ஜூலை 21 2005
தராசு
வ..வ..வம்பு
முச்சந்தி
உள்ளங்கையில் உலகம்
மனம் போன போக்கில் மனிதன் போகலாமா?
ஹல்வா
டெலிவுட்
கவிதை
பேட்டி
கட்டுரை
தொடர்கள்
நையாண்டி
 
  முதல் பக்கம்
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
பேட்டி : பெரியாருடன் பேட்டி - பாணன்
- [feedback@tamiloviam.com]
| Printable version | URL |

(நன்றி : கலைமகள் இதழ்
தொகுப்பு : தொகுப்பாசிரியர் - கீழாம்பூர் : கலைஞன் பதிப்பகம்)

எழும்பூர், பெரியார் திடலிலுள்ள 'விடுதலை' அலுவலகத்தை ஒட்டி அமைந்துள்ள இருக்கையில் பெரியார் ஈ.வெ.ராமசாமி அவர்கள் கட்டிலில் அமர்ந்திருக்கிறார்.  'கலைமகள்' பற்றி அருகிலுள்ள 'விடுதலை' நிர்வாகி திரு. சம்பந்தத்திடம் விசாரித்தவாறு என்னை அன்புடன் வரவேற்று, "உட்காருங்க!" என்றார். பனியனுக்கு மேல் தமக்குப் பிடித்த கறுப்புச் சட்டை அணிந்திருக்கிறார். வெண்மையான முடியும் தாடியும் இவரது சிவந்த மேனிக்கு அளிக்கும் காம்பீர்யமே அலாதிதான். வட்டமான மூக்குக் கண்ணாடியின் வழியே ஊடுருவிப் பார்த்து,

"என்ன கேக்கப் போறீங்க? கேளுங்க!" என்கிறார்.

"நீங்கள் எதுவரை படித்திருக்கிறீர்கள்?" என்று கேட்கிறேன்.

"எட்டு ஒன்பது வயசு வரைக்கும் ஈரோட்டிலே திண்ணைப் பள்ளிக்கூடத்திலே படிச்சேன். அப்புறம், ஒரு ரூபாய் கொடுத்து அம்மை குத்திக் கொண்டு, 'மாடல் ஸ்கூல்'லே சேர்ந்து படிச்சேன். நாலாவது அதாவது '·போர்த் ஸ்டாண்டர்ட்' வரைக்குந்தான் படிச்சேன். அதுக்கு மேலே படிக்க முடியல்லே. கடைக்கு வந்துட்டேன்."

"உங்கள் தகப்பனாரின் கடையா?"

"ஆமாம். கடையிலே மூட்டைக்கு விலாசம் போடறது முதலான எல்லா வேலைகளையும் கவனிச்சுக்கிட்டிருந்தேன்."

"உங்கள் அண்ணா அதிகம் படித்தாரா?"

"அவரு படிச்சாரு. லோயர் ·போர்த் ·பாரம் வரை படிச்சாரு. அந்தக் காலத்தில் 'அப்பர்' ·போர்த் ·பாரம் படிச்சிருந்தா தாசில்தார் பதவி வரைக்கும் போகலாம்."

"தினமும் குளிப்பதில் உங்களுக்கு அவ்வளவாக விருப்பம் இல்லை என்று சொல்கிறார்களே! அது மெய்தானா?"

"குளிக்க வேணுங்கிற ஞாபகமே எனக்கு வர்றதில்லை. அதை ஒரு தொந்தரவாகவே நினைக்கிறேன். இப்ப நான் குளிச்சி ஆறு நாள் ஆச்சு! அந்தக் காலத்திலே, நான் சின்னப் பையனா இருந்தப்போ, எங்க வீட்டிலே எல்லோரும் தவறாமே குளிப்பாங்க. சந்தைக்குப் போய் வந்தா குளிப்பாங்க. போன இடத்திலே பல பேர் மேலே பட்டிருப்போமே, தீட்டாயிருக்குமே என்று குளிப்பாங்க. ஏன் கக்கூஸ் போயிட்டு வந்தாக்கூடக் குளிப்பாங்க. 'தீட்டு', 'தொடக்கூடாது' என்பதெல்லாம் அவ்வளவா லட்சியமில்லை எனக்கு. வீட்டிலே என்னை அடக்கிப் பார்த்தாங்க. முடியல."

"நீங்க எவ்வாறு நாத்திகரானீர்கள்?"

"நான் அதுக்காகன்னு ஒண்ணுமே படிக்கல்லே; ஆராய்ச்சி பண்ணலே. பக்குவம் அடையலே. என் பகுத்தறிவுக்கு எட்டினதைச் சொல்றேன்."

" 'கடவுள் இல்லை' என்று சொல்ல உங்களுக்கு இருக்கிற மாதிரி ஆத்திகர்களுக்குக் 'கடவுள் இருக்கிறார்' என்று சொல்லவும் உரிமை உண்டல்லவா? பின் எதனால் 'கடவுளை நம்புகிறவன் காட்டுமிராண்டி' என்றெல்லாம் கூறுகிறீர்கள்?"

"எதனால் கடவுள் இருக்கிறார்னு நீங்க சொல்றீங்க? சம்பாதிச்சவன், லாபம் அடைஞ்சவன் எவனும், 'எல்லாம் கடவுளாலே கிடைச்சுது'ன்னு சொல்றதில்லையே! தன்னுடைய திறமையாலே கிடைச்சதுன்னுதானே நினைக்கிறான்? கடவுளை நம்பி மேன்மை அடைஞ்சவன், 'இதெல்லாம் கடவுள் சக்தி'ன்னு சொல்லுறானா? திருட்டுப் போனால் போலீசுக்குத் தகவல் சொல்கிறோம். பணம் இருந்தால் பெட்டியிலே வச்சுப் பூட்டறோம். இதெல்லாம் கடவுள் செயலா? இதுக்கெல்லாம் கடவுள் எதுக்கு? கடவுள் இருக்காருன்னு சொல்ல உரிமை உண்டுங்கறீங்க. சோறு திங்க உரிமை உண்டு; சாணி திங்க உரிமை உண்டான்னு கேட்கிறேன். இருக்கிற வரைக்கும் கடவுள், சாமின்னு சொன்னவங்க என்ன சுகத்தைக் கண்டாங்க?"

....

"ஈரோட்டில் உள்ள ஒரு பிள்ளையார் கோவிலுக்கு நீங்கள் 'டிரஸ்டி' என்று சொல்லுகிறார்களே; அது உண்மைதானா?"

"ஆமாம். அது முதல்லே பிள்ளையார் கோயிலா அமையல்லே. எனக்குக் குழந்தை இல்லையே என்று பெரியவங்க நாகப் பிரதிஷ்டை செய்தாங்க. 1898-ஆம் வருடம் அரச மரத்துக்கும் வேப்ப மரத்துக்கும் கல்யாணம் செஞ்சு வச்சாங்க. குழந்தை பிறக்கல்லே. அங்கே அப்புறந்தான் பிள்ளையார் வந்தத்து."

"கல்லூரிகளையெல்லாம் மூடிவிட வேண்டும் என்று சொன்னீர்கள் இல்லையா?"

"ஆமாம், சொன்னேன்."

"நீங்களே லட்சக்கணக்கில் பணம் உதவித் திருச்சியிலே ஒரு கல்லூரி ஏற்பட உதவி செய்தீர்கள். அதை எல்லாருமே ஒருமுகமாகப் பாராட்டுகிற நிலையிலே, கல்லூரிகளை மூட வேண்டுமென்று ஏன் சொன்னீர்கள்?"

"நான் எதிர்பார்ப்பது நடைபெறவில்லை. படிச்சவனுக்கு வேலை கிடைக்கல்லியே! ஒரு பையன் எட்டாம் வகுப்பு வரைக்கும் படிச்சா, உடல் உழைப்பிலே அவன் நம்பிக்கை இழக்கிறான். வேலையில்லாத் திண்டாட்டம் அதிகமாயிடுத்து. உதாரணம் சொல்றேன். 1940-இல் கம்மானுக்கு 9 அணா 10 அணா கூலி கொடுத்தேன். கொல்லத்துக்காரனுக்கு ஒரு நாள் சம்பளம் 12 அணா. பெண் பிள்ளைக்கு ஒரு அணாதான் கூலி. இன்னிக்கு எட்டு ரூபா பத்து ரூபா கூலி கேட்கிறாங்க. காரணம், ஜனங்க எண்ணம் படிப்பிலே ஈடுபட்டது. கொஞ்சம் படிச்சவன் மண்வெட்டி கையிலே எடுக்கிறது கௌரவக் குறைச்சல்னு நினைக்கிறான். வேலைக்கு ஆள் இல்லை. இன்னொரு பக்கம் படிச்சவனுக்கு வேலையில்லை; வேலையில்லாத் திண்டாட்டம். காலேஜ் இருந்து என்ன உபயோகம்?"


"நீங்க எப்பொழுதுமே, எந்தக் கட்சி பதவிக்கு வருகிறதோ அதைத்தான் ஆதரிக்கிறதென்று ஒரு கொள்கை வைத்துக் கொண்டிருப்பதாகப் பலர் கூறுகிறார்கள். அது பற்றி என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?"

"ஆளும் கட்சியை நமக்கு வசப்படுத்தப் பார்ப்பேன். நம்ம கொள்கையை அவங்க ஏற்றுக் கொண்டால் தொடர்ந்து ஆதரிப்பேன். எதிர்த்தால் ஒழிக்க முயற்சி செய்வேன்."


மதுவிலக்குக் கொள்கை பற்றி வினவுகிறேன்.

"குடிப்பது தவறில்லை. கள் குடிச்சுச் செத்தவங்க எவ்வளவு பேர், சொல்லுங்களேன்! நான் குடிக்கிறதில்லை. எப்படியோ அந்தப் பழக்கம் எனக்கு ஏற்படாமே இருந்திருக்கு. ஆனால் நண்பர்களுக்கு வாங்கிக் கொடுத்திருக்கேன். கள்ளுக் கடையெல்லாம் மூடியிருந்தாங்களே, அப்போ குடிக்காமே இருந்தாங்க! ஒருத்தரும் அப்போ குடியைத் தடுக்கல்லே! வருமானம் குறைஞ்சதுதான் மிச்சம்! திருட்டுத்தனமாகக் குடிச்சாங்க. திருட்டுப் போறதைத்தான் நான் சொல்லுவேன். பிடித்துக் கொடுக்கிறது என் வேலையில்லையே! ஜனங்க சோம்பேறி ஆனதுக்குக் காரணமே மது ஒழிப்புதான். கூலி உயரக் காரணம் இதுதான். சினிமாவுக்குப் போறதைவிட இது நல்லதுதான்."

"இன்றைய சமுதாயம், முப்பது நாற்பது வருஷங்களுக்கு முன்பிருந்த நிலையிலிருந்து மாறுபட்டுள்ளது என்பதை மறுக்க முடியாது. இளைஞர்களீடையே முற்போக்கான கொள்கைகள் பரவி வருகின்றன. சாதி வேறுபாடுகள் குறைந்து வருகின்றன. இருந்தும், தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்களையே, அவர்கள் பிராமணர்கள் என்ற காரணத்துக்காகத் 'தமிழர் அல்லர்' என்று சொல்லுகிறார்கள். 'கைபர் கணவாய் வழி வந்தவர்கள்' என்றுகூடப் பேசுகிறார்களே, இதை நீங்கள் ஆதரிக்கிறீர்களா?"

பெரியார் சிரித்தவாறு, "ஏன், என்னையே தமிழன் இல்லைன்னு சொல்றாங்களே? என் தாய்மொழி கன்னடம் என்பதாலே சொல்றாங்க. பெரும்பாலானவங்க என்னைத் தெலுங்கர் - நாயுடு என்றே நினைக்கிறாங்க. ஜஸ்டிஸ் பார்ட்டியை ஆரம்பிச்சது சுயமரியாதைக் கொள்கைக்குத்தானே? அதை ஆரம்பிச்சது யார்? சர் பி.டி. செட்டியார் - தெலுங்கர். டி.எம். நாயர் - மலையாளி; நான் - கன்னடத்துக்காரன். தமிழன் யார் இதைச் செய்தான்? நான் தெலுங்கில் பிரசங்கம் செய்வேன். ஆனால் அந்த அளவுக்குத் தாய்மொழி கன்னடத்தில் பிரசங்கம் செய்ய முடிவதில்லை."

"தமிழைக் 'காட்டுமிராண்டி பாஷை' என்று நீங்கள் குறிப்பிட்டீர்களே...?"

"ஆமாம், சொன்னேன். என்ன தப்பு? ஒருத்தனோடு ஒருத்தன் சண்டை போட்டுக்கிட்டுத் தமிழில் திட்டறானே - எப்படித் திட்டறான்? சண்டைக்காரனை மட்டுமா திட்டறான்? அவன் அம்மா, அப்பா, அக்கா, பொண்டாட்டி - எல்லாரையும்னா இழுக்கிறான்? (இந்த இடத்தில் சில நடைமுறைத் தமிழ் வசவுகளை உதாரணத்துக்குக் குறிப்பிடுகிறார் திரு. பெரியார்.)

அதே மாதிரி சண்டை வந்து இங்கிலீஷ்லே திட்டினா '·பூல்'னு திட்டலாம்; 'இடியட்'னு திட்டலாம். தமிழிலே திட்டற மாதிரி அவ்வளவு கேவலமாத் திட்டறதுண்டா? அதுவும் கிராமங்களிலே பெண் பிள்ளைங்க சண்டை போட்டுக்கிறதைக் கேட்டா நான் சொல்றது புரியும்!

இந்தி மேலே இருந்த துவேஷம் தமிழ் மேலே அன்பா மாறித்து. அதுதான் உண்மை. குழந்தைகளெல்லாம் வீட்டிலேயே இங்கிலீசில் பேச வேணும். அது நல்ல நாகரிகத்தைக் கொண்டு வரது. ஏன், 'குறளை' எடுத்துக்குங்க! நான் மட்டுந்தான் குறளைக் கண்டிக்கிறேன்!"

"ஏன் கண்டிக்கிறீர்கள்?"

"குறளோடு நின்னுட்டா வளர்ச்சியே குன்றி விடுமேன்னுதான். குறள் ரெண்டாயிரம் வருஷத்துக்கு முந்தினது. பெண்ணை ஆணுக்கு அடிமையாக்கி விட்டது. பெண் ஒழுக்கம் பற்றி எவ்வளவு சொல்லியிருக்கு 'குறள்'லே? ஆண் ஒழுக்கம் பத்தி...? 'தாம் வீழ்வார்...' என்ற குறளைப் பாருங்க! அதுதான் மோட்சம் என்கிறார் வள்ளுவர். அந்தக் காலத்து நாகரீகம் அப்படி. இந்தக் காலத்துக்குக் குறள் கருத்துக்கள் எல்லாமே ஒத்துவர முடியுமா? நான் குறள் மகாநாடு நடத்தியதாலே சில பேர் என்னைக் கண்டிச்சாங்க. கலைஞர் கூட, 'அதை (குறள்) ஒண்ணையாவது விட்டுவிடக் கூடாதா?'ன்னு கேட்டாரு. குன்றக்குடி அடிகளாரும் கேட்டுகிட்டாரு. ரெண்டாயிரம் வருஷத்துக்கு முந்தியது குறள். அதை அப்படியே இப்பவும் நாம ஏத்துக்கணும்னா...?"

தமது சொற்பொழிவுகளில் அவர் சாதியைக் குறிப்பிடுவதுண்டு. அது பற்றிக் கேட்டதற்கு, "மதம், கடவுள் எல்லாம் ரெண்டாயிரம் வருஷங்களுக்கு முன்னே ஏற்பட்டது. அதையே பின்பற்றுவதால் இன்றைய உணர்ச்சி ஜனங்களுக்கு வரவில்லை. நாள்டைவிலே மக்கள் அதிகம் சிந்திப்பாங்க. அவங்க சீர்திருந்த வேண்டுமே என்பதுதான் என் நோக்கம். துவேஷம் இல்லை. துவேஷ அடிப்படையில் சொன்னால்தான் ஜனங்களும் சிந்திப்பாங்க; சீர்திருந்துவாங்க!" என்கிறார் பெரியார்.

தம் மனதுக்குச் சரியென்று படாத எந்தக் கருத்தையும், யார் சொன்னாலும் ஏற்றுக் கொள்வதில்லை. கட்டுப்பாடுகளை அறவே வெறுப்பவர், திரு. ஈ.வெ.ரா.

இதுபற்றி அவர் கூறுகிறார்: "கட்டுப்பாடு எதுவுமே தேவையில்லை என்பவன் நான். இளமையிலேயே நான் எதிலும் கட்டப்பட்டதில்லை. திருடக் கூடாதுன்னா, 'ஏன்?' என்று யோசிப்பேன். அப்பவே திருடறது 'பாவம்'னா அதை ஒப்புக்க மாட்டேன். மதத்தின் பேராலே மக்களுக்குக் கட்டுப்பாடுகளை விதிச்சிருக்காங்க. அதனாலே ஜனங்க ·ப்ரீயா இருக்க முடியல்லே. என் வீட்டிலே வளர்ற இந்தச் சின்னப் பிள்ளைங்க, என்னை 'அப்பா'ன்னு கூப்பிடறாங்க. அன்பா இருக்காங்க. நாளைக்கு இவங்க வளர்ந்து பெரியவங்க ஆனா, சாமி கும்பிடுவாங்களா? மாட்டாங்க! எந்தக் கட்டுப்பாடும் தேவையில்லை. உணவு கட்டுப்பாடுந்தான். உடம்புக்குக் கெடுதி செய்கிற எதையும் திங்க வேண்டாம். ஆனா ஆடி தின்னறவன் மாடு தின்னக் கூடாதா? ஆடும் புல்தான் தின்னறது. மாடும் புல்தான் தின்னறது. மாடு தின்னா 'பாவம்'னு சொல்றாங்க. காரணம், மதக் கட்டுப்பாடுதானே! மனித சமுதாயத்தில் மனத்தை மாத்த வேணும். திருடினால் பாவம்னு சொன்னாப் போதாது. திருட வேண்டிய அவசியம் இல்லாத வகையிலே சமுதாய நிலையை மாத்தணும்."

PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2005 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |