ஜூலை 28 2005
தராசு
வ..வ..வம்பு
முச்சந்தி
கட்டுரை
உள்ளங்கையில் உலகம்
சிறுகதை
இந்து மதம் என்ன சொல்கிறது ?
கவிதை
நூல் அறிமுகம்
தொடர்கள்
 
  முதல் பக்கம்
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
முச்சந்தி : கண்ணில் நிறைந்த பாவை
- என். சொக்கன் [nchokkan@gmail.com]
| Printable version | URL |
"பத்து, இருபது, முப்பது என்று எண்ணும்போது, 'நூறு' வருவதற்குமுன்பே, 'தொன்னூறு' வருகிறது."

பத்து, இருபது, முப்பது என்று எண்ணும்போது, 'நூறு' வருவதற்குமுன்பே, 'தொன்னூறு' வருகிறது.

அதேபோல், நூறு, இருநூறு என்று எண்ணும்போது, 'ஆயிரம்' வருவதற்குமுன்பே, 'தொள்ளாயிரம் வந்துவிடுகிறது.

இது ஏன் ?

சுவாரஸ்யமான புதிராகத் தோன்றுகிற இந்தக் கேள்விக்கு, ஒரு மிகச் சுவையான விளக்கத்தை, திருக்குறள் பதின்கவனகர் திரு. ராமையா அவர்களின் கேள்வி - பதில் தொகுப்பான, 'கேட்டதும் கிடைத்ததும்' நூலில் வாசித்தேன். (இளமதி பதிப்பகம் - 256 பக்கங்கள் - விலை ரூ 50/-)

அதாவது, தமிழ் எண்ணியலில், 'ஒன்பது' என்ற எண்ணே கிடையாதாம். இதற்குச் சாட்சியாக, திருவள்ளுவரைக் காட்டுகிறார் திரு. ராமையா - திருக்குறளில் ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு, எட்டு, பத்து, நூறு, ஆயிரம், கோடி, ஏன் பத்துக் கோடி, எழுபது கோடிகூட உள்ளது. ஆனால், இந்த 'ஒன்பது' என்ற எண்மட்டும் திருக்குறளில் இல்லவே இல்லை.

இதற்குக் காரணம், தமிழில் ஒன்பது என்கிற எண்ணே இல்லை. அதனால்தான், திருவள்ளுவர் அந்த எண்ணைப் பயன்படுத்தவே இல்லையாம்.

அப்படியானால், எட்டுக்குப்பிறகு, பத்துதானா ?

இல்லை, எட்டுக்குப் பிறகு, 'தொண்டு' என்று ஒரு எண் இருந்ததாம். இப்போது அந்த எண் வழக்கத்தில் இல்லை. இதற்குச் சாட்சியாக, பரிபாடலில் ஓர் உதாரணம் தருகிறார் :

.... ஒன்றென
இரண்டென மூன்றென நான்கென ஐந்தென
ஆறென ஏழென எட்டெனத் தொண்டென ...

ஆகவே, தமிழில் எண்களை அடுக்கினால்,

ஏழு
எட்டு
தொண்டு
பத்து

என்றுதான் வரவேண்டும்.

ஆனால், எப்படியோ இந்தத் 'தொண்டு' என்கிற சொல்லை / எண்ணைத் தொலைத்துவிட்டார்கள். ஆகவே, அங்கே ஒரு வெற்றிடம் ஏற்பட்டுவிட்டது. அதைச் சரி செய்வதற்காக, பத்துகளை எண்ணும் வரிசையிலிருந்து ஒரு சொல்லை, முன்னே கொண்டுவந்துவிட்டார்களாம்.

அதாவது,

எழுபது
எண்பது
தொன்பது ... இந்தத் 'தொன்பது'தான், இப்போது எட்டுக்குப் பிறகு வரும் 'ஒன்பது'

இதேபோல்,

எழுநூறு,
எண்ணூறு,
தொன்னூறு ... இந்தத் 'தொன்னூறுதான்', இப்போது எண்பதுக்குப்பிறகு வருவது.

இதேபோல்,

ஏழாயிரம்
எட்டாயிரம்
தொள்ளாயிரம் ... இந்தத் தொள்ளாயிரம்தான், இப்போது எண்ணூறுக்குப்பிறகு வருகிறது.

இப்படியே, ஒவ்வொரு சொல்லாக இடம் பெயர்ந்து, பெரிய குழப்பத்தையே  உண்டாக்கிவிட்டது என்று நிறுவுகிறார் பதின்கவனகர் திரு. ராமையா.

வேறொரு பகுதியில், 'விக்கல் வரும் குறள் எது' என்று ஒரு அன்பர் கேட்கிறார்.

'நாச்சென்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை
மேற்சென்று செய்யப் படும்' (335)

என்று சரியான குறளைச் சொல்லிவிட்டு, அதற்கு விரிவான விளக்கம் அளிக்கிறார் திரு. ராமையா.

அதாவது, உயிர் பிரிவதற்குச் சற்றுமுன்னால் கடைசி விக்கல் வருமாம். அந்த விக்கல் வருவதற்குள், செய்யவேண்டிய அறச்செயல்களையும், நன்றி செலுத்தவேண்டியவைகளையும் செய்துமுடித்துவிடவேண்டும் என்பது, இந்தக் குறளின் பொருள்.

ஆனால், 'விக்கல் வருவதற்குமுன்' என்று சொன்ன வள்ளுவர், யாருக்கு விக்கல் வருமுன் என்று சொல்லவில்லை.

அதாவது, 'தானம் செய்பவனுக்கு விக்கல் வருமுன்', என்று ஒரு விளக்கம் சொல்லலாம், 'தானம் பெறுகிறவனுக்கு விக்கல் வருமுன்', என்று இன்னொரு விளக்கம் சொல்லலாம்.

ஆக, உங்களுக்குக் கடைசி விக்கல் வருமுன் தானம் செய்துவிடுங்கள். அல்லது, நீங்கள் நன்றி செலுத்தவேண்டிய பெரியவர்கள், பெற்றோருக்கான நன்றிக்கடனை, அவர்களுக்குக் கடைசி விக்கல் வருமுன் செய்துவிடுங்கள்.

இதுபோல் பல சுவாரஸ்யமான தகவல்களும், அலசல்களும் இந்த நூலில் கிடைக்கின்றன. திருக்குறளை இப்படியும் வாசிக்கமுடியுமா என்று நினைக்கவைக்குமளவுக்குச் சுவையான கேள்வி, பதில்கள். இந்த நூலை வாசித்து முடித்ததும், மறுபடியும் திருக்குறளை எடுத்து வரிவரியாக ஆழ்ந்து படிக்கவேண்டும் என்று ஆர்வம் தோன்றுகிறது.

குறிப்பாக, பல குறள்களுக்கு அறிவியல்ரீதியிலான, மருத்துவரீதியிலான, உளவியல் அடிப்படையில் திரு. ராமையா தந்துள்ள பதில்கள், விளக்கங்கள் மிகச் சிறப்பாக அமைந்துள்ளன. பேச்சு நடையில், அதேசமயம் பிறமொழிக் கலப்பில்லாமல் எழுதியுள்ள நடை அற்புதமானது. (நூலின் தொகுப்பாளர், திரு. ராமையா அவர்களின் மகன் திரு. இரா. கனகசுப்புரத்தினம்)

இப்படித் திருக்குறளை நுணுக்கமாக வாசித்துச் சிந்தித்துள்ள பதின்கவனகர் ராமையாவுக்கு, கண் பார்வை கிடையாது என்பதுதான் ஆச்சரியம். முப்பது வயதில் அவருக்கு திடீரென்று பார்வை போய்விட்டது. அதன்பிறகு, மனைவி, மகள் உதவியுடன்தான் தமிழ் இலக்கணங்கள், இலக்கியங்களைக் கற்றிருக்கிறார்.

குறிப்பாக, திருக்குறளின்மீது அவருக்குத் தீவிர பக்தியே இருந்திருக்கிறது. குறளின்படி வாழ்ந்தால், எந்தக் குறையும் வராது என்கிற நம்பிக்கையுடன் வாழ்க்கையைச் சந்தித்தவருக்கு, கவனகக் கலை கைகொடுத்திருக்கிறது.

கவனகம் என்றால், ஒரே நேரத்தில் பல விஷயங்களில் கவனம் செலுத்துவது. அதாவது, 'எண் கவனகம்', என்றால், ஒரு நேரத்தில் எட்டு வெவ்வேறு விஷயங்களில் கவனம் செலுத்துவது, அதேபோல், 'பதின் கவனகம்', என்றால் பத்து விஷயங்களில்.

கண் பார்வை உள்ளவர்களுக்கே ரொம்பச் சிரமமான இந்தக் கலையை, கண் பார்வையற்ற திரு. ராமையா அவர்கள் எப்படிக் கற்றுத் தேர்ந்தார் என்பது நினைத்துப்பார்க்கக்கூட முடியாத ஆச்சரியமாக இருக்கிறது.

தன்னுடைய இந்தக் கண்பார்வையற்றதன்மையை, ஒரு இடத்தில் நெகிழ்வூட்டும்விதத்தில் குறிப்பிடுகிறார்.

கருமணியில் பாவாய்நீ போதாய்யாம் வீழும்
திருநுதற்(கு) இல்லை இடம்.

காதலியைப் பார்த்தபிறகு, காதலன் உருகிச் சொல்லும் வாசகம் இது, 'என் காதலியை எனக்குக் காட்டிய கண்மணியின் பாவையே, இப்போது எனக்கு இந்தப் பாவை வந்துவிட்டாள், ஆகவே உனக்கு இடமில்லை. போய் வா', என்கிறான் காதலன்.

இந்தப் பாடலைச் சொல்லி, அதைத் தனது வாழ்க்கையோடு ஒப்பிடுகிறார் திரு. ராமையா, 'எனக்குப் பார்வை போனபோது, வயது 30. என் மனைவிக்கு 23. என் மனைவி என்ற பாவையைக் கண்ணில் நிறைத்ததும், என் கண்மணியின் பார்வை போய்விட்டது. எனக்கு இப்போது வயது அறுபது. என் மனைவிக்கு ஐம்பத்தி மூன்று. மற்றவர்கள் எல்லாம் நரை, திரையோடு என் மனைவியைப் பார்த்துக்கொண்டிருக்க, எனக்குமட்டும், நான் முன்பு பார்த்த அதே இருபத்து மூன்று வயது அழகான பாவையைதான் இன்னும் மனக்கண்ணில் பார்த்துப் பேசிக்கொண்டிருக்கிறேன் !'இந்த வாரக் கூத்து :

சென்ற ஆண்டுக்கான தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டபோது, சிறந்த நடிகைக்கான விருது ஐஷ்வர்யா ராய்க்குக் கிடைத்திருப்பதாக யாரோ கிளப்பிவிட்டுவிட்டார்கள்.

ஆகவே, ரீடி·ப் (rediff.com) உள்ளிட்ட பல இணைய தளங்கள், இந்தச் செய்தியை அப்படியே ஈயடிச்சான் காபி செய்து வெளியிட்டன. இவற்றில் ஒரு தளம், 'ஐஷ்வர்யா இந்த விருதுக்குத் தகுதியானவர்தானா ?', என்று வண்ணமயமான விவாதப் பக்கம்கூட அமைக்கப்பட்டிருந்தது.

கடைசியில், இந்தச் செய்தி நிஜமல்ல என்று தெரிந்ததும் (உண்மையில் அந்த விருதைப் பெற்றவர் கன்னட நடிகை தாரா !), 'ஹி ஹி' என்றபடி அவசரமாக எல்லாப் பக்கங்களையும் திருத்தியமைத்தார்கள் !
இந்த வார 'பகீர்' :

ஒரு புதிய கன்னடப் படத்தின் போஸ்டரில், கதாநாயகன் ஓர் அரிவாளுக்குத் தாலி கட்டுகிறான் !


இந்த வார விளம்பர வாசகம் :

Workaholic Pump !

(ஒரு ஸ்கூட்டரின் பின்னால் பார்த்தது, கோவையைச் சேர்ந்த 'Point Pumps'க்கான விளம்பரம்)

PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2005 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |