ஜூலை 21 2005
தராசு
வ..வ..வம்பு
முச்சந்தி
உள்ளங்கையில் உலகம்
மனம் போன போக்கில் மனிதன் போகலாமா?
ஹல்வா
டெலிவுட்
கவிதை
பேட்டி
கட்டுரை
தொடர்கள்
நையாண்டி
 
  முதல் பக்கம்
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
முச்சந்தி : ஒடிஸி
- என். சொக்கன் [nchokkan@gmail.com]
| Printable version | URL |
"போதாக்குறைக்கு, ஒழுங்காகப் பத்தி பிரிக்காமல் கசகசவென்று ஒரே பத்தியில் எல்லாவற்றையும் அடக்குகிற பாணி, நூலை ரசிப்பதற்கான மிகப் பெரிய தடை."

ஹோமர் எழுதிய புகழ்பெற்ற காவியமான 'ஒடிஸி'யின் எளிமையான ஆங்கில வடிவத்தைப் படித்துக்கொண்டிருக்கிறேன். சுவாரஸ்யமான இந்தப் படைப்பை, அதிலிருக்கும் தந்திர அம்சங்களுக்காகவே மிகவும் விரும்பி ரசிக்கமுடிகிறது.

ஒடிஸிஸ் அல்லது உலிஸிஸ் என்ற மாவீரனின் கடற்பயணங்களை விவரிக்கும் இந்த நூலில், கதாநாயகனும், அவனது படைவீரர்களும் சந்திக்கிற ஒவ்வொரு சம்பவமும், விறுவிறுப்பான வேகத்துடன் விவரிக்கப்பட்டுள்ளது. (மூலக்கதையிலேயே அப்படியா, அல்லது நான் வாசிக்கும் ஆங்கில வடிவம் இப்படிக் கட்டமைக்கப்பட்டிருக்கிறதா என்று தெரியவில்லை)

உதாரணமாக, வாசித்தவரையில் என்னை மிகவும் கவர்ந்த ஒற்றைக்கண்ணன் கதை.

உலிஸிஸ¤ம், அவனது படை வீரர்களும் ஆளரவமில்லாத ஒரு தீவில் வந்து இறங்குகிறார்கள். தூரத்தில் எங்கோ புகை வருவதைப் பார்த்து, அங்கே யார் இருக்கிறார்கள் என்று விசாரித்துவருவதற்காக, உலிஸிஸ் தலைமையில் ஒரு சிறு கூட்டம் செல்கிறது.

அங்கே ஒரு குகை இருக்கிறது. ஆனால், அதனுள் யாரும் வாழ்வதற்கான அடையாளங்கள் இல்லை. என்ன செய்யலாம் என்று அவர்கள் யோசித்துக்கொண்டிருக்கும்போது, தூரத்தில் ஒரு மாபெரிய ராட்சஸன் வருகிறான்.

அவன் முகத்தில் ஒரே ஒரு கண்தான் இருக்கிறது. நெற்றியின் நடுமத்தியில் ஒற்றைக் கண், நீண்டு தவழும் பரட்டை முடி என்று ஆஜானுபாகுவாக நடந்து வரும் அவன், சில செம்மறி ஆடுகளை மேய்த்துவிட்டுத் திரும்பிவருகிறான் என்று தெரிகிறது.

அந்த ஆடுகளைத் தனது குகைக்குள் அனுப்பிவிட்டு, அவனும் உள்ளே நுழைந்து, ஒரு பெரிய பாறையால் குகை வாசலை மூடிவிடுகிறான். பின்னர், நெருப்பை மூட்டி வெளிச்சம் ஏற்றுகிறான்.

அப்போதுதான், உலிஸிஸ் கோஷ்டியை கவனிக்கிறான் அவன், 'யார்ப்பா நீங்க ? கடற்கொள்ளையர்களா ?', என்று விசாரிக்கிறான்.

'இல்லைங்க சார், வழி தவறி வந்துட்டோம். எங்களைக் காப்பாத்துங்க', என்று பரிதாபமாகக் கெஞ்சுகிறார்கள் அவர்கள்.

அந்த ஒற்றைக்கண்ணனின் பாஷையில், காப்பாற்றுவது என்றால் என்ன அர்த்தமோ, சடாரென்று உலிஸிஸின் கும்பலில் இரண்டு பேரைப் பிடித்துத் தின்றுவிடுகிறான் அவன். கூடவே, இரண்டு பெரிய குடத்தில் பால் குடித்துவிட்டு, பெரிய ஏப்பத்துடன் தூங்கப்போகிறான்.

இதைப் பார்த்ததும், உலிஸிஸ் உள்ளிட்ட மற்றவர்களுக்கு நடுக்கமாகிறது. அந்த கடோத்கஜனின்மீது பாய்ந்து கொன்றுவிடலாம் என்று உலிஸிஸ¤க்கு ஆத்திரமாக வருகிறது. ஆனால், அப்படி அவனைக் கொன்றுவிட்டால், ராமாயணத்து வாலியைப்போல, மூடிய இந்த குகைக்குள்ளேயே அவர்கள் சிக்கிக்கொண்டு சாகவேண்டியதுதான். ஏனெனில், குகை வாசலில் இப்போது இருக்கிற பெரிய பாறையை நகர்த்துவதற்கு, இந்த ஒற்றைக்கண்ணனைத்தவிர வேறு யாராலும் முடியாது.

இந்தச் சிந்தனையோடு அவர்களின் ராப்பொழுது கழிகிறது. மறுநாள் காலை துயிலெழுகிற ஒற்றைக்கண்ணன், உலிஸிஸ் கும்பலில் இன்னும் இருவரைப் பிடித்துத் தின்று தண்ணீர் குடிக்கிறான். பின்னர், வாசல் பாறையை நகர்த்தி, குகையைத் திறந்து, ஆடுகளோடு வெளியேறுகிறான், பழையபடி குகையை மூடி, அவர்களை உள்ளேயே சிறை வைத்துவிட்டுப் போய்விடுகிறான்.

இப்போது, உலிஸிஸ் சுதாரித்துக்கொள்கிறான், எப்படியாவது இந்த ராட்சஸனைக் கொன்றாகவேண்டும் என்று தீர்மானித்துக்கொண்டு, ஒரு பெரிய கட்டையை நெருப்பில் காட்டிச் சூடேற்றுகிறான்.

மாலை, 'சைக்ளோப்ஸ்' என்ற அந்த ராட்சஸன், ஆடுகளோடு திரும்புகிறான். சூடேறிய கட்டையை ஒளித்துவைத்துவிட்டு, அவனுக்கு ஏராளமாக மது ஊற்றித் தருகிறான் உலிஸிஸ். (ஆளரவமில்லாத அந்தக் குகையைச் சோதிக்கவந்தபோதே, அவர்கள் மது பாட்டில்களோடுதான் வந்தார்களா என்று தெரியவில்லை !)

காட்டமான அந்த மதுவைக் குடித்துவிட்டுத் தள்ளாடும் சைக்ளோப்ஸ், 'பேஷ், பேஷ், ரொம்ப நழ்ழாயிருக்கு', என்று வாய் குழறுகிறான், உலிஸிஸிடம், 'ரொம்ப நன்றிப்பா, இப்படி அட்டகாசமான ஒரு சமாச்சாரத்தை எனக்குக் கொடுத்திருக்கிறாய். பதிலுக்கு, நான் உனக்கு ஒரு பரிசு தருகிறேன்', என்கிறான்.

'என்ன பரிசு ?', ஆவலோடு கேட்கிறான் உலிஸிஸ். சாராயத்தில் மயங்கிய இந்த ராட்சஸன், இந்தச் சிறையிலிருந்து தன் கூட்டத்துக்கு விடுதலை கொடுத்துவிடுவான் என்று அவனுடைய எதிர்பார்ப்பு.

ஆனால், ராட்சஸன் அந்த அளவுக்குக் கருணையுள்ளவனாக இல்லை, 'இந்தக் கூட்டத்தில் மற்ற எல்லோரையும் தின்றபிறகு, கடைசியாகதான் உன்னைத் தின்பேன், அதுதான் உனக்குப் பரிசு', என்று சொல்லிவிடுகிறான்.

உலிஸிஸ¤க்கு எரிச்சல், 'இருடா மவனே', என்று மனதுக்குள் கருவிக்கொண்டு, மது குடித்த ராட்சஸன் மயங்கித் தூங்கும்வரை காத்திருக்கிறான்.

பின்னர், அவர்கள் அந்த மரக்கட்டையை எடுத்து, மேலும் சூடேற்றுகிறார்கள். (இப்படித் தொடர்ந்து நெருப்பில் காட்டிக்கொண்டே இருந்தால், மரக்கட்டை எரிந்துபோய்விடாதோ ?)

ஒருவழியாக, அந்த மரக்கட்டை நன்கு சூடேறியபிறகு, நான்கைந்து பேராக அதைத் தூக்கி, சைக்ளோப்ஸின் ஒற்றைக்கண்ணில் செலுத்துகிறார்கள், 'என்னுடைய வீரர்களை அநியாயமாகக் கொன்றதற்கு இதுதான் தண்டனை', என்றபடி ஆவேசமாக அவன் கண்ணில் குத்துகிறான் உலிஸிஸ்.

வலியில் அலறித் துடிக்கிறான் சைக்ளோப்ஸ், இருந்த ஒரு கண்ணிலும் பார்வை போய்விட்டது அவனுக்கு.

ஆகவே, அவனால் உலிஸிஸ் கும்பலில் யாரையும் எட்டிப் பிடிக்கமுடியவில்லை. ஆனால், அவர்கள் எல்லோரும் கண்டிப்பாக குகைக்குள்தான் இருக்கிறார்கள் என்று அவனுக்குத் தெரியும். ஆகவே, அவர்களை அப்படியே உள்ளே சிறை வைத்து, பட்டினி போட்டு அழித்துவிடுவது என்று முடிவுக்கு வருகிறான்.

ஆனால், உலிஸிஸ் கும்பல் அதைவிட புத்திசாலித்தனமாக ஒரு வேலை செய்கிறார்கள். ஒற்றைக்கண்ணனின் (இப்போது பூஜ்ஜியக் கண்ணன்) செம்மறியாட்டுக் கூட்டத்திலிருந்து பெரிய ஆடுகளைத் தெர்ந்தெடுத்து, அவற்றோடு, தனது படை வீரர்கள் ஒவ்வொருவரையும் கட்டிப்போட்டுவிடுகிறான் உலிஸிஸ்.

இதனால், அடுத்தமுறை ஒற்றைக்கண்ணன் தனது ஆடுகளை மேய்ச்சலுக்கு வெளியே அழைத்துச்செல்லும்போது, ஆடுகளோடு, இவர்களும் குகையிலிருந்து வெளியே வந்துவிடுகிறார்கள். ஒவ்வொரு ஆடாக முதுகு தடவிப் பார்த்து வெளியே விடும் ஒற்றைக்கண்ணன், அதில் கட்டப்பட்டிருக்கும் வீரர்களைப் பார்க்கமுடியவில்லை.

கடைசி ஆட்டில் தொற்றிக்கொண்டு உலிஸிஸ¤ம் வெளியே வந்துவிடுகிறான். எல்லோரும் தங்களின் படகை நோக்கி ஓடுகிறார்கள்.

போனவர்கள் சும்மாப் போகவேண்டியதுதானே ? தங்களுடைய படகுக்கு வந்துவிட்டோம் என்கிற பாதுகாப்பின் தைரியத்தில், 'ஏ மடையா, உன்னை ஏமாற்றிவிட்டோம் பார்த்தாயா ?', என்று சவாலாகக் கூச்சலிடுகிறார்கள்.

ஒற்றைக்கண்ணனுக்குப் பார்வைதான் போய்விட்டது, ஆனால், காது நன்றாகக் கேட்கிறதே. சரியாகச் சப்தம் வருகிற திசையைப் பார்த்து, பெரிய பாறை ஒன்றை எடுத்து வீசுகிறான்.

நல்லவேளையாக, அந்தப் பாறை படகில் மோதவில்லை. ஆனால், படகுக்கு மிக அருகில் வந்து விழுவதால், பெரிய அலைகள் எழுந்து, அவர்களைத் தள்ளாடவைக்கின்றன.

அப்போதும் உலிஸிஸ் சும்மா இருக்கவில்லை. பாய்மரத்தின் உச்சிக்கு ஏறி, 'அடேய், உன் பார்வையைப் போக்கியது, உலிஸிஸ் என்ற மாவீரன்', என்று ஆக்ரோஷமாகக் கத்துகிறான்.

ஆத்திரத்தில் மறுபடி இன்னொரு பெரிய பாறையைத் தூக்கி வீசுகிறான் சைக்ளோப்ஸ். அந்தப் பாறை, படகுக்குச் சற்று முன்னால் விழுகிறது. ஆகவே, மீண்டும் பெரிய அலைகள் எழுந்து, அவர்களுடைய படகை எதிர் திசையில் நகர்த்திச்செல்கிறது.

இப்படியாக, அவர்கள் அந்த ஒற்றைக்கண்ணனின் சிறையிலிருந்து தப்புகிறார்கள். அதன்பிறகும், அவர்களுக்கு நிம்மதியில்லை, பக்கம்பக்கமாக ஏகப்பட்ட சாகசங்கள் காத்திருக்கின்றன. கிட்டத்தட்ட இருபது வருடங்களுக்குப்பின் சொந்த ஊருக்குத் திரும்பினால், அங்கேயும் ஏகப்பட்ட சண்டை, சச்சரவுகள். (நம் ஊர் ராமாயணத்தைப்போல, வில்லை வளைக்கிற ஸீன்கூட ஒன்று இருக்கிறது). ஏகப்பட்ட கஷ்டங்களுக்குப்பிறகுதான் தன் பதவியையும், மனைவி, மகனையும் திரும்ப அடைகிறான்.

காவியங்களின் கதாநாயகனாக இருப்பது அத்தனை சுலபமில்லை !


இந்த வார ஏமாற்றம் :

'மிஸ்டர் கிச்சா' என்ற தலைப்பில், கிரேஸி மோகனின் நகைச்சுவைக் கதைகள் (கட்டுரைகள் என்கிறார் முன்னுரையில் சுஜாதா) தொகுப்பு.

எல்லாக் கதைகளும் சுவாரஸ்யமானவைதான். என்றாலும், தொகுப்பெங்கும் ஒருவித முழுமையற்ற தன்மை தெரிகிறது. சில வாரங்களுக்குமுன் படித்த ஜே. எஸ். ராகவனின் 'வரி வரியாகச் சிரி'  தந்த நிறைவு, கிரேஸி மோகனின் இந்தத் தொகுப்பில் இல்லை.

இத்தனைக்கும், கிரேஸி மோகனின் நாடகங்கள், சினிமாக்களைப் பார்த்து, விழுந்து விழுந்து சிரிக்கிறவன் நான். ஆனால், இந்த நகைச்சுவைக் கதைகள் மிகவும் அசிரத்தையோடு எழுதப்பட்டதுபோல் தொனிக்கின்றன. அல்லது, பத்திரிகை அவசரங்களுக்கு எழுதியவையாக இருக்கலாம். சில கதைகளில் அதீதமான மிகைப்படுத்துதலும், நாவல்சுருக்கம்போலக் கதை சொல்வதும் ஒட்டவே இல்லை.

போதாக்குறைக்கு, ஒழுங்காகப் பத்தி பிரிக்காமல் கசகசவென்று ஒரே பத்தியில் எல்லாவற்றையும் அடக்குகிற பாணி, நூலை ரசிப்பதற்கான மிகப் பெரிய தடை. தவிர, நூலெங்கும் ஏகப்பட்ட அச்சுப்பிழைகள், ஒரே வாக்கியம் மீண்டும் வருவது என்று ரொம்பக் கஷ்டம். கிழக்கு பதிப்பகம் கவனிக்கவேண்டும்.


இந்த வார ஆச்சரியம் :

'ஓம் சரவணபவ' மாத இதழுடன், இந்தியச் சித்தர்களைப்பற்றிய 128 பக்க நூலை (ஆசிரியர் : ஜெகாதா) இலவசமாகத் தருகிறார்கள். இருபது ரூபாய் மாத இதழுக்கு, நாற்பது ரூபாய்ப்(?) புத்தகம் இலவசமாம்.

'நக்கீரன்' குழுமத்திலிருந்து வெளிவரும் இதழ் 'ஓம் சரவண பவ', கடந்த சில இதழ்களாகவே, இவர்கள் இந்தப் புத்தக இலவசங்களைத் தொடர்ந்துகொண்டிருப்பதில் ஒரு வியாபார சூட்சுமம் இருக்கிறது - முதலில் திருக்குறள், அதன்பிறகு பாரதியார் கவிதைகள், சென்ற மாதம் சுந்தர காண்டம், இந்த மாதம் சித்தர்கள் - எல்லாப் புத்தகங்களையும் முதலில் இலவசமாகக் கொடுப்பதற்காக வடிவமைத்து, பின்னர் அவர்களுடைய குழுமத்தின் 'சாருப்ரபா பதிப்பகம்'மூலமாகத் தனியே புத்தகமாகவும் விற்பனைக்குக் கொண்டுவந்துவிடுகிறார்கள்.

விகடனும் சமீபகாலமாக நூல்கள் பதிப்பதில் அதிக ஆர்வம் காட்டுகிறது. மாதத்துக்கு நான்கு புத்தகம் என்று, வார இதழ் கணக்காக வண்ணமயமான புத்தகங்களை வெளியிடுகிறார்கள். இவற்றில் ஒன்றிரண்டைத்தவிர, மீதி எல்லாமே விகடன் குழுமத்தின் இதழ்களில் தொடர்களாக வெளிவந்தவைதான்.

அபூர்வமாக, நேரடி நூல்களும் வெளியிடுகிறார்கள். அந்த வகையில் சமீபத்தில் வந்த எஸ். ராமகிருஷ்ணனின் குழந்தைகள் நாவலை வாசிக்கக் காத்திருக்கிறேன்.

PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2005 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |