன் அங்கே பீடாக்கடை வைத்திருக்கிறவன் என்று பின்னால் தெரிந்து கொண்டேன்.

படம் ஆரம்பிக்க இன்னும் ஒரு மணி நேரத்திற்குமேல் ஆகும் என்றார்கள், எனவே, வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு, பெட்டிக்கடை வாசலில் ஆனந்த விகடனோடு உட்கார்ந்து கொண்டேன். முந்தின காட்சியின் 'கொஞ்ச நேரம் கொஞ்சும் நேரம்' கதவு வழியே வழிந்து வந்தது.

சந்திரமுகியை முன்பே பார்த்திருக்கவேண்டும். ஆனால், இணையத்திலும், பத்திரிகைகளிலும் ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாக விமர்சனம் எழுதியதால், நிஜமாகவே படம் பார்க்கவேண்டுமா, அல்லது, பேசாமல், மணிச்சித்திர தாழ் (தாழா ? தாளா ?) விசிடி எடுத்துப் பார்த்துவிடலாமா என்று யோசித்துக்கொண்டிருந்தேன். அதற்குள் சந்திரமுகி அபார வெற்றியடைந்து, இப்போது டூரிங் டாக்கீஸ்வரை வந்துவிட்டது.

இந்தச் சிந்தனையிலேயே நேரம் ஓடிவிட்டது. முந்தின காட்சி படம் முடிந்து சுமாரான கூட்டம் வெளியேறியது. லேசாக மழை தூற ஆரம்பித்திருந்தது.

மொத்தமே இரண்டு அறைகளில் முடிந்துவிட்ட தியேட்டரையும், அதில் ஆபரேட்டர் அறையை ஒருவன் பூட்டிவிட்டு, வீட்டுக்குச் சாப்பிடப் போனதையும் வியப்பாகப் பார்த்துக்கொண்டிருந்தேன்.

திடீரென்று கவுன்டர் பக்கம் சத்தம். டிக்கெட் கொடுக்க ஆரம்பித்துவிட்டார்கள். அவசரமாக உள்ளே புகுந்தேன். நான்கு ரூபாய்க்கும், ஆறு ரூபாய்க்கும் டிக்கெட்கள், சிக்ஸர் அடிக்க முடிவெடுத்தேன். எனக்கு முன்னால் வரிசையில் இருந்தவன், 'ஒரு சேர்' என்று சொல்லி ஆறு ரூபாய் டிக்கெட் வாங்கியதைப் பார்த்தேன். ஆறு ரூபாய் டிக்கெட்டே நாற்காலிதான் என்றால், நாலு ரூபாய் என்ன ? தரை டிக்கெட்டா ? என்ற யோசனையை அவசரமாக மறுத்துக் கொண்டேன். 'பெங்களூர்ல தரை டிக்கெட்டா ? You must be joking' !

ஆனால், உள்ளே நுழைந்தபோது என் நினைப்பில் மண் அள்ளிப் போட்டது நான்கு ரூபாய் டிக்கெட். தரை என்றால் சாதாரணத் தரையில்லை, குவித்து வைத்து உயரம் செய்ய வசதியாக மண் கண்டார், மண்ணே கண்டார் என்று எங்கும் மணலாகப் பரந்து விரிந்த நாலு ரூபாய் டிக்கெட். நல்ல வேளை, ஆறு ரூபாய் வாங்கினேன் என்று அவசரமாக சந்தோஷப்பட்டேன்.

ஆனால், ஆறு ரூபாயிலும் அப்படி ஒன்றும் பெரிதாய் ஒழுங்கில்லை. எல்லாம் கல்யாண மண்டபம்போல மடக்கி, விரிக்கமுடிகிற தகர நாற்காலிகள்தான். அதிலும், பாதி உடைந்து, மீதி சிதைந்து காணப்பட்டன. அங்கேயிருந்தவைகளில் சுமாரான ஒன்றைத் தேடி அமர்ந்தேன். பக்கத்து நாற்காலில் என் மடிக்கணினியை வைத்தபோது, 'என்னை அவமானப்படுத்திட்டியே' என்று அது பரிதாபமாக அழுவதுபோல் ஒரு பிரமை.

பின்னால் திரும்பிப் பார்த்தபோது, கடைசி வரிசை நாற்காலிகளில் ஒன்றில்கூட முதுகுப்புறம் காணவில்லை. இது யாருடைய வேலையாக இருக்கும் என்று யோசித்தபோது அதிபுத்திசாலித்தனமான அந்த விஷயம் புரிந்தது, முதல் வரிசைகளிலிருந்த நாற்காலிகள், ரசிகர்களின் அன்பு தாங்காமல் புறமுதுகு காட்டி உடைந்துவிடுகிறபோதெல்லாம், அவற்றைக் கடைசி வரிசைக்குத் தள்ளிவிட்டிருக்கிறார்கள். ஏனெனில், கடைசி வரிசையின் பின்னால்தான் சுவர் இருக்கிறதே, சாய்ந்துகொள்ள முதுகு தேவையில்லையே !

இந்தப் புதிய ஞானத்தை எப்படிப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று நான் சிந்தித்துக்கொண்டிருந்தபோது, திடுதிப்பென்று விளக்குகளை அணைத்துப் படம் போட்டுவிட்டார்கள்.

படம் எனக்குப் பிடித்திருந்தது. ஆரம்ப சொதப்பல்களையெல்லாம், கடைசி முக்கால் மணி நேரத்தில் ஒழுங்குசெய்திருக்கிறார் இயக்குனர். என்றாலும், படத்தில் பல விஷயங்கள் தெளிவில்லை. ரஜினியின் எந்தப் படமும் இந்த அளவு குழப்பமான திரைக்கதையோடு இருந்ததில்லை என்று தோன்றியது. மக்கள் இதை எப்படிப் புரிந்துகொண்டு திரும்பத் திரும்ப தியேட்டர் வருகிறார்களோ. அந்த தேவுடாவுக்குதான் வெளிச்சம் !

அப்புறம் ஒரு விஷயம், ஜோதிகாவின் அந்தச் 'சந்திரமுகி' ஆட்டத்தைப் பிரமாதம் என்று வர்ணிப்பதெல்லாம் அநியாயம் என்று தோன்றுகிறது. அநியாயத்துக்கு மேக்-அப் அணிந்துகொண்டு, பார்வையற்றவர்போல விழிகளை எங்கோ திருப்பிவைத்துக்கொண்டு உருட்டுவதைப் பார்த்து பயந்து பாராட்டிவிடுகிறார்களோ என்னவோ, 'இது காசு மாலை, இது நெத்திச் சுட்டி', என்று சரவணனிடம் சந்திரமுகியின் நகைகளை எடுத்துக் காண்பிக்கும்போது, அந்த முட்டைக் கண்களில் தெரிகிற பரவசம், மிக இயற்கை, அழகு. ஆனால், மிச்சமெல்லாம் அதீதமான செயற்கை, சுத்தமாகப் பொருந்தவில்லை !

ஆனால் ஒன்று, படம் கொஞ்சமும் போரடிக்காமல் நன்றாகச் செல்கிறது. தயாரிப்பாளர்களும் அது ஒன்றைமட்டுமே மனதில் வைத்துத் தயார் செய்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். முழு வெற்றியடைந்திருக்கிறார்கள்.
 
வேறென்ன சொல்வது, பி. வாசுவுக்கு (மறு) வாழ்வு !


ஒரு அவசர வேலையாக மும்பை சென்றிருந்தேன்.

மும்பையில் இப்போது சரியான மழைக்காலம். ஆகவே, நான் தங்கியிருந்த இடத்திலிருந்து வெளியே வந்து டாக்ஸியில் ஏறுவதற்குள் முச்சூட நனைந்துவிடும்படியிருந்தது.

ஒருவேளை மழை பெய்யாவிட்டால், சாலையெங்கும் பரபரப்பு வாகனங்கள், காற்றில், அனுமதிக்கப்பட்ட அளவைப்போல, கார்பன் மோனாக்ஸைடு இரு மடங்குக்குமேல் இருப்பதாக 'சர்வோ'வின் எலக்ட்ரானிக் அறிவிப்புப் பலகைகள் அறிவிக்கின்றன. இதற்கு மும்பைவாழ் மக்களும் அரசாங்கமும் எதுவுமே செய்வதில்லையா என்று தெரியவில்லை.

ஐந்து நாள் தங்கலில், ஒரே ஒரு நாள்தான் வெளியே செல்லும் வாய்ப்புக் கிடைத்தது. அப்போதும், முக்கால் மணி நேர நடையில், மூன்று மழைகள் !

இந்த மழைகளின்போது எனக்கு ரொம்ப ஆச்சரியமளித்த விஷயம், இத்தனை அழுக்காகவும், ஒழுங்கின்றியும் ஒரு பெருநகரம் இருக்கமுடியுமா என்பதுதான்.

பெரிய மழைகூட அவசியமில்லை, சின்னச் சின்ன தூறல்களுக்கே பம்பாயின் தார்ச் சாலைகள் அகலத் திறந்துகொள்கின்றன. சாலையோரம், நடு ரோடு, பிளாட்·பாரம் என்று வித்தியாசமில்லாமல் எங்கு பார்த்தாலும் சேறும், அழுக்குத் தண்ணீரும்.

பம்பாய் மொத்தமுமே, ஒரு பெரிய அழுக்குக் குட்டைபோல்தான் தெரிகிறது. சாலையில் நடப்பதற்கே அருவருப்பாக இருக்கிறது. எங்கு பார்த்தாலும் அழுத்தமான கறுப்புக் கறை படிந்த சுவர்களும், கூரைகளும், கதவுகளும், நசநசத்த குறுக்கு வீதிகளும் எரிச்சலூட்டுகின்றன. மழையில் படிப்படியாக நசிந்துகொண்டிருக்கும் மகாப் பழசான வீடுகளைப் பார்த்தால், எந்த நிமிடம் தடுமாறி விழுமோ என்றிருக்கிற இவற்றில் மக்கள் எப்படி தைரியமாக வசிக்கிறார்களோ என்று பயமாயிருக்கிறது.

நடந்துகொண்டேயிருக்கும்போது திடீரென்று மழை தொடங்குகிறது. பூஜ்ஜியத்திலிருந்து நூறுக்குச் செல்லும் அதி நவீன கார்களைப்போல, விருட்டென்று கனமழையாகி, அடுத்த நான்காவது நிமிடம் நின்றுவிடுகிறது.

ஆனால், அதன்பிறகு மீண்டும் தொடர்ந்து நடக்கமுடியாதபடி எங்கு பார்த்தாலும் வட்டவட்டமாகச் சேற்றுக் குட்டைகள். அவற்றைக் கொஞ்சமும் கண்டுகொள்ளாமல், எப்போதும்போன்ற பரபரப்புடன் ஓடுகிற மும்பைவாசிகளைப் பின்பற்ற என்னால் முடியவில்லை. எங்கே கால் வைத்தாலும் வழுக்குகிறது. அழுக்குத் தரையில் தவறி விழுந்துவிடுவோமோ என்று பயமாயிருக்கிறது.'

அவசரமாக ஒரு டாக்ஸியைப் பிடித்துக்கொண்டு ரூமில் வந்து விழுந்தேன்.

ஒரு வாரத்தில் அங்கிருந்து தப்பித்துக் கிளம்பிவிட்டேன். ஆனால், பல விஷயங்களில் பெங்களூரும் மெல்லமெல்ல பம்பாய்போல் மாறிக்கொண்டிருக்கிறது என்பதை நினைத்தால்தான் ரொம்ப பயமாயிருக்கிறது.


இந்த வாரக் குறும்பு :

"Treasure Chest"

- எம். ஜி. ரோட்டில் கடந்து சென்ற ஒரு பெண்ணின் டி ஷர்ட்டில் படித்தது


இந்த வாரக் கேள்வி :

'ரவீந்திரநாத் தாகூர், ஜன கன மண பாட்டு எழுதும்போது, மரியாதையாக எழுந்து நின்றுகொண்டுதான் எழுதினாரா ?'

- மும்பையின் 'Mid Day' இதழில் வாசித்தது

 

PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2005 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |