இந்த வார இதழில்
தராசு
வ..வ..வம்பு
முச்சந்தி
கட்டுரை
உள்ளங்கையில் உலகம்
சிறுகதை
இந்து மதம் என்ன சொல்கிறது ?
கவிதை
நூல் அறிமுகம்
தொடர்கள்
 
  முதல் பக்கம்
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
உள்ளங்கையில் உலகம் : கம்பியில்லாப் பயன்பாட்டு வரைமுறை (WAP)
- எழில்
| Printable version | URL |

இவ்வாரம் கம்பியில்லாப் பயன்பாட்டு வரைமுறை  (Wireless Application Protocol , WAP) குறித்து அலசலாம்.

wapஇவ்வகைக் கம்பியில்லாப் பயன்பாட்டு வரைமுறைகள் , கம்பியில்லாத் தொடர்பு சாதனங்கள் இணைய இணைப்புப் பெற உதவுபவை . கணினி மூலம் இணைய இணைப்பு ஏற்படுத்த எவ்வாறு இணைய வரைமுறைகள் (Internet Protocol , IP)) உதவுகின்றதோ அது போல் செல்பேசிகள் , உள்ளங்கைக் கணினிகள் போன்ற கம்பியில்லாச் சாதனங்கள் இணைய இணைப்பினை ஏற்படுத்த கம்பியில்லாப் பயன்பாட்டு வரைமுறைகள் பயன்படுகின்றன.

கைக்கருவிகளைப் பயன்படுத்தி பேசவும் குறுந்தகவல் அனுப்பவும் மட்டுமே பயன்படுத்தப் பட்டு வந்த காலத்தில் இணைய வசதியையும் ஏற்படுத்திக் கொள்ளும் வகையில் கைக் கருவியின் பயன்பாட்டை அதிகரிக்க பல்வேறு நிறுவங்கள் இணைந்து இந்த வரைமுறைக்குச் செயல் வடிவம் கொடுத்தன . 1997-ல் செல்பேசித் தயாரிப்பில் முன்னணியில் இருந்த நோக்கியா, எரிக்ஸன் , மோடரோலா மற்றும் பிற நிறுவனங்கள் இணைந்து , பல்வேறு திட்டங்களை வகுத்து, இறுதியாக்கி இந்தக் கம்பியில்லாப் பயன்பாட்டு வரைமுறைக்குச் செயல் வடிவம் கொடுத்தன . அந்தக் காலகட்டத்தில் செல்பேசியின் திரை அவ்வளவாய்ப் பெரிதாய் இருந்ததில்லை. திரைகளும் கருப்பு வெள்ளைதான் , வண்ணமயமாயில்லை. கணினியில் இணையப் பக்கங்களைக் காட்ட எவ்வாறு ஒரு உலாவி (Browser) தேவைப்படுகிறதோ அதேபோல் ஒரு குற்றுலாவி (Micro Browser) உருவாக்கப் படவேண்டும். உலாவியில் பயன்படுத்தப்படும் குறியீட்டு மொழியான மீயுரைக் குறியீட்டு மொழி (HTML) போன்றே செல்பேசியின் குற்றுலாவிக்கும் ஒரு குறியீட்டு மொழியை உருவாக்க வேண்டும். செல்பேசிச் சேவையாளர் தனது வலையமைப்பில் இணைய இணைப்பினை ஏற்படுத்தித் தரும் ஒரு வழங்கியை (Server) இணைத்திருக்க வேண்டும்.

மேலே சொன்ன தேவைகளுக்கெல்லாம் செயல் வடிவம் கொடுக்க கம்பியில்லாப்பயன்பாட்டு வரைமுறைகளின் குழு (WAP Forum) ஒன்று உருவாக்கப்பட்டு மேலே சொன்ன நிறுவங்கள் இணைந்து இத்திட்டங்களைச் செயல் முறைப்படுத்தின . கம்பியில்லாக் குறியீட்டு மொழி (Wireless Markup Language , WML)  உருவாக்கப்பட்டது. இது மீயுரைக்குறியீட்டு மொழியை விட எளிதானது. குறைந்த அளவிலான ஒட்டுக்களையே (Tags) கொண்டது . வழங்கிக்கும் செல்பேசிக்குமிடையே பறிமாறிக்கொள்ளப்படும் தகவகள் எவ்வகை வரைமுறையில் அமைய வேண்டும் என்று இறுதி செய்யப்பட்டு இறுதியில் வரன்முறைகள் (Specifications) பொதுவாக்கப் பட்டன, இந்தத் திட்டத்தில் மாறுதல்கள் செய்யவும் , புதிய திட்டங்களை வகுக்கவும் தற்போது திற நகர்க் கூட்டுக்குழு (Open Mobile Alliance) எனும் அமைப்பு இயங்குகிறது.

சரி, இணைய இணைப்பை செல்பேசிக்கு ஏற்படுத்த என்னென்ன தேவை?
1. உங்கள் செல்பேசியில் கம்பியில்லாப் பயன்பாட்டு வரைமுறைகளுக்கான வசதி இருக்க வேண்டும்.

2. உங்களது சேவையாளர் இணைய இணைப்பிற்கான அமைப்புகளை (Settings) உங்களுக்கு வழங்கியிருக்க வேண்டும் , அதாவது எந்த எண்ணை அழைப்பது, வழங்கி அல்லது நுழைவாயிலின் முகவரி (Gateway address), பயனாளர் பெயர், கடவுச்சொல் முதலியன.

3. சேவையாளர் தனது வலையமைப்பில் ஒரு வழங்கி அல்லது நுழைவாயில் (Gateway) ஒன்றை நிறுவியிருக்க வேண்டும் . இந்த நுழைவாயில் என்ன செய்கிறது? உங்கள் செல்பேசியினை இணையத்திற்கு இணைப்பது இந்த நுழைவாயில் தான் .

4. இணையப்பக்கங்கள் கம்பியில்லாப் பயன்பாட்டு வரைமுறைகளைக் கொண்டு தனது சேவைகளை வழங்க வேண்டும். சாதாரணமாய் இணையப்பக்கங்களில் நிறைய படங்கள் மற்றும் தகவல்கள் இருக்கும். செல்பேசி மூலம் அவற்றைக்காண முயன்றால் பிரச்சனைகள் ஏற்படலாம் . எனவே குறைந்த அளவு படங்கள் மற்றும் குறைந்த அளவு நினைவிருப்பிடம் கொண்ட பக்கங்களைச் செல்பேசிகளுக்கென வடிவமைத்தல் அவசியம்.

உங்களது செல்பேசியில் இணையம் இணைக்க வேண்டுமெனில் அதெற்கென இருக்கும் பட்டியைத் தேர்ந்தெடுத்து, நீங்கள் செல்ல விரும்பும் இணையதளத்தின் முகவரியினை உள்ளிட்டு அனுப்புங்கள் . செல்பேசியானது உங்கள் சேவையாளரின் வழங்கியைத் தொடர்பு கொள்ளும். தொடர்பு கொள்ளும் எனறால் , இது தரவு அழைப்பு (Data call) அல்ல. சாதாரண அழைப்புதான் . அதாவது வழங்கியானது ஒரு சாதாரண தொலைபேசி எண்ணில் தான் இணைக்கப்பட்டிருக்கும். இந்த வழங்கி ஒரு நுழைவாயிலாகவும் பணியாற்றலாம் அல்லது ஒரு நுழைவாயில், தனியான வழங்கியில் இணைக்கப்பட்டிருக்கலாம். நுழைவாயிலென்பது இணையத்துடன் இணைக்கப்படும் ஒரு புள்ளி . இந்த நுழைவாயிலில் தான் செல்பேசியிலிருந்து வரும் கம்பியில்லா குறியீட்டு மொழியானது (WML) தகவல்கள் மீயுரைக் குறியீட்டு மொழிக்கு (HTML) மாற்றம் செய்யப்பட்டு இணையத்திற்கு அனுப்பப்படுகிறது . அதுபோலவே இணையத்திலிருந்து வரும் மீயுரைக் குறியீட்டு மொழி, செல்பேசி புரிந்துகொள்ளும் மொழிக்கு (WML) மாற்றப்படுகிறது.

இந்த வகை இணைப்பின் வேகம் மிகக்குறைவு. விநாடிக்கு 9.8 கிலோபிட்ஸ் வரை மட்டுமே பெற முடியும். எனவே ஒரு இணையப் பக்கத்திற்குச் செல்ல வேண்டுமெனில் வெகு நேரம் ஆகும். மேலும் இவ்வகை இணைப்பு சுற்றிணைப்பு மாற்றத்தின் அடிபடையில் அமைந்தது (Circuit Switched). அதாவது இணைப்பு ஏற்படுத்தியபின் தகவல் பறிமாறிக்கொள்ளப் படுகிறதோ இல்லையோ, இணைப்பு இருக்கும் நேரம் எல்லாவற்றிற்கும் கட்டணம் உண்டு. கணினியில் , தொலைபேசி மூலம் அழைப்பு வழி (Dial up) எவ்வாறு இணைய இணைப்பு பெறப்படுகிறதோ அதேபோல் தான். அதே அடிப்படையில் தான் செல்பேசியிலும் இணைய இணைப்பு இயங்குகிறது. ஆக, வேகமும் குறைவு. தரவு அனுப்பப் பட்டாலும், அனுப்பாவிட்டாலும், இணைப்பு இருக்கும்போதெல்லாம் கட்டணம் வசூலிக்கப்படும். இம்மாதிரிக் குறைபாடுகள் இருப்பினும் , முதன்முறையாக செல்பேசியில் இணைய இணைப்பு ஏற்படுத்தி, செல்பேசியிலேயே இணையப்பக்கங்களை மேய்வதற்கு இந்த வரைமுறைகள் பெரிதும் பயன்பட்டன. பின்னர் படிப்படியாய் செல்பேசி இணைய இணைப்பிற்கு கம்பியில்லாப் பயன்பாட்டு வரைமுறையோடு மீயுரைப் பரிமாற்று வரைமுறையும் (Hyper Text Transfer Protocol, HTTP) அறிமுகப் படுத்தப்பட்டது. இணைய வேகத்தை அதிகப்படுத்த பொதுப் பொட்டல வானலைச் சேவை (General Packet Radio Service ) அறிமுகமானது. இந்தச் சேவையைப் பற்றி அடுத்த வாரம் காண்போம்.

PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2005 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |